Published:Updated:

கழுகார் பதில்கள்

மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

பங்காளிச் சண்டையில் இதெல்லாம் சாதாரணமப்பா!

கழுகார் பதில்கள்

பங்காளிச் சண்டையில் இதெல்லாம் சாதாரணமப்பா!

Published:Updated:
மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

எம்.டி.சகுந்தலா, பூந்தமல்லி, திருவள்ளூர் மாவட்டம்.

‘டி.வி மீடியாக்கள், மும்பை விபசாரவிடுதிகள் போன்று செயல்படுகின்றன’ என்று தி.மு.கழக எம்.பி-யும், அந்தக் கட்சியின் அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ்.பாரதியின் சர்ச்சைக்குரிய பேச்சு பற்றி கழுகாரின் கருத்து?

மீடியாக்கள் பற்றி மட்டுமா... சாதிரீதியிலும் கொந்தளித்திருக்கிறார். கோபத்தை கருத்துரீதியில் வெளிப்படுத்துவதை விடுத்து, இப்படி அநாகரிகமாகப் பேசுவது, அவருடைய பதவிக்கும் அனுபவத்துக்கும் மட்டுமல்ல... பெயருக்குமே பொருத்தமில்லாதது. பழகவேண்டியது ரௌத்திரம்தானே தவிர, ரெளடித்தனம் அல்ல!

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்

எஸ்.ஆர்.ஹரிஹரன், சென்னை-109.

‘டி.என்.பி.எஸ்.சி ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கும் குற்றவாளி யார் என்று மு.க.ஸ்டாலினுக்குத் தெரிந்தால், நேரடியாக சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம் தெரிவிக்கலாம்’ என்று அமைச்சர் ஜெயக்குமார் கொடுத்திருக்கும் பதிலடி எப்படி?

பங்காளிச் சண்டையில் இதெல்லாம் சாதாரணமப்பா! ‘தி.மு.க காலத்திலிருந்தே டி.என்.பி.எஸ்.சி-யில் ஊழல் நடக்கிறது. அந்நாளைய அமைச்சர்களுக்கும் இதில் தொடர்பிருக்கிறது. அடுத்த மாதம் 19-ம் தேதி உண்மைகள் வெளிவரும்’ என்று கூடவே ஒரு ‘பிட்’டையும் ஜெயக்குமார் போட்டிருப்பது தெரியும்தானே!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

@இந்து குமரப்பன், விழுப்புரம்.

‘குஜராத் வளர்ச்சியை ட்ரம்ப் காப்பி அடித்துவிடக் கூடாது என்பதற்காகவே சுவர் எழுப்பப்படுகிறது’ என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளாரே?

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... உண்மையிலேயே ‘முடியல’!

மு.மதிவாணன், காஞ்சிபுரம்.

‘தமிழக விவசாயிகள் மகிழ்ச்சியாக இல்லை’ என்று அன்புமணி ராமதாஸ் கூறுவது, விவசாயிகள் மீதான அக்கறையினால்தானா?

‘அறுவடை’ சரியில்லை என்றால் நிச்சயம் ‘மகிழ்ச்சி’ இருக்காது என்பதெல்லாம் அனுபவபூர்வமாக உணர்ந்தவராயிற்றே அன்புமணி!

@வெங்கட்.கே.

முற்பிறவி, மறுபிறவி பற்றி இப்பிறவியில் உங்கள் கருத்து?

‘எது இன்று உன்னுடையதோ,

அது நாளை மற்றொருவருடையதாகிறது.

மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்!’

@அருண் ஆறுமுகம், கிழக்கு தாம்பரம், சென்னை-59.

நமது பிரதமர் நரேந்திர மோடி, வேலைவாய்ப்பு பற்றி ஏன் பேச மாட்டேன் என்கிறார்?

ஏகப்பட்ட வேலைகளில் அவர் ‘ரொம்ப பிஸி’!

மோடி
மோடி

‘எம்.ஜி.ஆர்’ மனோகர், கோடந்தூர், கரூர் மாவட்டம்.

தி.மு.க-வின் இன்றைய பலம், பலவீனம்?

கருணாநிதிக்குப் பிறகும், தன்னுடைய வாக்குவங்கியைத் தக்க வைத்திருப்பது, பொதுவான வர்களின் வாக்குகளை ஈர்த்திருப்பது பலம். கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய மரியாதையைக் கொடுக்காதது, கட்சிக்குள் கோஷ்டிப் பூசல் கொடி கட்டுவது, கிச்சன் கேபினட்டுக்கு முக்கியத் துவம் கொடுப்பதெல்லாம் பலவீனம்.

க.சு.ஸ.மழாஹிரி, காயல்பட்டினம், தூத்துக்குடி மாவட்டம்.

நடிகர் ரஜினிகாந்தின் நிலைப் பாட்டைப் புரிந்துகொள்ளவே முடியவில்லையே. சில மாதங்களுக்கு முன் காவிக்கு எதிராகக் குரல்கொடுத்தார். அடுத்து, பெரியாருக்கு எதிராகக் குரல் கொடுத்தார். இப்போது குடியுரிமைச் சட்டத்தை ஆதரிக்கிறார். அவருடைய முடிவுதான் என்ன?

அவர் வழி, ‘பொது வழி’!

@சி.கார்த்திகேயன், சாத்தூர், விருதுநகர் மாவட்டம்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வரை ஏற்றி, இறக்கிவிடும் வேலையைச் செய்கின்றனவே ஊடகங்கள்?

‘தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப் படும்’.

அந்த எச்சங்களைப் படம்பிடிப்பது மட்டுமே ஊடகங்களின் வேலை. மற்றபடி இறக்கிவிடுவது, ஏற்றிவிடுவ தெல்லாம் உங்கள் வேலை!

ச.பா.ராஜா, குரும்பகரம், காரைக்கால்.

நடிகை குஷ்பு, சினிமாவில் ஜொலித்த அளவுக்கு அரசியலில் உயரத்துக்குச் செல்ல முடியாதது ஏன்?

சினிமாவில் ஒருவர்தான் டைரக்டர். அரசியலில், திரும்பிய பக்கமெல்லாம் டைரக்டர்களாயிற்றே! ஆளுக்குத் தகுந்தாற்போல் நடித்து பெயர் வாங்குவது அவ்வளவு சாதாரண காரியமல்லவே!

விஜயகாந்த், பிரேமலதா
விஜயகாந்த், பிரேமலதா

அம்பூரணி நாராயணன், பாளையங்கோட்டை, திருநெல்வேலி.

‘2021-ல் விஜயகாந்த் முதல்வர் ஆவார்’ என்று பிரேமலதா விஜயகாந்த் ஜோக் அடிக்கிறாரே?

இன்னும் ஓராண்டுதான் இருக்கிறது. இப்போதே ஆரம்பித்தால்தானே ‘கடைசி நேர’ பேச்சுவார்த்தைகளுக்கு ‘வசதி’யாக இருக்கும்!

@அந்திவேளை.

பெண்ணுக்கும் பையனுக்கும் வீடியோகால் மூலமாகவே நிச்சயதார்த்தம்... எதை நோக்கி போகிறோம் கழுகாரே?

மாப்பிள்ளை/பெண் பார்க்கும் படலம், அதையொட்டிய பேச்சு வார்த்தை, நிச்சயதார்த்தம் உள்ளிட்ட அடுத்தடுத்த நிகழ்வுகள் எல்லாமே நேரடியாக நடக்கும்போதே... சில ஜோடிகள் அடுத்த மாதமே விவாகரத்து கேட்டு நீதிமன்ற வாசலில் காத்திருப்பதைப் பார்க்க முடிகிறது. அப்படியிருக்கும்போது ‘ஆன்லைன் ஆர்டர்கள்’ இன்னும் ஆபத்தானவையே! நம் முன்னோர் போட்டுவைத்திருக்கும் பாதைகளில் சில, காலத்துக்கு ஒவ்வாமல் இருக்கலாம் அல்லது ஏற்றுக்கொள்ளவே முடியாததாகக்கூட இருக்கலாம். ஆனால், அத்தனையுமே ‘பத்தாம் பசலித்தனம்’ என்று ஒதுக்கித் தள்ளக்கூடியவை யல்ல என்பதையும் உணரவேண்டும்.

@நாராயணசாமி ராமசாமி.

திருமண விழாக்களில் மணமக்களை வாழ்த்திப் பேசாமல், அ.தி.மு.க அரசாங்கத்தைத் திட்டித்தீர்க்கிறாரே மு.க.ஸ்டாலின். மணமக்கள் அவரைப் பற்றி என்ன நினைப்பார்கள்?

கல்யாண ஜோடிகளெல்லாம் இதுபோன்ற பேச்சுகளுக்கு காதுகொடுத்துக்கொண்டிருக் கிறார்கள் என்றா நினைக்கிறீர்கள்!

@கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்-6.

‘தொடர் நஷ்டம்’ என்று சொல்லி பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குகிறார்கள். அதேசமயம், லாபத்தில் இயங்கும் எல்.ஐ.சி போன்ற பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்குத் தாரைவார்க்கும் வகையிலான முயற்சிகளையும் கையில் எடுக்கிறார்கள். என்னதான் நடக்கிறது?

இந்தியா, முழுமையாக ‘பிரபுக்களின் ராஜ்ஜியம்’ ஆகிக்கொண்டிருக்கிறது!

@க.சேகர்.

கழுகாரே மழுப்பாமல் பதில் சொல்லவும்... 2021-ல் தி.மு.க ஆட்சிதானே?

மக்களாட்சி!

@பி.மணி, வெள்ளக்கோவில், திருப்பூர் மாவட்டம்.

‘டெல்லி சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.க தலைவர்கள் வரம்பு மீறிப் பேசியதுதான் தோல்விக்குக் காரணம்’ என்கிறாரே அமைச்சர் அமித் ஷா?

ஓ... இதை அமித் ஷாவே சொல்கிறாரா!

பா.ஜ.க-வில் இணைந்த சசிகலா புஷ்பா
பா.ஜ.க-வில் இணைந்த சசிகலா புஷ்பா

‘மேட்டுப்பாளையம்’ மனோகர், கோவை-14.

சமீபத்தில் பா.ஜ.க-வில் இணைந்துள்ள அ.தி.மு.க-வின் ராஜ்யசபா எம்.பி-யான சசிகலா புஷ்பா, `கொண்டாடக்கூடிய அளவுக்கு பெரியார் ஒன்றும் சீர்திருத்தப் போராளி அல்ல’ என்கிறாரே?

ம்க்கும்... இவரெல்லாம் பெரியாருக்கு சான்றிதழ் கொடுக்கின்ற அளவுக்கு நிலைமை கீழிறங்கிவிட்டதை நினைத்தால்தான் கடும் வேதனையாக இருக்கிறது!

@சரவணக்குமார் சின்னசாமி, தாராபுரம்.

‘குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்திய இஸ்லாமியர் ஒருவருக்குப் பாதிப்பு என்றாலும் அவர்களுக்காக நானே களத்தில் இறங்கிப் போராடுவேன்’ என்று ரஜினிகாந்தே சொல்லியிருக்கிறார். பிறகு, ஏன் போராட்டம் நடத்தி நேரத்தை வீணடிக்கிறார்கள்?

ஓ... தளபதி சூர்யாவே சொல்லிட்டாரா. ஹலோ போராளிகளே... மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு வீட்டுக்குப் போய், புள்ளகுட்டிங்கள படிக்கவைக்கிற வேலையைப் பாருங்க.

சம்பத்குமாரி, பொன்மலை, திருச்சி.

‘பட்டியல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கொடுக்க முடியாது’ என, உத்தரகாண்ட் மாநிலத்தை காங்கிரஸ் ஆண்டபோதுதான் முடிவெடுக்கப்பட்டது. இப்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அதை உறுதிப்படுத்தியதும், ‘பா.ஜ.க-வின் சதி’ என்று கூக்குரலிடுவது சரியா?

காங்கிரஸ், கதர்த்தோல் போத்திய பா.ஜ.க. பா.ஜ.க காவித்தோல் போத்திய காங்கிரஸ்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!