அலசல்
Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்

போராடுவதற்கு அனுமதி வாங்கவும் போராட வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்!

ச.பா.ராஜா, குரும்பகரம், காரைக்கால் மாவட்டம்.

பிரதமர் மோடி கூறுவதை அனைவரும் கேட்க வேண்டும் என விரும்பும் ஆளும் பா.ஜ.க அரசு, எதிர்க்கட்சிகள் கூறும் கருத்துகளைக் காது கொடுத்துக் கேட்க விரும்புவதில்லையே..?

எழுபது ஆண்டுகளாக ஏகப்பட்ட விஷயங்களை ‘இவர்கள்’ சொன்னபோது, ஆளுங்கட்சியாக இருந்த ‘அவர்கள்’ கேட்காமல்தானே இருந்தார்கள். இப்போது, ‘இவர்கள்’ முறை!

@பி.மணி, வெள்ளக்கோவில், திருப்பூர் மாவட்டம்.

சுதந்திர நாடாம் இந்தியாவில் மக்களின் அடிப்படைத் தேவை, உரிமை, உடைமை ஆகியவற்றைக் காப்பாற்றிக்கொள்வதற்குக்கூட போராட வேண்டியுள்ளதே?

போராடுவதற்கு அனுமதி வாங்கவும் போராட வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்!

@மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி, திருவண்ணாமலை மாவட்டம்.

திரையரங்குகள், மால்கள், பூங்காக்கள், திருவிழாக்கள் என்று எங்கும் செல்லாமல் 130 நாள்களுக்கும் மேலாகக் கடந்துவிட்டோம். இது எதைக் காட்டுகிறது?

எதுவும் கடந்துபோகும்!

@கே.கே.வெங்கடேசன், செங்கல்பட்டு-1.

ஊரடங்கை நீட்டிப்பது பலன் தருமா?

இ-பாஸ் கொள்ளை, பல்வேறுவிதமான அரசுப் பணிகளுக்கான கான்ட்ராக்ட், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான தகர ஷீட் அடைத்தல், மருந்து தெளித்தல், வீடுதோறும் கணக்கெடுத்தல், காய்ச்சல் முகாம்கள் நடத்துதல்... இப்படிப் பல பேருக்கும் கைமேல் ‘பலன்’, பலருக்குக் கால்மேல் ‘கமிஷன்’ கிடைத்துக்கொண்டுதானே இருக்கிறது!

@வி.பாலசுப்பிரமணியன், மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம்.

இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயத்தை பாதிக்கும் நடவடிக்கைகளாகவே மத்திய அரசு எடுத்துக்கொண்டிருப்பதற்கு என்ன காரணம்?

எல்லாம், ‘உலகப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு’ என்று கார்ப்பரேட்டுகளால் போற்றப்படும் உலக வர்த்தக நிறுவனத்தின் (WTO - World Trade Organization) கைங்கர்யம்தான். உலக வர்த்தக நிறுவனம் ஆட்டிவைக்கும்படிதான் உலகின் பல நாடுகளும் ஆடுகின்றன. இதில் இந்தியாவின் ஆட்டம்... கொஞ்சம் ஓவராட்டம்.

கடந்த காலங்களில் கூட்டணி ஆட்சி என்பதால், உலக வர்த்தக அமைப்பு சொல்வதற்கேற்ப அதிரடியாக நடவடிக்கைகளை எடுக்க முடியாமல் தவித்தார் மன்மோகன் சிங். தற்போது, ‘கேட்பாரே இல்லை’ என்பதால், இன்னும் 50 ஆண்டுகளுக்குத் தேவையான அளவுக்கு அடித்து நொறுக்கி, அட்டகாசமாக ஆடிக்கொண்டிருக்கிறார் ‘அண்ணன்’ மோடி.

உதாரணமாக... அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலெல்லாம் பெரும்பாலான விவசாயிகள் கோடீஸ்வரர்கள். இருந்தும்கூட அவர்களுக் கெல்லாம் அந்த நாடுகளில் மானியங்கள் அள்ளிக்கொடுக்கப்படுகின்றன. அதையெல்லாம் உற்சாகப்படுத்தும் இதே உலக வர்த்தக அமைப்பு, இந்திய விவசாயிகளுக்குத் தரப்படும் மானியங்களை மட்டும் வேக வேகமாக ஒழிக்கச் சொல்கிறது. இதன் பின்னணி, 130 கோடி மக்கள் வசிக்கும் இந்தியா அவர்களுக்கெல்லாம் மிகச்சிறந்த சந்தை. உணவு உற்பத்தி குறைந்தால், நாளைக்கு நம்மிடம்தான் இந்தியா கையேந்தும் என்பது அவர்களுடைய எதிர்பார்ப்பு. அதற்கேற்பதான் காங்கிரஸ்கால நிதியமைச்சர்கள் ‘கடமை’யைச் செய்தார்கள். இன்றைய நிதியமைச்சரும் அப்படியே!

குஷ்பூ
குஷ்பூ

@ஆர்.சுந்தரராஜன், சிதம்பரம், கடலூர் மாவட்டம்.

‘மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக்கொள்கையில் சிறப்பான அம்சங்கள் உள்ளன. எதையெடுத்தாலும் கண்மூடி எதிர்க்கும் தலையாட்டி பொம்மையல்ல நான்’ என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பூ கருத்துச் சொல்லியிருக்கிறாரே?

‘அண்ணாமல... அண்ணாமல...

ஆசைவெச்சேன் எண்ணாமலே!’

சுகந்தி நாராயண், வியாசர் நகர்.

போற போக்கைப் பார்த்தா... 2021-ம் வருஷ புத்தகக் கண்காட்சிக்கும் தடை வந்துடுமோனு பயமும் கவலையும் வாட்டுதே..?

கல்யாணங்களையே ஆன்லைன் மூலமாக நடத்துகிறார்களே! காத்துக்கொண்டே இருங்கள்... ‘ஆன்லைன் புத்தகக் கண்காட்சி-2021’ உங்களை அழைக்கத்தான் போகிறது. ஆர்டர் கொடுத்தால், வீட்டுக்கே புத்தகங்களும் வரத்தான் போகின்றன. கவலையை விடுங்கள்!

எம்.செல்வராஜ், போரூர், சென்னை-116.

கொரோனாவை அதிகமாகப் பரப்பாமல் மத்திய, மாநில அரசுகள் ஓயாதுபோல் தெரிகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

கொரோனா விஷயத்தில் உலக நாடுகள் அனைத்துமே கத்துக்குட்டிகள்தான். அனுபவப்பட்டுப் பட்டுத்தான் மாற்றி மாற்றி நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டே இருக்கின்றன. அதற்காக அனுபவப்பட்டுக் கொண்டே இருப்பதும் ஆபத்து. புறப்பட்ட இடம் சீனா என்றாலும், கண்டுகொண்ட வேகத்தில் அந்த அரசு எடுத்த உறுதியான நடவடிக்கைகள்தான், அங்கே கொரோனா கொட்டத்தை ஒரு கட்டுக்குள் கொண்டு வரச் செய்தன. அத்தகைய நடவடிக்கைகள்தான் இங்கும் தேவை. ஆனால், முடிவெடுக்கும் கூட்டத்தில் முரண்பாட்டு மூட்டைகள் இருப்பதுதான் சிக்கலே.

அரசாங்கத்தின் உறுதியான நடவடிக்கை களும், மக்களின் முழுமையான ஒத்துழைப்பும்தான் இதிலிருந்து மீள்வதற்கான ஒரே வழி, இப்போதைக்கு!

@கி.ரமேஷ், நெய்வேலி, கடலூர் மாவட்டம்.

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக நடந்துவரும் தி.மு.க., அ.தி.மு.க கட்சிகளின் ஆட்சி எப்போது முடிவுக்கு வரும்?

2021-ல் கூட முடிவுக்கு வரலாம். ஆனால், ‘தெரியாத பிசாசைவிட... தெரிந்த பேயே மேல் என்று இருந்திருக்கலாமோ’ என நாம் நொந்துகொள்கிற மாதிரி அடுத்து வரும் ஆட்சி அமைந்துவிடக் கூடாதே என்பதுதான் என் பயமெல்லாம்.

@சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம், திருநெல்வேலி மாவட்டம்.

‘சிகரெட் குடிப்பவர்களுக்கு கொரோனா தொற்று எளிதில் பரவும்’ என மத்திய சுகாதாரத்துறை கூறுகிறது. அப்படியானால் சிகரெட் தயாரிப்பதைத் தடை செய்யலாம்தானே?

‘குடி குடியைக் கெடுக்கும்’ என்றுகூடத்தான் டாஸ்மாக் கடை போர்டுகளிலும், மது பாட்டில்களிலும் அரசாங்கமே எழுதி வைத்துள்ளது. அதற்காக டாஸ்மாக் கடையை மூடச் சொல்வீர்கள் போலிருக்கிறதே!

@ஆர்.அஜிதா, கம்பம். தேனி மாவட்டம்.

`இவர் முதல்வராக வந்தால் நாட்டுக்கு நல்லது’ என்று யாரைச் சொல்வீர்?

ம்ஹூம்... மாட்டேன். நான் சொல்பவர் நிச்சயம் ஆட்சிக்கு வருவார். அதன் பிறகு, ட்ரம்ப் ரேஞ்சுக்கு என்னைத் தேட ஆரம்பித்துவிடுவார்கள். உலகக் கால்பந்தாட்டப் போட்டியின்போது கண்ணாடிக் கூண்டுக்குள் ஆக்டோபஸை வைத்து ஜோசியம் கேட்டதுபோல, இந்தக் கழுகையும் அடைத்துவிடுவார்கள். ம்ஹூம்... மாட்டவே மாட்டேன். ஆளைவிடுங்கள் சாமி!

கழுகார் பதில்கள்

@‘வண்ணை’ கணேசன், சென்னை-110.

‘அன்புமணி தமிழக முதல்வரானால், சிங்கப்பூர் ஆட்சியைவிடச் சிறந்த ஆட்சியைத் தருவார்’ என்கிறாரே டாக்டர் ராமதாஸ்..?

ஏற்கெனவே துபாய், சிங்கப்பூர், ஜப்பான் என்று ‘சீன்’ காட்டிய நிறைய பேர், தங்கள் சுற்றம் மற்றும் நட்புகளையெல்லாம் துபாய், சிங்கப்பூர், ஜப்பான் ரேஞ்சுக்குத் தொட முடியாத உயரத்தில் உயர்த்தி வைத்துள்ளார்கள். அதனால், அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, லண்டன் என்று டாக்டர் ஸாப் புதிதாக ஏதாவது முயற்சி செய்யலாம்!

@இரா.கோதண்டராமன், அசோக்நகர், சென்னை-4.

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் இருக்கும்போதுகூட முகக்கவசம் அணியாமல் வெளியில் வருகிறார்களே சிலர்?

இன்றைக்குத் தமிழகம் முழுக்கவே இதுதான் நிலை. ஆனால், மெத்தப் படித்தவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், மீடியாக்களில் பேட்டி காண்பவர்கள், பேட்டி கொடுப்பவர்கள் எனப் பலரும்கூட இதை ஒரு விஷயமாகவே நினைப்பதில்லையே! அதிலும் முகக்கவசம் அணியாமல் சாலைகளில் நடக்கும் சிலர், தாங்கள் ஏதோ வீர தீர சூரர்கள்போலவும், முகக்கவசம் அணிந்திருப்பவர்கள் பயந்தாங்கொள்ளிகள் போலவும் நக்கலாக ஒரு பார்வையை வேறு வீசியபடி கடந்துசெல்வது இன்னும் கொடுமை.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள்,

ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!