Published:Updated:

கழுகார் பதில்கள்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு, 8 வயதுச் சிறுவன் ஒரு கடிதம் எழுதியிருக்கிறான்

பிரீமியம் ஸ்டோரி

@ம.ராகவ்மணி, வெள்ளக்கோவில்.

`ரஜினியுடன் கூட்டணி அமைக்கத் தயார்’ என்று கமல் தொடர்ந்து கூறிவருகிறார். ஆனால், ரஜினியோ அது குறித்து எதுவும் கூறாமல் மௌனமாக இருக்கிறாரே..?

அவர் எதற்குத்தான் உடனடியாகப் பதில் சொல்லியிருக்கிறார் ராகவ்... ஒருவேளை, அது குறித்துப் பேச இன்னும் ‘ஓனரி’டமிருந்து பர்மிஷன் வரவில்லையோ என்னமோ!

ரஜினி - கமல்
ரஜினி - கமல்

அஜித், மாடம்பாக்கம், சென்னை.

எடப்பாடியாரின் ஆட்சியில் உச்சத்தைத் தொட்டது ஊழலா, விலைவாசியா?

மாடம்பாக்கத்துல வசிக்கற நீங்க, ஏதோ மார்ஸ் கிரகத்துலருந்து கேட்கற மாதிரி கேட்கறீங்களே... உங்களுக்குத் தெரியாதா பாஸ்!

டி.ஆர்.சுந்தரம், திருக்கோவிலூர்.

காங்கிரஸ் கடைத்தேற ஓர் உருப்படியான வழியைச் சொல்லுங்களேன்?

தற்போது இருக்கும் சூழல் தலைகீழாக மாற வேண்டும். மூத்தவர்கள் ஆலோசனைகள் வழங்க, இளையவர்கள் இன்னும் வீரியமாகக் களத்துக்கு வந்தால் கடைத்தேற வாய்ப்பு உண்டு.

@சரவணன் OAKR, சென்னை.

பொங்கல் பரிசை அரசு விழாவில் அறிவிக்காமல் அ.தி.மு.க-வின் தேர்தல் பிரசாரத்தில் அறிவித்தது சரிதானா..?

என்ன செய்வது சரவணன்... அமித் ஷா வந்தபோது நடந்த அரசு விழாவில், கட்சிக் கூட்டணியைப் பற்றிப் பேசினார்கள். இங்கே கட்சிக் கூட்டத்தில் அரசு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். தேர்தல் நெருங்கிருச்சுல்ல... இனிமே எல்லாம் அப்படித்தான்!

கழுகார் பதில்கள்

@பெ.பச்சையப்பன், கம்பம்.

கிறிஸ்துமஸ் பற்றிய செய்தி ஏதாவது..?

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு, 8 வயதுச் சிறுவன் ஒரு கடிதம் எழுதியிருக்கிறான். “கொரோனா சூழலாச்சே... இந்த வருடமும் சாண்டா க்ளாஸ் வருவாரா... குக்கீஸுடன் சானிடைஸரும் வைத்தால் வருவாரா அல்லது அவரே கைகளைக் கழுவிக்கொண்டு வருவாரா... நீங்க பிஸியா இருப்பீங்க... இருந்தாலும், விஞ்ஞானிகளுடன் கலந்து பேசி இதைப் பற்றி முடிவெடுங்க” என்று அந்தச் சிறுவன் எழுதியிருக்கிறான். அதற்கு பதிலளித்த போரிஸ் ஜான்சன், “இந்த வருடமும் கிறிஸ்துமஸ் தாத்தா வருவார். குக்கீஸுடன் சானிடைஸரும் வைப்பது நல்ல யோசனை” என்று கூறியிருக்கிறார். இதனால் அங்கே பண்டிகையையும் பாதுகாப்பாகக் கொண்டாடுவதை உறுதிசெய்திருக்கிறார் பிரிட்டன் பிரதமர்.

கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்.

கட்டணமே கூடாது என்பதற்காகத்தான் சுங்கச்சாவடிகளை நீக்கப் போராடுகிறார்கள். ஆனால், இன்னும் இரண்டு ஆண்டுகளில் சுங்கச்சாவடிகளை எடுத்துவிட்டு ஜி.பி.எஸ் மூலம் கட்டணம் வசூலாம். இதை பா.ஜ.க-வினர் ஒரு ‘பெரிய சாதனை’போலப் பேசிவருகிறார்களே?

சுங்கச்சாவடிகள் இல்லாத இந்தியா என்பது மக்களின் ‘கனவு இந்தியா.’ ஜி.பி.எஸ் மூலம் வசூல் செய்வது என்பது ‘டிஜிட்டல் இந்தியா.’

@சொக்கலிங்க ஆதித்தன்

`முதல்வர் ஆவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. கடவுள் அருளால்தான் எனக்கு முதல்வர் பதவி கிடைத்தது’ என்கிறாரே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி?

நாம மட்டும் நினைச்சமா என்ன!?

@கணேஷ் முத்துக்குமரன், தாராபுரம்.

‘தி.மு.க வெற்றியைத் தடுக்க, சிலரைக் கட்சி தொடங்க வைத்திருக்கிறார்கள்’ என்று மு.க.ஸ்டாலின் யாரைக் குறிப்பிடுகிறார்?

ஒருவேளை அர்ஜுனமூர்த்தியையும், தமிழருவி மணியனையும் சொல்றாரோ!

ஜெ.நெடுமாறன், ராமாபுரம், சென்னை.

அம்மாவின்வழியில் ஆட்சி நடத்திவரும் அ.தி.மு.க-வினர், ‘எம்.ஜி.ஆர் மீது உரிமை கொண்டாட யாருக்கும் அருகதை இல்லை’ என்கிறார்களே..?

தங்களைக் காப்பாற்றிக்கொள்ள மட்டுமே அவ்வப்போது ‘அம்மா ஆட்சி’ என்று சொல்லிக்கொள்கிறவர்கள்... ஒரு மெகா தேர்தல் நெருங்கும் நேரத்தில், எம்.ஜி.ஆரைத் தங்களுக்கானவராக மட்டும் சொந்தம் கொண்டாடுவதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

@சரவணகுமார் சின்னசாமி, தாராபுரம்.

‘நூறு ஆண்டுகளில் இந்தியா கண்டிராத பட்ஜெட்’ என்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் சமீபத்திய அறிவிப்பு?

என்ன... கொரோனா பொதுமுடக்கச் சமயத்தில் அறிவிச்ச இருபது லட்சம் கோடியெல்லாம் கண்ணுல வந்துபோகுதா சரவணன்!

கழுகார் பதில்கள்

எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.

“பா.ஜ.க-வுக்கு ஐந்து ஆண்டுகள் கொடுத்தால், மேற்கு வங்கத்தைத் தங்கமாக மாற்றிக்காட்டுவோம்” என்ற அமித் ஷாவின் பேச்சு..?

பொது அலுவல் மையம் (Public Affair Centre) சார்பில், ஒவ்வொரு வருடமும் வெளியிடப்பட்டும் ‘சிறந்த மாநிலங்கள்’ பட்டியலில், இந்த ஆண்டு கேரளா முதலிடமும், தமிழ்நாடு இரண்டாமிடமும் பெற்றன. ஒரு பத்திரிகையின் புள்ளிவிவரங்களின்படி, வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்தது. இவர்கள் ஆளும் மாநிலங்களை முதலில் இந்த இடத்துக்குக் கொண்டு வரட்டுமே!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை,சென்னை-600 002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு