அலசல்
அரசியல்
கார்ட்டூன்
Published:Updated:

கழுகார் பதில்கள்

வெங்காயம்
பிரீமியம் ஸ்டோரி
News
வெங்காயம்

செஞ்‘சோற்று’க்கடன்!

@வி.ஆர்.கிட்டு, அவிநாசி.

அரசாங்கம் முன்கூட்டியே திட்டமிட்டிருந்தால், 70 நாள் பயிரான வெங்காயத்தை தேவைக்கு ஏற்ப உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யவைத்து, கட்டுப்படியான விலையை நிர்ணயித்து கொள்முதல் செய்திருக்கலாம்தானே?

உண்மைதான். எந்தெந்தப் பருவத்தில் விளைச்சல் உயரும், விலை எகிறும் என்பது உள்ளிட்ட அத்தனை தரவுகளும் அரசாங்கத்திடம் இருக்கின்றன. விவசாயிகளுக்கு வழிகாட்டுவதற்கென்றே வேளாண் பல்கலைக்கழகங்களில் உள்நாட்டுச் சந்தை, ஏற்றுமதி மையங்களும் செயல்படுகின்றன. டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயிகளை மிகச் சரியாக வழிநடத்தினால் நிச்சயமாக இதைச் சாதிக்க முடியும்; விவசாயிகளின் வருமானத்தையும் பெருக்க முடியும். ஆனால், அதிகாரவர்க்கம் திட்டம்போடுவதோடு கையைக் கட்டிக் கொண்டுவிடுகிறதே!

@முத்துக்கிருஷ்ணன், தாராபடவேடு, வேலூர் மாவட்டம்.

ஹைதராபாத் என்கவுன்டர் சம்பவத்தை மனதில் வைத்து, ‘பழிக்குப்பழி வாங்குவது சரியல்ல. தண்டனை என்பது நீதிமன்ற வரம்புக்கு உட்பட்டது’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.போப்டே வருத்தப்பட்டிருக் கிறாரே?

நியாயமான வருத்தம்தான். ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் வருத்தப்படும் அளவுக்கு வாய்தாமேல் வாய்தாவை இவர்கள் எல்லோரும் கொடுக்காமல் இருந்தால், இப்போது இப்படி வருத்தப்பட வேண்டியிருக்காதே!

@பார்த்தசாரதி, திருப்பூர்.

ஜெயலலிதா எதிர்த்த சட்டத்திருத்தங்களையெல்லாம் எடப்பாடி பழனிசாமி ஆதரித்துக்கொண்டு இருக்கிறாரே?

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

செஞ்‘சோற்று’க்கடன்!

@பி.மணி, குப்பம், ஆந்திரா மாநிலம்.

இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் இணைப்பது சாத்தியமா?

சாத்தியம்தான். ஆனால், நதிகளை இணைக்கக் கூடாது என்பதுதான் முக்கியம். இயற்கையை அதன் போக்கில்விட்டு, நாம்தான் இயைந்து வாழ வேண்டும். இயற்கையை ஒருபோதும் திசைதிருப்பக் கூடாது. மீறினால், அதன் எதிர்த்தாக்குதல் நம்மால் தாங்க முடியாத அளவுக்கு பலமாகவே இருக்கும். உள்ளூர் தாக்குதலாகவும் இருக்கலாம், உலகத் தாக்குதலாகவும் இருக்கலாம். இதற்கு உலகளாவிய உதாரணங்கள் ஏராளம் உள்ளன. சின்னச்சின்ன கால்வாய்கள் மூலம் நதிநீரை திசைதிருப்பிவிடலாமே தவிர, ஒரேயடியாக மடைமாற்றக் கூடாது.

@வைகை.ஆறுமுகம், கண்டியன் கோயில், திருப்பூர்.

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் எந்தப் பக்கம் சாய்வார்கள்?

பெரும்பாலானோர், ‘பசை’ உள்ள பக்கமே!

@ஜி.ஆர்.மாதேஸ்வரன், புளியம்பட்டி, ஓமலூர்.

துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கான நடைமுறை களை அமெரிக்காபோல் எளிமையாக்கினால், நம் நாட்டில் நிறைய அரசியல்வாதிகள் சுட்டுக் கொல்லப் படுவார்கள்தானே?

கழுகார் பதில்கள்

அமெரிக்காவில் துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான நடைமுறைகளைத் தெரிந்துகொண்ட தாங்கள், அங்கே அடிக்கடி சுட்டுக் கொல்லப்படுவது உங்களையும் என்னையும் போன்ற அப்பாவிகள்தான் என்பதைத் தெரிந்துகொள்ளாமல் விட்டுவிட்டீர்களே!

வி.சண்முகம், திருவாரூர்.

குடியுரிமை மசோதா நாட்டுக்கு நல்லதா... கெட்டதா?

நல்லதுதான், நூறு சதவிகிதம் தூய மனதுடன் கொண்டுவந்திருந்தால். ஆனால், ஒரு கண்ணில் வெண்ணெய், மறுகண்ணில் சுண்ணாம்பு என்பதுபோல் வாக்குவங்கியை மனதில் கொண்டல்லவா உள்துறை அமைச்சர் அமித் ஷா இதைத் தீட்டியிருக்கிறார். மத வெறுப்பு உணர்வோடும் தீட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொருவிதத்தில் விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. வடமாநிலங்களை யொட்டி உள்ள நாடுகளில் இருக்கும் இந்துக்கள் மட்டும்தான் இவர்களுக்கு இந்துக்கள். இலங்கையில் வாழும் தமிழர்கள் வெறும் ஜந்துக்கள். எவ்வளவு பெரிய அநீதி இது!

@இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி, கரூர் மாவட்டம்.

‘நான் பரமசிவன்... எந்த நீதிமன்றமும் என்னை தண்டிக்க முடியாது’ என்கிறாரே நித்யானந்தா?

இப்படியெல்லாம் ஆட்டம்போட்ட எத்தனையோ பேரின் கதை எப்படி முடிந்தது, முடிக்கப்பட்டது என்பதை இந்த ஊரும் உலகமும் பலகாலமாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றன; இன்னும் பார்க்கத்தான்போகின்றன.

@மஞ்சுதேவன், பெங்களூரு.

முருங்கைக்காயும் வெங்காயத்துடன் போட்டிபோடுகிறதே?

எல்லாம், நம்முடைய தவறான புரிந்து கொள்ளுதலால் ஏற்பட்ட நிலை அல்லது தவறான கற்பிதத்தால் வந்த வினை. எந்த விளைபொருளுக்கும் பருவம் உண்டு. பனை, கோடையில்தான் வரும். பூசணி, மார்கழியில் தான் வரும். இப்படி ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து நமக்காக இயற்கை விளைவிக்கிறது. அந்தந்தப் பொருள்களை அந்தந்தப் பருவகாலத்தில் சாப்பிட்டாலே போதுமானது. ‘எந்த ஒரு விளைபொருளையும், அது உற்பத்தியாகும் இடத்திலிருந்து அதிகபட்சம் 30, 35 கிலோமீட்டர் சுற்றள வுக்குள் இருக்கும் ஜீவன்களால் பயன்படுத்தப் படவேண்டும்’ என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் சொல்வார். இதையெல்லாம் உணராமல் ‘பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேண்டும்’ என நின்றால், உரிய விலையைக் கொடுத்துதான் ஆகவேண்டும்.

கே.கணேசராஜா, திருநெல்வேலி டவுன்.

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், ‘பிரதமர் அலுவலகத்தில் அதிகாரங்கள் குவிந்திருப்பது நாட்டுக்கு நல்லதல்ல’ என்று எச்சரித்திருக் கிறாரே?

அதிகாரக்குவிப்பு எங்கும் ஆபத்தானதே!

 ரகுராம் ராஜன்
ரகுராம் ராஜன்

வி.கருணாநிதி, திருமக்கோட்டை, திருவாரூர் மாவட்டம்.

ஐ.எஸ் இயக்கத்துக்கு ஆதரவாகச் செயல்பட, கோவையில் இளைஞர்களுக்கு ரகசிய பயிற்சி கொடுப்பதாக செய்தி வெளியாகி யிருக்கிறதே?

துடிப்பான இளைஞர்களில் சிலர்தான் இப்படி கோடு தாண்டிச் செல்கிறார்கள். யாரோ சிலர் தங்களுடைய ஆதாயத்துக்காக இவர்களை தவறாக வழிநடத்துகின்றனர். அந்த இளைஞர்களை திசைதிருப்பி, உள்நாட்டில் இருக்கும் ஜனநாயக அமைப்புகளில் இணையவைத்து, உள்நாட்டு அரசியல்வாதிகள் நடத்தும் அநியாயங்களுக்கு எதிராகப் போர் தொடுக்கவைக்க முடியும். கல்வியை போதிக்க வைப்பதுடன் தங்கள் கடமை முடிந்துவிடுவதில்லை என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும்.

@ஸ்ரீ.பூவராகவன், படியூர், காங்கேயம்.

‘வெங்காயம் சாப்பிடுவதில்லை’ என்று சொல்வது ஒரு குற்றமா?

குற்றமே அல்ல. ஆனால் இடம், பொருள், ஏவல் வேண்டும். யார் சொன்னார்கள், எங்கே சொன்னார் கள், எப்படிச் சொன்னார்கள், எதற்காகச் சொன்னார்கள் என்பதுதான் முக்கியம்.

@குடந்தை பரிபூரணன், கும்பகோணம் .

‘இடதுபக்கம் செல்க’ (Keep Left) என்பது வாகனங்களுக்கு. நடந்து செல்பவர்களுக்கு..?

நடந்து செல்பவர்களைப் பொறுத்தவரை வலதுபுறமாக நடப்பது சில நாடுகளில் வழக்கத்தில் இருக்கிறது. காரணம், எதிரே வரும் வாகனங்களைப் பார்த்து நடக்க முடியும் என்பதுதான். அங்கெல் லாம் நடைபாதைகள் சரியாக இருந்தும்கூட இதை கடைப்பிடிக் கிறார்கள்.

நம் நாட்டில் நடைபாதை என்ற ஒன்று இல்லவே இல்லை. அப்படியே இருந்தால் அதிலும்கூட வாகனங்களை ஓட்டுகிறார்கள்; கடை பரப்பிவிடு கிறார்கள். எனவே, நடந்து செல்பவர் களுக்கு, ‘வலதுபக்கம் செல்க’ (Keep Right) என்பதுதான் பாதுகாப்பானது.

எஸ்.பிரேமானந்தன், காஞ்சிபுரம்.

இந்திய விளையாட்டுக் குழு, தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆச்சர்யப் படுத்தியுள்ளதே?

நிச்சயமாக ஆச்சர்யப்பட வேண்டிய விஷயமே. 130 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவால் இதைவிட பேராச்சர்யங்களையும் நிகழ்த்த முடியும். ஆனால், பெரும்வசதி படைத்தவர்களும், அரசியல் உள்ளிட்ட செல்வாக்கு உள்ளவர்களும்தான் விளையாட்டுப் போட்டிகளில் பெரும் பாலும் இடம்பெற முடியும் என்ற நிலை மாறாதவரை, இந்த ஆச்சர்யங்களோடு நம் நாட்டவர்கள் திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

கே.பாலு, வேர்க்கிளம்பி, கன்னியாகுமரி மாவட்டம்.

‘திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றமல்ல’ என்று நீதிமன்றமே கூறியிருக்கிறது. இது, விபசாரத்துக்கும் பொருந்துமா?

ஆணும் பெண்ணும் கூடத்தானே இயற்கையே படைத்திருக்கிறது. எனவே, அதில் குற்றமில்லை. ஆனால், கூடி வாழத் தலைப்பட்ட நாம், அதற்கென வகுத்திருக்கும் சமூக விதிகளை மீறாமல் நடந்துகொள்கிறோமா என்பதுதான் முக்கியம். அது, கோயம்புத்தூரில் குறிப்பிட்ட ஒரு விடுதி தொடர்பான வழக்கில் வந்த தீர்ப்பு. அதை வைத்தே, ‘விபசார விடுதிகளுக்குத் தடையில்லை’ என்பதுபோல் எடுத்துக்கொண்டால் ஆபத்தே! அதை நீதிமன்றம்தான் தெளிவுபடுத்த வேண்டும்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை- 600002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!