Published:Updated:

கழுகார் பதில்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

விளையாட்டு வீரரின் பெயரையே அந்தத் துறை சார்ந்த விருதுக்கு வைத்தது அழகுதான்.

பிரீமியம் ஸ்டோரி

த.சிவாஜி மூக்கையா, சென்னை-44.

ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் 2,63,976 ரூபாய் கடன் சுமை இருப்பதாக தி.மு.க அரசின் வெள்ளை அறிக்கை கூறுகிறதே?

இருக்குற கடனுக்கு இ.எம்.ஐ கட்டவே வழியில்லாம இருக்கோம்... இதுல இவங்க வேற! நம்மகிட்ட கேட்காம வாங்கின கடனை, கட்டச் சொன்னா என்ன பண்றது!

வாசுதேவன், பெங்களூரு.

பெட்ரோல் விலையில் 3 ரூபாயைக் குறைத்திருக்கிறதே தமிழக அரசு?

‘‘நாங்க இதைப் பண்ணிட்டோம்... நீங்க என்ன பண்ணப்போறீங்க?’’ என்று மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்குத்தான் இந்த விலைக்குறைப்பு!

பெ.பச்சையப்பன், கம்பம்.

வாழ்க்கையில் ஒரு மனிதனுக்குத் தேவையான பணம் எவ்வளவு சார்?

‘‘இந்த உலகில் மனிதனின் தேவைக்குப் போதுமான அளவு வளம் உள்ளது. ஆனால், அவன் பேராசைக்குப் போதுமான அளவு வளங்கள் இல்லை’’ என்பது காந்தி சொன்னது. அடுத்த மனிதனின் அத்தியாவசியத்தை பாதிக்காத அளவு, நம் தேவையை வரையறுத்துக்கொள்ள வேண்டும்.

கழுகார் பதில்கள்

ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.

‘`முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்கள்மீது தொடுக்கப்படும் வழக்குகளைச் சட்டரீதியாகச் சந்திக்கத் தயார்’’ என்று ஓ.பி.எஸ்-ஸும் இ.பி.எஸ்-ஸும் கூறியிருக்கிறார்களே?

இதென்ன புது விளக்கம்... வழக்குகளைச் சட்டரீதியாகச் சந்திப்பதுதானே ஒரே வழி?

மூர்த்தி பாலகிருஷ்ணன், அனுப்பானடி, மதுரை.

அரசியல்வாதிகள் செய்யும் ஊழலுக்கும், அதிகாரிகள் செய்யும் ஊழலுக்கும் என்ன வித்தியாசம்?

யாரும் ஊழல் செய்யக் கூடாது என்பதுதான் அறம். இதில் வித்தியாசம் வேறா?

திருப்பூர் அர்ஜுனன்.ஜி, அவிநாசி.

‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது’ பெயர் மாற்றம் செய்திருப்பது மத்திய அரசுக்கு அழகா?

விளையாட்டு வீரரின் பெயரையே அந்தத் துறை சார்ந்த விருதுக்கு வைத்தது அழகுதான். அதேசமயம், அகமதாபாத்திலுள்ள உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்துக்கு வைக்கப் பட்டிருக்கும் ‘நரேந்திர மோடி ஸ்டேடியம்’ என்ற பெயரை மாற்றி, துறை சார்ந்தவரின் பெயரை வைத்தாரென்றால் அது பேரழகு!

கழுகார் பதில்கள்

வீராசாமி, தேனி.

வெள்ளி வென்ற மீராபாய் சானுவை `தங்க மங்கை’ என்கிறார்களே!?

ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டியில் வெள்ளி வென்ற மீராபாய் சானு, தான் செய்த ஒரு செயல் மூலம் ‘தங்க மங்கை’ என்று போற்றப்படுகிறார். மணிப்பூர், நாங்போக் காக்சிங் எனும் கிராமத்திலிருக்கும் இவர், தினமும் அங்கிருந்து 25 கி.மீ தூரத்திலிருக்கும் இம்பால் நகருக்குப் பயிற்சிக்காகச் செல்வார். அப்போது, அங்கிருக்கும் டிரக் ஓட்டுநர்கள்தான் அவருக்கு அடிக்கடி லிஃப்ட் கொடுப்பார்கள். பலரும் அந்த வழியே வருடத்துக்குப் பலமுறை செல்பவர்கள் என்பதால், அவர்களைத் தேடி கௌரவித்திருக்கிறார் மீராபாய். 150 ஓட்டுநர்கள், அவர்களின் உதவியாளர்களை அழைத்து விருந்து வைத்ததோடு, ஒவ்வொருவரின் பாதம் தொட்டு தன் நன்றியைத் தெரிவித்திருக்கிறார். தங்கமான உள்ளம்தானே!

கழுகார் பதில்கள்

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

``கோவை மக்கள் தி.மு.க-வுக்கு ஓட்டுப் போடாததால், கோவைக்கு வரவே வெட்கமாக இருக்கிறது’’ என்கிறாரே அமைச்சர் அன்பரசன்?

ஓட்டுப் போட்டவர்கள், போடாதவர்கள் என்பதெல்லாம் தேர்தல் முடிவுகளோடு முடிந்த விஷயம். ‘`வாக்களிக்காதவர்களும் மகிழ்ச்சி அடையும் வகையில் ஆட்சி தருவோம்’’ என்றும், ‘`இது நமது அரசு’’ என்றும் முதல்வர் சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில், மறுபக்கம் அமைச்சர் ஒருவரே இப்படிப் பேசுவது ஜனநாயகத்துக்கு எதிரானது.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு