Published:Updated:

கழுகார் பதில்கள்

பத்து ரூபாய் நாணயம்
பிரீமியம் ஸ்டோரி
News
பத்து ரூபாய் நாணயம்

குடியுரிமைச் சட்டத்தை சரியாகப் பயன்படுத்தி நாடு கடத்துங்கள் அரசே!

@ராம்குமார்.

திருநெல்வேலி, திருச்செந்தூர் பகுதிகளில் சுற்றுலா சென்றபோது, பத்து ரூபாய் நாணயத்தை கடைக்காரர்கள் வாங்க மறுக்கிறார்கள். அரசுப் பேருந்து நடத்துநர்கூட வாங்கவில்லை. இது சரிதானா?

இந்தியாவின் நாணயத்தை இந்தியாவிலேயே வாங்க மறுக்கும் அவர்கள் எல்லோரும் நிச்சயமாக அந்நியர்களாகத்தான் இருக்க வேண்டும். குடியுரிமைச் சட்டத்தை சரியாகப் பயன்படுத்தி நாடு கடத்துங்கள் அரசே!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கே.கே.பாலசுப்ரமணியன், குனியமுத்தூர், கோயம்புத்தூர் மாவட்டம்.

உரிமையாளர்களே தத்தமது நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிக்கின்றனர். அவையும் மக்களை ஈர்க்கவே செய்கின்றன. ஆக, ‘பிரபலங்கள் விளம்பரப் படுத்தினால்தான் விற்பனை பெருகும்’ என்பது பொய் நம்பிக்கைதானே?

அதுவும் மெய் நம்பிக்கையே. ஆனால், பிரபலங்களாக இருந்தாலும்... சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளராக இருந்தாலும்... மக்களின் மனதில் பதியும்படி அந்த விளம்பரம் அமையாவிட்டால் தோல்விதான். ஓர் உண்மை தெரியுமா... ஆரம்ப நாள்களில் நிறுவனங்களின் பெயர்களும் உரிமையாளர்களுமேதான் விளம்பரத் தூதுவர்கள். இப்போது ஊருக்கு ஊர் இதற்கு ஏகப்பட்ட உதாரணங்கள் இருக்கின்றன.

எஸ்.ராமதாஸ், சேலம்-30.

‘பகுத்தறிவு’ எனச் சொல்லிக்கொண்டு நாத்திகர்கள் மாநாட்டில் முஸ்லிம்களையும் கிறிஸ்துவர்களையும் பங்கேற்கவைப்பது, எந்தவிதத்தில் மதச்சார்பின்மை மற்றும் கடவுளர் எதிர்ப்புக்கொள்கையாக இருக்க முடியும்?

பாதிக்கிணறு தாண்டிய பகுத்தறிவு!

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை, சேலம் மாவட்டம்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இன்று வரை அ.தி.மு.க கட்சியும் ஆட்சியும் தொடர்வதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அடிப்படைக் காரணம் சசிகலாதானே?

இல்லை, டெல்லிவாலா!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14.

குரூப்-4 தேர்வில் முறைகேடு நிகழ மூளையாகச் செயல்பட்டவர், அதிகாரிகளின் ஆதரவின்றி செயல்பட்டிருக்க முடியுமா?

ஆள்வோரின் ஆதரவின்றியும் செயல்பட்டிருக்க முடியாது.

கழுகார் பதில்கள்

வண்ணை கணேசன், சென்னை-110.

‘ஆலோசகர்களை வைத்து கட்சிகள் அரசியல் செய்வது அதிர்ச்சியளிக்கிறது’ என்று தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் பேசியிருக்கிறாரே?

நடப்பது ‘பிசினஸ்’. அதற்கு நிச்சயமாகத் தேவை ‘கன்சல்டன்ட்’. இல்லாவிட்டால் முதலுக்கே மோசம் வந்துவிடுமே!

வி.ஹரிகிருஷ்ணன், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு மாவட்டம்.

தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருள்கள் வாங்கலாம் என்பது சாத்தியமா?

நிச்சயமாகச் சாத்தியமே! எங்கோ ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு மொபைல்போனில் தட்டினால், வீடு தேடி வருகின்றன பொருள்கள். இதைச் சாதித்திருக்கும் அதே டிஜிட்டல் தொழில்நுட்பம், இதையும் சாதிக்கும்.

@பார்த்தசாரதி, திருப்பூர்.

நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தனியாருக்கு விற்பதுதான் அரசின் புத்திசாலித்தனமா?

கையாலாகாத்தனம். 1,000, 2,000 பேர் வேலை பார்க்கும் ஒரு நிறுவனத்தையே ‘நிர்வகிக்க முடியவில்லை’ என்று கை கழுவும் ஆட்சியாளர்களால், 130 கோடி பேர் இருக்கும் நாட்டை மட்டும் எப்படி நன்றாக நிர்வகிக்க முடியும்?

எல்.சிவக்குமார், கோயம்புத்தூர்.

ஆனந்த விகடன் நம்பிக்கை விருது விழாவில் கழுகாரை நெகிழவைத்த நிகழ்வு?

அத்தனையுமே நெகிழவைத்த நிகழ்வுகள்தான். அதில் ஒன்று, இளைஞர் ஏகேஷுக்குச் செலுத்தப்பட்ட மரியாதை! திருவள்ளூர் மாவட்டம் கொண்டஞ்சேரி கிராமத்தில் ஆட்டோவில் கடத்தப்பட்ட யாரோ ஒரு பெண்ணைக் காப்பாற்றும் முயற்சியில், உயிரையே தியாகம் செய்துவிட்டார் ஏகேஷ். அவருடைய பெற்றோரையும், சம்பவத்தின்போது சேர்ந்து போராடிய ஏகேஷின் நண்பர்களையும் மேடையேற்றிப் போற்றப்பட்ட நிகழ்வு... நெகிழ்ச்சி அத்தியாயம்!

@கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்-6.

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு சம்பந்தமாக விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே, ‘முறைகேடு எதுவும் நடக்கவில்லை’ என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவிக்கிறாரே?

பஞ்சாயத்தைக் கலைக்க படும் பாடு, ‘சூனாபானா’க்களுக்குத்தானே தெரியும்!

@எல்.சேவுகபாண்டியன், ராதாபுரம், திருநெல்வேலி.

டி.என்.பி.எஸ்.சி தேர்வில் நடக்கும் முறைகேடுகளைக் கேள்விப்படும்போது, ‘உலகிலேயே நீளமான ஆணி... குட்டையான ஆணி’ என்பது போன்ற பொது அறிவுத் தகவல்களை விழுந்துவிழுந்து படித்து தேர்வு எழுதுபவர்களை, ‘அப்பாவிகள்’ என்றுதானே சொல்லத் தோன்றுகிறது?

`அடப்பாவிகள்’ இருக்கும் வரை `அப்பாவிகளும்’ இருக்கத்தான் செய்வார்கள். அடப்பாவிகளுக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் போராடவில்லையென்றால், நேற்றுபோல் இன்றுபோல் நாளையும் அப்பாவிகள் முளைத்துக்கொண்டேதான் இருப்பார்கள்; அடப்பாவிகளின் தலைமுறையினர் தழைத்துக்கொண்டேதான் இருப்பார்கள்.

இளஞ்சேரன், குடவாசல், திருவாரூர் மாவட்டம்.

`பட்ஜெட் என்ற பெயரில் இந்திய மக்களுக்கு அல்வா கொடுத்துவிட்டனர்’ என்கிறாரே கமல்ஹாசன்?

பட்ஜெட் தயாரித்து முடித்தபோது கிண்டிய அல்வா, நிறைய மிச்சப்பட்டுவிட்டது போல!

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

@ப.இரமேஷ், கோயம்புத்தூர்.

‘பொய் பேசாதே’, ‘ஏமாற்றாதே’, ‘திருடாதே’, ‘அடுத்தவர் சொத்துக்கு ஆசைப் படாதே’ என்னும் பெற்றோரின் சொற்களை நம்பி நல்லவர்களாகவே வளரும் குழந்தைகளின் நிலை இனி..?

நாம் அனைவருமே இப்படிச் சொல்லிச் சொல்லி வளர்க்கப் பட்டவர்கள்தான். ஆனால், வளர்ந்த பிறகு அனைவரும் அதன்படியே இருப்பதில்லை. அதைத் தீர்மானிப்பது காலம்தான். அதற்காக, ‘நல்லனவற்றைச் சொல்லி வளர்க்கக் கூடாது’ என்ற முடிவுக்கு வந்துவிட்டால், அது பேராபத்து. ‘காலம்கூட கெட்டவனாக மாற்றிவிடக் கூடாது’ என்ற நம்பிக்கையுடன் நல்லனவற்றைச் சொல்லி வளர்க்க வேண்டிய பொறுப்பை ஒருபோதும் நாம் தட்டிக்கழிக்கக் கூடாது. கூடவே, நாட்டுநடப்புகளைச் சொல்லி வளர்க்கவும் தவறக் கூடாது!

எஸ்.கே.வி, திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம்.

`வட்டிக்குக் கொடுத்த பணம் திரும்பி வராததால் நஷ்டம்’ என்று வருமானவரித் துறைக்கு ரஜினிகாந்த் தகவல் தெரிவித்துள்ளாரே?

பாவம், தொழிலில் அவ்வளவு அனுபவம் இல்லைபோலிருக்கிறது!

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

அம்பூரணி ச.நாராயணன், திருநெல்வேலி-2.

`சொம்பைக் கொடுத்து அண்டாவைத் தூக்குபவர்கள் தி.மு.க-வினர்’ என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் போட்டுத் தாக்குகிறாரே?

‘உடன்பிறப்புகளை’ப் பற்றி ‘ரத்தத்தின் ரத்தங்கள்’தானே மிகச்சரியாகச் சொல்ல முடியும்!

@ப.சுவாமிநாதன், பட்டுக்கோட்டை.

திருமண நிகழ்ச்சி, பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் பட்டாக்கத்தியைக்கொண்டு கேக் வெட்டுபவர்களை காவல்துறை கைதுசெய்கிறது. அரசியல் மாநாடுகளில் தலைவர்களுக்கு வீரவாள் பரிசளிப்பதை மட்டும் வேடிக்கை பார்ப்பது ஏனோ?

எப்போதுமே ‘பிக்பாக்கெட்’காரர்களிடம் மட்டும்தானே போலீஸ் தன் வீரத்தைக் காட்ட முடியும்!

@இரா.எத்திராஜ், கஸ்பாபுரம், அகரம்தென்.

என்னதான் சாதுரியமாக ‘திசை’திருப்ப முயன்றாலும் தெற்கை வடக்கு ஆக்க முடியவில்லையே?

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.

@இந்து குமரப்பன், விழுப்புரம்.

‘மு.க.ஸ்டாலின், பேட்டை ரெளடி மாதிரி பேசுகிறார்’ என்று பா.ஜ.க-யின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளாரே?

பேய்க்கும் பேய்க்கும் சண்டை!

தாமஸ்மனோகரன், உழவர்கரை, புதுச்சேரி-10.

பா.ஜ.க ஆட்சியில் எந்த மாநில அரசும் கலைக்கப் படாதது எதைக் காட்டுகிறது?

கலைப்பது பழைய ஸ்டைல். அப்படியே கபளீகரம் செய்வதுதானே புது ஸ்டைல்!

வி.கருணாநிதி, திருமக்கோட்டை, திருவாரூர் மாவட்டம்.

‘ரஜினிகாந்த், கழுவுகிற மீனில் நழுவுகிற மீன். பா.ஜ.க வலையில் சிக்க மாட்டார்’ என்கிறாரே தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி?

பா.ஜ.க ‘வலை’ விரிக்கவில்லை; ‘இரை’ வைக்கிறது!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை- 600002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!