Published:Updated:

கழுகார் பதில்கள்

பொருளாதாரம் போகிற போக்கைப் பார்த்தால், வாரம் முழுக்கவே விடுமுறை கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது!

பிரீமியம் ஸ்டோரி

சம்பத்குமாரி, பொன்மலை, திருச்சி.

‘ஒருவர் ஒரு வீட்டுக்குமேல் வாங்கக் கூடாது என்று சட்டம் கொண்டுவந்தால் என்ன?’ என்று கேட்டிருக்கிறது உயர் நீதிமன்றம். இது ஏற்புடையதா?

இதைவிட `நிலங்கள், தொழிற்சாலைகள், தொழில்கள், வழிபாட்டுத்தலங்கள், இயற்கை வளங்கள் அனைத்துமே அரசாங்கத்துக்குச் சொந்தமானவை. அனைவருமே அரசாங்க ஊழியர்கள். அவர்கள் சம்பாதிக்கும் பணம் மொத்தமுமே அரசாங்கத்துக்குச் சொந்தமானது. உணவு, உடை, வீடு, கல்வி, மருத்துவம், பொழுதுபோக்கு என மக்களுக்குத் தேவையான அனைத்தையும் அரசாங்கமே பார்த்துக்கொள்ளும்’ என அறிவித்துவிடலாம். அதன்பிறகு, சொத்து சேர்க்கும் தேவையே யாருக்கும் இருக்காது. லஞ்சம், ஊழல் அனைத்தும் ஒழிந்துவிடும். எப்படி நம் யோசனை!

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்

@இரா.கோதண்டராமன், அசோக் நகர், சென்னை-83.

தமிழக அரசியலில் உடனே மாறவேண்டியது எது?

பணவெறி!

நெல்லை குரலோன், பொட்டல்புதூர்.

‘டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்விக்குக் காரணம், கட்சியின் ஒட்டுமொத்த அமைப்புதான்’ என்கிறாரே அந்தக் கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி?

தோல்வி அடையும்போதெல்லாம் இப்படித்தான் உண்மையை உணர்கிறார்கள். ஆனால், அதிலிருந்து ஒருபோதும் அவர்கள் பாடம் கற்கத் தயாராக இல்லை என்பதைத்தான் சமீபத்திய டெல்லி தேர்தல் முடிவுகளும் எதிரொலித்தன. இன்னமும்கூட‘பண்ணையார்த்தன’மாகத்தானே கட்சியை நடத்துகின்றனர். ஒருசில மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் இருப்பது அந்தக் கட்சியின் மீதான மரியாதையால் அல்ல... ஆண்ட கட்சிகளின் மீது ஏற்பட்ட அவமரியாதையால்!

@மாடசாமி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டம்.

பின்லாந்து நாட்டில் வாரத்துக்கு மூன்று நாள்கள் விடுமுறையாமே... நம் நாட்டில் சாத்தியமாகுமா?

கவலையேபடாதீர்கள். பொருளாதாரம் போகிற போக்கைப் பார்த்தால், வாரம் முழுக்கவே விடுமுறை கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது!

@நாராயணசாமி ராமசாமி.

கழுகாரே, எங்கள் டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாக்குகள் அ.தி.மு.க வசம் போய்விடும். பிறகு தளபதி..?

நீங்கள் தளபதிக்கு ‘அல்வா’ கொடுப்பது இருக்கட்டும். இந்த பட்ஜெட்டில உங்கள் டெல்டாவுக்கே அல்லவா ‘அல்வா’ கொடுத்திருக்கிறார்கள். மேடையில் காட்டிய வாய்வீச்சு, சபையேறவில்லை. வழக்கம்போல் டெல்லிக்கு ஒரு ‘கடுதாசி’ மட்டும்தானே போயிருக்கிறது!

@சீதா.ரவி, சிதம்பரம், கடலூர் மாவட்டம்.

‘நடிகர் ரஜினிகாந்த் பா.ம.க-வுடன் கூட்டணி அமைப்பார் என்று தமிழருவி மணியன் கூறியதற்கு முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை’ என்று டாக்டர் ராமதாஸ் கூறியிருப்பதை தண்ணீரில் எழுதிவைக்கலாமா?

நீங்கள் கல்வெட்டில்கூடப் பதித்துவையுங்கள். அதையெல்லாம் பற்றி துளிகூட டாக்டர் கவலையேபட மாட்டார். சரி... அதென்ன அவர் மட்டுமே அடிக்கடி கூட்டணி மாறுவதுபோல் கேட்கிறீர்கள். அத்தனை கட்சிகளுமே அப்படித்தானே! யார், எந்தப் பக்கம், எதற்காகச் சாய்ந்தாலும் வாக்களிப்பதற் கென்றே ஒரு கூட்டத்தை இந்தக் கட்சிகள் அனைத்துமே கைவசம் வைத்துள்ளன. ஆட்சியில் அமர்ந்தாலும், அமரா விட்டாலும் ‘தேவையானது’ தவறாமல் கிடைத்துவிடுகிறது. அந்தக் கூட்டம் சிந்திக்காத வரை இவர்களுக்கெல்லாம் எந்தக் கவலையும் ஏற்படப் போவதில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

@அன்புக்கரசி பாலசுப்பிரமணியன், சென்னை-73.

அரவிந்த் கெஜ்ரிவால்போல் ஒரு தலைவர் நம் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கவில்லையே?

சினிமா கவர்ச்சி, தங்குதடையற்ற தமிழ் போன்றவையெல்லாம் இருந்தால்தான் இங்கே ஒருவரை தலைவராகவே ஏற்றுக்கொள்கிறோம். கூடவே, அவர்களைத்தான் ‘ஆளுமைகள்’ என்றும் கொண்டாடுகிறோம். மக்களோடு மக்களாகப் பயணிக்கக்கூடிய, மக்களின் உண்மையான தேவைகளை அறிந்து, உணர்வோடு உண்மையோடு பணியாற்றக்கூடிய நபர்களை நாம் ஏற்பதுமில்லை... அவர்கள் ஆளுமைகளாக அறியப்படுவதுமில்லை.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

@`திருப்பூர்‘ அர்ஜுனன். ஜி, அவிநாசி.

பற்றாக்குறையில்லாத பட்ஜெட் என்பது இனி கனவிலும் நடக்காதா?

கனவென்ன, நனவிலேயே சாத்தியம்தான். அதற்கு ஆட்சியாளர்கள் மனதுவைக்க வேண்டும். ஆண்டுக்கு ஆண்டு, இவர்களுக்கான செலவுகள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. வெற்றி பெறுவதற்கு முதல் நாள் வரை சாதாரண வாழ்க்கை வாழும் இவர்கள், வெற்றிக்குப் பிறகு படாடோப வாழ்க்கைக்கு மாறுகிறார்கள் அரசாங்கப் பணத்தில்! அதேபோல் உயர் அதிகாரிகளாக இருப்பவர்களும் அரசாங்கப் பணத்தில்தான் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள். தேவையில்லாமல் இவர்கள் செலவழிப்பதையும், கொள்ளையடிப்பதற்கென்றே திட்டங்களை உருவாக்கி நிதி ஒதுக்குவதையும் குறைத்தாலே போதும்... நிச்சயம் பற்றாக்குறையில்லா பட்ஜெட் சாத்தியமே!

ஜெ.ஜானி, போரூர், சென்னை -116.

குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை என்பது சரிதானா?

அது, இருபுறமும் கூரான கத்தியே. வேண்டுமென்றேகூட வழக்கில் சிக்கவைக்கக்கூடிய சூழல் நிலவும் நம் நாட்டில், இது அப்பாவிகளைப் பழிவாங்கிவிடவும் வாய்ப்பிருக்கிறது. வழக்குகளை உடனுக்குடன் விசாரித்து, தீர்ப்புகளை எழுதுவதுதான் எப்போதுமே சிறந்த வழிமுறையாக இருக்கும்.

@சோ.சங்கர், பெரம்பூர், சென்னை.

பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதற்கு அளவற்ற மதுக்கடைகளும் ஒருவிதத்தில் காரணம் எனத் தெரிந்திருந்தும், மதுக்கடைகளை மூட அரசாங்கம் மறுப்பதேன்?

‘அரசாங்கத்தின் வருமானம் குறைவதற்குக் காரணம், மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதுதான்’ என்றல்லவோ அரசாங்கம் கண்டறிந் திருக்கிறது. ‘தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகள் குறைக்கப்படும்’ என்று அறிவித்தார் முதல்வராக இருந்த ஜெயலலிதா. மூச்சுக்கு முந்நூறு தடவை ‘அம்மாவின் ஆட்சி’ என்று பல்லவி பாடும் எடப்பாடி பழனிசாமியோ, கடைகளை படிப்படியாக அதிகரித்து வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 3,000 கடைகள் புதிதாகத் திறக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசின் புள்ளிவிவரங்களே தெரிவிக்கின்றன. இன்னும்கூட கடைகள் திறக்கப்படும் என்ற செய்திகளும் அலையடிக்கின்றன. ‘மது, வீட்டையும் கெடுக்கும் நாட்டையும் கெடுக்கும்’ என அச்சிட்டே விற்பவர்களிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

மதுக்கடைகள்
மதுக்கடைகள்

வி.ஹரிகிருஷ்ணன், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு மாவட்டம்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகப் போராடுவது குற்றமா?

அரசாங்கம் இயற்றும் சட்டங்கள் அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எந்த ஒப்பந்தமும் இல்லை. பல்வேறு சந்தர்ப்பங்களில் பல சட்டங்களை ‘செல்லாது’ என்று நீதிபதிகளே செயலிழக்கச் செய்துள்ளனர். அப்படியிருக்க, நாட்டின் மன்னர்களான குடிமக்கள் கிளர்ந்தெழுந்து போராடுவது துளிகூட குற்றமற்றச் செயலே. அது, அவர்களின் அடிப்படை உரிமை. அதற்கு பாதுகாப்பளிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை!

@வி.பாலசுப்பிரமணியன், மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம்.

ஒருபுறம் ‘பொருளாதாரரீதியில் பின்தங்கி யிருக்கும் முற்பட்ட சாதியினருக்கான இடஒதுக்கீட்டுக்குத் தடைவிதிக்க முடியாது’ எனத் தீர்ப்பு. மறுபுறம் ‘தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கட்டாயமில்லை’ எனத் தீர்ப்பு. இதெல்லாம் முரணாகப்படவில்லையா?

‘வல்லான் வகுத்ததே நீதி’ எனும்போது, ‘இல்லான்’களால் என்ன செய்ய முடியும்? காலம் வரும் வரை காத்திருந்துதான் ஆகவேண்டும்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு