Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்

2020-ல் இவ்வளவு இன்னல்கள் இருந்தாலும், கவனத்தோடும் துணிவோடும் புத்திசாதுர்யத்தோடும் எதிர்கொண்ட நாம் ஒவ்வொருவரும் பாராட்டுக்குரியவர்களே

ராஜ்குமார், அவிநாசி.

அரசியல் நாடகத்துக்குச் சமீபத்திய உதாரணம்?

மத்திய, மாநில ஆளுங்கட்சிகளுடன் கூட்டணி... முதல்வர், துணை முதல்வரைத் தங்கள் தோட்டத்துக்கே அழைத்து விருந்து கொடுக்கும் அளவுக்கு நெருக்கம். இப்படி இருக்கிற பா.ம.க, தங்களின் கோரிக்கைகளை நட்புரீதியில் சொல்லாமல், மக்களை இம்சிக்கும் வகையில் ரயிலில் கல்லெறிவது, பேருந்துகளில் ஏறி ரகளை செய்வது எனப் ‘போராட்டம்’ நடத்துகிறார்கள். தேர்தல் நெருங்கும் நேரத்தில்... காலையில் போராட்டம், மதியம் முதல்வருடன் சந்திப்பு, மாலையில் ஆணையம் என்று செய்திருப்பதைவிட பெரிய நாடகம் என்னவாக இருக்க முடியும்?

அ.ச.நாராயணன், பாளையங்கோட்டை.

கருணாநிதி காலத்தில் ஸ்டாலினுக்கு முக்கியத்துவம், ஸ்டாலின் காலத்தில் உதயநிதிக்கு முக்கியத்துவம்... எது அதிகம் என்று நினைக்கிறீர்கள்?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஓர் அரசியல்வாதியாகக் கடைசிவரை ஸ்டாலினுக்குத் தண்ணிகாட்டினார் கருணாநிதி. பிள்ளைப் பாசத்தில் கருணாநிதியை விஞ்சி நிற்கிறார் ஸ்டாலின்.

கணேஷ், சென்னை-110.

அரசியல் வாரிசு, சினிமா வாரிசு... இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

அரசியல் வாரிசு என்றால் நடிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சினிமா வாரிசு என்றால் நடிக்கத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை!

கழுகார் பதில்கள்

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14.

‘நிவர்’ புயலின் பாதிப்புகளை நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஆகியோர் உதவியிருக்கிறார்களே..?

எல்லாம் தேர்தல் செய்யும் மாயம்... சிவப்புக் கம்பள விரிப்பும், பந்தலுமாக எடப்பாடி பழனிசாமி ஆற்றைப் பார்வையிட்ட நிவாரணப் பணியைத்தான் பார்த்தோமே!

சுந்தர்ராஜன், திருச்சி.

`விவசாயிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கத் தயார்’ என்று மத்திய அரசு இறங்கி வந்திருக்கிறதே..?

டெல்லி நோக்கிப் பயணிக்கும் விவசாயிகளின் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, போராட்டக்காரர்கள் மீது வெகு வேகமாகத் தண்ணீரைப் பீய்ச்சியடிக்கிறது போலீஸ். ஒரு பஞ்சாப் இளைஞர் இறங்கி அதை நெஞ்சுக்கு நேராக எதிர்கொள்கிறார். ஒரு இன்ச்கூட அவரை நகர்த்த முடியவில்லை. தங்கள் உரிமை பறிக்கப்படும்போதெல்லாம் வீறுகொண்டு எழும் இந்த விவசாயிகளின் நெஞ்சுரம் ஒரு பக்கம். டிராக்டர் டிராக்டராக நான்கு மாதங்களுக்கான உணவோடு வந்த திட்டமிடல் இன்னொரு பக்கம். இவைதான் மத்திய அரசை விவசாயிகளுடன் நிபந்தனையற்ற பேச்சு வார்த்தைக்கு நிர்பந்தித்திருக்கின்றன!

லவ்லி ராஜா, கரியாக்கவுண்டனூர்.

ஓர் அரசியல்வாதி, தான் செய்த தவற்றை எப்போது உணர்கிறார்?

மக்கள் தீர்ப்புக்குப் பின்னால்!

சிந்தாமணி அப்துல் ஹக்கீம், ஈரோடு-4.

2020, பாடாகப்படுத்திவிட்டது. 2021 எப்படியிருக்கும் கழுகாரே?

2020-ல் இவ்வளவு இன்னல்கள் இருந்தாலும், கவனத்தோடும் துணிவோடும் புத்திசாதுர்யத்தோடும் எதிர்கொண்ட நாம் ஒவ்வொருவரும் பாராட்டுக்குரியவர்களே. 2021 நமக்கான பல நல்வாய்ப்புகளைத் தனக்குள் வைத்திருந்து நம்மை ஆச்சர்யப்படுத்தும் எனும் பெரு நம்பிக்கையோடு வரவேற்போம்!

நடராஜன்
நடராஜன்

@ம.ராகவ்மணி, வெள்ளக்கோவில்.

புதிதாக இந்திய கிரிக்கெட் அணிக்குத் தேர்வாகியிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த யார்க்கர் மன்னன் நடராஜன் குறித்து..?

இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து, தொடர் கைவிட்டுப் போன பிறகு, மூன்றாவது போட்டியில் களமிறக்கப்பட்டார் நடராஜன். முதல் போட்டியிலேயே ஆரம்ப ஸ்பெல் போட்டு அசத்தி இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார். அந்தப் போட்டி வெற்றியும் அடைந்ததில் அவருக்கு மகிழ்ச்சி. விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, திறமையின் மீது நம்பிக்கைவைத்து நிதானமாகக் காத்திருந்தது நடராஜனின் வெற்றிக்கான அச்சாணிகள். இவரது வெற்றி, பலருக்கும் நம்பிக்கை வாசல்களைத் திறந்து வைத்திருக்கிறது.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொன்று: ஸ்கோர் கார்டில், வரிசையாகச் சில பெயர்களுக்குப் பின்னால் தாகூர், ஜாதவ், ஜடேஜா என்று ‘அடையாளம்’ ஒட்டியிருக்க, நடராஜன் என்று பெயர் மட்டும் இருந்ததில் தமிழகமும் நெஞ்சு நிமிர்த்திக்கொண்டது!

P.அசோகன், கொளப்பலூர்.

இன்றைய நாகரிகம் எதைவைத்து எடை போடப்படுகிறது?

இப்போதும் சரி, எப்போதும் சரி... நாகரிகத்தை எடைபோடும் தராசுகள் ஆட்களைப் பொறுத்து மாறிக்கொண்டேயிருக்கும். ஆனால். தான் எதிர்பார்க்கும் அனைத்தையும் பிறருக்கும் வழங்குகிற நடத்தையே எப்போதைக்குமான நயமான நாகரிகம்!

குணசேகர், கல்பாக்கம்.

ஒரு தேர்தலில் ஆபத்தானவர்கள் யார்?

ஒரு நாட்டின் தலைவரையே தேர்ந்தெடுக்கும் அதிகாரமும் கடமையும் ஒவ்வொரு வாக்காளருக்கும் உண்டு. அதற்கான பொறுப்புணர்ந்து செயல்படாதவர்கள்தான் ஆபத்தானவர்கள்!

ஜஸ்டின் ட்ரூடோ
ஜஸ்டின் ட்ரூடோ

கே.கே.வெங்கடேசன், அழகேசன் நகர், செங்கல்பட்டு.

கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியாவில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறாரே... இதிலிருந்து என்ன தெரிகிறது?

கனடா அரசு எப்போதுமே இந்தியர்களிடம் கனிவு காட்டுவது வழக்கம்தான். இந்தியப் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதோடு நிற்காமல், மக்கள் கோரிக்கைகளுக்கும் குரல் கொடுப்பது பாராட்டுக்குரியதே!

@எஸ்.தாரிணி, முகப்பேர்.

விலைவாசி உயர்வை யாரும் கண்டுக்கலையே..?

கதறி அழவில்லையே தவிர, எல்லாரும் கவலைப்பட்டுக்கிட்டேதான் இருக்காங்க. கண்டுக்கலையேனு சொல்றீங்களே தாரிணி!

******

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,757, அண்ணா சாலை,சென்னை-600 002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!