Published:Updated:

கழுகார் பதில்கள்

புதிய மாவட்டங்கள் உதயமாகும் நிகழ்ச்சி
பிரீமியம் ஸ்டோரி
புதிய மாவட்டங்கள் உதயமாகும் நிகழ்ச்சி

யாரிடம் ரௌத்திரம் பழகுவது?

கழுகார் பதில்கள்

யாரிடம் ரௌத்திரம் பழகுவது?

Published:Updated:
புதிய மாவட்டங்கள் உதயமாகும் நிகழ்ச்சி
பிரீமியம் ஸ்டோரி
புதிய மாவட்டங்கள் உதயமாகும் நிகழ்ச்சி

@வெங்கட் கே.

‘நிரந்தர நண்பனும் இல்லை... நிரந்தர எதிரியும் இல்லை’ என்பது அரசியலுக்கு மட்டும்தான் பொருந்துமா?

இல்லை, ‘அரசியல்’ செய்யும் அனைவருக்குமே பொருந்தும் (என்ன கொடுமை... `அரசியல்’ எனும் அற்புதமான வார்த்தை, கெட்டவார்த்தையாகவே மாறிவிட்டதே!)

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆர்.துரைசாமி, கோயம்புத்தூர்-6.

யாரிடம் ரௌத்திரம் பழகுவது?

சமூகத்திடம்தான்.

@‘காஞ்சி’ எஸ்.ஃபைசுதீன், காஞ்சிபுரம்-1.

அரசியல்வாதிகள் செய்யும் ‘மட்டமான’ செயல்களில் ஒன்றுக்கு ‘குதிரை பேரம்’ என்று மரியாதையான சொற்றொடர் விளங்குகிறது. அதை ‘கழுதை பேரம்’ எனக் குறிப்பிடுவதுதானே பொருத்தமாக இருக்கும்?

கழுகார் பதில்கள்

பொருத்தமாக இருக்காது. ‘என்னைவிட கழுதை மரியாதை குறைவானது’ என்று எந்தக் குதிரையாவது வந்து உங்களிடம் சொன்னதா அல்லது ‘குதிரைதான் உசத்தி’ என்று கழுதை வந்து வாக்குமூலம் கொடுத்ததா? கேடுகெட்டவர் களால் நடத்தப்படும் இந்த பேரத்தை, ‘மானங்கெட்ட மனித பேரம்’ என்று அழைப்பதுதான் வெகுபொருத்தமாக இருக்கும்.

வி.ஹரிகிருஷ்ணன், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு.

இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து கிடக்கும் நிலையிலும், ‘இந்தியா அதிவேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது’ என்று பிரதமர் மோடி சொல்லிக்கொண்டிருக் கிறாரே?

‘வீழ்ச்சி’ என்று சொல்வதற்குப் பதிலாக ‘வளர்ச்சி’ என்று ‘டங்க் ஸ்லிப்’பாகியிருக்கும். பாவம், விட்டுத்தள்ளுங்கள்.

பி.சாந்தா, மதுரை-14.

முதுமையில் மன அழுத்தத்தைப் போக்கி மகிழ்ச்சி அடைவதற்கு என்ன வழி?

‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு’

இந்த 350-வது திருக்குறள் வழி ஒன்று மட்டும் போதுமே!

‘மேட்டுப்பாளையம்’ மனோகர், கோவை-14.

அன்றைய இந்தி, தமிழ் திரைப்படப் பாடல்கள் எல்லாம் கேட்பவர் மனங்களைப் பரவசப்படுத்திப் பண்படுத்தியதுடன், படங்களின் வெற்றிக்கும் உதவின. அதுபோல் இன்று இல்லாதுபோனது ஏன்?

இன்றைய பாடல்களும் பரவசப்படுத்தி, வெற்றிக்கும் உதவத்தான் செய்கின்றன. பண்படுத்துகின்றனவா என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது.

க.நஞ்சையன், சூளேஸ்வரன்பட்டி, கோவை.

மாவட்டங்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே போகிறதே?

நாம் ‘பெருக்கி’க்கொண்டேபோகிறோமே!

@ப்ரநூ, அயன்புரம், சென்னை.

புதிய மாவட்டங்கள் உதயமாகும் நிகழ்ச்சிகளுக்கு தேவையே இல்லாமல் அத்தனை அமைச்சர்களும் படையெடுக்கிறார்களே... மக்களின் வரிப்பணம்தானே விரயமாகிறது?

புதிய மாவட்டங்கள் உதயமாகும் நிகழ்ச்சி
புதிய மாவட்டங்கள் உதயமாகும் நிகழ்ச்சி

ஊர்ல கல்யாணம்... மார்ல சந்தனம்!

மு.கல்யாணசுந்தரம், மேட்டுப்பாளையம்-1.

மு.க.ஸ்டாலின், அன்புமணி, ஜி.கே.வாசன் இந்த வாரிசுத் தலைவர்களில் வலிமையானவர் யார்?

நீங்கள்தான் வரிசையாகச் சொல்லி விட்டீர்களே!

@பி.அசோகன், கொளப்பலூர்.

ஒரு வழக்கில் சரியான நடவடிக்கை எடுப்பதுபோல் முழுமையான நம்பிக்கையை விதைத்து, கடைசி நிமிடத்தில் சட்டென ஏமாற்றும் காவல் ஆய்வாளரை என்ன செய்தால் தகும் (சீரியஸான விஷயம், தங்களிடமிருந்து நல்லயோசனையை எதிர்பார்க்கிறேன்)?

‘பொறி’ வைத்தால் போயேபோச்சு. ஒரேயொரு வாட்ஸப் போதும், உடுப்பையே கழற்றவைத்துவிடும்.

@ஜி.ஆர்.மாதேஸ்வரன், ஓமலூர்.

தாலிபான்களுக்கும் பி.ஜே.பி-க்கும் என்ன வேறுபாடு?

இப்படியெல்லாம் கேட்குமளவுக்கு நிலைமை மோசமாக இல்லையே!

@தாயுமானவன் ரங்கநாதன்.

மகாராஷ்டிராவின் சாணக்கியன் சரத் பவாருக்குத் தெரியாமல், அஜித் பவார் செயல்பட்டிருப்பார் என்பதை நம்ப முடிகிறதா?

நம்ப முடியவில்லைதான். சிவசேனாவுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே இடையில் நரேந்திர மோடியையும் சரத் பவார் சந்தித்துவிட்டு வந்தது, உங்களுடைய சந்தேகத்துக்கு வலுசேர்க்கிறது. ஆனாலும், ஆதரவு விஷயத்தில் கடைசிவரை உத்தவ் தாக்கரே பக்கம் உறுதியாக நிற்பதுதான் யோசிக்கவைக்கிறது. இது உண்மையான உறுதியென்றால் சந்தோஷமே. இல்லையென்றால், பூனைக்குட்டி வெளியே வராமலாபோய்விடும்!

@`புவனகிரி’ ச.வேல்முருகன், மேல்மருவத்தூர்.

தங்களுக்காவது மகாராஷ்டிரா அரசியல் புரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்?

ஓ... மற்ற ஊர் அரசியலெல்லாம் புரிந்துவிட்டதாக்கும்!

@கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்-6.

ஜனநாயக நாட்டில் குறிப்பாக நீதிபதிகள், கவர்னர்கள், சபாநாயகர்களின் செயல்பாடுகள் பெரும்பாலும் பரிசீலனைக்கும் விமர்சனத்துக்கும் உட்படுத்த முடியாததால், அதை அவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?

நிச்சயம் இல்லைதான். நீதிபதிகள், கவர்னர்கள், சபாநாயகர்கள் ஏற்கெனவே சுயநலத்துடன் செயல்பட்டு அம்பலப்பட்டுப் போயிருக்கிறார் கள் என்பதற்கு நிறையவே உதாரணங்கள் உண்டு. உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் தகவல் உரிமை அறியும் சட்டத்துக்குட்பட்டவர்கள்தான் என்று மாற்றப்பட்டதுபோல், எந்தப் பதவியில் இருப்பவரும் விசாரணைக்கும் விமர்சனத்துக்கும் உட்பட்டவர்கள் தான் என்று மாற்றவேண்டும். அதற்குப் பிறகும் திருந்திவிடுவார் கள் என்று சொல்ல முடியாது. ஆனால், நாம் திருப்திப்பட்டுக் கொள்ள முடியும் - ‘விமர்சனமாவது செய்ய முடிகிறதே’ என்று!

@கொ.மூர்த்தி, குட்டலாடம் பட்டி.

‘அரசியலுக்கு வரும் ஆசை எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை’ என்று பிரதமர் மோடி கூறியுள்ளாரே?

‘நடிக்க வராமலிருந்தால் டாக்டர் ஆகியிருப்பேன்’ எனும் நடிகைகளின் பேட்டிதான் நினைவுக்குவருகிறது.

@எஸ்.பஷீர் அலி, பேராவூரணி.

எல்லாவற்றையுமே விலைக்கு வாங்க முடியும் என்றாகிவிட்டது. இனியும் தேர்தல் என்பது தேவையா?

தேவைதான். இல்லாவிட்டால் நம்மை யார் விலைக்கு வாங்குவார்கள்?

வி.கருணாநிதி, திருமக்கோட்டை, திருவாரூர் மாவட்டம்.

அன்புமணி ராமதாஸ், ‘என்னிடம் ஒரு மந்திரம் இருக்கிறது. நேரம் வரும்போது என்ன மந்திரம் எனச் சொல்வேன்’ என்று கூறுகிறாரே?

ஒருவேளை மாம்பழத்தையே ‘பழுக்க’ வைக்கக்கூடிய மந்திரமாக இருக்குமோ!

@தமிழ்ப்பித்தன், கிணத்துக்கடவு.

ராதாபுரம் தொகுதி வாக்கு எண்ணிக்கையை உச்ச நீதிமன்றம் தொடர்ந்து நிறுத்திவைக்கிறது. தாமதிக்கப்படும் நீதி, மறுக்கப்படும் நீதி என்பது நீதிபதிகளுக்குத் தெரியுமா?

அவர்களுக்கே தெரியவில்லையென்றால், வேறு யாருக்குத்தான் தெரியும்... தெரிந்துதான் என்ன ஆகப்போகிறது?

@சரவணன்.ஓ.ஏ.கே.ஆர், சென்னை-2.

`குறிப்பிட்ட கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர், பதவிக்காலம் முடியும் வரை அந்தக் கட்சியின் உறுப்பினராகத்தான் இருக்க முடியும்’ என்று சட்டம் வந்தால் என்ன ஆகும்?

அமித் ஷாக்களுக்கு மூளைபளு கூடிவிடும்.

‘மன்னார்குடி’ ஆர்.ஸ்ரீனிவாச தீட்சிதர், குத்தாலம்.மழைநீர் சேகரிப்பு அவசியமா?

அவசியமே இல்லை, இயற்கையின் போக்கில் அதைப் போகவிட்டால்! ஆனால், ‘தும்பைவிட்டு வாலைப் பிடிப்பது’தானே நம்முடைய வழக்கமாக இருக்கிறது.

கே.கே.பாலசுப்ரமணியன், பெங்களூரு.

‘அ.ம.மு.க-வின் தொழில்நுட்ப அணியில் ஆபாசப்படம் எடுப்பவர்கள் உள்ளனர்’ என்று முன்னாள் அ.ம.மு.க, இந்நாள் அ.தி.மு.க-வின் பெங்களூரு புகழேந்தி கூறியிருக்கிறாரே?

ஆபாசப்படம் எடுப்பவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். இதைப் பற்றி பெங்களூரு புகழேந்தி உடனடியாக போலீஸில் புகார் அளித்திருக்க வேண்டும். ஆனால், மேடைகளில் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார். போலீஸார் தாமாக முன்வந்து புகழேந்தியை விசாரிக்க வேண்டும். இத்தனை நாள் தன்னுடைய நண்பர்களாக இருந்தவர்களைப் பற்றித்தான் புகார் கூறியிருக்கிறார். எனவே, வலுவான ஆதாரங்கள் அவரிடம் நிச்சயமாக இருக்கும். அதையெல்லாம் கைப்பற்றி, சம்பந்தப்பட்ட ஆபாச பார்ட்டிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை- 600002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!