Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்

திரையரங்கம், நம் மனதின் கவலைகளைத் தற்காலிகமாக மறக்கச் செய்யும்.

கழுகார் பதில்கள்

திரையரங்கம், நம் மனதின் கவலைகளைத் தற்காலிகமாக மறக்கச் செய்யும்.

Published:Updated:
கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்

@பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை.

`வாக்குகளுக்காகப் பணம் வாங்குகிற நம் மக்களும் ஊழல்வாதிகள்தானே...’ என உயர்நீதி மன்ற நீதிபதிகள் கேட்டுள்ளனரே..?

பணம் வாங்கி ஓட்டுப்போடும் மக்கள், ஜனநாயகக் கடமைக்குத் துரோகம் இழைத்ததாகவே கருதப்படுவார்கள் என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. ஆனால், ஊழல்வாதிகளோடு ஒப்பிடும் அளவுக்கு அவர்கள் கிரிமினல்கள் அல்ல!

@சீ.பாஸ்கர்நந்திவரம்-கூடுவாஞ்சேரி.

`மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் வேளாண் சட்டங்களால், தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை’ என்று முதல்வர் பழனிசாமி பேசியிருக்கிறாரே?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாட்டின் பெரும்பகுதி விவசாயிகள் எதிர்க்கும் ஒரு விஷயத்தை ஆதரித்துப் பேசும் முதல்வர், தரவுகளோடும் எடுத்துக் காட்டுகளோடும் புள்ளிவிவரங்களோடும் பேசுவதே சிறந்தது. இப்படிப் பொத்தாம் பொதுவாகப் பேசினால், நிர்பந்தத்தில் பேசுவதாகத்தான் பார்க்கப்படும்.

பா.சிவக்குமார், கணபதி.

எடப்பாடி பழனிசாமியிடம் தங்களுக்குப் பிடித்த குணம்?

எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும், உள்ளுக்குள் எத்தனை வலி இருந்தாலும், சிரித்துக்கொண்டே இருப்பது!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி.

நூலகம், திரையரங்கம்... எது மனதின் கவலையைப் போக்கும்?

திரையரங்கம், நம் மனதின் கவலைகளைத் தற்காலிகமாக மறக்கச் செய்யும். நூலகம் கவலைகளுக்கான நிரந்தரத் தீர்வுகளை அறிமுகப்படுத்தும்!

@டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

வயலில் இறங்கி, பயிர்ச் சேதங்களை நேரடியாகப் பார்த்து அசத்துகிறாரே முதல்வர்?

இது ஒரு முதல்வரின் கடமைதான். மன்னர்கள் மாறுவேடத்தில் நகர்வலம் வந்து, யாசகர்களோடு யாசகர்களாகத் திரிந்து, மக்கள் குறை அறிந்த நாடுதான் இது. நடுவில் சில ஹெலிகாப்டர் காட்சிகளெல்லாம் நடந்துவிட்டதால், இதையெல்லாம் பெரிய விஷயமாகப் பேசிக்கொண்டிருக்கிறோம்!

@சரவணன் OAKR, சென்னை.

விராட் கோலி, ஹர்திக் பாண்டியா இருவரும் தாங்கள் வென்ற அவார்டுகளை நடராஜனிடம் கொடுத்து அசத்திவிட்டார்களே?

ஒரு புதியவரை சீனியர்கள் எப்படி நடத்த வேண்டும் என்பதற்கான உதாரணமாக இருந்தது அந்தச் செயல்பாடு. அதுவும் கேப்டன் விராட் கோலி, நடராஜனைத் தேடிவந்து கோப்பையைக் கொடுத்துவிட்டுச் சென்ற காட்சி... சிறப்பு!

ஜெயலலிதா
ஜெயலலிதா

கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்.

`ஜெயலலிதா இருந்தபோது சசிகலாதான் அ.தி.மு.க-வை நடத்தினார்’ என்று சுப்பிரமணியன் சுவாமி கூறுகிறாரே..?

காரின் சாவி, ‘நான்தான் தினமும் காரைத் திறக்கிறேன்’ என்று கூறுவதைப்போலத்தான் அது.

குற்றாலம் மதி, தென்காசி.

குரு என்பவர் யார்?

`உன்னிடமுள்ளதை வெளியேற்றி உன்னை வெறுமையாக்குபவர். நீ கற்றதையெல்லாம் கற்காததுபோல ஆக்கி உனக்குக் கற்பிப்பவர்!’ என்கிறார் ஓஷோ. மிக எளிமையாகச் சொல்வதானால், நிரம்பிக்கிடக்கும் நம் மனக்கோப்பையை வெறுமையாக்கி, புதுமைகளால் நிரப்புகிறவரே குரு.

அருண் பாண்டியன், வதம்பச்சேரி.

தமிழக கவர்னர் எங்கே... நிவர், புரெவி புயல் பற்றியெல்லாம் ஓர் அறிக்கையும் கவர்னரிடமிருந்து இல்லையே... களத்துக்கும் வரவில்லையே?

முன்பெல்லாம் சுற்றிச் சுழன்று ஆய்வுகள் நடத்திக்கொண்டிருந்தார். திடீரென்று சுவிட்ச் ஆஃப் ஆகிவிட்டார். இந்தப் பேராபத்துச் சமயங்களில்கூட வெளியில் தலைகாட்ட வில்லை. இதற்குப் பின்னாலிருக்கும் காரணங்கள்... ஆள்பவர்களுக்கே வெளிச்சம்!

தாமஸ் மனோகரன், உழவர்கரை.

எவ்வளவு பெரிய தப்பு செய்தாலும், அரசியல்வாதியாக இருந்தால் தண்டனை கிடைக்காதா?

ஒருபுறம் ஜெயலலிதா, லாலு பிரசாத் போன்றவர்கள் தண்டனை பெற்றிருந்தாலும் மறுபுறம் தப்பித்தவர்கள்/தப்பித்துக் கொண்டிருப்பவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போவதால்தான் இது போன்ற கேள்விகள் எழுகின்றன. `தவறுகளுக்கு தண்டனை கிடைக்கும்’ என்று நம்புவதைத் தவிர நமக்கு வேறு வாய்ப்புகள் இல்லை!

குஷ்வந்த் சிங்
குஷ்வந்த் சிங்

சௌந்தர், தஞ்சாவூர்.

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்று என்னுடைய பல முயற்சிகளை நிறுத்திவிடுகிறேன். இது சரியா?

குஷ்வந்த் சிங் எழுதிய முதல் நாவலின் பெயர் ‘மனோ மஜ்ரா.’ இந்த நாவலைத் தட்டச்சு செய்தவர் குஷ்வந்த் சிங்கின் நண்பருடைய மனைவியான டாட்டி பெல் என்பவர். அவர் அதைப் படித்துவிட்டு “வேஸ்ட்... யாருமே பிரசுரிக்க மாட்டார்கள்” என்று சொல்லிவிட்டார். அதன் பிறகு சில மாதங்கள் கழித்து, குரூவ் பிரெஸ் என்ற பதிப்பகம் நடத்திய நாவல் போட்டிக்கு அதை அனுப்பினார் குஷ்வந்த். முதல் பரிசு கிடைத்தது. நாவலின் தலைப்பு மட்டும் மாற்றப்பட்டு வெளியான அந்த நாவல்தான் இன்றுவரை வெற்றிகரமாக விற்பனையாகிக்கொண்டிருக்கும் ‘Train To Pakistan.’ முயற்சிகளை ஒருபோதும் நிறுத்தாதீர்கள்!

துடுப்பதி வெங்கண்ணா, மருதநகர், பெருந்துறை.

தன்னோடு குளிக்க தி.மு.க தலைவர் ஸ்டாலினைக் குற்றாலத்துக்குக் கூப்பிடுகிறாரே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?!

தேர்தல் சமயத்தில், தாங்கள் செய்த நல்ல திட்டங்களைப் பற்றி ஆளுங்கட்சியினர் சொல்ல வேண்டும். ஆட்சியின் குறைகளைப் பற்றி எதிர்க்கட்சியினர் சொல்ல வேண்டும். இரண்டையும் மக்கள் சீர்தூக்கிப் பார்க்க வாய்ப்பாக இந்த விவாதங்கள் இருக்க வேண்டும். அப்படி, உருப்படியாகச் சொல்லிக்கொள்ள எதுவும் இல்லாமல், “குளிக்க வா, சாப்பிட வா...” என மக்களை முகம் சுளிக்க வைக்கும்விதத்தில் பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை,சென்னை-600 002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism