Published:Updated:

கழுகார் பதில்கள்

அந்தக் கட்சிக்கு, `அண்ணா’ என்பது ஓர் அடையாளம் மட்டுமே.

பிரீமியம் ஸ்டோரி

@ஆர்.எஸ்.மனோகரன், முடிச்சூர், செங்கல்பட்டு மாவட்டம்.

மன அழுத்தத்தைப் போக்க என்ன வழி?

ஒரு நாள் முழுக்க எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்து பாருங்கள். அழுத்தம் குறைந்ததுபோல இருந்தால், பின்பற்ற ஆரம்பித்து விடுங்கள்.

@ப்யூனி பிரதர்ஸ்.

கழுகார் எந்தப் பக்கம்?

அறிவின் பக்கம்!

(எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு)

@மாணிக்கம், திருப்பூர்.

‘ரத்ததாகம் கொண்ட ஓநாய்கள்போலச் செயல்படும் ஊழல் அரசு ஊழியர்கள்’ என்று உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்தை ஊழல் அதிகாரிகள் படிக்கும்போது என்ன நினைப்பார்கள்?

நானே ‘ஓநாயைக் கேவலப்படுத்திவிட்டதே உயர் நீதிமன்றம்...’ என்கிற கவலையில் இருக்கிறேன். இந்த நேரம் பார்த்து, தேவையில்லாத கேள்விகளையெல்லாம் கேட்பது நியாயமா மாணிக்கரே!

@ப.திருக்காமேஷ்வரன், குயவர்பாளையம், புதுச்சேரி-13.

‘அ.தி.மு.க கொடியிலிருந்து அண்ணாதுரை படத்தை நீக்க வேண்டும்’ என்று எஸ்.வி.சேகர் கூறியிருக்கிறாரே?

அந்தக் கட்சிக்கு, `அண்ணா’ என்பது ஓர் அடையாளம் மட்டுமே. மற்றபடி ஆரம்ப நாள்களிலிருந்தே அண்ணாவுக்கும் அந்தக் கட்சிக்கும் பெரிதாக ஏதும் தொடர்பு இல்லை. அதற்குப் பதிலாக, தன்னுடைய படத்தைக் கொடியில் போட்டு கட்சியை ஆரம்பித்திருந்தாலும், எம்.ஜி.ஆர் முதல்வராகியிருப்பார். அதைத்தான் அவரைத் தொடர்ந்து அந்தக் கட்சி சார்பில் முதல்வர் பதவியைப் பிடித்த ஜெயலலிதா நிரூபித்தார். அதே ‘அம்மா வழி’யில்தான் ஓ.பி.எஸ்., எடப்பாடி என அந்தக் கட்சி ‘பரிணாம வளர்ச்சி’ அடைந்துகொண்டிருக்கிறது. எனவே, எஸ்.வி.சேகர் சொல்வதில் எந்தத் தவறும் இல்லை.

கழுகார் பதில்கள்

@ஆர்.சுந்தரராஜன், சிதம்பரம்.

‘அப்ளை செய்தவர்களுக்கெல்லாம் இ-பாஸ் வழங்க வேண்டும் என்று சட்டம் இல்லை’ என்கிறாரே அமைச்சர் வீரமணி?

`புரோக்கர்களுக்கு மட்டும் வழங்க வேண்டும்’ என்பதுதான் பத்திரப்பதிவு அலுவலகம் முதல் இ-பாஸ் அலுவலகம் வரை பின்பற்றப்படும் நடைமுறை. அதைத்தானே பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் தெள்ளத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

@சையத் முகம்மது.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சேவின் கட்சி, மூன்றில் இரண்டு மடங்கு தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறதே..?

எதிரிகளை உதிரி உதிரியாகச் சிதறடிக்கும் ‘ராஜதந்திர’த்துக்கு உலகெங்கும் எப்போதும் வெற்றியே!

@ஹெச்.மோஹன், மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம்.

நீங்கள் ராம பக்தரா.... ராவணன் பக்தரா?

உங்கள் பக்தன்!

@சாந்தி மணாளன், கருவூர்.

‘காங்கிரஸுக்கு மதச்சார்பின்மையில் தெளிவான ஒரு நிலைப்பாடு இருந்திருந்தால், நாட்டுக்கு இந்த கதி ஏற்பட்டிருக்காது’ என்று கூறியுள்ளாரே மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரான கேரள முதல்வர் பினராயி விஜயன்?

இவர்களுக்கு கம்யூனிசத்தில் ஒரு தெளிவான நிலைப்பாடு இருந்திருந்தால், இந்தியாவில் காங்கிரஸே இருந்திருக்காதே!

@‘நன்னிலம்’ மணிமாறன், சிங்கப்பூர்.

மதங்களைத் தோற்றுவித்த நாயகர்கள் இப்போது உயிர்த்தெழுந்தால், மதங்களின் இன்றைய நிலை குறித்து என்ன நினைப்பர்?

‘கோமா’ளி பரிதாபம்தான். #‘என்னடா பண்ணிவெச்சிருக்கீங்க?’ என்று தலையில் அடித்துக்கொள்வதைவிட பாவம் அவர்களால் வேறு எதை நினைத்துவிட முடியும்.

‘கடல்’ நாகராஜன், கடலூர்.

தமிழ்நாட்டில் எத்தனை அரசியல் கட்சிகள், எத்தனை சாதிக் கட்சிகள், எத்தனை சாதிப் பிரிவுகள் இருக்கின்றன என்று உங்களால் சொல்ல முடியுமா?

இதற்குப் பதிலாக, ‘வானத்திலிருக்கும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை என்ன?’ என்றுகூட நீங்கள் கேட்டிருக்கலாம். முடிந்த அளவுக்கு முயற்சியாவது செய்திருப்பேன்!

@பொ.பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி.

மும்மொழியைப் படிக்க மாணவர்கள் தயாராக இருந்தும், அவர்களின் கருத்தைக் கேட்காமல் அரசியல்வாதிகள் எதிர்ப்பது சரியா?

விருப்பமுள்ள மாணவர்கள் படிப்பதற்கு இப்போதும்கூட தமிழகத்தில் எந்தத் தடையும் இல்லையே... இந்தி உட்பட பல்வேறு மொழிகளைப் படித்துக்கொண்டுதானே இருக்கிறார்கள். அதைப் பள்ளிக்கூடப் பாடத்திட்டத்தில் கொண்டுவருவதிலும் தவறில்லை. ஆனால், ‘இந்த மொழியைத்தான் படித்தாக வேண்டும்’ என்று மறைமுகமாகக் கட்டாயப்படுத்தும் வகையில் விதிகள் அமைந்திருப்பதுதான் பிரச்னையே. அதுவும் இந்தி, சம்ஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவது, பிரச்னையை மேலும் சிக்கலாக்குகிறது. உண்மையிலேயே கல்வியில் மாற்றம் கொண்டுவர விரும்பினால், தேவையற்ற இதுபோன்ற பிரச்னைகளை எதற்காக ‘இடைச்செருகல்’ செய்ய வேண்டும்?

‘எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் எல்லோருமே அரசியல்வாதிகள்’ என்று சொல்லி பிரச்னையைத் திசைதிருப்பும் வேலையும் நடக்கிறது. இது, அரசியல்வாதிகளுக்குத் தேர்தல் நேரத்துத் தேவையாக இருக்கலாம். ஆனால் மொழியியல் வல்லுநர்கள், மொழி ஆர்வலர்கள், கல்வியாளர்களுக்கு அப்படி எந்தத் தேவையும் இல்லை. ‘வடநாட்டில் இந்தியைத் தூக்கிப் பிடித்ததால், வெளியில் தெரியாமலேயே புதைந்துகொண்டிருக்கும் ராஜஸ்தானி, மார்வாரி, போஜ்புரி, ஹரியானி போன்ற பல மொழிகளின் பட்டியலில் தமிழும் இடம்பெற்றுவிடக் கூடாது’ என்பது மட்டுமே அவர்களுடைய கவலை. எனவே, இத்தகையோரின் பலமான எதிர்க்குரல்களுக்கு மதிப்பளித்து, பிரச்னையின் ஆழத்தை அறிந்து, உரிய வகையில் தீர்வுகாண வேண்டியது மத்திய அரசின் கடமையே.

கழுகார் பதில்கள்

@அ.செல்வராஜ், கரூர்.

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனுக்குக் கோயில் கட்ட அடிக்கல் நாட்டியுள்ளாரே அவருடைய கட்சி எம்.எல்.ஏ ஒருவர்?

இத்தகைய தனிநபர் வழிபாடுதான் தாளாத பிரச்னைகளுக்கெல்லாம் வழிகோலுவதாக இருக்கிறது. கூழைக்கும்பிடு போடுபவர்களும், குறுக்குவழியில் முன்னேற நினைப்பவர்களும்தான் இது போன்ற வேலைகளில் இறங்குகின்றனர். இதைப் பார்க்கும் அடுத்தடுத்த ஆட்சியாளர்கள், தங்களுக்கும் கோயில் கட்டுவதற்கு ஏற்பாடு செய்துவிடுகிறார்கள். நினைவு மண்டபம், நினைவுத்தூண், உலகிலேயே உயரமான சிலை என்று ஊர்ப் பணத்தை சூறைத்தேங்காய்விட ஆரம்பித்துவிடுகிறார்கள்.

தலைவர்களாக இருப்பவர்கள் ஒருபோதும் இது போன்ற புகழ் போதைகளுக்கு மயங்கக் கூடாது. ‘நான் கடவுள் அல்ல... மக்களுக்குச் சேவை செய்ய, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன்’ என்கிற சங்கதி மட்டுமே ஒவ்வொரு தலைவனின் மனதிலும் பதிந்திருக்க வேண்டும். அந்த வகையில், உடனடியாகக் கோயில் கட்டும் வேலையைத் தடுத்து நிறுத்துவதற்கு ஜெகன்மோகன் முன்வர வேண்டும். இல்லையென்றால், இந்தப் புகழ்போதை... அழிவுப்பாதையே!

@பி.அசோகன், கோபிச்செட்டிபாளையம், ஈரோடு மாவட்டம்.

சர்க்கஸ் தொழிலாளர்கள் மீண்டு வருவார்களா?

உற்சாகப்படுத்துவதை ஒரு தொழிலாகக் கொள்வதில் தவறில்லை. அதற்காக உயிரைப் பணயம்வைக்கும் தொழில்களை ஒருபோதும் ஊக்குவிக்கக் கூடாது. `பொழுதுபோக்கு’ என்ற பெயரில் உயிரைப் பணயம்வைக்கும் இது போன்ற ஏகப்பட்ட தொழில்கள் இருக்கின்றன. இதில் ஈடுபட்டிருப்பவர்களையெல்லாம் மீட்டெடுத்து, மறுவாழ்வு வழங்க வேண்டும் என்பதுதான் மனிதப் பண்பாக இருக்கும். ‘மிருகங்களை வதைக்கக் கூடாது’ என்று தடைபோட்டிருக்கிறோம். ‘நாம் மனிதர்கள்’ என்று பெருமை பேசுகிறோம். ஆனால், நம்மில் சிலர் வதைபடுவதை நாமே வேடிக்கை பார்த்து, கைதட்டி ரசிக்கிறோம். இது எந்தவகையான மனநிலை என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய காலத்துக்கு வந்துவிட்டோம். இதை இனியாவது நாம் உணர வேண்டும்.

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம், நெல்லை மாவட்டம்.

உயிரைவிட மேலானது எது?

எதுவுமே இல்லை.

@எல்.மோகனசுந்தரி, கிருஷ்ணகிரி-1.

‘முழுக்கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள்மீது நடவடிக்கை பாயும்’ என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளதே?

முதலில், நேரடியாக நடக்காத வகுப்புகளுக்கு 70 சதவிகிதக் கட்டணம் வசூலிக்க அனுமதித்ததே தவறு. பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் காசு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டவையே. ஓர் ஊரில் பள்ளிக்கூடம் நடத்துவதற்காகக் கொடுத்த அனுமதியை வைத்துக்கொண்டு, பல ஊர்களில் பள்ளிக்கூடம் நடத்துபவர்களும்கூட உண்டு. வரைபடத்திலிருக்கும் விளையாட்டு மைதானம் நிஜத்தில் இருக்காது; ஒரு சைக்கிள்கூட செல்ல முடியாத தெருவுக்குள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியையே நடத்துவார்கள்; இப்படி ஒட்டுமொத்தமாக அயோக்கியத்தனத்தில் ஈடுபடுபவர்களிடம் ஒழுக்கத்தை எதிர்பார்க்கும் நீதிமன்றத்தை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள்,

ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு