அரசியல்
சமூகம்
Published:Updated:

கழுகார் பதில்கள்

தண்ணீர்ப் பிரச்னை
பிரீமியம் ஸ்டோரி
News
தண்ணீர்ப் பிரச்னை

தமிழ் அக்காவுக்கு ஒரு வேண்டுகோள்...

கே.கே. பாலசுப்ரமணியன், குனியமுத்தூர், கோயம்புத்தூர்-8.

‘திருடனும் திருடன்தான்... திருடனுக்குத் துணைபோகிறவனும் திருடன்தான்’ எனும் கூற்று உண்மையா?

ஓட்டுப் போடுவதற்காக ஏதாவது வாங்கினீர்களா?

@லலிதா கணபதி, மடிப்பாக்கம்.

மறைந்த முதல்வர் கருணாநிதி போன்ற பன்முகத்திறன் கொண்ட ஒருவர், இனி தமிழகத்துக்கு முதல்வராகக் கிடைக்க வாய்ப்பில்லைதானே?

முதல்வர் பதவியில் அமர்வதற்குப் பன்முகத்திறன் எல்லாம் தேவையில்லை. அது சினிமா அல்லது நாடக மேடையல்ல. மனிதர்கள் உள்ளிட்ட சகல ஜீவராசிகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவதற்கான மேடை. அதற்கு, ‘நேர்மையுடன் கூடிய நிர்வாகத்திறன்’ எனும் ஒரேயொரு திறன் இருந்தாலே போதும்.

கழுகார் பதில்கள்

எஸ்.ராமதாஸ், சேலம்-30.

வானொலியில் பாரதப் பிரதமரின் ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) கேட்பதுண்டா?

உண்டே. அது, ‘ஜன் கி பாத்’ (ஜனங்களின் குரல்) என்கிற வகையில் அனைத்து தரப்பினருக்கான குரலாக இருக்கவேண்டும். தனி மனிதனுடைய ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) என்கிற வகையில் மட்டுமே இருந்துவிடக் கூடாது.

ச.புகழேந்தி, மதுரை-14.

‘கர்நாடக மாநில ம.ஜ.த - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஏற்பட்டிருக்கும் குழப்பத்துக்கு நாங்கள் காரணமல்ல’ என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளாரே?

நம்பினால் நம்புங்கள்!

கழுகார் பதில்கள்

@ஜி.கே ராணி.

படித்த இளைஞர்கள் பலரும் வேலை இல்லாமல் தவிக்கிறார்கள். ஆனால், ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ-க்களுக்குத் தொகுப்பு ஊதியத்தில் பணி நியமனம் செய்கிறது அரசு. இது சரிதானா?

கீழ்மட்ட ஊழியர்களில் தொடங்கி ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் வரை ஓய்வுபெற்ற பின்னும் பணி நீட்டிப்பு நியமனம் செய்யப்படுவதை அனைத்துக் கட்சி அரசுகளுமே வாடிக்கையாக வைத்துள்ளன. தங்களுக்குத் தோதானவர்களை, தாங்கள் சொல்வதுபோலச் செயல்படுபவர்களை இப்படிப் பணியில் வைத்துக்கொள்வதற்கு, அரசாங்கம் ஒன்றும் அவர்களின் எஸ்டேட் அல்ல. ஆனால், இப்படி யாரும் கேட்டுவிடக் கூடாது என்பதற் காகவே, சட்டத்திலும் நிறைய ஓட்டைகளைப் போட்டு வைத்துள்ளனர். இதை எந்த எதிர்க்கட்சியும் கேள்வி கேட்பதே இல்லை. நாளைக்கு தங்களுக்கும் ‘வசதி’யாக இருக்குமென்பதால், வசதியாக மறந்துவிடுகிறார்கள்!

தர்ஷினி, பாபநாசம், தஞ்சாவூர் மாவட்டம்.

‘தண்ணீர்ப் பிரச்னையை அரசியல் ஆக்கக்கூடாது’ என்கிறாரே தமிழிசை?

தமிழிசை
தமிழிசை

தமிழ் அக்காவுக்கு ஒரு வேண்டுகோள்... தண்ணீர், நீட், தமிழ், ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட், நியூட்ரினோ, ஜல்லிக்கட்டு, கல்வி... இப்படி எதைத் தொட்டாலும் அரசியல்தான் நீக்கமற நிறைந்திருக்கிறது. எனவே, மத்தியில் ஆளும் உங்கள் பி.ஜே.பி அரசிடம் சொல்லி, ‘எந்தப் பிரச்னைகளை எல்லாம் அரசியல் ஆக்கலாம். எந்தப் பிரச்னைகளை அரசியல் ஆக்கக்கூடாது’ என்பதற்கும் ஒரு சட்டத்தைப் போடச் சொல்லிவிடுங்களேன். அதன் பிறகு அறிக்கை விடவேண்டிய ‘கஷ்டமான வேலை’ உங்களுக்குக் குறைந்துவிடுமே!

கழுகார் பதில்கள்

@ஜி ராமலிங்கம், கொரட்டூர், சென்னை.

‘பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் முன்னேறிய வகுப்பினருக்கான பத்து சதவிகித இடஒதுக்கீடு, சமூகநீதிக்குப் பங்கத்தை ஏற்படுத்தும்’ என்று கூறி மு.க.ஸ்டாலின் எதிர்க்கிறார். ‘சமூகநீதி’ என்பது எல்லா பிரிவினருக்குமானதுதானே?

சதிகாரர்களின் சூழ்ச்சிகளால் சாதி அமைப்பை உயர்த்திப் பிடித்து மக்களைப் பிரித்தாண்ட இந்தியா போன்ற நாட்டில், இடஒதுக்கீடு என்பது அவசியம். அதேசமயம், ‘முன்னேறிய சாதி’ என்று அடையாளப்படுத்தியதாலேயே பொருளாதார ரீதியில் பின்தங்கியிருந்தாலும் அந்தச் சாதியைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப் படுவதைக் கட்டாயம் தடுக்கவேண்டும். இதேபோல, பொருளாதாரரீதியில் முன்னேறிவிட்ட பிற சாதியினர், தொடர்ந்து இத்தகைய சலுகை களை அடைந்து கொண்டு, அதே சாதியிலிருக்கும் ஏழைகளுக்குக் கிடைக்கவேண்டியதைத் தடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இதையும் அலசி ஆராய்ந்து, தவிர்க்கவேண்டும்.

ஆனால், பொருளாதாரரீதியில் பின்தங்கியவர்கள் யார் என்பதைக் கண்டறிவதுதான் இங்கே பெரும் பிரச்னை. ஆயிரம் கோடிகளை வைத்திருப்பவர்கூட, ‘ஆண்டு வருமானம் 6,000 ரூபாய்’ என அன்றாடம் காய்ச்சி சான்றிதழ் பெறமுடிகிற நாடாயிற்றே இது. இதைத் தடுக்க உரிய வழிவகைகளை முதலில் கண்டறிந்த பிறகுதான், மற்றதைப் பற்றி யோசிக்கவே முடியும். இன்றைக்கு எல்லாமே கணினி மயமாக்கப்பட்டுவிட்ட சூழலில், இது ஒன்றும் அத்தனை கஷ்டமான காரியமும் அல்ல.

@க.பூமிபாலன், கோவை.

பலமான எதிர்க்கட்சியில்லா பாரதத்தை நினைக்கும்போது கவலையாக உள்ளதே?

உண்மைதான். இதை மோடியும்கூட ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால், அவருடைய கட்சியினர் நடந்து கொள்வதைப் பார்த்தால்தான் ரொம்பவே கவலையாக இருக்கிறது. இது இந்திரா காந்தி ஆட்சியின் ஆட்டத்தை நினைவுபடுத்துகிறது.

@எல்‌ஆர்.சுந்தரராஜன், மடிப்பாக்கம்.

அரசியல் அகராதியில் துரோகத்தின் உண்மையான அர்த்தம் உங்களுக்காவது தெரியுமா?

அதென்ன... உங்களுக்காவது தெரியுமா? ‘அவர்கள்’ யாருக்குமே தெரியாதது போலவும், அதைப்பற்றி அவர்களுக்கெல்லாம் விளக்குவது போலவும் அல்லவா என்னிடம் கேட்கிறீர்கள்.

@சி. நாகராஜன், நாகர்கோயில்.

ஒவ்வொரு தனிமனிதனும் தன்னிறைவு பெற, சமுதாயம் மற்றும் அரசாங்கத்தின் பங்கு என்ன?

ஒவ்வொரு தனிமனிதனும் சேர்ந்துதான் சமுதாயம் மற்றும் அரசாங்கம். இவை இரண்டும் தன்னிறைவு பெறுவதற்கு ஒவ்வொரு தனிமனிதனும் அக்கறை காட்ட வேண்டும். அப்படிச் செய்யும்போது, ஒவ்வொரு தனிமனிதனின் தன்னிறைவு, தானே வந்துசேருமே!

@ஜி.ஆர்.மாதேஸ்வரன், புளியம்பட்டி, ஓமலூர்.

இந்த நீதிமன்றங்கள்மீது இன்னும் நம்பிக்கை உள்ளதா?

நம்பிக்கை - அதுதானே வாழ்க்கை!

@ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி.

‘சினிமா, சிலருக்குப் பொங்கல் போடும். சிலருக்குப் பிரியாணி போடும். ஒரு சிலரைப் பட்டினி போடும்’ என்கிறாரே கமல்ஹாசன்?

கழுகார் பதில்கள்

அனுபவம் பேசுகிறது!

சு.பிரபாகரன், தேவக்கோட்டை, சிவகங்கை மாவட்டம்.

ஸ்டிரைக், பந்த், கலவரம் என எது நடந்தாலும் பாதிப்புக்குள்ளாகும் சில்லரை வியாபாரிகளுக்காக, ஓய்வூதியத் திட்டத்தை மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு கொண்டுவந்திருப்பது நல்ல விஷயம்தானே?

நல்ல விஷயம்தான். இதைப் பொறுத்தவரை, தமிழகம் முன்னோடி என்று நாம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். ஆம், இதுபோல நிறைய திட்டங்கள் இங்கே ஏற்கெனவே நடைமுறையில் இருக்கின்றன. அவற்றில் ஒன்று, தற்போது இந்தியா முழுமைக்கும் விரிவுபடுத்தப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. அதாவது, கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியம் விரிவாக்கப்பட்டு, அதில் 16 பிரிவினர் இணைக்கப்பட்டனர். சாலையோர சிறு வணிகர்கள், கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் நலவாரியமும் அதில் ஒன்று. இதில் ஓய்வூதியத் திட்டம் தொடங்கி இன்னும் பலவிதமான திட்டங்களும் அவர்களுக்காக இருக்கின்றன.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை- 600002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!