Published:Updated:

கழுகார் பதில்கள்

மூணாறு
பிரீமியம் ஸ்டோரி
மூணாறு

எப்போதுமே ‘அழும்கட்சி’ நாம்தான். இதை மாற்றக்கூடிய ஒரு கட்சிதான் ஆளுங்கட்சியாக வர வேண்டும்.

கழுகார் பதில்கள்

எப்போதுமே ‘அழும்கட்சி’ நாம்தான். இதை மாற்றக்கூடிய ஒரு கட்சிதான் ஆளுங்கட்சியாக வர வேண்டும்.

Published:Updated:
மூணாறு
பிரீமியம் ஸ்டோரி
மூணாறு

@ப.மணி, வெள்ளக்கோவில், திருப்பூர் மாவட்டம்.

மு.க.ஸ்டாலின் தி.மு.க-வை திறம்படத்தான் நடத்துகிறாரா?

பாவம், அவரே படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

@ஹெச்.மோஹன், மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம்.

முதல்வர் பதவியை டெண்டர் அடிப்படையில் ‘தேர்வு’ செய்தால் என்ன?

டெண்டருக்காகத்தானே முதல்வர் பதவியே!

டாக்டர் கே.விஸ்வநாதன், கோயம்புத்தூர்-45.

ரஜினியின் பலம் என்ன... பலவீனம் என்ன?

திரையில் நடிப்பது பலம்... திரைக்கு வெளியே மிகத் திறமையாக நடிக்க முயன்று தோற்பது பலவீனம்!

@பி.எஸ்.எ.ஜெய்லானி, கடையநல்லூர், தென்காசி மாவட்டம்.

பெங்களூரு சிறையில் சசிகலா சலுகைகளை அனுபவித்தார் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் வெளிவராத நிலையில், ரூபா ஐ.பி.எஸ்-ஐ ஊடகங்கள் அதிகமாகப் புகழ்வது, சசிகலா விவகாரத்தில் அவர் தலையிட்டார் என்பதற்காகத்தானே..?

சசிகலா... எதற்காகவும் எதையும் வளைக்கக்கூடிய வித்தை கற்றவர். அப்படியிருக்க, அவர்மீதான புகார்கள் ஆதாரங்களுடன் வெளிவருவதற்கு வாய்ப்புகள் மிகமிகக் குறைவே. இருந்தும், அந்த வாய்ப்பை உருவாக்கியவர் ரூபா. `சிறைக்குள் இத்தனை பெரிய அநியாயமா?’ என்பதுதான் ஊடகங்களின் பார்வையே தவிர, அது தாவூத் இப்ராஹிம், பிரேமானந்தா என யார் செய்திருந்தாலும் ஊடகங்களின் பங்கு இப்படித்தான் இருந்திருக்கும். இன்றைக்கு, கர்நாடக மாநில உள்துறைச் செயலாளர் எனும் உயரிய பொறுப்புக்கே வந்துவிட்டார் ரூபா. இதற்கும் சசிகலாதான் காரணம் என்றால், இருக்கலாம்தான். ஆனால், அவர் தவறான வழியில் ஒன்றும் வந்து அமர்ந்துவிட வில்லைதானே!

@‘காஞ்சி’ எஸ்.ஃபைசுதீன், காஞ்சிபுரம்.

நியாயமாகச் சொல்லுங்கள்... முதல்வர் எடப்பாடியார் காலந்தள்ளுவது... அதிகாரத்தாலா, திறமையாலா?

‘திறமை மிக்க’வர்கள் ‘அதிகாரம்’ செலுத்துவதால்!

மல்லிகா அன்பழகன், சென்னை-73.

வரும் விநாயகர் சதுர்த்திக்கு மு.க.ஸ்டாலினிடமிருந்து வாழ்த்து அறிக்கை வருமா?

பக்ரீத், கிறிஸ்துமஸ் போன்ற பிற மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்பவர், விநாயகர் சதுர்த்தி பண்டிகை உள்ளிட்ட இந்துமதப் பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லாமலிருப்பது என்ன வகை கொள்கையோ. ரொம்ப கஷ்டமாக இருந்தால், ‘விடுமுறை நாள் வாழ்த்துகள்’ என்றாவது சொல்லிவைக்கலாம்.

விடுமுறை நாள்: உபயம் கலைஞர் டி.வி (இந்துப் பண்டிகை நாள்களில் சிறப்பு நிகழ்ச்சிகளை இந்தப் பெயரில்தான் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த டி.வி-யில்).

எஸ்.சங்கர், தூத்துக்குடி.

சாத்தான்குளம் இரட்டைக் கொலை விவகாரத்தில் தவறிழைத்த மருத்துவர் வினிலா, மாஜிஸ்ட்ரேட் சரவணன், கோவில்பட்டி சிறை அலுவலர் மூவர்மீதும் சி.பி.ஐ நடவடிக்கை எதுவும் எடுத்ததுபோலத் தெரியவில்லையே?

10 காவலர்களைக் கைதுசெய்த அதே வேகத்தில், இந்த மூவர்மீதும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். நீதிமன்றத்தில் நிறுத்தியிருக்க வேண்டும். தவறிழைத்தவர் நீதிபதியாகவே இருந்தாலும், தண்டனை கிடைக்கும் எனும்போதுதான் மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும்... சம்பந்தப்பட்டவர்களுக்கும் பயம் பிறக்கும்.

@வாசுதேவன், பெங்களூரு, கர்நாடக மாநிலம்.

ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வித்தியாசம்?

ஒரு குருவி இயல்பாக வாழ்வதற்குத் தேவை ஒரு கூடு மட்டுமே. அதையே, ‘அழகான கூடு’ என்று நினைக்க ஆரம்பித்தால் ஆசை. ‘பேரழகான கூடு’ என்று நினைத்தால் பேராசை!

மூணாறு
மூணாறு

@ஆனந்தி தேவராஜன், கண்டமங்கலம்.

மூணாறு சோகம்?

திருப்பித் தாக்கும் இயற்கையின் வேகம். ஆனால், எப்போதுமே அதிகம் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவிகள் தான்!

@நெல்லை குரலோன், பொட்டல்புதூர்

கழுகாரின் நெஞ்சம் கவர்ந்த இலக்கியப் படைப்பாளி?

ஒருவரல்ல... ஓராயிரம் படைப்பாளிகள் இருக்கிறார்கள். வயற்காட்டில் நடவுசெய்யும் போது பாட்டெடுக்கும் பெண்கள், தூளியில் குழந்தையைத் தூங்க வைக்கும் அம்மாக்கள், இறுதி யாத்திரைக்கு ஒப்பாரி வைக்கும் உறவுகள், சுமக்கவே முடியாத சுமையைக்கூட சுலபமாகச் சுமப்பதற்காக ‘ஐலேசா...’ போடும் தொழிலாளர்கள்... இப்படி எண்ணற்ற படைப்பாளிகள் இருக்கிறார்கள். என்ன, இந்தப் படைப்பாளிகள் அனைவரும் தாங்கள் படைப்பாளிகள் என்பதைத் தெரிந்து கொள்ளாமலும், அதைச் சந்தைப்படுத்தத் தெரியாமலும் வாழ்ந்து முடித்தவர்கள்/வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இவர்களில் யாரை விட்டுத்தருவது!

‘வண்ணை’ கணேசன், சென்னை-110.

‘வரி செலுத்தும் மக்கள்தான் நாட்டைக் காக்க உதவுகின்றனர்’ என்று நிர்மலா சீதாராமன் கருத்து கூறியுள்ளாரே?

அது எங்களுக்குத் தெரியும் அம்மணி. ஆனால், ‘வரியை ஏய்ப்பவர்களுக்குத்தானே நீங்கள் பெரும்பாலும் உதவிக்கொண்டிருக் கிறீர்கள். அதைப் பற்றி யோசிக்கவே மாட்டீர் களா?’ என்று நிர்மலாவிடம் கேளுங்களேன் வண்ணையாரே!

‘ஏழாயிரம்பண்ணை’ எம்.செல்லையா, சாத்தூர், விருதுநகர் மாவட்டம்.

‘கட்சியின் மாண்பை மீறவில்லை’ என்று மு.க.ஸ்டாலினுக்கு கு.க செல்வம் பதிலளித்துள்ளது பற்றி..?

அரசியல் கட்சிகளில் அதெல்லாம் இருந்தால்தானே மீறுவதற்கு.

@பி.சிதம்பரநாதன், கருவேலன்குளம், திருநெல்வேலி மாவட்டம்.

தமிழகத்தில் அடுத்த ஆளுங்கட்சி எது?

எப்போதுமே ‘அழும்கட்சி’ நாம்தான். இதை மாற்றக்கூடிய ஒரு கட்சிதான் ஆளுங்கட்சியாக வர வேண்டும். ஆனால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் எதுவுமே தென்படவில்லையே!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

@ஆனந்தன், எம்.பெருமாள்பட்டி, தேனி மாவட்டம்.

அரசுப் பள்ளி மாணவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களே. இந்த கொரோனா சூழலில் படிப்பு பாதிப்புக்குள்ளாகி, எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்கிறார்கள். அரசாங்கத்துக்கு ஏதாவது உருப்படியான யோசனை சொல்லலாமே கழுகாரே..?

அரசாங்கப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு, தனியார் பள்ளிகள்போல ஆன்லைன் வகுப்புக்குத் தேவையான டேப்லெட், ஸ்மார்ட்போன் உள்ளிட்டவை கிடைப்பதில்லை என்பதுதான் தற்போதைய சிக்கலே. வெட்டியான, ஊதாரித்தனமான, அவசியமற்ற, அவசரமற்ற வகைகளில் செலவழிக்கப்படும் மக்கள் வரிப்பணத்தை, இது போன்ற அத்தியாவசியமான விஷயங்களுக்குப் பயன்படுத்த முன்வர வேண்டும்.

உதாரணமாக, ஜெயலலிதாவுக்காக 50.8 கோடி ரூபாய் செலவில் சமாதி கட்டப்படுகிறது. இதைத் தவிர, போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக்க 68 கோடி ரூபாய் (இழப்பீடு மட்டும்), ஜெயலலிதா செலுத்தத் தவறிய வருமானவரி பாக்கி 37 கோடி ரூபாய் என இந்த கொரோனா கொடுமைக்கு நடுவேயும் 105 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளனர். இன்னும் சிலபல கோடிகளையும் கொட்டினால்தான் நினைவு இல்லத்தை உருவாக்க முடியும்.

சமாதியைக்கூட விட்டுவிடுவோம்... நினைவு இல்லத்துக்கான 105 கோடி ரூபாயை வைத்து, 2,10,000 மாணவர்களுக்கு டேப்லெட் வாங்கித் தந்துவிட முடியும். இதுபோல பிற தலைவர்களின் நினைவு இல்லங்கள், சிலைகள், கொண்டாட்டங்கள் என்றெல்லாம் செலவிடப்படும் தொகையை ஓராண்டுக்கு நிறுத்திவைத்தாலே, ஒட்டுமொத்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகளை நடத்திவிட முடியும். ஆனால், ஆட்சியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இது முக்கியமில்லையே!

@ம.ராகவ்மணி, வெள்ளக்கோவில், திருப்பூர் மாவட்டம்.

பா.ஜ.க-வின் திட்டம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடக்காமல் போய்விட்டதே..?

பாவம் அமித் ஷா. இந்த கொரோனா தன்னையும்கூட ஒரு கை பார்க்கும் என்று முன்கூட்டியே கணிக்கத் தவறிவிட்டார்!

@இல.கண்ணன், நங்கவள்ளி, சேலம் மாவட்டம்.

‘தமிழகத்தில் அ.தி.மு.க-தான் என்றும் முதலிடம்... தி.மு.க - பா.ஜ.க இடையே இரண்டாவது இடத்துக்குத்தான் போட்டி’ என்று அமைச்சர் ‘கடம்பூர்’ ராஜூ சொல்கிறாரே..?

இந்த நான்கு ஆண்டுகளில்தான் மனிதர் எவ்வளவு காமெடியாகப் பேசக் கற்றுக்கொண்டுவிட்டார் பாருங்களேன்..!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள்,

ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism