வண்ணை கணேசன், சென்னை - 110.
‘மக்களிடம் எதையும் மறைத்துப் பேச வேண்டிய அவசியம் ரஜினிக்கு இல்லை. மனதில்பட்டதை அப்படியே கூறுவார்’ என்று தமிழருவி மணியன் பேசியிருக்கிறாரே..?
அதெல்லாம் சரிதான். தமிழருவி மணியன் முதலில் மனதில்பட்டதைப் பேசுகிறாரா அல்லது புகட்டப்பட்டதைப் பேசுகிறாரா என்பதே ஒரு பெரிய கேள்வி!
ராஜேஷ்குமார், சின்ன தாராபுரம்.
ஆளும் அரசு செய்ய வேண்டியவற்றைச் செய்யத் தவறினால், அது எதில் போய் முடியும்?
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்
‘ஓர் அரசு, நாட்டை முறைப்படி காக்கத் தவறினால், ஆக்கப் பணிகள் எதுவும் நடக்காது; முக்கியமான தொழில்களும் தேய்ந்துவிடும்’ என்று திருவள்ளுவரே சொல்லியிருக்கிறாரே!
வாசுதேவன், பெங்களூரு.
தியேட்டரில் திரைப்படம் பார்க்கும்போது ஏற்படும் பரவசம், வீட்டில் டி.வி-யில் பார்க்கும்போது ஏற்படுவதில்லையே..?
ஒவ்வொரு கலைவடிவமும் ஒவ்வொரு விதம். சிலவற்றைத் தனித்து அனுபவிக்க வேண்டும். சிலவற்றைக் கூட்டமாகக் கொண்டாட வேண்டும். திரைப்படத்தின் பரவசம் என்பதே மனிதர்களின் ஒன்றுகூடல்தான். ஒரு குறிப்பிட்ட கருத்துக்கு, அனுபவத்துக்கு ஒட்டுமொத்த திரையரங்கமே கைதட்டும்போது, அந்தக் கருத்து சார்ந்து மிக ஆழமாக ஒரு மனிதன் பாதிப்புக்கு உள்ளாகிறான். சாதிய, மதவாத, பிற்போக்குத் தனத்திலிருந்து நம் சமூகம் விழிப்படைந் ததில் நாடகத்துக்கும் சினிமாவுக்கும் பெரிய பங்கு உண்டு. அதன் உளவியல் தாக்கம் அப்படிப்பட்டது. அதில் எதிர்மறை பாதிப்புகளும் உண்டு என்றாலும், பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் கொண்ட இந்தியா போன்ற ஒரு தேசத்தில், தியேட்டர்கள் ஜனநாயகத்தின் பெரும் அரங்கமாக இன்றைக்கும் இருக்கின்றன. பொருளாதாரக் கணக்கு களைத் தாண்டி, தியேட்டர் அனுபவம் திருவிழா போன்றது. வீட்டில் படம் பார்க்கும் அனுபவம், கொரோனா காலத்தில் பிறந்தநாள் கொண்டாடுவதைப் போன்றது!
எஸ்.மோகன், கோவில்பட்டி.
`இழந்த பொருளாதாரத்தை மீட்டுவிட்டோம்’ என்கிறாரே பிரதமர் மோடி..?
ஊரெல்லாம் பாலாறும் தேனாறும் ஓடுறதைப் பார்த்தாலே மீட்டுட்டாங்கன்னு நல்லா தெரியுதே... அப்போ அந்த 15 லட்சத்தைப் போட்டுவிடலாமே ஜி!
முத்துகணேசன், செங்கல்பட்டு.
அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் கூட்டணிவைத்திருக்கும் இந்தத் தேர்தலில், இரு கட்சிகளின் கவனமும் எதில் இருக்கும்?
வேறு எதில்..? டெண்டர் குளறுபடிகளை மறைப்பதில்தான் இருக்கும்!
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
முன்னாள் நீதிபதி கர்ணன் கைது குறித்து..?
தாமதமான நடவடிக்கையாக இருந்தாலும், சைக்கோத்தனமான அநாகரிகமான பேச்சுக்கான எதிர்வினைதான் இந்தக் கைது!
மேட்டுப்பாளையம் மனோகர்.
அன்றைய எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கும், இன்றைய ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
வயதுதான். எம்.ஜி.ஆர் ‘ஆக்டிவ் பாலிடிக்ஸு’க்குள் வந்து, 50 வயதைத் தொடும் முன்பே தேர்தலையெல்லாம் எதிர்கொண்டுவிட்டார். தி.மு.க-விலிருந்து விலகி, தனிக்கட்சி ஆரம்பித்தபோது அவர் வயது 55. இன்னும் கட்சியே ஆரம்பிக்காத ரஜினியின் இன்றைய வயது 70. அப்படியானால், ரசிகர்களின் நிலையைக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்!
ந.ஆனந்தன், கோயம்புத்தூர்-45.
தமிழக பா.ஜ.க தலைவரின் ‘வேல்’ யாத்திரை, அந்தக் கட்சிக்குப் பலன் தந்ததா?
கட்சிக்குப் பலன் தந்ததோ இல்லையோ... கட்சித் தலைவர் முருகனுக்கு பலவீனமாக ஆகிவிட்டது என்பதே உண்மை!
சம்பத்குமாரி, திருச்சி.
அழகிரி... கடலில் இருக்கும் புயலா, கரை கடந்த புயலா?
என்னாது... புயலா? தேர்தல் சமயத்தில் மட்டும் வந்துபோகும் ஃபேன் காத்துங்க!
பா.சிவகுமார், கோவை.
அரசியலில் தீபா மாதவன் இல்லாத குறையை எஸ்.ஏ.சந்திரசேகர் தீர்த்துவைப்பாரா?
இன்னுமா தீர்த்துவைக்கலைனு நினைக்கறீங்க?

பாண்டியன் முருகதாஸ், மதுரை.
ஒரு சமூகத்துக்குக் கவிஞன் எவ்வளவு முக்கியமானவன்?
பாரதி...
வாழ்ந்து பிணமானால்
உன்னைப் போன்றோரை
பிணமாக வாழ்ந்தால்
என்னைப் போன்றோரை
இந்த அரசு
அங்கீகரிக்கும்!
- இது இன்குலாப் எழுதிய கவிதை. சமூகத்தில் நிலவும் உண்மைகளை இதைப்போல அப்பட்டமாகச் சொல்ல கவிஞர்கள் அவசியம் தேவை!
தாமஸ் மனோகரன், உழவர் கரை.
‘அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்’ என்ற ஆன்றோர் சொல்லுக்கு இன்றைய அரசியல் விளக்கம் என்ன?
டிசம்பர் 31-ம் தேதி உங்களுக்குத் தெரியவரும்!
தாமஸ், புதுச்சேரி.
இன்றைய அரசியலில் காமெடியன் யார்?
`பதிமூணும் ஜோக்கரா இருந்தா..!’ என்று `பருத்திவீரனி’ல் கஞ்சா கருப்பு கேட்டதுதான் நினைவுக்கு வருகிறது!
மு.நடராஜன், திருப்பூர்-7.
‘பா.ம.க வன்முறைக்கு எதிரான கட்சி’ என்கிறாரே அன்புமணி ராமதாஸ்..?
தி.மு.க., வாரிசு அரசியலுக்கு எதிரான கட்சி...
காங்கிரஸ் மாதிரி ஒற்றுமையான கட்சி ஏதுமில்லை...
பா.ஜ.க-வுக்கு மதவாதமே பிடிக்காது...
அ.தி.மு.க-வுக்கு ஊழலே ஆகாது...
வேற... வேற..?
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSகேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை,சென்னை-600 002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!