Published:Updated:

கழுகார் பதில்கள்!

கமலுக்கு நிதி இல்லை. கரனுக்கு கதி இல்லை!

பிரீமியம் ஸ்டோரி

@அ.குணசேகரன், புவனகிரி.

இந்த ஆண்டு, அரசு நீட் பயிற்சி மையங்களில் பயிற்சிபெற்ற மாணவர்களில் ஒருவர்கூட அரசு மருத்துவக் கல்லூரிக்குத் தேர்வு ஆகவில்லையாமே?

கடமையைச் செய்தாலே இங்கே பலனை எதிர்பார்க்கக் கூடாது. அப்படியிருக்க, இந்த அரசு ‘கடமையே’ எனச் செய்யும்போது பலனை எப்படி எதிர்பார்க்க முடியும்?

@இல்.கண்ணன், நங்கவள்ளி.

கமலின் மக்கள் நீதி மய்யம், தினகரனின் அ.ம.மு.க இரண்டு கட்சிகளுமே வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வில்லையே?

கமலுக்கு நிதி இல்லை. கரனுக்கு கதி இல்லை!

@கு.இலக்கியன், செங்குன்றம், சென்னை.

சட்டமன்றத்தில் எதிர்க் கட்சிகள் எந்தப் பிரச்னை பற்றிக் கேட்டாலும், ‘அதைச் செய்துவிட்டோம், இதைச் முடித்துவிட்டோம்’ என்றே ஆளுங்கட்சியினர் பதில் தருகிறார்கள். ஆக, தமிழக மக்கள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் நிம்மதியாக வாழ்கிறார்கள்... அப்படித்தானே?

‘மக்கள் பிரதிநிதிகளுக்குச் செய்தாலே, மக்களுக்குச் செய்தது போலத்தான்’ என்கிற ‘திரு(ட்டு)விளையாடல்’ நடக்கிறது. கைதட்டிச் சிரித்து மகிழுங்கள்!

கழுகார் பதில்கள்!

கே.ஆர்.சுந்தரம், மதுரை-6.

ஜோலார்பேட்டை, துரைமுருகனுக்கு மட்டும் சொந்தமான ‘பேட்டை’யா?

அதற்குப் பிறகுதான் அவர் வாயைத் திறப்பதில்லையே. மீண்டும் ஏன் அதைக் கிளறப்பார்க்கிறீர்கள். மேடைகளிலேயே கண்ணீர்விட்டுக் கதறவும் வேற ஆரம்பித்துவிட்டாரே!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

@ முத்துக்குமார், கிருஷ்ணாபுரம்.

சந்திரயானுக்கும் சாமியார்களுக்கும் என்ன சம்பந்தம்?

சந்திரனை (பௌர்ணமி) வைத்து பரிகார பூஜை தொடங்கி, ஏகப்பட்ட அயிட்டங்களை ஆண்டாண்டு காலமாக அள்ளிவிடும் டுபாக்கூர் சாமியார்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். சந்திரனோடு சம்பந்தம் இருக்கும்போது, சந்திரயானிடம் இல்லாமலிருக்குமா? இல்லா விட்டாலும் சம்பந்தப்படுத்திக்கொள்வதுதானே எப்போதைக்கும் டிரெண்ட்.

@ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி.

‘அத்திவரதரை தரிசிக்க வர வேண்டாம் என்று கூற கலெக்டர் யார், அந்த அதிகாரத்தை அவருக்குத் தந்தது யார்?’ என்று சீறுகிறாரே முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்?

ஆரம்பத்தில் இது ஒரு சாதாரண வைபவமாகத்தான் பார்க்கப்பட்டது. ஆனால், இன்றைய மீடியா உலகில் ‘அத்திவரதர்’ வைரலாகிவிட்டார். சிறு நகரமான காஞ்சிபுரத்தில் 10,000 பேர் திரண்டாலே தாக்குப்பிடிக்க முடியாது. அப்படியிருக்க, தினமும் லட்சத்துக்கும் மேலானவர்கள் கூடினால் என்னவாகும்? குலை நடுங்கவைக்கும் கூட்டநெரிசல், ஏற்கெனவே நான்கைந்து பேரை பலிகொண்டுவிட்டது. இத்தகைய சூழலில் மாவட்டத்தை ஆட்சி செய்பவர்தான் சரியான முடிவுகளை எடுக்க முடியும். அதற்காகத்தான் அவரை அங்கே உட்காரவைத்துள்ளோம். அதுமட்டுமல்ல, குழந்தைகளையும் வயதானவர்களையும்தான் அவர் தவிர்க்கச் சொல்லியுள்ளார். இதிலெல்லாம் தலையிடும் இந்த அரசியல்வாதிகள், நாளைக்கு பெரும் அசம்பாவிதம் வந்தாலும் அதே ஆட்சியாளர்களைத்தான் பலிகடா ஆக்குவார்கள்.

இவ்வளவு தூரம் இன்றைக்குப் பேசும் பொன்.ராதாகிருஷ்ணன், இப்படி ஒரு கூட்டம் வரும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து மகாமகம், கும்பமேளா போல சிறப்பான ஏற்பாடுகளைச் செய்யவைத்திருக்கலாமே... அவர் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் எடப்பாடிதானே ஆட்சியில் இருக்கிறார்?

@இந்து குமரப்பன், விழுப்புரம்.

‘இடஒதுக்கீடு அடிப்படையில் 35 மதிப்பெண் எடுத்து வேலையில் சேர்ந்த ஆசிரியர், மாணவர்களை எப்படி 95 மதிப்பெண் எடுக்கவைப்பார்?’ என்று நடிகர் எஸ்.வி.சேகர் கேள்வி எழுப்பியுள்ளாரே?

இடஒதுக்கீடே இல்லாமல், நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்து வேலையில் சேர்ந்த ஆசிரியர்களில் எத்தனை பேர், மாணவர்களை 95 மதிப்பெண் எடுக்கவைக்கின்றனர்? பள்ளிக்கூடம் பக்கமே செல்லாமல் தேங்காய், மாங்காய் விற்கும் ஆசிரியர்களில், நூற்றுக்கு நூறு எடுத்து ஆசிரியர் வேலையில் சேர்ந்த ‘பொதுப் பிரிவினர்’ இல்லவே இல்லையா? தனியார் பள்ளிகள்தான் தரம் வாய்ந்தவை என்று போற்றப்படுகிறது. அத்தகைய பள்ளிகளில் பொதுப் பிரிவினரும் பணியாற்று கிறார்கள். அந்தப் பள்ளிகளில் எல்லாம் நூற்றுக்கு நூறு வாங்கிக்கொண்டிருக்கிறார்களா?

கழுகார் பதில்கள்!

இடஒதுக்கீடு என்பதன் உண்மையை இன்னும் உணராதவர்கள்போல இங்கே பலரும் நடித்துக் கொண்டிருப்பது வேதனையே. இடஒதுக்கீடு ஒன்றும் பிச்சையல்ல... உரிமை. அதிகாரத்தைக் கையில் குவித்துவைத்திருந்த ஒரு சிறு கூட்டம், பெருங்கூட்டத்தையே ஒடுக்கியும் நசுக்கியும் அடிமைகளாக வைத்திருந்தது. ‘இந்திய பாரம்பர்யம்’ என்று பெருமையாகப் பேசுகிறோம். ஆனால், இப்படி அடிமைகளை உருவாக்கியது அந்தப் பாரம்பர்யத்தின் சிறுமை என்பதைப் பற்றி மட்டும் பேச ‘வசதி’யாக மறுக்கிறோம். தெரிந்தோ, தெரியாமலோ நம் முன்னோர்களில் சிலரும் இந்தக் குற்றத்துக்கு உடந்தை.

பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து போட்டுக் கொண்டிருப்பதைத்தான் இப்போது செய்கிறோம். இதிலிருக்கும் குறைபாடுகளைக் களைவதற்குக் குரல் கொடுக்க வேண்டுமே தவிர, ‘இடஒதுக்கீடே தவறு’ என்று வாதிடுவதும், அதன் மூலமாகப் படிப்பவர்கள் மற்றும் வேலைக்குச் செல்பவர்களை எல்லாம் குறை சொல்வதும் கேவலத்தின் உச்சம்.

‘சமதர்ம சமுதாயம்’ என்று ஏட்டில் எழுதிவைத்து, அரசியல் மற்றும் நாடக மேடைகளில் மட்டும் பேசினால் போதாது.

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

சந்திரயான்-2 மூலமாக இந்தியா அடைந்த பெருமை?

நிலவு ஆராய்ச்சிக்காக இதுவரை விண்கலத்தை அனுப்பியிருக்கும் ஏழு நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்கிற பெருமை, சந்திரயான்-1 மூலமாகவே கிடைத்துவிட்டது. இப்போது பார்ட்-2. இது, வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் நிலவில் தரை இறங்கி ஆராய்ச்சி செய்யவிருக்கிறது. அப்படித் தரை இறங்கினால், அமெரிக்கா, ரஷ்யா, சீனா வரிசையில் நான்காவது இடத்தை இந்தியா பிடிக்கும் என்பது உடனடி பெருமை. பிரமிக்கத்தக்க இந்தப் பணியை மேற்கொண்டிருப்பது வனிதா மற்றும் ரிது ஆகிய இரு பெண்கள் என்பது, இந்தியப் பெண்களுக்கே பெருமை. இந்த ஆராய்ச்சிகள் மூலமாக எதிர்காலத்தில் நமக்குக் கிடைக்கப்போகும் பலன்கள்தான் நிரந்தர பெருமையைப் பேசும்.

@மல்லிகா குரு, சென்னை-33.

குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டது. அதன் பிறகு ஏறத்தாழ 14 ஆண்டுகள் உயிரோடு இருந்தும் தண்டனையை அனுபவிக்காமலேயே ‘சரவண பவன்’ ராஜகோபால் தப்பியது, சட்டத்துக்கும் தர்மத்துக்கும் தோல்விதானே?

சட்டம், தர்மம், நியாயம் என்பதெல்லாம் சாமானியர்களுக்கு மட்டுமே!

@டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அரசுமுறைப் பயணமாக பயணிகள் விமானத்திலேயே அமெரிக்கா சென்றுள்ளாரே?

பதவிக்கு வந்ததுமே தனி விமானம், எங்கு கிளம்பினாலும் நூறு, இருநூறு கார்கள் என பந்தா விடுபவர்களுக்கு நடுவில், வீண் செலவுகளைக் குறைக்கும் இதுபோன்ற முயற்சி, உலகின் அத்தனை நாட்டுத் தலைவர்களாலுமே முன்னெடுக்கப்பட வேண்டும். அது பொருளாதாரத்துக்கு மட்டுமல்ல, சுற்றுச்சூழல் கேட்டையும் குறைக்கும். ஆனால், இது ‘ஒன் டே மேட்ச்’ என்பதாக இருந்துவிடக்கூடாது இம்ரான்.

எம்.டி.உமாபார்வதி, சென்னை.

அ.தி.மு.க மாணவர் அணி நிர்வாகி கொலை, தி.மு.க செயற்குழு உறுப்பினர் கொலை, நெல்லை முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி கொலை என்று தமிழகத்தில் ‘கொலை வாரம்’ குலைநடுங்கவைக்கிறதே?

அதிகாரம், ஆஸ்திகளுக்காக நடக்கும் போட்டி கள்தான் இங்கே அதிகம். இதில் பாதுகாப்புக்காக அரசியல், சாதி, மதம், பணம் என அனைத்தையும் கேடயங்களாக்கிக் கொள்கின்றனர். சிலர், அதிகாரத்தால் சாதிக்கிறார்கள். பலர், அரிவாளால் சாய்க்கிறார்கள்.

வி.ஹரிகிருஷ்ணன், திருக்கழுக்குன்றம்.

‘தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அதிகாரங்களைக் குறைக்கும் முயற்சி நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?

உண்மைதான். சில சட்டத் திருத்தங்கள் மூலம் தகவல் ஆணையர்களின் சம்பளம் மற்றும் அதிகார வரம்புகளில் கை வைக்கும் முயற்சி ஆரம்பமாகியுள்ளது. ஏற்கெனவே இருந்த அதிகாரங்களின் மூலமாகவே போதுமான தகவல்களை மக்களால் பெற முடியவில்லை என்பதுதான் உண்மை. கொஞ்சநஞ்சமிருந்ததும் பறிக்கப்பட்டுவிட்டால், அந்தச் சட்டத்தின் நிலை, நுகர்வோர் நீதிமன்றங்கள்போல நீர்த்து தான்போகும். ‘மடியில் கனமில்லை’ என்று பேசும் பி.ஜே.பி அரசு, எதற்காக இப்படி ‘வழியில் பயம்’ கொள்ளவேண்டும்?

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை- 600002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு