Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்

தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சிக்காலத்தில் காமராஜர் பெயரில் கருணாநிதியால் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயர், மேம்பாலத்துக்கு கருப்பையா மூப்பனார் பெயரெல்லாம் சூட்டப்பட்டிருக்கிறது.

@மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி, திருவண்ணாமலை மாவட்டம்.

கல்வித் தொலைக்காட்சி மூலம் முழுமையாக மாணவர்களுக்குக் கல்வியை வழங்க முடியுமா?

ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை. எத்தனை காலம் என்று தெரியாத சூழலில், இருக்கும் காலம் வெறுமனே கரைந்துவிடாமல் கல்வி புகட்டுவதற்கு இது நிச்சயமாக உதவும். மொபைல், லேப்டாப் என்று வாங்குவதற்கு வசதியற்ற ஏழைக் குழந்தைகளையும் மனதில்கொண்டிருக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்குத் தோள்கொடுங்கள்!

@கிணற்றுத்தவளை, புதுக்கோட்டை.

தங்கம் மற்றும் வெள்ளியைக் கொஞ்சம் வாங்கிச் சேர்க்கலாமா அல்லது சிறிது நாள்கள் கழித்துப் பார்த்துக் கொள்ளலாமா?

இதற்கெல்லாம் நாள், நட்சத்திரம், அட்சயதிருதியையெல்லாம் பார்க்காதீர்கள். கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளின் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, தங்கம், வெள்ளி விலை பெரிதாக வீழ்ந்துவிடவில்லை. முதலீட்டு அடிப்படையில் தங்கம் வாங்குவதாக இருந்தால்... கட்டியாகவோ, நகைகளாகவோ வாங்கிச் சேமிக்காதீர்கள். கிட்டத்தட்டப் பங்குச்சந்தைபோல இயங்கும் ‘கோல்டு இ.டி.எஃப்’ என்பதில் முதலீடு செய்யுங்கள். அப்போதுதான் ‘செய்கூலி, சேதாரம்’ என்றெல்லாம் உங்களுடைய சேமிப்பு, புறக்காரணிகளால் எந்தவிதச் சேதாரமும் ஆகாமல், முழுமையாகத் திரும்பக் கிடைக்கும். அதாவது, இ.டி.எஃப் அடிப்படையில் எட்டு கிராம் தங்கத்தில் முதலீடு செய்தால், விற்பனை செய்யும்போது எட்டு கிராமும் அப்படியே கிடைக்கும். நகையாக வாங்கினால், ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு கிராம் சேதம் ஆகிக் கொண்டேயிருக்கும். வெள்ளியைப் பொறுத்தவரை நம்மூரில் இப்படியோர் ஏற்பாடு இன்னமும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

அதுசரி, நீங்கள் சீரியஸாகத்தானே கேட்டீர்கள் கிணற்றுத்தவளை!

@இல.கண்ணன், நங்கவள்ளி, சேலம் மாவட்டம்.

ரஜினிகாந்துக்கு போக்குவரத்து விதிகள் தெரியாதா?

சிஸ்டம் சரியில்லையே... பாவம் அவர் என்ன செய்வார்... அவரோ அல்லது அவரால் கைகாட்டப்படும் நபரோ ஆட்சிக்கு வந்ததும் அனைத்தையும் தெரிந்துகொண்டுவிடுவார். வாய்மையே வெல்லும்!

ரஜினி
ரஜினி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

@கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்-6.

சாத்தான்குளம் காவல்நிலையப் பெண் காவலர் ரேவதி, அந்தக் காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட அநியாயத்துக்கு எதிராக தைரியமாக சாட்சி சொல்லியிருக்கிறார். இதை அந்தத் துறையினர் போற்றுவார்களா... ‘காட்டிக்கொடுத்தவர்’ என்று தூற்றுவார்களா?

காக்கிச் சட்டையை மாட்டிக் கொண்டுவிட்டாலே, எங்கிருந்தோ ஒரு மமதை வந்துவிடுகிறது. ‘மக்கள் சேவகன்’ என்பதெல்லாம் 99 சதவிகிதக் காவலர்களிடம் இல்லவே இல்லை. விரல்விட்டு எண்ணும் அளவில்தான் ‘காக்கிக்குள் ஈரம்’ இருக்கிறது. ‘அதிகாரத் திமிர்’ கொண்டு அலையும் அந்த 99 சதவிகிதக் கூட்டத்திடம் போற்றுதலை எதிர்பார்க்க முடியாதே! போலீஸுக்கே போலீஸ் காவல் அல்லவா கொடுத்துவைத்திருக்க வேண்டிய நிலை நீடிக்கிறது!

@வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டம்.

‘முகக்கவசம் அணியாதவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் போடுங்கள்’ என்கிறாரே பா.ம.க நிறுவனர் ராமதாஸ்?

உதயநிதி ஸ்டாலின், ரஜினிகாந்த் போன்றவர்கள் இப்படி வந்தாலும் இந்த நடவடிக்கை பாயும் எனும்பட்சத்தில் நல்ல யோசனையே. இல்லை, இளிச்சவாய பாட்டாளி தமிழக மக்களுக்கு மட்டும்தான் என்றால், இப்போதே ராமதாஸுக்கும் சேர்த்தே நாம் எதிர்க்குரல் கொடுக்கலாம்!

@இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி, கரூர் மாவட்டம்.

அ.தி.மு.க தலைமை நிகழ்த்தியிருக்கும் கட்சி நிர்வாகிகளின் அதிரடி மாற்றங்கள், அந்தக் கட்சி தேர்தலுக்குத் தயாராகிறது என்பதைத்தானே காட்டுகிறது?

‘எப்படியாவது தேர்தல்வரை தாக்குப்பிடிக்க வேண்டுமே’ என்கிற அந்த இரட்டையர்களின் பயத்தைக் காட்டுகிறது!

@அ.சுகுமார், காட்பாடி, வேலூர் மாவட்டம்.

‘பாலைத் தெருவில் கொட்டிப் போராடும் விவசாயிகள் சேடிஸ்ட்’ என்கிறாரே பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?

அந்த விவசாயிகளின் உழைப்பால் கிடைக்கும் பாலை வாங்கி விற்பதால்தான் பால்வளத்துறை வண்டியே ஓடுகிறது. இதற்கு அச்சரமாக இருக்கும் விவசாயிகளையே ‘சேடிஸ்ட்’ என்று வர்ணிக்கும் அளவுக்குத் துணிந்துவிட்ட இவரையெல்லாம் அந்தத் துறைக்கு அமைச்சராக வைத்திருப்பதே முதல் தவறு. தங்களுக்குக் கிடைக்க வேண்டிய உண்மையான விலை கிடைக்கவில்லை என்பதற்காக விவசாயிகள் நடத்தும் அடையாளப் போராட்டம்தான் அது. இதற்கே கொந்தளிக்கும் அமைச்சர், விவசாயிகளின் பங்குப் பணத்தில் தானும் தன்னுடைய சகாக்களும் ‘அரசாங்க’ வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பதைக் கேவலமாகக்கூட நினைக்கவில்லையே... இப்போது சொல்லுங்கள் யார் சேடிஸ்ட்.

@உதயச்சந்திரன், குத்தாலம், மயிலாடுதுறை மாவட்டம்.

கழுகார், அடிப்படையில் இடதா... வலதா?

‘பொதுவா?’ என்பதை விட்டுவிட்டீர்களே!

@‘முனைவர்’ ஷிவன், மயிலாடுதுறை.

புதுச்சேரியில் காமராஜர் பெயரில் சத்துணவுத் திட்டத்தை தொடங்காமல், கலைஞர் பெயரில் ஏன் தொடங்கினார் காங்கிரஸ் முதல்வர் நாராயணசாமி?

எல்லாம் ஓட்டரசியல்தான். தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சிக்காலத்தில் காமராஜர் பெயரில் கருணாநிதியால் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயர், மேம்பாலத்துக்கு கருப்பையா மூப்பனார் பெயரெல்லாம் சூட்டப்பட்டிருக்கிறது. கூட்டணித் தோழனை குஷிப்படுத்துவதற்காக கருணாநிதி செய்ததை, புதுச்சேரியில் நாராயணசாமி செய்திருக்கிறார், அவ்வளவுதான்! எல்லாவற்றையும் தாண்டி, இப்படியெல்லாம் பெயர் சூட்டும் அரசியலை ஒட்டுமொத்தமாக ஒழிக்க வேண்டும். எல்லாமே மக்கள் பணம் எனும்போது, இப்படியெல்லாம் தனிநபர்களின் பெயர்களைச் சூட்டுவது அபத்தமே!

முதல்வர் நாராயணசாமி
முதல்வர் நாராயணசாமி

@காந்தி, திருச்சி.

பெரியார், வள்ளுவர் சிலைகள் காவியால் அவமதிக்கப்பட்டபோது பேசாத முதல்வர், எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்ததும் பொங்குகிறாரே?

பொங்குவதற்கு ‘அனுமதி’ கிடைத்திருக்கலாம்.

@டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

ஜெயலலிதா, வருமான வரித்துறைக்குக் கட்ட வேண்டிய 36 கோடி ரூபாயைக் கோர்ட்டில் தமிழக அரசு கட்டியிருப்பது எந்தச் சட்டப்படி நியாயம்?

எந்த தர்மப்படியும்கூட நியாயமற்ற செயலே! கோடி கோடியாகக் கொள்ளையடித்த வழக்கில் சிக்கியவர் ஜெயலலிதா. இவருடைய தோழியான சசிகலா, அவருடைய அண்ணி இளவரசி, அண்ணன் மகன் சுதாகரன் என்று நான்கு பேருமே குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு, இறுதியில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்குள்ளாக இறந்துபோனதால் வழக்கில் இறுதி முடிவெடுக்கப்படாமல் தப்பியவர் ஜெயலலிதா. அடுத்து, வருமானவரியைச் செலுத்தாத குற்றத்தையும் புரிந்திருக்கிறார். அந்தத் தொகையை அரசாங்கமே செலுத்துகிறதென்றால், ‘நாங்கள் குற்றவாளிகளின் கூடாரம்’ என்று சொல்லாமல் சொல்கிறார்கள் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

@மா.உலகநாதன், திருநீலக்குடி.

‘அப்பளம் சாப்பிட்டால் கொரோனா ஓடிப்போகும்’ என்று மத்திய அமைச்சர் ஒருவர் பினாத்தியிருக்கிறாரே..?

இப்படியெல்லாம் பேசினால்தான் இங்கே காலம் தள்ள முடியும்... இதையெல்லாம் ‘மூடநம்பிக்கை’ என்று சொல்ல ஆரம்பித்தால், உங்களுக்கு ‘மூளை கெட்டுவிட்டது’ என்று முத்திரை குத்திவிடுவார்கள்... உஷார்!

@சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம், திருநெல்வேலி மாவட்டம்.

‘அ.தி.மு.க-வுக்கு கொரோனா பணியே கட்சிப் பணிதான்’ என்கிறாரே அமைச்சர் பாண்டியராஜன்?

என்ன அழகாக ஓர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார் பாருங்களேன்.

@செய்யது முகம்மது, மேலப்பாளையம்.

நிலஅளவை மேற்கொள்வதற்கான (சர்வே) கட்டணத்தைப் பன்மடங்காக உயர்த்திய அரசின் நடவடிக்கை குறித்து..?

‘வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்

கோலொடு நின்றான் இரவு’ என்று அன்றே சொல்லி வைத்துவிட்டார் வள்ளுவர்.

ஆட்சிக்குரிய கோலை ஏந்தியிருக்கும் மன்னன், தமது குடிமக்களிடம் அநியாயமாக வரி உள்ளிட்ட வகைகளில் பணம் கேட்பது, பொதுமக்களை வேல்கொண்டு மிரட்டி வழிப்பறி செய்பவர்களுடைய செயலுக்குச் சமமானது.

ஏற்கெனவே, 50 ரூபாய் கொடுத்த இடத்தில், இப்போது 2,000 ரூபாய், அதாவது 40 மடங்காக உயர்ந்துவிட்டது நிலஅளவைக் கட்டணம். இப்படி ஒவ்வொரு கட்டணத்தையும் இந்தக் கொரோனா கொடுமைக்கு நடுவேயும் அநியாயமாக உயர்த்தியுள்ளனர். குறைந்தது 5,000 ரூபாயாக இருக்கும் லஞ்சமும் 40 மடங்கு உயர்ந்தால் நம் கதி!!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள்,

ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!