Published:Updated:

கழுகார் பதில்கள்!

சசிகலா வந்த பிறகு, தமிழக அரசியல் களம் களைகட்டுமா?

பிரீமியம் ஸ்டோரி

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

தமிழகம் பெரியார் மண்ணா... ஆன்மிக மண்ணா?

செம்மண், கரிசல்மண், வண்டல் மண், களர்மண், களிமண் இப்படி பல்வேறு வகையான மண்களிலும் பரவிக்கிடப்பதுதான் தமிழகம்.

கி.தா.துரைசாமி, மேட்டுப் பாளையம், கோயம்புத்தூர் மாவட்டம்.

‘அரசியல்வாதிகளின் தலையீட்டால் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது சிக்கலாக இருக்கிறது’ என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளாரே?

சீனிவாசனிடம் பிடித்ததே இதுபோன்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் தான். ‘அம்மா, இட்லி சாப்பிட்டார்... சட்னி சாப்பிட்டார் என்று பொய் சொன்னோம். அதற்காக எங்களை மன்னித்துவிடுங்கள்’ என்று பொதுமேடையிலேயே மன்னிப்பு கேட்கும் ‘தைரியம்’, ‘தன்னம்பிக்கை’ எல்லாம்கொண்டவராயிற்றே!

அனிதா, சேலையூர், காஞ்சிபுரம் மாவட்டம்.

படித்து பரீட்சை எழுதுவதா.... திருட்டுத்தனமாக பாஸாவதா?

திருட்டுத்தனம்தான் இப்போது ஃபேஷன். நம்முடைய அரசியல் வாதிகள், அதிகாரிகள் ஆகியோரில் பலரும் இப்படி பாஸானவர்களாக இருப்பதால், ‘அதில் எந்தத் தவறும் இல்லை’ என்கிற மனநிலையோடு இங்கே பல தலைமுறைகள் உருவாகி விட்டன. உயிர் காக்கும் புனிதப் பணியில் இருக்கும் டாக்டரே, தன் மகன் டாக்டர் ஆக வேண்டும் என்பதற் காக நீட் தேர்வில் ஆள் மாறாட்டும் செய்யும்போது, மற்றவர்களைப் பற்றியெல் லாம் பேசி என்னவாகப்போகிறது?

தாமஸ் மனோகரன், உழவர்கரை, புதுச்சேரி-10.

‘நான்’ என்கிற அகங்காரம் அகல, நான் என்ன செய்ய வேண்டும்?

புதிதாகச் சொல்வதற்கு எதுவுமே இல்லை. முன்னோர்கள் சொல்லிவைத்திருப்பதுபோல் நாமாக வேண்டும். அவ்வளவுதான்!

@தமிழ், கூடுவாஞ்சேரி, காஞ்சிபுரம் மாவட்டம்.

உலகில் நிகழும் எதிர்மறை நிகழ்வுகளுக்குக் காரணம்... அதீத ‘தனதுடமை’யா, ‘ஈகோ’வா?

அதீத தனதுடைமையும் ஒருவகையில் ‘ஈகோ’தானே!

கழுகார் பதில்கள்!

பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி, கோயம்புத்தூர் மாவட்டம்.

கர்நாடக மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்காக மோடியை விமர்சித்து ‘நாடகம்’ போட்டதற்காக மாணவர்கள்மீது ‘தேசவிரோத வழக்கு’ பதிவுசெய்யப்பட்டிருப்பது சரியா?

அவர்களைப் பொறுத்தவரை சரிதான். அயோத்தி தீர்ப்புக்குப் பிறகு, பாபர் மசூதியை மாணவர்கள் அடித்து நொறுக்குவதுபோல் இதே கர்நாடக மாநிலத்தின் ஒரு பள்ளிக்கூடத்தில் நிகழ்ச்சி நடத்தினார்கள். புதுச்சேரி மாநில ஆளுநர் கிரண்பேடி, மத்திய அமைச்சர் சதானந்த கவுடா உள்ளிட்டோர் பங்கேற்று கண்டுகளித்தனர். ‘இது பிரிவினையைத் தூண்டும் செயல்’ என்று பலரும் கண்டித்துக்கொண்டிருக்க, பெருமையோடு அதைப் பற்றி ட்வீட் செய்துகொண்டிருந்தார் கிரண்பேடி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம், கடலூர் மாவட்டம்.

சிறையிலிருந்து சசிகலா வெளியில் வந்த பிறகு, தமிழக அரசியல் களம் களைகட்டுமா?

களைத்துப்போன பிறகுதான் அவரே வெளியில் விடப்படுவார்!

சசிகலா
சசிகலா

@சு.செல்வராசு, திட்டக்குடி, கடலூர் மாவட்டம்.

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ‘ஆம் ஆத்மி’ வென்றிருப்பதை இந்திய மதச்சார்பின்மைக்குக் கிடைத்த வெற்றியாக எடுத்துக்கொள்ளலாமா?

ஏழை, எளியவர்களுக்கான வெற்றி!

@அன்புக்கரசி பாலசுப்பிரமணியன், சென்னை-73.

‘ஆம் ஆத்மி’யின் வெற்றியைப் பற்றி நல்லதா நாலு வார்த்தை?

பொதுமை, அருமை, இனிமை, பெருமை!

ஆர்.ராமசாமி, பொள்ளாச்சி, கோவை மாவட்டம்.

டெல்லியில் காங்கிரஸ் காலாவதியாகிவிட்டதே?

காங்கிரஸ் பாணியிலேயே கட்சியையும் அரசியலையும் நடத்திக்கொண்டிருக்கும் பா.ஜ.க-வுக்கும் இது கடும் எச்சரிக்கையே!

@அந்திவேளை.

ஊழல் மற்றும் முகம் சுளிக்கும் படியான வேலைகளிலேயே அ.தி.மு.க-வினர் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார்கள். அடுத்து ஆட்சியைப் பிடிக்கும் எண்ணம் அவர்களுக்கு இருப்பதுபோல் தெரியவில்லையே?

இன்னும் ஏழெட்டு முறை ஆட்சியில் அமர்ந்தால் கிடைக்கக்கூடிய ‘நிறைவை’ அவர்கள் எப்போதோ ‘எட்டி விட்டார்’களே! பிறகு எதற்கு அவர்களுக்கு அந்த எண்ணம்?

@ஸ்ரீ.பூவராகவன், படியூர், காங்கேயம்-638701.

‘தி.மு.க-வை இந்துக்களுக்கு எதிரான கட்சியாகச் சித்திரிக்க முயற்சி நடக்கிறது’ என்று ஸ்டாலின் சொல்கிறாரே?

தி.மு.க எப்போதுமே இந்துக்களுக்கு எதிரான கட்சியே அல்ல. தி.மு.க-வை ஆரம்பித்தபோதே, ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று அண்ணாவே அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். அவ்வப்போது கருணாநிதி உள்ளிட்ட சிலர், இந்து கடவுள்களுக்கு எதிராக எதையாவது எடுத்துவிட்டு அரசியல் சலசலப்பை உண்டாக்குவார்கள், அவ்வளவுதான். அதிலும் இன்றைக்கு, தி.மு.க-வின் சிறுபுள்ளிகள் தொடங்கி பெரும் புள்ளிகள் வரை நெற்றியில் பொட்டு, பட்டை என வெளிப்படையாகவே வலம்வருகின்றனரே!

ஸ்டாலின்
ஸ்டாலின்

@அருண் ஆறுமுகம்.

2021-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்கிறேன். தங்களின் கருத்து?

மாப்பிள்ளை / பெண் பார்க்க வேண்டும்; சம்பந்தம் பேச வேண்டும்; நாள் குறிக்க வேண்டும்; மண்டபத்துக்கு அட்வான்ஸ் கொடுக்க வேண்டும்; சீர், செனத்தி முடிவாக வேண்டும்; திருமணம் நடைபெற வேண்டும். அதற்குள் குழந்தைக்கு பெயர் சூட்ட அவசரப் படுகிறீர்களே!

@மாணிக்கம், திருப்பூர்.

இரு சக்கர வாகனத்தில் மூன்று பேராகவே பயணிக் கிறார்கள்; ஹெல்மெட் அணிவதில்லை; அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகச் செல்கிறார்கள்; காவலர்கள் கண்டுகொள்வதில்லை. கல்லூரி மாணவர்களுக்கு ஏதேனும் சிறப்புச் சலுகைகள் உள்ளனவா?

மாணவர்கள் என்றில்லை... பொதுவாகவே யார் இப்படிச் சென்றாலும் இப்போதெல்லாம் காவல்துறையினர் அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை. விதிகளை மீறி வாகனங்களை இயக்கும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுதான் அவர்களுடைய பணி. ஆனால், அதை சரிவர செய்ய முயலாமல், விரட்டி, மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்துடன்தான் பெரும்பாலான காவலர்கள் பணியாற்றுகிறார்கள். அதற்காக அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கான உதாரணங்கள்தான்... விதிகளை மீறும் வாகனங்கள்மீது லத்தியை வீசுவது, கல் எறிவது, குறுக்கே நின்று பயமுறுத்துவது போன்றவை எல்லாம். இப்படி சில காவலர்கள் நடந்துகொண்டது, ஆங்காங்கே உயிர்களை பலிவாங்கிவிட்டது. கடும் எதிர்ப்பு கிளம்பவே கையைக் கட்டிக்கொண்டு விட்டனர். ஆனால், இதன் காரணமாக அவர்கள் ‘கல்லா கட்டுவது’ குறைந்து விடவில்லை.

டி.என்.ரங்கநாதன், திருவானைக்காவல், திருச்சி-5.

வெற்றிபெற்றவர்களை மட்டும் இந்த உலகம் உயர்த்திப் பேசுவதேன்?

தங்களுக்கும் அந்த வெ(ற்)றி தேவைப் படுவதால்தான்!

@எல்.ஆர்.சுந்தரராஜன், மடிப்பாக்கம்.

வருமானவரித் துறையின் நடவடிக்கைகள் பெரும்பாலும் ரகசியமாகவே இருக்கின்றன. ஆனால், ஒருசிலர் மீதான நடவடிக்கைகள் மட்டும் ஊடகங்களில் கசியவிடப்படுவது தவறுதானே?

மிகமிகத் தவறு. ஆனால், ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே அது அரசாங்கத்தின் கைப்பாவையாகத் தானே இருக்கிறது. காங்கிரஸைப் போலவே ஆளுங்கட்சிக்கு எதிரானவர்களை மிரட்டவும், ஆதரவானவர்களைக் காப்பாற்றவும் தான் பா.ஜ.க-வும் அதைப் பயன்படுத்திவருகிறது. தனித்துச் செயல்பட அனுமதித்தால், பற்றாக்குறை பட்ஜெட் போடத் தேவையில்லாத அளவுக்கு வரியாகவே வருமானம் கொட்ட ஆரம்பித்துவிடும்.

@பொ.பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி.

ரஜினி வீட்டில் வருமானவரி சோதனை நடத்த முடியுமா?

முடியும்... ஆனா, முடியாது.

@அந்திவேளை.

‘சீறு’ படத்தில் ஜூ.வி-யின் பெயர் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. உங்களுக்குப் பெருமைதானே?

எல்லாப் பெருமையும் வாசகர்களுக்கே!

@க.அருச்சுனன், செங்கல்பட்டு.

`காவிரி டெல்டா பகுதி, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்கிற அறிவிப்பு, நீட் தேர்வுபோல் ஆகிவிடக் கூடாது’ என்கிறாரே வைகோ?

எப்படிப் பார்த்தாலும் அதற்கான வாய்ப்புகள்தான் அதிகம் இருப்பதாகத் தோன்றுகிறது. அதைத்தான் அவரும் வெளிப்படுத்தியுள்ளார்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு