Published:Updated:

கழுகார் பதில்கள்

விஜய்
பிரீமியம் ஸ்டோரி
News
விஜய்

பங்காளிச் சண்டைக்கான சங்கு!

@நீலன், கோவை.

தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல், ‘தர்பார் திரைப்படத்தால் நஷ்டமடைந்த விநியோகஸ்தர்கள் அரசைத் தொடர்புகொண்டால் உதவுவோம்’ என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியிருக்கிறாரே?

முதலில், தன்னுடைய வேலை பறிபோய்விடாமல் அவர் பார்த்துக்கொள்ள வேண்டாமோ!

கடம்பூர் ராஜு
கடம்பூர் ராஜு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வண்ணை கணேசன், சென்னை-110.

குறைந்த கட்டணத்தில் ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட்டுகளை அரசாங்கமே விற்பனை செய்யப்போகிறதாமே?

சரக்கு, சினிமா, டி.வி போன்ற ‘அதிஅத்தியா வசியமான’ விஷயங்களை எல்லாம் அரசாங்கமே கையில் வைத்திருப்பதுதானே நல்லது. அப்போதுதானே மக்களை எப்போதுமே ‘மகிழ்ச்சி மயக்க’த்திலேயே வைத்திருக்க முடியும்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை, சேலம் மாவட்டம்.

கட்சி, சின்னம், வாக்குவங்கி, உழைப்பு, கூட்டணி இவற்றைவிடவா ‘பிரஷாந்த் கிஷோர்’ மேலானவர்?

இவற்றையெல்லாம் சரியாக ஒருங்கிணைப்பதில் மேலானவர். இதை, ஏற்கெனவே நரேந்திர மோடி மூலமாகக்கூட நிரூபித்துக்காட்டியுள்ளாரே!

@மா.உலகநாதன், திருநீலக்குடி.

‘கலைஞர் தி.மு.க’ உருவாகப்போவதாக முனகல் சத்தம் கேட்கிறதே?

பங்காளிச் சண்டைக்கான சங்கு!

சம்பத்குமாரி, பொன்மலை, திருச்சி.

திருமண நிகழ்வில்கூட பட்டாக்கத்தியால் கேக் வெட்டும் கலாசாரம் அதிகரித்துள்ளதே?

காப்பியடிப்பதுதானே இன்றைய கலாசாரம். எங்கோ, யாரோ, எதற்கோ கேக் வெட்ட, அதுவே ‘கேக் கலாசாரம்’ என்றாகிவிட்டது. அதேபோலத்தான் பட்டாக்கத்தி, பட்டாசு, பந்தி எல்லாம் சம்பந்தமே இல்லாத சூழல்களுக்கும் பரவி, ஒருகட்டத்தில் அவையும் ‘கலாசார’ப் பட்டியலில் இடம்பிடிக்கின்றன!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல், கர்நாடக மாநிலம்.

50 ஆண்டுக்கால திராவிட ஆட்சி 2021-ல் முடிவுக்கு வந்துவிடுமா?

முடிவு தெரிந்துவிடும்!

பி.சொக்கையா, சாலிகிராமம், சென்னை-93.

ஒரு கல்யாண நிகழ்வில் ‘முப்பது வகையான உணவுகள்’ எனப் பெருமையோடு பரிமாறப்பட்டவை பெரும்பாலும் இலையிலேயே மிச்சம் வைக்கப்பட, குப்பைக்குத்தான் போயின. ஒரு வேளை உணவுக்கே அல்லாடும் மக்கள் வசிக்கும் நாட்டில் இதையெல்லாம் தடுக்கவே முடியாதா?

நிச்சயமாக முடியுமே! வீணடிக்கப்படும் ஒவ்வொரு பருக்கையையும் உற்பத்தி செய்வதற்காக அரசாங்கம் கொடுக்கும் மானியம், விவசாயி கொடுக்கும் உழைப்பு இதையெல்லாம் கணக்கிட்டுவிடலாம். மண், ஊட்டம் தரும் நுண்ணுயிரிகள், காற்று, நீர், விதை என இயற்கை நமக்காக அள்ளி வழங்குபவதைக் கணக்கிடவே முடியாது. இதையெல்லாம் எடுத்துச் சொல்லி மக்களைப் புரிந்துகொள்ள வைக்கவேண்டும். உடனே, ‘வீடு வீடாகப் போய் அரசாங்கத்தால் எட்டிப்பார்க்க முடியுமா?’ என்று கேட்கக் கூடாது. தெருவில் குப்பையை வீசாமல் நாட்டைச் சுத்தமாக வைத்துக்கொண்டிருக்கும் சிங்கப்பூர், ஒவ்வொரு தனிநபரையும் தனித்தனியாக கேமரா வைத்துக் கண்காணிக்கவில்லை. அது, அந்த மக்களின் இயல்பான குணமாகவே மாற்றப்பட்டு விட்டது. ஆக, ஆள்வோர் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்.

அரசி சண்முகசுந்தரம், சென்னை-81.

தூக்குத்தண்டனைக் கைதியின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகும், மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்ய அனுமதிப்பது சரியா?

அவை எல்லாமே சட்டம் கொடுத்திருக்கும் கடைசி வாய்ப்புகளே! ஒருவேளை... தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு நிரபராதி எனத் தெரிந்தால், அதன் பிறகு வாய்ப்பே இல்லாமல் போய்விடுமே. எனவே, நூறு சதவிகித வாய்ப்பு களும் கொடுக்கப்பட்டு, இறுதிப்படுத்துவதுதான் சரியானது!

விஜய்
விஜய்

@டி.ஜே.தனபாலன், நஞ்சுண்டாபுரம்.

‘விஜய் வீட்டில் வருமானவரி ரெய்டு நடத்தும் வருமானவரித் துறை, படத்துக்கு 126 கோடி ரூபாய் வாங்கும் நடிகர் வீட்டில் ரெய்டு நடத்தாதது ஏன்?’ என்று நாம் தமிழர் சீமான் கேட்பது சரிதானே?

சரிதான். சீமான், அதற்கான ஆதாரத்தையும் சேர்த்துக் கொடுத்தாலோ அல்லது வெளியிட்டாலோ நன்றாக இருக்கும். மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டாலும், ‘ஓ... 126 கோடியா!’ என்று மக்கள் வாய் பிளப்பதற்காவது பயன்படுமே!

க.சு.ஸ.மழாஹிரி, காயல்பட்டினம், தூத்துக்குடி மாவட்டம்.

பொதுவாகவே, ஒரு மனிதன் சகமனிதனை மதிக்கும் மாண்பு தற்காலத்தில் வெகுவாகக் குறைந்துவிட்டதன் காரணம் யாது?

இது இன்று ஏற்பட்டதல்ல... பணமே பிரதானம் என்ற நிலை உருவாகி, அதை நோக்கிய தேடலிலேயே அனைவரும் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்த காலத்திலிருந்தே இப்படித்தான். பணம் பிரதானமல்ல என்பதை உணரும்போதுதான், சகமனிதனை மதிக்கும் மாண்பு குறைந்துவிட்டது என்றே பலரும் உணர ஆரம்பிக் கிறார்கள். அதற்குள், காலம் கடந்து விடுகிறது.

வி.கருணாநிதி, திருமக்கோட்டை, திருவாரூர் மாவட்டம்.

சிங்கம், சிங்கிளா வருமா?

சிங்கமும் ‘பன்னி’ மாதிரிதான். கூட்டமாத்தான் வரும்!

@க.பூமிபாலன், மண்மாரிகாட்டூர், கரூர் மாவட்டம்.

இயற்கை, மனித இனத்தைப் படைத்ததன் நோக்கம்தான் என்ன?

பூமியின் இறுதி யாத்திரைக்கு ஏற்பாடுகள் செய்யத்தான்!

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

@மு.நடராஜன், திருப்பூர்-7.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சர்ச்சைக்குரிய பேச்சுகள் குறித்து முதல்வர் எடப்பாடி கருத்து எதுவும் கூறாமல் அமைதி காக்கிறாரே?

இல்லையே... கூப்பிட்டு ‘கடுமையாக’க் கண்டித்துவிட்டாரே! டெல்லிக்கு காவடி தூக்குவதில் வேறு யாராவது விஞ்சினால், வேடிக்கையா பார்த்துக்கொண்டிருக்க முடியும்!

சோம.தேவராசன், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்.

தஞ்சாவூர் கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழன், குடமுழுக்கு விழாவை எந்த மொழியில் நடத்தியிருப்பார்?

அப்போதெல்லாம் எவரும் எதிர்த்து கேள்வி கேட்க முடியாது என்பதால், இஷ்டப்பட்ட மொழியில் நடத்தியிருப்பார்.

மல்லிகா அன்பழகன், சென்னை-78.

மத்தியப்பிரதேச மாநில ‘வியாபம்’ ஊழலுக்கும், தமிழக டி.என்.பி.எஸ்.சி ஊழலுக்கும் என்ன வித்தியாசம்?

மத்தியப்பிரசேதத்தின் மருத்துவம் மற்றும் தொழிற்கல்லூரி மாணவர் சேர்க்கையைக் கவனிக்கும் தனித்துவமான அரசு அமைப்புதான் ‘வியாபம்’ . டி.என்.பி.எஸ்.சி என்பது, தமிழக அரசுப் பணிகளுக்கு ஆட்களை எடுக்கும் தனித்துவமான அரசு நிறுவனம். இதுமட்டுமே வித்தியாசம். மற்றபடி, அடிமட்ட ஊழியர்கள் முதல் மக்கள் பிரதிநிதிகள் வரை பணம் வாங்கிக்கொண்டு இஷ்டம்போல் ஆட்களைத் தேர்வுசெய்வதற்கு வழி ஏற்படுத்திக்கொடுத்தது உட்பட ஏகப்பட்ட ஒற்றுமைகள் இருக்கின்றன.

வியாபம் ஊழல் தொடர்பாக 2000-2012 வரை 55 புகார்கள் எழுப்பப்பட்டும் நடவடிக்கை இல்லை. பிறகு, எதிர்க்கட்சியான காங்கிரஸும் மக்களும் கிளர்ந்தெழுந்து போராடிய பிறகே, அடுத்தடுத்து புகார்கள் வெடித்து உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன. 2,000 பேர் வரை சிக்கினார்கள். இதில் பெரும்பாலானவர்கள், மாநிலத்தின் அப்போதைய ஆளுங்கட்சியான பி.ஜே.பி புள்ளிகள்தான். அமைச்சரின் தங்கைகூட கைதானார். கிட்டத்தட்ட 25-க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்துபோனார்கள். இவர்கள் எல்லோருமே இந்த வழக்கில் தொடர்புடையவர்கள். பத்திரிகையாளர் ஒருவரும், மாநில கவர்னரின் மகன் சைலேஷ் யாதவும் இறந்தவர்களில் அடக்கம்.

டி.என்.பி.எஸ்.சி தொடர்பாகவும் பல ஆண்டுகளாகவே ஊழல் புகார்கள் இருக்கின்றன. ஆனால், நடவடிக்கை இல்லை. இப்போது மீண்டும் வெடித்துள்ளது. அடுக்கடுக்காக புகார்கள் குவிகின்றன. கைதுகளும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. காவல்துறை உஷாராக இல்லாவிட்டால், வியாபம் போன்ற விபரீதங்கள் இங்கேயும் அரங்கேறத் தொடங்கிவிடும்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை- 600002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!