Published:Updated:

கழுகார் பதில்கள்

கங்கனா ரணாவத்தைச் சுற்றியும் போலீஸார் இருந்தனர்; திஷா ரவியைச் சுற்றிலும் போலீஸார் இருந்தனர்.

பிரீமியம் ஸ்டோரி

த.சிவாஜி மூக்கையா, தர்காஸ்.

`எம்.ஜி.ஆர் வடிவில் தமிழக மக்கள் மோடியைப் பார்க்கிறார்கள்’ என்று பா.ஜ.க-வினர் சொல்கிறார்களே?

“விட்டா அ.தி.மு.க போஸ்டர்கள்ல எம்.ஜி.ஆர் படத்தை எடுத்துட்டு, மோடி படத்தை வைக்கச் சொல்லுவாங்க போல...” என்று அ.தி.மு.க தொண்டர்கள் புலம்புகிறார்கள்!

கழுகார் பதில்கள்

சீனிவாசன், கண்டனூர், சிவகங்கை (மா).

கடந்த தேர்தலின்போது அ.தி.மு.க-வுடன் கூட்டணி பேச, டாக்டர் ராமதாஸ் எழுதி வாங்கிய அந்த 10 அம்ச கோரிக்கைகளில் (நீட், எட்டுவழிச் சாலை, ஏழு பேர் விடுதலை...) ஒன்றுகூட நிறைவேறாத நிலையில், மீண்டும் அ.தி.மு.க-வுடன் கூட்டணி, புதிய நிபந்தனை என டாக்டர் ராமதாஸால் எப்படிப் பேச முடிகிறது?

மக்களின் ஞாபகமறதிதான் அரசியல்வாதிகளுக்கு மூலதனம். இப்படியெல்லாம் ஞாபகம் வைத்துக்கொண்டு கேள்வி கேட்டால் டாக்டர் என்ன செய்வார் பாவம்!

கழுகார் பதில்கள்

கணேசன், பொன்னியம்மன்மேடு.

அழைப்பிதழில் தன் பெயர் இல்லை என்று அரசு விழாவை நிறுத்தச் சொல்லிவிட்டாரே புதுவை ஆளுநர் கிரண் பேடி?

ஆளுநர் கிரண் பேடிக்கு இது புதிதும் அல்ல. இந்தப் போக்கை அவர் நிறுத்தப்போவதும் இல்லை என்பதே கடந்தகாலச் செயல்பாடுகளிலிருந்து நாம் அறிந்துகொண்டது!

கழுகார் பதில்கள்

எஸ்.மோகன், கோவில்பட்டி.

``தனித்துப் போட்டியிட்டாலே அறுபது இடங்களில் ஜெயிப்போம்’’ என்கிறாரே பா.ஜ.க தலைவர் எல்.முருகன்?

மகனுக்கு வரன் பார்க்கிற பெற்றோர் எல்லோருமே “என் பையனுக்குப் பொண்ணு கொடுக்க ஊரே க்யூவுல நிக்குது” என்றுதான் சொல்லிக்கொண்டிருப்பார்கள். கல்யாணச் சந்தைக்குப் போனால்தான் நிஜ நிலவரம் தெரியவரும்!

கழுகார் பதில்கள்

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

எது கூட்டணி தர்மம்?

அரசியலில் தர்மமா... அதுவும் கூட்டணியிலா... எந்தக் காலத்துல இருக்கீங்க? ஒரே நேரத்துல ரெண்டு கட்சிகூட கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துற காலம் பாஸ் இது!

வண்ணை கணேசன், சென்னை-110.

மாமல்லபுரம் கடற்கரையில், அ.தி.மு.க சார்பில் முதல்வருக்கு 160 அடி நீள மணற்சிற்பம் அமைத்திருக்கிறார்களே?

தேர்தல் அலை வருது. பார்த்து... சிற்பத்தைப் பாதுகாப்பாவெச்சுக்கச் சொல்லுங்க!

திருப்பூர். அர்ஜுனன்.ஜி, அவிநாசி.

`குடியுயரக் கோலுயரும் கோலுயுயரக் கோனுயுயர்வான்’ என்று பிரதமர் நரேந்திர மோடி, ஔவையார் பாடலை மேற்கோள் காட்டிப் பேசியிருக்கிறாரே?

பாட்டெல்லாம் நல்லாத்தான் இருக்கு. ‘கோன்’களெல்லாம் உயர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், குடிகளுக்கோ பெட்ரோல் விலை, டீசல் விலை, சமையல் எரிவாயு விலை, சின்ன வெங்காயம் விலை யெல்லாம்தான் உயர்ந்து கொண்டிருக்கின்றன!

மாணிக்கம், திருப்பத்தூர்.

ஸ்டாலின் அறிவித்த புகார்ப்பெட்டியா... எடப்பாடி பழனிசாமி அறிவித்த 1100-ஆ... எது எடுபடும்?

இரண்டுமே முழங்காலுக்குக் கட்டிய தாலிபோல. தேர்தல் நேர அறிவிப்புகள்தான்!

சண்முக சுப்பையா, மேட்டூர்.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இரண்டு பேருடைய கைகளையும் உயர்த்தி, பாக்ஸிங் மேட்சை முடித்துவிட்டாரே நரேந்திர மோடி?

‘முடிச்சிட்டார்னு’ யார் சொன்னா... மேட்ச் ஆரம்பிக்கிறப்பவும் அப்படித்தான் கைகளை உயர்த்துவாங்க பாஸ்!

கழுகார் பதில்கள்

பி.ஜெயப்பிரகாஷ், அரண்மணைப்புதூர்.

பெங்களூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ‘திஷா ரவி’ டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டதற்கு, டெல்லி போலீஸார் கைதுசெய்து, சுற்றிவளைத்து அழைத்துச் சென்றிருக்கிறார்களே?

போலீஸைவைத்துச் சுற்றிவளைப்பது ஒன்றும் ஆட்சியாளர்களுக்குப் புதிதல்ல. கங்கனா ரணாவத்தைச் சுற்றியும் போலீஸார் இருந்தனர்; திஷா ரவியைச் சுற்றிலும் போலீஸார் இருந்தனர். இரண்டுக்குமான காரணங்களின் பாரபட்சம்தான் யோசிக்கவைக்கிறது!

கழுகார் பதில்கள்

ராஜ்குமார், மேல்மருவத்தூர்.

மேடைகளில், பேட்டிகளில் உளறுவதில் தமிழ்நாட்டுத் தலைவர்களை மிஞ்சுபவர்கள் உண்டா?

அதிலெல்லாம் எந்தக் குறையும் கிடையாது. இந்தியா முழுக்கவே இந்தநிலைதான். திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப் சமீபத்தில் பேசியதைக் கேட்டீர்களா? “இந்தியாவில் பல மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சி அமைந்துள்ளது” என்று வடகிழக்கு மண்டலச் செயலாளர் அஜய் ஜாம்வால் கூறியதற்கு, “இலங்கையும் நேபாளமும் பாக்கி இருக்கின்றன. கட்சியை விரிவுபடுத்தி அங்கேயும் ஆட்சி அமைக்க வேண்டும் என்று அமித் ஷா கூறினார்” என்று பேசியிருக்கிறார். ‘அமித் ஷா இப்படிப் பேசியிருக்கக்கூடும்’ என்று எதிர்க்கட்சிகளும், ‘இல்லை... பிப்லப் உளறுகிறார். வேறொரு நாட்டைப் பற்றி அமித் ஷா எப்படிப் பேசுவார்?’ என அமித் ஷா ஆதரவாளர்களும் வார்த்தைப் போர் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு