Published:Updated:

கழுகார் பதில்கள்

மெட்ரோ ரயில் நிலையம்
பிரீமியம் ஸ்டோரி
News
மெட்ரோ ரயில் நிலையம்

இவ்வளவு ரணகளத்துக்கு அப்புறமும் எந்தச் செயல்பாடும் இல்லையென்றால், அவர்களுக்குப் பெயர் ஸ்லீப்பர் செல்கள் அல்ல.

@திருப்பூர் அர்ஜுனன்.ஜி, அவிநாசி.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பிரசாரத்தில், போன பொங்கலுக்கு ரூ.1,000, கொரோனா காலத்தில் ரூ.1,000, இந்தப் பொங்கலுக்கு ரூ.2,500... ஆக மொத்தம் ரூ.4,500 கொடுத்திருப்பதாகக் கூறியிருக்கிறாரே?

பாவம்... ஏதோ பூர்விகச் சொத்தை வித்துட்டு வந்து குடுத்தா மாதிரி கணக்கு வாசிக்கிறார். மக்கள் பணத்தைத் தேவையான நேரத்தில் அவர்களுக்குக் கொடுப்பதை விட்டுவிட்டு, தேர்தல் நேரத்தில் வந்து கொடுப்பதில் பெருமை வேறா!

PRH விநாயகம், வில்லிவாக்கம்.

ஓ.பி.எஸ் சசிகலா பக்கம் சாய்ந்துவிடுவாரா?

எந்தப் பக்கம் சாய்ந்தால் ஆதாயம் அதிகம் என்று கணக்கு போட்டுக்கொண்டிருப்பதால், இப்போதைக்கு மௌனம் காக்கிறார்!

பார்வதி மணி, சேலம்.

ஜனநாயகத்தில் எது கஷ்டம்?

பதவியைப் பிடித்துவிட்டால், அரசியல்வாதி களுக்கு ஜனநாயகம் என்ற வார்த்தையே கஷ்டமாகத்தான் இருக்கிறது!

கழுகார் பதில்கள்

@கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்.

“இந்தியாவில் எரிசக்தி இறக்குமதியைக் குறைப்பதில், முந்தைய அரசு கவனம் செலுத்தத் தவறியதே பெட்ரோல் உயர்வால் நடுத்தர மக்கள் இப்போது பாதிக்கப்படுவதற்குக் காரணம்” என்று மோடி கூறுகிறாரே?

`பிக் பாங்’ தியரிதான் எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணம்னு மட்டும்தான் அவர் சொல்லலை.

@வேலு, பண்ருட்டி.

“அம்மா ஆட்சியைவிட எடப்பாடியார் ஆட்சி ஒருபடி மேல்” என அமைச்சர் பாஸ்கரன் பேசியிருக்கிறாரே?

இதே அமைச்சர் பாஸ்கரன்தான் ஒரு வருடத்துக்கு முன்பு, “ஜெயலலிதா நினைத்திருந்தால் எனக்கு நல்ல துறையைக் கொடுத்திருக்க முடியும். ஆனால், கதர்துறையைத்தான் அவர் கொடுத்தார்” என்றும் பேசியிருந்தார். கூட்டிக் கழிச்சுப் பாருங்க!

எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.

“அ.தி.மு.க-வில் இன்னமும் ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள்” என்கிறாரே டி.டி.வி.தினகரன்?

இவ்வளவு ரணகளத்துக்கு அப்புறமும் எந்தச் செயல்பாடும் இல்லையென்றால், அவர்களுக்குப் பெயர் ஸ்லீப்பர் செல்கள் அல்ல. ஸ்லீப்பிங் செல்கள். யாராவது தட்டி எழுப்பிவிட்டால் தேவலாம்!

கழுகார் பதில்கள்

ராஜ்குமார் சங்கரன், மேல்மருவத்தூர்.

அதென்ன தேர்தல் வந்தால் மக்களுக்கு அவ்வளவு மவுசு?

காதுகுத்து அன்றைக்குக் கெடாவுக்குத்தான் மவுசு!

பாலசுப்ரமணியன், பொள்ளாச்சி.

“பெட்ரோல், டீசல் விலை உயர்வு மூலம் சில்லறைத் தட்டுப்பாட்டை ஒழிப்பார், வெஜிடேரியன் சமைத்தால் எரிவாயு குறைவாகச் செலவாகும்” என்றெல்லாம் விலையேற்றத்துக்கு பா.ஜ.க-வினர் முட்டுக்கொடுக் கிறார்களே?

“ஆசியப் பகுதிகளில் வசிப்பது தலைக்கு மேல் தொப்பியை சரியாக வைத்துக்கொள்ள தாடைகளிலிருந்து பற்களைக் கழற்றுவது” என்ற யவனிகா ஸ்ரீராமின் கவிதைதான் நினைவுக்கு வருகிறது. ஆசியாவுக்கு பதில் இந்தியா என்று மாற்றிப் படித்துக்கொள்ளுங்கள்!

கழுகார் பதில்கள்

@ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

மாபெரும் கலைஞனான நடிகர் வடிவேலு, “உடலில் தெம்பு இருந்தும் 10 ஆண்டுகளாக லாக்டௌனில் இருக்கிறேன்” என மனம் வருந்திப் பேசியிருக்கிறாரே, இந்தநிலைக்குக் காரணம் யார்?

தீதும் நன்றும் பிறர்தர வாரா!

ஞானவேல், நாட்டரசன்கோட்டை.

எப்பவுமே அரசியல் அரசியல்னு சீரியஸாவே பதில் சொல்லிட்டிருக்கீங்களே கழுகாரே... நெகிழ்ச்சியாகப் பாராட்டும் விஷயம் ஒன்றைச் சொல்லுங்களேன்!

சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில், 13 திருநங்கைகளைப் பணியில் அமர்த்தியிருக்கிறார்கள். ஓரிருவர் என இல்லாமல், இரட்டை இலக்க எண்ணிக்கையில் பணியில் அமர்த்தியதன் மூலம் அவர்கள் தனியாக இல்லை என்ற உணர்வை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள். இது அவர்களது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குவது மட்டுமல்லாமல், அவர்களைப் பார்ப்பவர்களின் பார்வையிலும் பாசிட்டிவ் சிந்தனையைத் தரும். இந்த முடிவை எடுத்த சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகளுக்கு நம் பாராட்டு!

கழுகார் பதில்கள்

ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.

மக்களுக்கு நல்லது நினைக்கும் கட்சியுடன் கூட்டணி என்கிறாரே திருமாவளவன்?

ஐயோ... யாரோடவும் கூட்டணி போகப்போறதில்லைனு சூசகமாச் சொல்றாரா!?

@கா.விசுவநாதன், ஈரோடு.

தமிழ்நாட்டில் தமிழில் பேசினால் ஓட்டு விழுந்துவிடும் என நம்புகிறாரா மோடி?

‘ஒருவனிடம் அவனுக்குப் புரியும் ஏதோ ஒரு மொழியில் பேசினால், அது அவன் மூளைக்குச் செல்லும். அதையே அவனது தாய்மொழியில் பேசினால் அது அவன் இதயத்துக்குச் செல்லும்” என்பார் நெல்சன் மண்டேலா. அதைத்தான் மோடி முயன்றுவருகிறார்போல!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!