Published:Updated:

கழுகார் பதில்கள்

ரஜினி - கமல்
பிரீமியம் ஸ்டோரி
ரஜினி - கமல்

படித்தால் மட்டும் போதுமா!

கழுகார் பதில்கள்

படித்தால் மட்டும் போதுமா!

Published:Updated:
ரஜினி - கமல்
பிரீமியம் ஸ்டோரி
ரஜினி - கமல்

@நரசிம்மன்.கே.வி.

கமல் - ரஜினி இணைந்தாலும் இருவரின் ரசிகர்கள் தேர்தல் களத்தில் ஒற்றுமையாக உழைப்பார்களா?

கறுப்பு, சிவப்பு, பச்சை, மஞ்சள், காவி, நீலம் என வெவ்வேறு நிறங்களைக்கொண்டிருந்தாலும் மாறி மாறி கூட்டணி வைத்துதான் ஆட்சிகளைப் பிடிக்கிறார்கள். `எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும்’ என்கிற வெறி ஊட்டப்படும் நிலையில், அனைவருமே பச்சோந்திகள்போல் நிறங்களை மாற்றிக்கொள்கிறார்கள். இதுதான் இந்தியத் தேர்தல் வரலாறு. இதற்கு, கமல் - ரஜினி ரசிகர்கள் மட்டும் விதிவிலக்கல்ல.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

@இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

தி.மு.க-வுடன் தமிழகத்தில் பா.ஜ.க கைகோக்கும் வாய்ப்பு உள்ளதா, ஆம் எனில்... தமிழக காங்கிரஸின் நிலைமை?

‘அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை... நிரந்தர எதிரியும் இல்லை’ என்று இதற்காகத்தானே சொல்லிவைத்திருக்கிறார்கள்!

ரஜினி - கமல்
ரஜினி - கமல்

மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல், கர்நாடக மாநிலம்.

‘தமிழகம், தீவிரவாதிகளின் கூடாரமாக மாறிவருகிறது என்று ஜெயலலிதா காலத்திலிருந்தே நான் கூறி வருகிறேன்’ என்கிறாரே பொன்.ராதாகிருஷ்ணன்?

அன்று தொடங்கி இன்று வரை இந்த ஆட்சிக்கு முட்டுக்கொடுத்துவருவதும் இவர்கள்தானே!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அ.ச.நாராயணன், பாளையங்கோட்டை.

`குடியுரிமைச் சட்டத்திருத்தத்தைச் செயல்படுத்த முடியாது’ என்று மறுக்கும் மாநிலங்கள்மீது என்ன நடவடிக்கை எடுத்துவிட முடியும்?

356!

@ராமசேது சுவாமிநாதன்

தமிழக பா.ஜ.க தலைவராக ஹெச்.ராஜா நியமிக்கப் பட்டால்தான் திராவிடக் கட்சிகளைத் துடைத்தெறிய முடியும் என நினைக்கிறேன். உங்கள் கருத்து என்ன கழுகாரே?

துடைத்தெறிவது இருக்கட்டும். முதலில், ‘நாம் அரசியல் நடத்துவது தமிழகத்தில்தான்’ என்பதை தமிழக பா.ஜ.க தலைவர்கள் உணர வேண்டும். ஏதோ குஜராத், உத்தரப்பிரதேசத்தில் இருப்பது போலவே பேசிக்கொண்டுள்ளனர். இப்படிப் பேசிப் பேசித்தானே ஏற்கெனவே காங்கிரஸ் காணாமல்போனது.

க.அருச்சுனன், செங்கல்பட்டு.

லட்சக்கணக்கானவர்கள் குரூப்-4 தேர்வு எழுதியுள்ள சூழலில், 99 பேர் மட்டும்தான் தவறிழைத்தனர் என்பது ஏற்கக்கூடியதா?

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்

நடந்திருக்கும் மோசடி வேலைகளைப் பார்க்கும்போது நம்ப முடியவில்லைதான். மொத்தம் 16 லட்சத்து 29 ஆயிரத்து 865 பேர் தேர்வை எழுதினர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய வரலாற்றில் சாதனை நிகழ்வாக 72 நாள்களிலேயே இதன் முடிவு வெளியிடப்பட்டது. 12 லட்சத்து 76 ஆயிரம் பேர் தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்தனர். ஆனால், இதுவே சோதனை நிகழ்வாகவும் அமைந்ததுதான் வேதனை. மொத்தம் 6 ஆயிரத்து 491 பணியிடங்கள்தான் தேர்வுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டிருந்தன. முடிவுகள் வெளியான சூழலில், 9 ஆயிரத்து 398 இடங்களாக அது உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதுவும் சாதனை நிகழ்வா எனத் தெரியவில்லை.

இந்தத் தேர்வாணையத்துக்கு, அத்தி பூத்தாற்போல் நல்ல அதிகாரிகளும் நியமிக்கப்படுவது உண்டு. ஆனால், அரசியல்வாதிகளால் நியமிக்கப்படும் தேர்வாணைய உறுப்பினர்களின் கட்டுப்பாடுகளை மீறி, அந்த நல்ல உள்ளங்களால் எதுவும் செய்துவிட முடியாது என்பதுதான் நிதர்சனம். இப்போதும் அப்படியே!

ஜி.சுரேஷ், பட்டுக்கோட்டை.

நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் ஆக வேண்டுமென்றால், எம்.ஏ - அரசியல் பட்டதாரியாக இருக்க வேண்டும் என்று சட்டம் கொண்டுவருவார்களா?

படித்தால் மட்டும் போதுமா!

கே.விஸ்வநாதன், கோயமுத்தூர்-45.

மானங்கெட்ட அரசியலுக்கு லேட்டஸ்ட் உதாரணம்?

தினம் தினம் ஆயிரம் நடக்கின்றன. இவற்றில் எதை விடுப்பது... எதைச் சேர்ப்பது?

‘ஏழாயிரம்பண்ணை’ எம்.செல்லையா, சாத்தூர், விருதுநகர் மாவட்டம்.

‘தமிழகத்தில் நீட் தேர்வுத் திணிப்புக்கு மத்திய பா.ஜ.க அரசுதான் காரணம்’ என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டுவது சரியா?

அவர், ‘மத்திய அரசுதான் காரணம்’ என்று சொல்லியிருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். தமிழகத்தில் மட்டுமல்ல, மத்திய அரசாங்கத்தை காங்கிரஸ் தன் கையில் வைத்திருந்த காலகட்டத்தில் தான் இந்தியா முழுக்க நீட் தேர்வு முன்னெடுக்கப் பட்டது. அப்போது குஜராத் முதல்வராக இருந்த பா.ஜ.க-வின் நரேந்திர மோடிகூட ‘நீட்’ தேர்வுக்கு மிகக்கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், பா.ஜ.க-வின் கைகளுக்கு மத்திய அரசு இடம் மாறியதும், அசுர வேகத்தில் அதை நிறை வேற்றியும் விட்டார் நரேந்திர மோடி.

ஆர்.ராமசாமி, பொள்ளாச்சி, கோயம்புத்தூர் மாவட்டம்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, `தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் பிளவு இல்லை. பத்திரிகைகள்தான் பிரிக்க முயல்கின்றன’ என்கிறாரே?

நாராயணசாமி
நாராயணசாமி

நாக்கில் ‘கோடரி’யை வைத்துக்கொண்டு அலையும்போது, அங்கே நரம்பு இருக்க முடியாதே!

ஆர்.கே.சாமி, குரோம்பேட்டை.

முன்பு, கவர்னர் உரையை ஜெயலலிதா கிழித்தார். தற்போது, தி.மு.க உறுப்பினர் ஜெ.அன்பழகன் கிழித்திருக் கிறார். ஏன் இப்படிக் கிழிக்கிறார்கள்?

‘என்னத்த கிழிச்சீங்க?’ என்று யாரும் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக இருக்குமோ!

@இல.கண்ணன், நங்கவள்ளி, சேலம் மாவட்டம்.

‘நாம் உண்ணும் உணவில் 40 சதவிகிதம் ஊட்டச்சத்து குறைந்துவிட்டது’ என்று உலகப் பொருளாதார மாநாட்டில் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசியிருக்கிறாரே?

சீக்கிரமே... ‘ஊட்டச்சத்து பவுடர்கள், டானிக்குகள், மாத்திரைகள் போன்றவற்றை இந்திய மக்கள் கட்டாயம் வாங்கிச் சாப்பிட வேண்டும்’ என்று அரசுத் தரப்பிலிருந்து உத்தரவுகளை எதிர்பார்க்கலாம்.

எஸ்.சத்யா, கும்பகோணம்.

‘தன்னை ஒரு விவசாயி என்று கூறிக்கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவிரி டெல்டா விவசாயத்தைப் பாதுகாக்கட்டும்’ என்று அன்புமணி சொல்கிறாரே?

‘அப்படிச் செய்யாவிட்டால் அ.தி.மு.க-வுடன் கூட்டணி இல்லை’ என்றும் சேர்த்துச் சொல்லியிருந்தால், அன்புமணிக்கு விவசாயத்தின் மீதிருப்பது உண்மையான பாசம்தான் என நம்பலாம்.

ஜி. குணசேகரன், மதுராந்தகம்.

‘நாடு முழுக்க ஒரே தேதியில் சம்பளம்’ என மத்திய அரசு திட்டமிடுகிறதாமே?

ஒரே மாதிரியான சம்பளம் என்பதை நோக்கி நகர்வதும் நாட்டுக்கு நல்லதுதான். சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதற்கு இது முதல் படியாகவும் இருக்கும். ஏ.சி அறையில் ஏழெட்டு உதவியாளர்களை வைத்துக்கொண்டு கார், பங்களா என வலம் வந்துகொண்டிருக்கும் வேலைகளைவிட காட்டு வேலை, மரம் வெட்டுதல், தெரு கூட்டுதல், மாடு மேய்த்தல் போன்ற வேலைகள் எந்த வகையிலும் குறைந்ததல்ல. சொல்லப்போனால், இவை எல்லாமே மிக மிகக் கடினமானவை என்பதுடன், மனதைரியமும் நிறையவே தேவைப்படக்கூடிய வேலைகள். ஆனால், இவற்றுக்கெல்லாம் சொற்ப ஆயிரங்கள்தான் சம்பளம். அத்துடன், ‘அடிமட்ட வேலை’ என்கிற அவமரியாதை வேறு.

நம்மை காலம்காலமாக அடிமைகளாக்கிய ஆண்டைகளும் ஆங்கிலேயர்களும் தங்கள் வசதிக்காக உருவாக்கிய இந்த வேறுபாட்டை, சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர்கிறோம் என்பது தேசத்துக்கே அவமானம். அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் சம்பளத்தில் இப்படி மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடுகள் இல்லை.

சமையல் வேலையாக இருந்தாலும் சாட்டிலைட் விடும் வேலையாக இருந்தாலும், அதற்கேற்ற திறமை இருக்கத்தான் வேண்டும். ஆனால், திறமை என்பதைவைத்தே சம்பளத்தில் மலையளவு வேறுபாடுகள் இருப்பதுதான் பல்வேறு சமூகச்சிக்கலுக்கும் காரணம். அனைவருக்கும் மனதளவில் மாற்றம் வரும்போது தான் இது சாத்தியமாகும்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை- 600002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism