Published:Updated:

கழுகார் பதில்கள்

ஈஷா மையம்
பிரீமியம் ஸ்டோரி
ஈஷா மையம்

ஈஷா மையம்

கழுகார் பதில்கள்

ஈஷா மையம்

Published:Updated:
ஈஷா மையம்
பிரீமியம் ஸ்டோரி
ஈஷா மையம்

@க.அருச்சுனன், செங்கல்பட்டு.

டெல்லியில் மத மாநாடு நடந்தபோது அதைத் தடுக்காத அதிகாரிகள்மீது நடவடிக்கை பாயுமா?

அந்த மாநாடு நடந்த சமயத்தில் எந்தத் தடை உத்தரவும் அமலில் இல்லாத சூழலில், அதிகாரிகளால் என்ன செய்ய முடியும்? ஆனால், அந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தவர்கள், அந்தத் தவற்றை சற்றும் உணரவேயில்லை. ‘இந்த கொரோனா நேரத்தில் மாநாட்டை நடத்த வேண்டாம்’ என்று சகாக்கள் எடுத்துச் சொல்லியும்கூட, ‘தப்லீக் ஜமாஅத்’ தலைவர் மௌலானா முகமது பிடிவாதமாக அதை நடத்தி முடித்துள்ளார். அதற்கான விலையாக உயிர்கள் பறிபோக ஆரம்பித்துள்ளன. இத்தகைய சூழலிலும் தங்கள்மீது எந்தத் தவறும் இல்லை என்பதுபோல் பேசிக்கொண்டும், அதிகாரிகள்மீது புழுதிவாரித் தூற்றிக்கொண்டும் இருப்பது என்ன வகை மனநிலை என்றே தெரியவில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ச.வசுமதி, வேங்கைவாசல், சென்னை-73.

ஜெயலலிதாவுடன் கூட்டுசேர்ந்து சசிகலா முறைகேடாகச் சேர்த்த சொத்துகளை ஏன் இன்னமும் பறிமுதல் செய்யாமல் இருக்கின்றன மத்திய, மாநில அரசுகள்?

சசிகலா போலவே சொத்துகளை முறைகேடாகக் குவித்த அரசியல்வாதிகள் மீதான பல்வேறு வழக்குகளிலும் பறிமுதல் நடவடிக்கைகள் தேங்கிக் கிடக்கின்றன. விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்ற மோசடி பேர்வழிகளின் சொத்துகள்வேறு தயாராக இருக்கின்றன. ‘யெஸ் வங்கி’யின் ராணா கபூர் போல் ஊழல் புரிந்த பல்வேறு வங்கித் தலைவர்களின் சொத்துப் பட்டியலும் வெகுநீளமே! ஓர் அவசர சட்டம் மூலமாக அனைத்தையும் பறிமுதல் செய்தால், பல லட்சம் கோடி நிவாரண நிதி நொடிகளில் குவிந்துவிடும்.

கழுகார் பதில்கள்

@ப்யூனி பிரதர்ஸ்.

இந்த நேரத்திலும் தென்காசி மசூதியில் தொழுகைக்காகக் கூடியதுடன், கலைந்து செல்லச் சொன்ன போலீஸார் மீது தாக்குதலும் நடத்தியுள்ளனரே?

இன்னமும்கூட, ‘கொரோனா என்பதே... சி.ஏ.ஏ, என்.ஆர்.சி போன்ற குடியுரிமை தொடர்பான நம்முடைய போராட்டங்களை ஒடுக்குவதற்காக பிரதமர் நரேந்திர மோடி செய்யும் சித்துவேலையே’ என்றல்லவா பரப்பிக் கொண்டுள்ளனர். தென்காசியில் மட்டுமல்ல, பல இடங்களிலும் ‘கொரோனாவிலிருந்து அல்லா நம்மைக் காப்பாற்றுவார்’ என்று மசூதி ஸ்பீக்கர்களில் கூவிக் கூவிக் கூட்டம் சேர்க்கிறார்கள். ‘இவையெல்லாம், நம்முடைய நியாயமான போராட்டங்களுக்கு ஆதரவு தந்த பொதுமக்களையே நமக்கு எதிராகத் திருப்பி விட்டுள்ளன’ என்று அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த சிலரே வேதனைப்படும் அளவுக்கு நிலைமை சிக்கலாகிக்கொண்டுள்ளது. உயிர் விஷயத்திலும் அரசியல் நடத்துபவர்களை, அவர்கள் நம்பும் அல்லாகூட மன்னிக்கவே மாட்டார்.

@ஜி.வி.மனோ, கொலுவைநல்லூர், தூத்துக்குடி மாவட்டம்.

இது உலகின் அந்திம காலமா?

இப்படி ஏகப்பட்ட ‘அந்திம காலங்கள்’ ஏற்கெனவே வந்து போயுள்ளன. அத்தனையையும் மீறித்தான் தழைத்து நிற்கிறது பூமி. தைரியமாக இருங்கள் மனோ.

@ஸ்டீபன்ராஜ், தோஹா, கத்தார்.

உண்மையில், ஈஷா ஆசிரமத்தில் கொரோனா தொடர்பாக சோதனைகள் நடத்தப்பட்டனவா?

அரசுத் துறையினரின் பரிசோதனைக்குப் பிறகு, ‘ஈஷா மையத்தில் எவருக்கும் கொரோனா பாதிப்பில்லை’ எனக் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, ‘கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவமனையாக ஆசிரம வளாகத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்’ என்றும் அறிவித்துள்ளது ஈஷா மையம். அதற்குப் பிறகும் கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருப்பது, மதரீதியிலான தாக்குதலாகத்தான் பார்க்கப்படும்.

@சௌம்யா, திண்டுக்கல்.

சமூக விலகலை நாம் அனைவரும் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் என்பதால், அனைத்து மத, சமூகத் திருவிழாக்களைத் தடை செய்யவேண்டும் என, அரசுக்கு கழுகார் யோசனை சொல்லலாமே?

ஏற்கெனவே இதையெல்லாம் அரசாங்கம் கையில் எடுத்துவிட்டது. புகழ்பெற்ற திருவாரூர் தேர்த் திருவிழா, ஸ்ரீரங்கம் பங்குனி உத்திரத் திருவிழா எனப் பலவும் ரத்துசெய்யப்பட்டு விட்டன. அதேசமயம், சிறியதும் பெரியதுமாக சத்தமில்லாமல் நடக்கும் சில நிகழ்வுகள்தான் அச்சத்தை விதைக்கின்றன. அதிலும், வரும் சித்திரை... நம் ஊருக்குத் திருவிழா மாதம். கிராமங்களில் பந்தா காட்டுவதற்காகவே இந்த நேரத்தில்கூட சில ‘பெருசு’கள் இதை கையில் எடுக்கக்கூடும். ‘கிராமத் திருவிழாதானே’ என்று அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் விடக்கூடும். எனவே, கொரோனா பிரச்னை தீரும் வரை கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க உத்தரவிட வேண்டும். ‘மீறி ஏதாவது விழாக்கள் நடந்தால் பதவி பறிக்கப்படும்’ என எச்சரிக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, பொதுமக்கள் அனைவரும் விலகி இருந்துவிட்டால் பிரச்னையே இருக்காது. ‘தூணிலும் துரும்பிலும் தெய்வம் இருக்கிறது’ என நம்புபவர்கள், வீட்டுக்குள்ளேயே வணங்கினால் அந்தத் தெய்வம் வராமலா போய்விடும்!

@முத்து விக்னேஷ்வர், சென்னை.

‘கைதட்டுங்கள்’, ‘விளக்கேற்றுங்கள்’ என்பதையெல்லாம்விட, கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து உள்ளிட்ட விஷயங்களில் நாம் அடைந்திருக்கும் வெற்றிகள் குறித்த நல்ல செய்திகளைத் தானே பிரதமரிடமிருந்து எதிர்பார்க்கிறோம்?

வைத்துக்கொண்டா வஞ்சகம் செய்யப்போகிறார்? பொதுவாகவே, இந்தியர்கள் உணர்வுபூர்வமான வர்கள். அந்த வகையிலாவது திருப்திப்படுத்தப்பார்க்கிறார். அதையும்கூட ‘வேண்டாம்’ என்றால் எப்படி!

ஈஷா மையம்
ஈஷா மையம்

@மைதிலி கோகுலகிருஷ்ணன், திருவாரூர்.

‘கொரோனாவுக்காக மூடிய மதுக்கடைகளை நிரந்தரமாகவே மூட வேண்டும்’ என்கிறாரே ‘காந்தி பேரவை’யின் தலைவர் குமரி அனந்தன்?

பாவம், அவரும் காலம்காலமாக இதற்காகவே போராடிவருகிறார். குமரி தொடங்கி கோட்டை வரை நடந்துகூடப் பார்த்துவிட்டார். ஆனால், இந்தக் கால அரசியல்வாதிகளிடம் தன் வாயைத்தான் அவர் மூடவேண்டியிருக்கிறது. ‘கொரோனாவால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வகையில், கூடுதலாக பத்தாயிரம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும்’ என்ற உத்தரவு வராமல் இருக்கட்டும் என வேண்டிக்கொள்வோம் - அவர் சார்பாகவும்!

@உஷாதேவி, சென்னை-24.

‘கொரோனா பற்றிய தகவல், ஜோதிடம், மருத்துவம் என யூ டியூப்பில் எதையுமே காண்பிக்கக் கூடாது’ என்று 144 சட்டம் போட்டால்தான் என்ன... ஆளாளுக்கு இஷ்டம்போல் ஓட்டுவதைப் பார்த்துப் பதறிக்கொண்டே இருக்க முடியவில்லை?

சாவிலும் பிழைப்பு நடத்துபவர்களை எந்தக் காலத்திலும் கட்டுப்படுத்தவே முடியாது. ஊர் வாயை மூடுவதைவிட எளிது, உங்கள் கண்கள் மற்றும் காதுகளையும் மூடிக்கொள்வதுதான்!

@சகுந்தலா.

தமிழக வனத்துறை அமைச்சர் ‘திண்டுக்கல்’ சீனிவாசன், ‘பொதுமக்கள் வீடுகளிலேயே இருந்து சமூக விலகலைக் கடைப்பிடித்தால், குலுக்கல் முறையில் ஃப்ரிட்ஜ், பீரோ, குக்கர் தரப்படும்’ என அறிவித்துள்ளாரே?

அடுத்த ஆண்டு தேர்தல்வேறு வரவிருக்கிறதே! இப்போதே அட்வான்ஸாக ஆரம்பித்து விட்டார்போல. இவர் மட்டுமல்ல, தமிழக அரசாங்கமே இப்படி சிலபல வேலைகளை ஆரம்பித்துள்ளது. உண்மையிலேயே பாதிக்கப் பட்டவர்களுக்கு, தேவையுள்ள வர்களுக்குக் கொடுப்பதில் தவறில்லை. ஆனால், ‘உள்நோக்கத்’ துடன் அரசாங்கப் பணத்தை அள்ளிவிடுவது வேதனைக்குரியது.

@வாசுதேவன், பெங்களூரூ.

‘கூடுவிட்டு கூடு பாய்வது’ சாத்தியமா?

ஒருவேளை, கட்சியைத்தான் ‘கூடு’ என்று சொல்லியிருப்பார்களோ!!!

@இ.முத்துக்குமார், கிருஷ்ணாபுரம்.

கண்ணகி நகரில் வசிக்கும் சென்னை பூர்வகுடிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தாமல், குடியிருப்புகளுக்கு வண்ணம் தீட்டி என்ன பயன்?

வண்ணம் தீட்டியதில் எந்தத் தவறுமில்லை. ஆனால், சுவருக்கு வண்ணம் தீட்டிவிட்டாலே அவர்களுடைய வாழ்வில் வசந்தம் வந்துவிடாது என்பதையும் அதிகாரவர்க்கம் உணர வேண்டும். அந்த மக்களின் வாழ்க்கையும் வண்ண மயமாவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவதுதான் மிக முக்கியம்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை,

சென்னை- 600002, kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!