அலசல்
Published:Updated:

கழுகார் பதில்கள்

கங்கனா ரணாவத்
பிரீமியம் ஸ்டோரி
News
கங்கனா ரணாவத்

குப்புற விழுந்தாலும் மீசைல மண் ஒட்டல’ கதையால்ல இருக்கு!

@திருப்பூர் அர்ஜுனன்.ஜி, அவிநாசி.

``போராடுவதற்கென்றே ஒரு கூட்டம் உருவாகியிருக்கிறது. போராடியே உயிர் வளர்க்கிறார்கள்’’ என்கிறாரே பிரதமர் மோடி?

தான் இன்று பிரதமராக இருக்கும் - உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான - இந்தியாவின் சுதந்திரமே அறவழிப் போராட்டத்தின் மூலம் பெற்றதுதான் என்பதை அவர் உணரவில்லை என்பது ஆச்சர்யமாக இருக்கிறது!

@வேல் ரவீந்திரன்.

தேய்ந்த கட்டெறும்பா தே.மு.தி.க?

`கழுதை தேய்ஞ்சு கட்டெறும்பாச்சு’ என்பதுதானே பழமொழி. நீங்க என்ன நேரா கட்டெறும்புக்குப் போயிட்டீங்க!

வெண்புரவி அருணா, திருப்பூர்.

பா.ம.க 20% ஒதுக்கீடு கேட்பது வன்னிய சாதிக்கா... இல்லை கூட்டணிக்கான தொகுதி ஒதுக்கீட்டுக்கா?

பின்னே... தேர்தல் நேரத்தில் இப்படி ஒரு கோரிக்கை வைத்தால், எதற்காக இருக்கும்னு நெனைக்கறீங்க?

கங்கனா ரணாவத்
கங்கனா ரணாவத்

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மணைப்புதூர்.

“உலகிலேயே என்னைப் போன்று நடிப்பில் வித்தியாசமான திறமைகொண்டவர் யார் இருக்கிறார்கள் என்று அடையாளம் காட்டினால், என் ஆணவத்தை விட்டுவிடுகிறேன்” என்று நடிகை கங்கனா ரணாவத் கூறியிருப்பது பற்றி..?

தான் ஆணவமாகத்தான் பேசுகிறோம் என்பதையாவது புரிந்துகொண்டிருக்கிறாரே என்கிற அளவில் சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்!

சந்திரசேகர், மாயவரம்.

“டி.டி.வி.தினகரனை நம்பிப்போன 18 பேரையும் நடுரோட்டில் விட்டார்; அவரை நம்பிப்போனால் நடு ரோட்டில்தான் நிற்க வேண்டும். ஜெயலலிதாவால் டி.டி.வி.தினகரன் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டவர்” என்றெல்லாம் பிரசார மேடையில் டி.டி.வி-யை விமர்சித்துவருகிறாரே எடப்பாடி பழனிசாமி?

நேரடியாக சசிகலாவைத் தாக்கிப் பேசினால், தான் பதவி வாங்கிய பழைய விஷயங்களெல்லாம் கிளறப்படும் என்பதால், தினகரன் வழியாக சசிகலாவைத் தாக்கிப் பேசும் புதிய உத்தியைக் கடைப்பிடிக்கிறார் எடப்பாடி!

வண்ணை கணேசன், பொன்னியம்மன் மேடு.

“அதிகார மாற்றத்தை ஏற்படுத்த, தமிழகத்தில் எந்தத் தியாகத்தையும் செய்ய காங்கிரஸ் தயாராக இருக்கிறது” என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளாரே?

`குப்புற விழுந்தாலும் மீசைல மண் ஒட்டல’ கதையால்ல இருக்கு! தேர்தல் முடியும் வரை இந்த ‘தியாகம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தத் தடைவிதித்தால் தேவலாம். முடியல!

PRH விநாயகம், வில்லிவாக்கம்.

பன்னீர், சசிகலா பக்கம் சாய்ந்துவிடுவார்போலத் தெரிகிறதே?

அவர் என்ன தஞ்சாவூர் பொம்மையா... ஒரு கட்சியோட ஒருங்கிணைப்பாளர் பாஸ். ஹி... ஹி!

கழுகார் பதில்கள்

சேகர் ஆறுமுகம், கோலார் தங்கவயல்.

நித்தி கைலாசாவில் கட்சி தொடங்கி, திடீரென இங்கே வந்து தேர்தலில் போட்டியிடுவதுபோலக் கனவு கண்டேன்... பலிக்குமா?

கனவுன்னாலும் ஒரு நியாயம் வேணாமா சேகர்... கைலாசாவுக்கே பிரதமர்னு சொல்லிட்டிருக்கறவரைப் போய் தமிழ்நாட்டுத் தேர்தலில் போட்டியிடச் சொன்னா கோவிச்சுக்கப்போறாரு!

ஜி.வி.மனோ, கொலுவை நல்லூர்.

``சீமான், எடப்பாடியாரின் பினாமி’’ என்கிறான் என் நண்பன்... சரியா, தவறா?

யார், யாருக்கு பினாமி; யார், யாருக்கு `பி’ டீம்; யார், யாருக்கு ஸ்லீப்பர் செல் என்பதெல்லாம் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னமே வெளியில் வந்துவிடும் பாஸ். கொஞ்சம் பொறுங்க... இப்போ ஏன் அதை உருட்டிக்கிட்டு!

கழுகார் பதில்கள்

குரு ராம்தாஸ், காட்டுமன்னார்கோவில்.

கலையும் அரசியலும் ஒன்று சேர்ந்த கலாய் சம்பவம் ஏதாவது?

பெர்னாட்ஷா ஒருமுறை பிரிட்டிஷ் பிரதமரான இலக்கியவாதி வின்சன்ட் சர்ச்சிலுக்கு, தன்னுடைய நாடகத்துக்கான இரண்டு டிக்கெட்களை அனுப்பினார். கூடவே ‘உடன் நண்பரையும் அழைத்துவரவும். அப்படி ஒருவர் இருந்தால்...” என்று குறிப்பு அனுப்பினார். அதற்கு வின்சன்ட் சர்ச்சில் “இன்றைக்கு உங்கள் நாடகத்துக்கு என்னால் வர இயலாது. நாளைக்கு இரண்டு டிக்கெட் அனுப்புங்கள். அதுவரை நாடகம் நடந்தால்...’ என்று எழுதி டிக்கெட்டையும் திருப்பி அனுப்பினார்.

யார்கிட்ட!

கழுகார் பதில்கள்

எல்.சேவுகபாண்டியன், ராதாபுரம்.

தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலையில் ‘எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்’னு கேட்க நினைத்தால் எந்த விஷயத்தை, யாரிடம் கழுகார் வினவுவார்?

ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமியிடம். எந்த விஷயத்தை என்பது எல்லோருக்கும் தெரியும்!

ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

“மத்தியில் ஆட்சி மாற்றம் எங்களது நோக்கமல்ல. பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காகவே போராட்டம்!” என விவசாய அமைப்புத் தலைவர் கூறியிருப்பது குறித்து..?

‘யாருடைய தூண்டுதலோ, அரசியல் நோக்கமோ இல்லாமல், தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காகவே இந்தப் போராட்டம்’ என்கிற கருத்தை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்கள் விவசாயிகள். புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் சரி!

குணசுந்தரி, திருப்பத்தூர்.

இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட், முதல் இன்னிங்ஸில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 85 ரன்களில் அவுட்டாகி சதத்தைத் தவறவிட்டுவிட்டாரே!?

சதம்தானே... இதோ மத்திய அரசு கொஞ்ச நாளில் பெட்ரோல் விலையில் சதம் போட்டுவிடும்போலத்தான் இருக்கிறது!

கழுகார் பதில்கள்

கணேஷ், கோரிப்பாளையம்.

இளைஞர்கள் அரசியலை சீரியஸாக அணுக ஆரம்பித்துவிட்டார்களே?

சமூக ஊடகங்களில் சிலர் அப்படித் தென்படுகிறார்கள். ஆனால் களத்தில்? எடப்பாடி பழனிசாமியின் பிரசாரத்தின்போது, ஒரு கூட்டத்தில் ‘வலிமை’ அப்டேட் கேட்கிறார்கள். இன்னோர் இடத்தில் ‘பிப்ரவரி 14-க்கு லாக் டௌன் அறிவிங்க ஐயா’ என்று கத்துகிறார்கள். முதல்வரின் அறிவிப்புகளை ஊன்றி கவனித்து ஓட்டளிக்கும் முடிவை எடுக்க வேண்டிய இளைஞர்களில் சிலர், எல்லாவற்றையும் விளையாட்டாக எடுத்துக்கொள்வது அவ்வளவு நல்லதாகத் தெரியவில்லை!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!