பிரீமியம் ஸ்டோரி

@பொ.பொன்ராஜ்குமார், ராஜபாளையம், விருதுநகர் மாவட்டம்.

‘சென்னையில் எம்.எல்.ஏ-க்களுக்கு சொந்த வீடு கட்டித் தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என, சட்டமன்றத்தில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளாரே?

தமிழகத்தில் வீடற்ற 1.62 லட்சம் பேருக்கு வீடு கட்டுவதற்காக மத்திய அரசிடமிருந்து கடந்த ஆண்டு கோடிக்கணக்கில் நிதி வாங்கியது மாநில அரசு. அந்தப் பட்டியலில் இந்த 234 பேர் விடுபட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. ஆமாம், சொல்லிவிட்டேன்.”

@கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூர்-77.

மதவாதக் கட்சிகள் ஆபத்தானவையா... சாதிக் கட்சிகள் ஆபத்தானவையா?

‘எரிகிற கொள்ளியில் எது நல்ல கொள்ளி?’ என்ற கேள்விக்கு பதில் இல்லை.

@அட்லாண்டா கணேஷ்.

எதற்கெடுத்தாலும் மிகவும் கவலைப்படும் கட்சித் தலைவர்கள் சிலர், அ.தி.மு.க-வைத் திட்டித்தீர்க்கிறார்கள். பிறகு, பெட்டி வாங்கிக்கொண்டு செட்டிலாகிவிடுகிறார்கள். கொரோனா சூழலில் மக்களுக்காக அந்தப் பெட்டியை கொஞ்சம் திறக்கலாம்தானே?

ம்க்கும்... அவர்களே, ‘ரேஷன் கார்டுக்கு 1,000 ரூபாய்’ என அறிவிக்கப்பட்டிருக்கும் ‘கொரோனா நிதி’ எப்போது வரும் எனக் காத்துக்கிடக்கிறார்கள். இதில் பெட்டியைத் திறப்பதாவது!

@ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம் தென்காசி மாவட்டம்.

மத்தியப்பிரதேச பா.ஜ.க புதிய முதல்வர் சிவராஜ் சிங் செளகானை, காங்கிரஸ் முன்னாள் முதல்வர் கமல்நாத் சந்தித்துப் பேசியிருப்பதன் பின்னணி என்னவாக இருக்கும் கழுகார்ஜி?

அவர்களுக்குள் ஆயிரம் இருக்கும் மாடக்கண்ணுஜி. எம்.ஜி.ஆர் முதல்வராக இருக்கும்போது, அவரைச் சந்திக்கும் பெருமுதலாளிகள் பலரிடமும், ‘கோபால புரத்துக்குப் போய்விட்டுத்தானே வருகிறீர்கள்?’ என்று கேட்பாராம். உள்ளுக்குள் அந்த அளவுக்கு நட்பு பாராட்டுவார்களாம். அப்படியும்கூட இருக்கலாம்தானே!

@வெங்கட்.கே.

சிறையில் அடைபட்டுக் கிடக்கும் கைதிகள், வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்கள் - என்ன வித்தியாசம்?

நாம் சூழ்நிலைக் கைதிகள்!

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

@இந்து குமரப்பன், விழுப்புரம்.

‘என்னுடைய இல்லத்தை மருத்துவமனையாக மாற்றிக்கொள்ளலாம்’ என்று கமல்ஹாசன் அறிவித்திருக்கிறாரே?

உயர்ந்த உள்ளம்!

@ஜெ.ஜானி, போரூர், சென்னை-116.

‘சமூக விலகல்’ என்பதை உறுதியுடன் மேற்கொண்டால் கொரோனா பாதிப்பைத் தடுத்துவிட முடியுமா?

நிச்சயமாக. அந்தக் காலத்தில் அம்மை போட்ட வீட்டுக்கு யாரும் செல்ல மாட்டார்கள். வீட்டு வாயிலில் வேப்பிலை செருகி வைப்பார்கள். ரத்தச் சொந்தங்கள்கூட பாதிக்கப்பட்டவரைப் பார்க்காத அளவுக்குத் தனிமைப்படுத்துவார்கள். அந்த வீட்டிலிருந்து எந்தப் பொருளும் யார் வீட்டுக்கும் செல்லாது. இன்று வேப்பிலைக்குப் பதிலாக, ‘கொரோனோ பாதித்தவர் தங்கியிருக்கும் வீடு’ என்று வீட்டு வாயிலில் முத்திரை பதிக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

@இரா.நாராயணசாமி. ஒரத்தநாடு, தஞ்சாவூர் மாவட்டம்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடமிருந்து மாவட்டச் செயலாளர் பதவியைப் பறித்ததன் மூலம், ‘அ.தி.மு.க மதச்சார்பற்ற கட்சி’ என ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இருவரும் நிரூபித்துவிட்டார்கள்தானே?

ஓ... அப்படி வருகிறீர்களா! இவர், ‘மோடி எங்கள் டாடி’ என்றுதான் சொல்வார். அவர்களோ, ‘நமோ எங்கள் நாராயணன்’ என்று எல்லாவற்றுக்கும்மேலே போகக்கூடியவர்கள். ஆக, அந்த விருதுநகர் பஞ்சாயத்துக்கும், மதச்சார்பற்ற வேஷத்துக்கும் சம்பந்தமில்லை. அந்தக் கதையே வேறு.

@சி.கார்த்திகேயன், சாத்தூர், விருதுநகர் மாவட்டம்.

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் செயல்பாடுகள் இன்று சிலரால் புகழப்பட்டாலும்கூட, அவர்மீதான முந்தைய குற்றச்சாட்டுகள் மறக்க முடியாதவைதானே?

இப்போதும்கூட புகழும்படி ஏதுமில்லை என்பதுதான் நிதர்சனம். சீனா கதற ஆரம்பித்த பிறகும்கூட ஒரு மாதத்துக்கும்மேலாக கால அவகாசமிருந்தது. ஆனால், விழித்துக்கொள்ளவில்லை. ஒட்டுமொத்தமாக ‘வைரஸ் இறக்குமதி’க்கு அனுமதித்துவிட்டு, இப்போது ‘மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை’ எனக் குற்றம்சாட்டுகிறார்.

@மு.மதிவாணன், அரூர்.

‘கொரோனா சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் டாக்டர்கள், நர்ஸுகள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியம் வழங்கப்படும்’ என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளது பற்றி?

இதைவிட முக்கியம், அவர்களுடைய உடல்நலன். அவர்கள் அனைவருக்கும் தேவையானவை, பாதுகாப்புமிக்க முகக்கவசங்கள், கையுறைகள், உடல் முழுக்க மூடக்கூடிய பிரத்யேக உடைகள்தான். இவை, அந்த ஒரு மாத ஊதியத்துக்கும் மேலானவை மட்டுமல்ல, உயிரினும் மேலானவை.

@ம.தமிழ்ணி வெள்ளக்கோவில், திருப்பூர் மாவட்டம்.

‘ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைப்பு தராமல் சாலைகளில் நடமாடினால் சுட்டுத்தள்ள உத்தரவு போடப்படும்’ என்கிறாரே தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்?

அந்த ஒரு நபரால் ஊருக்கே ஆபத்து என்கிற நிலையில் அரசாங்கத் துக்கு வேறு வழி இருக்காதுதானே! அதேசமயம், ஆரம்பத்திலேயே விழித்துக்கொள்ளாமல், கொரோனவை இங்கே பரவவிட்ட இவர் போன்ற அரசியல்வாதிகளின் குற்றத்துக்கு என்ன தண்டனை என்பதையும் சொல்ல வேண்டும்.

@மதிராஜா திலகர், சின்னபுங்கனேரி, கடலூர் மாவட்டம்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான 21 நாள்கள் ‘ஊரடங்கு உத்தரவு’ மேலும் நீட்டிக்கப்படுமா?

அது நீட்டிக்கப்படுவதும் நீட்டிக்கப் படா மலிருப்பதும் அரசின் கைகளில் மட்டுமல்ல, நமது ‘கை’களிலும்தான் இருக்கிறது. அரசாங்கத்தின் அனைத்து வழிகாட்டுதல்களையும் நாம் கடைப்பிடிக்க வேண்டும். மறுப்பவர்களையும் கடைப்பிடிக்கவைக்க வேண்டும்.

@இ.முத்துக்குமார், கிருஷ்ணாபுரம்.

குடியாத்தத்தில் சட்டவிரோத மின்வேலியில் சிக்கி கடந்த மூன்று மாதங்களில் நான்கு யானைகள் உயிரிழந்தன. மனித - விலங்கு எதிர்கொள்ளல் ஏன் தீர்வு எட்டப்படாமலேயே தொடர்கிறது... எங்கே தவறிழைக்கிறோம்?

‘இந்தப் பூமி மனிதர்களுக்கானது மட்டுமே’ என்கிற எண்ணத்தை மாற்றாமல், மேன்மேலும் வலுப்படுத்திக்கொண்டே செல்வதில்தான் நாம் தவறிழைக்கிறோம்.

@சோ.சங்கர், பெரம்பூர், சென்னை.

அரசியல் ஆதாயம் தேடப்படுகிறதா?

அதுவன்றி ஓர் அணுவும் அசையாதே!

கழுகார் பதில்கள்

@காந்தி, திருச்சி.

ரஷ்யா, வியட்நாம் போன்ற நாடுகள் கொரோனாவால் சிறு சிறு பாதிப்புகளுடன் எப்படித் தப்பின?

அவர்களின் ‘இரும்புத்திரை’ மிகவும் கனமானது!

@கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்-6.

அனைவருடைய கவனமும் கொரோனா பக்கம் இருக்கும்போது, சந்தடிசாக்கில் ம.பி-யில் பா.ஜ.க ஆட்சி அமைத்துள்ளதே?

பெரும்பாலும் அவர்களாகவே கவனத்தைத் திசைதிருப்ப புதிது புதிதாக எதையாவது கிளப்பிவிடுவார்கள். தற்போது, அந்த வேலையைச் சுலபமாக்கிவிட்டது கொரோனா.

@வாசுதேவன், பெங்களூரு.

மறைந்த விசுவின் மாஸ்டர் பீஸ்?

80-களிலேயே அவர் தந்த ‘ஷாக்’! கூட்டுக் குடும்பச் சிதைவு குறித்து, ‘சம்சாரம் அது மின்சாரம்’ என்ற பெயரில் அப்போது அவர் சொன்னது பலருக்கும் ஷாக்தான். ஆனால், இன்றைக்கு அதுதான் நிதர்சனமாகவே இருக்கிறது.

@ஆர்.ஹரிகோபி, புதுடெல்லி- 75.

கொரோனா வைரஸ் நிலவரத்தை திறமையுடன் சமாளிக்கும் வகையில் எடுத்துவரும் நடவடிக்கைகள், தங்களுக்கு திருப்தியளிப்பதாக மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளார்களே?

கஞ்சிக்கு வழியில்லாமல் அலையும் பொதுமக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதுதான் முக்கியம்!

@வெ.லக்ஷ்மிநரசிம்மன், ராஜகீழ்ப்பாக்கம், சென்னை-73.

கொரோனா பாதிப்பால் கப்பலில் சிக்கித் தவித்த பிரிட்டிஷ் நாட்டு மக்களை எந்த நாடுமே துறைமுகத்துக்குள் அனுமதிக்காத நிலையில், கியூபா அனுமதித்ததோடு மருத்துவ சேவையும் தந்திருப்பது?

உலக சேவகன் ‘சே’வும் சேர்ந்து உருவாக்கிய உன்னத நாடாயிற்றே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு