Published:Updated:

கழுகார் பதில்கள்

கண்டுகொண்டே... கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.

பிரீமியம் ஸ்டோரி

@எஸ்.பி.விவேக், தாதம்பட்டி, சேலம்-14.

கழுகார், வாரிசு அரசியலுக்கு ஆதரவாளரா, எதிர்ப்பாளரா?

‘தொழில்’ என்று வந்துவிட்டாலே ‘வாரிசு’களுக்குத்தானே முன்னுரிமை. இதில் எதிர்ப்பு, ஆதரவு என்கிற பேச்சுக்கே இடமில்லையே!

ஆர்.சேஷாத்திரி, பருத்திப்பட்டு, சென்னை-71.

அன்று, ‘இந்து என்றால் திருடன்.’ இன்று, ‘ஒரு கோடி இந்துக்கள் தி.மு.க-வில் இருக்கிறார்கள்’... வெட்கமாக இல்லையா?

இல்லை என்பதால்தானே சொல்கிறார்கள்!

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

‘இதுவே கலைஞர் ஆட்சியாக இருந்திருந்தால்...’, `ஜெயலலிதா ஆட்சியாக இருந்திருந்தால்...’ என்று இன்று பேசுவதெல்லாம் சரிதானா?

‘பழங்கதை’ பேசுவதிலிருக்கும் சுகமே அலாதியானதுதானே நமக்கு.

@க.அருச்சுனன், செங்கல்பட்டு.

வருமானவரி செலுத்துபவர்கள்கூட ரேஷன் கடையில் இலவச அரிசியெல்லாம் வாங்குகிறார்களே... இதை அரசு கண்டுகொள்ளாதது ஏன்?

கண்டுகொண்டே... கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். `போதுமான வருமானமின்றி வாழும் ஏழை, எளியவர்கள் உணவின்றி வாடக் கூடாது’ என்கிற உயர்ந்த நோக்கத்தில் கொண்டுவரப்பட்டதுதான் ரேஷன் இலவசங்கள். அப்படி வாங்கிக்கொண்டிருந்த ஏழைகளில் பலரும் வருமானவரி செலுத்தும் அளவுக்கு உயர்ந்தும், வாங்கிக்கொண்டிருப்பது கொடுமையே!

இதைவிடக் கொடுமை... பல மடங்கு வருமானம் உள்ளபோதும், வரி செலுத்தாமல் அரசை ஏமாற்றிக்கொண்டிருக்கும் பலரும்கூட நியாயவிலைக் கடைகளில் பொருள்களை வாங்கிக்கொண்டிருப்பதுதான்.

‘வருமானவரி செலுத்துபவர்களுக்கு ரேஷன் பொருள்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும்’ என்று 2014-ம் ஆண்டில் மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பினார். ஆனால், யாருமே கண்டுகொள்ளவில்லை. ‘இதில் கைவைத்தால் வாக்கு வங்கி பணால் ஆகிவிடும்’ என்கிற பயம்தான் காரணம். மோடியும் கண்டுகொள்ளவில்லை. இதில், ஹிமாச்சல் பிரதேசத்தை ஆளும் பி.ஜே.பி அரசுக்கு மட்டும் தைரியம் அதிகம். இந்தத் திட்டத்துக்கு மாநில அமைச்சரவை கடந்த மே மாதம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலமாக அந்தச் சின்னஞ்சிறு மாநிலத்திலேயே ஆண்டுக்கு 80 கோடி ரூபாய் அரசுக்கு மிச்சம்.

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை, சேலம் மாவட்டம்.

சசிகலா பற்றிய கேள்விகளை முற்றாகத் தவிர்க்கிறாரே ‘எடப்பாடி’ பழனிசாமி?

என்ன இருந்தாலும் இந்த ‘சர்க்கரை வியாபாரி’க்கு அவர் ‘சின்ன முதலாளியம்மா’வாயிற்றே!

கழுகார் பதில்கள்

தாமஸ் மனோகரன், உழவர்கரை, புதுச்சேரி-10.

அரசாங்கத்துக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடுவது ஜனநாயகச் செயலா?

ஜனநாயகத்துக்கு விரோதமாக அரசு நடந்துகொள்ளும்போது, மக்களைத் தூண்டிவிடுவது ஜனநாயகச் செயலே!

@சரவணகுமார் சின்னசாமி, தாராபுரம்.

கழுகாரின் ஓட்டு... தாய்மொழிக்கா, இருமொழிக்கா, மும்மொழிக்கா?

எம்மொழியும் செம்மொழியே! இது ஜனநாயக நாடு. இங்கே வரிவடிவம்கொண்ட மொழிகள் 20-க்கும் மேல் இருக்கின்றன. வரிவடிவமே இல்லாமல் நூற்றுக்கணக்கான மொழிகள் இருக்கின்றன. வரிவடிவம் இல்லை என்பதற்காக, அவை தாழ்ந்த மொழிகள் என்றாகிவிடுமா.... ‘மொழி என்பது வெறும் தகவல் தொடர்புக்கு மட்டும்தான்’ என்பதை விட்டுவிட்டு, வெறியூட்டும் வேலைகள் அதிகமாக நடப்பதுதான் பிரச்னையே. நூற்றாண்டுகளாகத் தொடரும் இந்த அவலத்துக்கு இப்போதாவது முடிவுகட்ட வேண்டும். அவரவர் பேசும் மொழி அவரவருக்குத் தங்கம். எனவே, அனைத்து மொழிகளுக்கும் சமமான அந்தஸ்தைத் தருவதுதான் நியாயம், தர்மம். அதைவிடுத்து, ‘கூட்டாட்சி’ என்று பேசிக்கொண்டே குறிப்பிட்ட சில மொழிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தால், ‘காட்டாட்சி’யாகத்தான் இருக்கும்!

கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு-77.

1996-ல் ரஜினிக்கு முதல்வர் ஆகும் வாய்ப்பு இருந்ததா?

‘வாய்ப்பேச்சு’ இருந்தது!

கே.வேதநாராயணன், மயிலாடுதுறை.

ஓய்வு பெற்றவர்களை மாநில ஆளுநர், ஆர்.டி.ஐ கமிஷனர், ரிசர்வ் வங்கி ஆளுநர் போன்ற மிக முக்கியமான தலைமைப் பதவிகளில் நியமிப்பது சரியா?

‘நன்றிக்கடன்’ செலுத்துவதைக்கூடத் தவறு என்கிறீர்களே!

@நேக்கு, சென்னை-116.

பிள்ளைகளின் ஆன்லைன் கல்விக்காகத் தாலியை விற்று டி.வி வாங்கும் தாய்களைப் பற்றிய செய்திகள் வரத் தொடங்கியிருப்பது அச்சத்தை விதைக்கின்றனவே?

இது, முடிவல்ல... ஆரம்பம். இனி, இதைவிடக் கொடுமையான சம்பவங்கள் பற்றிய செய்திகள் வருவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். இப்போதே விழித்துக்கொண்டு, அத்தகைய கொடுமைகள் நிகழாவண்ணம் தடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கிறது. அதேபோல நம் ஒவ்வொருவருக்குமேகூட இருக்கிறது. ‘நம்முடைய தேவைக்கு’ என்று ஒதுக்கி வைத்திருப்பதிலிருந்து ‘என்னால் முடிந்தது’ என்று சிறு பங்கையாவது ‘அவர்களுக்காக’ என்று பிரித்துக் கொடுக்கும் மனம் எல்லோருக்குமே வர வேண்டும். அக்கம்பக்கத்தில், உறவு வட்டத்தில், நட்பு வட்டத்தில் இத்தகைய சம்பவங்களுக்கு வாய்ப்பு இருக்கக்கூடும் என்று தெரிந்தால், ஓடோடிப் போய் உதவிக்கரம் நீட்டுங்கள்!

@கே.ஆர்.அசோகன், கிட்டம்பட்டி.

ராஜஸ்தானில் ஒரு எம்.எல்.ஏ-வின் விலை ரூ.15 கோடியாமே?

‘ராஜஸ்தான் சட்டமன்றத்துக்கு டிரான்ஸ்ஃபர் கிடைக்குமா?’ என்று தமிழகத்தில் கட்சித்தாவும் மூடில் இருக்கும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் டெல்லி வரை சட்ட ஆலோசனை நடத்துவதாகக் கேள்வி!

@`நடூர்’ மு.கல்யாணசுந்தரம், மேட்டுப்பாளையம், கோவை மாவட்டம்.

‘மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகளைக் கவிழ்ப்பதில் இரண்டு தேசியக் கட்சிகளும் சமமானவை’ என்கிறாரே கர்நாடகாவின் மதச்சார்பற்ற ஜனதாதள் கட்சியின் தேவ கவுடா?

ஒரு மாநிலக் கட்சியாக இருந்துகொண்டு, அந்த இரண்டு தேசியக் கட்சிகளுக்கும் அடுத்தடுத்து ‘அல்வா’ கொடுத்ததன் மூலமாக, ‘நாங்கள் அவர்களுக்கும் மேலானவர்கள்’ என நிரூபித்தவர் தேவ கவுடா, அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்!

@கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்-6.

தி.மு.க-வுக்கு தற்போது இருக்கும் எம்.எல்.ஏ-க்கள் மட்டும் பா.ஜ.க-விடம் இருந்திருந்தால், இந்நேரம் தமிழகத்தில் அ.தி.மு.க-வைக் கவிழ்த்துவிட்டு, ஆட்சியை பா.ஜ.க கைப்பற்றியிருக்கும்தானே?

அய்யா உபேந்திரரே... கொரோனா ஊரடங்குக்காக நீங்கள் செவ்வாய் கிரகத்திலிருந்து ‘இ-பாஸ்’ வாங்கிக்கொண்டு ஊர் திரும்பியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஒரேயொரு எம்.எல்.ஏ-கூட இல்லாமல், தமிழகத்தின் ஆட்சியைக் கைப்பற்றி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன!

@ஆர்.அஜிதா, கம்பம், தேனி மாவட்டம்.

சென்னையில் குறைய ஆரம்பித்திருக்கும் கொரோனா, மற்ற மாவட்டங்களில் அதிகரித்துள்ளது பற்றி..?

அப்பாடி, இனிமேல் ‘சென்னைக்காரரா...’ என்று கேட்டு யாரும் விரட்டியடிக்க மாட்டார்கள்.

@மா.வி.கோவிந்தராசன், செய்யார், திருவண்ணாமலை மாவட்டம்.

தங்கக் கடத்தல், கேரள ஆளுங்கட்சியை பாதிக்குமா?

தங்கக் கடத்தல் இல்லையென்றாலும்கூட, அடுத்த தேர்தலில் எப்போதுமே அங்கே ஆளுங்கட்சிக்குப் பாதிப்புதான். காரணம், ஒரு தடவை ஆட்சிக்கு வந்த கட்சியை, பெரும்பாலும் அடுத்த தடவை ஆட்சியில் அமர்த்தும் பழக்கமில்லாதவர்கள் கேரள மக்கள்.

@உஷாதேவி, சென்னை-24.

பொள்ளாச்சி, நாகர்கோவில் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் போன்ற பல்வேறு சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை கிடைக்கும் வரை ‘தெறி’, ‘அடங்க மறு’ போன்ற படங்கள்தான் நமக்கான ஆறுதலா?

‘படத்தின் மூலமாகவாவது தண்டனை கொடுக்க முடிந்ததே...’ என்று நாமெல்லாம் ‘அடங்கிக்கிடப்பது’தான் இது போன்ற குற்றவாளிகள் நம்மையெல்லாம் தொடர்ந்து ‘தெறி’க்கவிட்டுக்கொண்டிருப்பதற்குக் காரணம். நிழல் நிஜமாகாது. உறுதியான போராட்டங்கள்தான் நீதியைத் தேடித்தரும்... நிர்பயா வழக்குபோல!

@கி.ரமேஷ், நெய்வேலி.

‘மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம்’ என்று சொல்லும் அ.தி.மு.க., வரும் சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைக்குமா?

இன்னும் எட்டு மாதங்கள் வரை இதையெல்லாம் நாம் நினைவில் வைத்துக்கொண்டிருக்க மாட்டோம் என்று அவர்களுக்குத்தான் நன்றாகத் தெரியுமே!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள்,

ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு