
செய்யக்கூடிய இடத்தில் இருந்துகொண்டு, செய்ய வேண்டியவற்றைச் செய்யாததால்...
ச.ந.தர்மலிங்கம், ஈரோடு.
அ.தி.மு.க-வில் அடிப்படை உறுப்பினர்கூட இல்லை என்கிறார்கள். ஆனால் அவர் (சசிகலா) கட்சிக்கொடியைக் காரில் பயன்படுத்தியதற்குக் கண்டனம் தெரிவிக்கிறார்கள்; கமிஷனர் வரை சென்று புகார் கொடுக்கிறார்கள். இதெல்லாம் எதனால்?
பழசெல்லாம் கண்ணுக்குள் வந்துபோவதால்!
லட்சுமிகாந்தம், வேலூர்.
தேர்தல் வரும்போது மட்டும் நிறைய திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றனவே?
தேர்தல் வந்தால்தான் அரசியல்வாதிகளுக்கு மக்கள் ஞாபகம் வருகிறது. நல்லது நடக்க வேண்டுமென்றால், ஆண்டுக்கொரு தேர்தல் வந்தால் நன்றாக இருக்கும்!
@சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.
மக்களுக்கு ஏன் அ.தி.மு.க மீது அதிருப்தியும்.. தி.மு.க மீது பயமும் இருக்கிறது?
செய்யக்கூடிய இடத்தில் இருந்துகொண்டு, செய்ய வேண்டியவற்றைச் செய்யாததால் அ.தி.மு.க மீது அதிருப்தி. செய்யக் கூடாததைச் செய்ததால் தி.மு.க மீது பயம்!

குணவதி சண்முகம், தஞ்சாவூர்.
சிலரை மட்டும் கொண்டாடும் சரித்திரம், சிலரை மறந்துவிடுகிறதே?
1969, ஜூலை 21-ம் தேதி நிலவில் கால் வைத்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங் என்றும், அவருடன் சென்ற இன்னொருவர் எட்வின் அல்ட்ரின் என்றும் படித்திருப்பீர்கள். அவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற கொலம்பியா ராக்கெட்டில் இருந்த இன்னொரு விண்வெளி வீரர் மைக்கேல் காலின்ஸ். அவர்கள் இருவரும் நிலவைத் தொட்டுவிட்டு வரும்வரை விண்வெளிக்கலத்தில் வட்டமடித்துக்கொண்டிருந்து, குறிப்பிட்ட நேரத்தில் திரும்பி வந்து இவர்களை ஏற்றிக்கொண்டார் மைக்கேல் காலின்ஸ். நீல் ஆம்ஸ்ட்ராங்கையும் அல்ட்ரினையும்கூட அடிக்கடி பேசும் நாம், மைக்கேல் காலின்ஸை மறந்துவிடுகிறோம்! ஆனால் வரலாறு அவரையும் பதிவுசெய்து வைத்திருக்கிறது!
‘நம்பர் ஒன்’னுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதற்கு வரலாறு ஒன்றும் குதிரை ரேஸ் கிடையாது!
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
ஒரு கட்சியில், அமைச்சர்கள் தங்கள் சொந்தக் கருத்தைக் கூறக் கூடாதா?
கட்சி விவகாரங்களில், ஒருவர் தன் சொந்தக் கருத்தைக் கூறுவது அமைச்சர்களின் தனிப்பட்ட சுதந்திரம். ஆனால் அதே அமைச்சர், அரசு சார்ந்த விஷயங்களில் கூறும்போது அது அரசின் முடிவாக இருக்க வேண்டும்.
@கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்.
ஜெயலலிதா நினைவிடம், நினைவு இல்லம், சிலை, கோயில், அருங்காட்சியகம், அறிவுசார் பூங்கா... இவையெல்லாம் வரும் தேர்தலுக்காகவா அல்லது சசிகலாவுக்கு முக்கியத்துவம் தரவிடாமல் தொண்டர்களை திசை திருப்பவா?
சசிகலாவுக்காகவோ, தேர்தலுக்காகவோ எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்.ஆனால், இதில் மக்கள் பணம் விரயமாவதுதான் வேதனை!
V.பாலசுப்ரமணியன், மன்னார்குடி.
போராடும் விவசாயிகளைத் `தீவிரவாதிகள்’ என்று முத்திரை குத்தாமல், பிரதமர் அழைத்துப் பேசினால் என்ன?
அதானே... மன் கி பாத்-ல் நீட்டி முழக்கிப் பேசத் தெரிந்தவருக்கு, மனிதர்களிடம் நேருக்கு நேர் பேசுவதில் என்ன தயக்கமோ தெரியவில்லை!
சந்திரசேகர், கருமத்தம்பட்டி.
ஒரு படம் வெளியாகி பேசப்பட்டாலே திரையுலகம் மீண்டெழுந்துவிடுகிறதென்றால், தமிழ் சினிமா முன்னேறியிருக்கிறது என்றுதானே அர்த்தம்?
“தொழில்நுட்பத்திலேயும் நவீன சாதனங்களிலேயும் நிறைய முன்னேறியிருக்கு. ஆனா ‘சப்ஜெக்ட்’தான் அட்வான்ஸ் ஆகல்லே. போட்டி போட்டுக்கிட்டு விளம்பரம் பண்ணிப் படத்தை ஓட்டப் பாக்கறாங்க. இதுவா முன்னேற்றம்? நான் ஒண்ணு சொல்றேன் கேளுங்க. நானும் சர்வீஸ் ஆன இன்னும் நாலைஞ்சு பேரும் ஒழிஞ்சு போனாத்தான் தமிழ்ப்பட உலகம் உருப்படும். அப்போதான் முதலாளிங்க புது ஆசாமிங்களா போட்டு நல்ல கதைங்களா எடுக்க முன்வருவாங்க. ஆக்டருங்க பணமும் குறையும். எத்தனை நாள்தான் எங்களைக் காண்பிச்சே ஜனங்களை ஏமாத்த முடியும்?”
‘தமிழ் சினிமா முன்னேறிருக்கிறதா?’ என்ற கேள்விக்கு 1964-ல் எம்.ஆர்.ராதா சொன்ன பதில் இது. ஒருவகையில் இன்றைக்கும் பொருந்தும்!

@பெ.பச்சையப்பன், கம்பம்.
``நான் சொல்லும் திட்டங்களைத்தான் ஆளுங்கட்சி செயல்படுத்துகிறது’’ என்கிறாரே ஸ்டாலின்?
பின்னாலேயே, “பா.ம.க கோரிக்கை வைத்துத்தான் இதை முதல்வர் செய்தார்” என்று ராமதாஸும் சொல்லிக்கொண்டு நிற்கிறாரே... அதைக் கவனிக்கலையா நீங்க!
@ம.ரம்யா ராகவ், வெள்ளக்கோவில்.
ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்குப் போகிற நிகழ்வால் ஏற்படப்போகும் நன்மை, தீமை என்னென்ன?
நன்மை தீமையெல்லாம் தாவுகிறவர்களுக்குத் தான். நமக்கு எதுவுமில்லை!
@ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.
எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் இவர்களில் யார் துணிச்சலான முதல்வர் என்று சொல்வீர்கள்?
ஒப்பீடே தவறாக இருக்கிறதே... முதல் மூவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்கள். பின்வரும் இருவரும் அப்படி அல்லவே!
@எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.
“தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை கூட்டணி” என்கிறாரே பிரேமலதா?
15 வருடங்களாகக் கூட்டணி ஆதாயத்தை அனுபவித்துவிட்டு, இப்போது பிரேமலதா சொல்வது ‘சீச்சி... இந்தப் பழம் புளிக்கும்’ என்கிற கதைதான்.
கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.
kalugu@vikatan.com
என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!