Published:Updated:

கழுகார் பதில்கள்

ஜெயலலிதா நினைவிடம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயலலிதா நினைவிடம்

பல்வேறு தடைகளைத் தாண்டி, தங்கள் வாழ்வாதாரப் பிரச்னைக்காக விவசாயிகள், ஆட்சியாளர்களை எதிர்த்து இந்தப் போராட் டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்

க.சு.ஸ.மழாஹிரி, காயல்பட்டிணம்.

சட்டத்தை அமல்படுத்தும் அந்தஸ்திலிருக்கும் ஆட்சியாளர்களே சில சமயங்களில் குடிமக்களைப்போல, தங்கள் கோரிக்கைகளுக்காகப் போராட்டம் நடத்துவதன் சூட்சுமம் என்ன?

ஆளுங்கட்சியினர் நடத்துவது போராட்ட மென்றால், டெல்லியின் எல்லையில் கடும் குளிரில் விவசாயிகள் நடத்துவது என்ன? நீங்கள் சொல்வதற்குப் பெயர்... கண்துடைப்பு நாடகம்!

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

`அ.தி.மு.க கூட்டணியில் உரிய மதிப்பு கிடைக்காவிட்டால் தனித்துப் போட்டியிடவும் தயங்க மாட்டோம்’ என்று பிரேமலதா பேட்டியளித்திருக்கிறாரே?

‘`அ.தி.மு.க வென்றதால் தமிழகத்துக்கு என்ன நல்லது நடந்தது? ஜெயலலிதாவை எதிர்த்து சட்டசபையிலேயே குரல்கொடுத்தவர் விஜயகாந்த் என்பது இந்த உலகத்துக்கே தெரியும். இன்றுவரை அ.தி.மு.க ஆட்சியில் இருக்கிறதென்றால், அதற்கு தே.மு.தி.க-தான் காரணம். தேர்தலில் தனித்துப் போட்டியிட எங்களுக்கு எந்த பயமும் இல்லை” - இது சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க - அ.தி.மு.க என இரு தரப்பையும் சந்தித்துவிட்டு வந்த பிரேமலதா பேசியது. தேர்தல்தான் வேறு... வசனம் ஒன்றுதான்!

கழுகார் பதில்கள்

@கரு.சண்முகானந்தன், காரைக்குடி.

விவசாயிகள் போராட்டம் குறித்த ரிஹானா ட்வீட்டால் சமூக ஊடகம் பற்றிக்கொள்ள, பல கிரிக்கெட் பிரபலங்கள் ‘எங்கள் பிரச்னையை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்று ட்வீட் செய்து கொண்டிருக்கிறார்களே?

பல்வேறு தடைகளைத் தாண்டி, தங்கள் வாழ்வாதாரப் பிரச்னைக்காக விவசாயிகள், ஆட்சியாளர்களை எதிர்த்து இந்தப் போராட் டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தனை நாள் விவசாயிகள் போராட்டம் பற்றி ஒரு வார்த்தை பேசாத, விவசாயிகளுக்காகக் குரல் கொடுக்காத கிரிக்கெட் பிரபலங்கள் - சர்வதேச அளவில் ஒரு பாடகி அதைப் பற்றிப் பேசியதும் - ‘நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்பது அவர்கள் யாருக்கு ஆதரவானவர்கள் என்பதைச் சொல்வதாகவே இருக்கிறது!

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

ஒருவேளை மூன்றாவது அணி அமைந்தால், யார் தலைமையில் கூட்டணி அமையும்?

அது முடிவானா, கூட்டணியே அமைஞ்சிடுமே பாஸ்!

சுல்தான் ஸலாஹீத்தீன், திருச்செந்தூர்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன் ஒரு வெள்ளையராக இருந்தும், இனவெறிக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டது குறித்து..?

அதிபர் என்பவர் மக்களுக்குப் பொது வானவர் என்பதை அவர் நிரூபித்துள்ளார். அவரை ‘வெள்ளையராக இருந்தும்’ என்று சுட்டுவதும் பாகுபாடுதான்.

கழுகார் பதில்கள்

சுப்ரமணியன், கீழ்த்திருப்பதி.

அரசியல் கேலிச்சித்திரங்களை வரவேற்ற தலைவர்கள் உண்டா?

அரசியல் கேலிச்சித்திரங்களுக்குப் பிள்ளையார் சுழி போட்டவர் என்று கார்ட்டூனிஸ்ட் சங்கர் என்கிற காயங்குளம் சங்கரப்பிள்ளையைச் சொல்வார்கள். ஹிந்துஸ்தான் டைம்ஸில் 1932-ல் பிரிட்டிஷ் வைஸ்ராய் லார்டு வில்லிங்டன் பிரபுவை விமர்சித்து கார்ட்டூன் வரைந்து தள்ளினார். ஒருநாள் வைஸ்ராய் அவரைச் சந்திக்க அழைத்தார். மோதல் உண்டு என்று நினைத்து வைஸ்ராய் மாளிகைக்குச் சென்றவரை, பாராட்டித் தள்ளினார் வைஸ்ராய். அந்தச் சந்திப்பில் ‘என் கணவரின் மூக்கை ஏன் இவ்வளவு நீளமாகப் போடுகிறீர்கள்!’ என்று வைஸ்ராயின் மனைவி செல்லமாகக் கோபித்துக்கொண்டாராம்.

சுதந்திரத்துக்குப் பிறகு, ஜவஹர்லால் நேருவைப் பலமுறை தன் கார்ட்டூன்களால் விமர்சித்தவர் இவர். இவருக்கு நேரு ஒரு கடிதம் எழுதியுள்ளார். ‘தலைவர்களில் பலருக்கு நாளடைவில் தலைக்கனம், கர்வம், ஆடம்பரம், அதிகாரம் வந்துவிடும். அதைக் குறைப்பதற்கு கார்ட்டூன்கள் தேவைதான். உங்களது கார்ட்டூன்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. அந்தக் கார்ட்டூன்கள் மூலம் என்னை நான் அலசிப் பார்த்துக்கொள்கிறேன். அதனால் என்னை விட்டுவைக்காதீர்கள். வரைந்து தள்ளுங்கள்’ என்பதுதான் நேரு எழுதிய கடிதத்தின் சாரம்!

கழுகார் பதில்கள்

@ப.பாலசுப்ரமணியன், மதுரவாயல், சென்னை.

கமல்ஹாசன் கட்சிக்கு ஓட்டுப் போடலாம் என்று நினைக்கிறேன். அவர் இடதுசாரியா... வலதுசாரியா?

ஐ ஆம் சாரி... ஓட்டுப் போடுவது குறித்து எடுக்கும் முடிவுகள் அவரவர் சொந்த விருப்பம்!

V.பாலசுப்ரமணியன், மன்னார்குடி.

மத்தியில் பா.ஜ.க அரசு வந்ததிலிருந்து, கொண்டுவந்த அனைத்துத் திட்டங்களுமே மக்களுக்கானவையா?

ஆம். எந்த மக்கள் என்பதுதான் விவாதிக்க வேண்டிய விஷயம்!

எ.சுந்தரலிங்கம், தாராபுரம்.

ராகுல் காந்தி சரியான பாதையில்தானே செல்கிறார்?

சென்ற தேர்தலில் கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் கவனம் செலுத்திய அளவு, வடமாநிலங்களில் கவனம் செலுத்தவில்லை. விளைவு... ராகுலின் பாரம்பர்யத் தொகுதியான அமேதியிலேயே அவர் தோல்வியைத் தழுவினார். அந்தப் படிப்பினையை எடுத்துக்கொண்டால் போதும்... பாதை சரியாக அமையும்.

கழுகார் பதில்கள்

@சீனிவாசன், கண்டனூர், சிவகங்கை.

ஜெயலலிதா நினைவிடத்தை மூட, எடப்பாடி அரசு சொன்ன காரணத்தைக் கேட்டபோது என்ன தோன்றியது?

வேறென்ன... கல்யாணத்தை நிறுத்த சீப்பை ஒளித்துவைத்த கதைதான்!