Published:Updated:

கழுகார் பதில்கள்

 கமலஹாசன்
பிரீமியம் ஸ்டோரி
கமலஹாசன்

வெங்காய விலையேற்றத்தின்போது “நான் வெங்காயமெல்லாம் உபயோகிப்பதில்லை” என்று சொன்னவரிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்

கழுகார் பதில்கள்

வெங்காய விலையேற்றத்தின்போது “நான் வெங்காயமெல்லாம் உபயோகிப்பதில்லை” என்று சொன்னவரிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்

Published:Updated:
 கமலஹாசன்
பிரீமியம் ஸ்டோரி
கமலஹாசன்

@பி.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர்.

“பெட்ரோல், டீசல் விலை உயர்வு எனக்கும் தர்மசங்கடமாகத்தான் இருக்கிறது. என்னால் எதுவும் செய்ய முடியாது” என்று கூற ஒரு மத்திய நிதியமைச்சர் தேவைதானா சார்..?!வெங்காய விலையேற்றத்தின்போது “நான் வெங்காயமெல்லாம் உபயோகிப்பதில்லை” என்று சொன்னவரிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்... எல்லாம் காலக்கொடுமைதான்!

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

‘மக்கள் நீதி மய்யம்’ நான்காம் ஆண்டு தொடக்கவிழாவுக்கு எதிர்பார்த்த கூட்டம் இல்லாததால் கமலஹாசன் அப்செட் ஆகிவிட்டாராமே?

இது போன்ற கூட்டங்களுக்கெல்லாம் கூட்டத்தைக் கூட்டுவதென்பது கட்சியின் உள்கட்டமைப்பின் வலிமையைப் பொறுத்தது. அது திராவிடக் கட்சிகளைப்போல் மக்கள் நீதி மய்யத்துக்கு இல்லை என்பது தெரியவருகிறது.

கழுகார் பதில்கள்

@கா.கு.இலக்கியன், செங்குன்றம்.

இவ்வளவு கீழே இறங்கி, புதுச்சேரி அரசைக் கவிழ்க்க மத்திய பி.ஜே.பி அரசு செய்யும் ‘சதி’யைப் பற்றி..?

இதென்ன அவர்களுக்குப் புதிதா? கோவா, அஸ்ஸாம் எனப் பிற மாநிலங்களில் அவர்கள் முயன்ற ‘சக்சஸ் ஃபார்முலா’தானே... நமக்குப் பக்கத்தில் நடக்கும்போது பெரிய விஷயமாகத் தெரிகிறது!

@பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை, சேலம் (மா).

இருக்கும் கூட்டணியே போதும் என தி.மு.க திடமாக நம்புகிறதே?

`தெரியாத தேவதைகளைவிட, தெரிந்த சாத்தானே மேல்’ என்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்தானே!

கழுகார் பதில்கள்

குண.சண்முக சுந்தரம், தூத்துக்குடி.

ஒரு பக்கம் கனிமொழி, இன்னொரு பக்கம் ராகுல் காந்தி, மக்களிடம் கட்டிப்பிடி வைத்தியம் செய்து ஸ்கோர் செய்கிறார்களே?!

எமோஷன் இருந்தாதான் எலெக்‌ஷன்ல வொர்க்அவுட் ஆகும்னு, இப்பல்லாம் ஸ்கிரிப்ட்ல எமோஷன் அதிகமா சேர்க்கிறாங்களாம்.

கழுகார் பதில்கள்

மூர்த்தி பாலகிருஷ்ணன், அனுப்பானடி, மதுரை.

தகுதியில்லாதவர்கள் தங்களை உயர்ந்தவர்களாகக் கருதும்போது, தகுதியுடையவர்கள் என்ன செய்ய வேண்டும்?

‘உண்மை உறங்கும்போது பொய் விழித்துக்கொள்கிறது’ என்பார்கள். தகுதியுடையவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!

@திருப்பூர் அர்ஜுனன். ஜி, அவிநாசி.

``வரலாறு படைத்தவர்களுக்கு வரலாற்றாளர்கள் அநீதி இழைத்துவிட்டார்கள்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறாரே?

அநீதி இழைக்கப்பட்டதா இல்லையா என்பதைக் காலமும் மக்களும் முடிவுசெய்வார்கள். ‘சரித்திரத் தேர்ச்சிகொள்’ என்ற பாரதியின் வார்த்தைகளை இன்றைய இளைஞர்கள் உணர்ந்தேயிருக்கிறார்கள்!

டாக்டர் கே.விஸ்வநாதன், கோவை.

முரசு தனித்து ஒலிக்குமா... அப்படியே ஒலித்தாலும் அனைத்து வாக்காளர்களுக்கும் கேட்குமா?

போன் ஒயர் பிஞ்சு நாலு நாளாச்சு!

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

எல்லா அரசியல் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கும் மக்கள் கூட்டம் அமோகமாக இருக்கிறதே... ஒன்றுமே புரியவில்லையே கழுகாரே?

தி.மு.க முதன்முறை தேர்தலில் போட்டியிட்ட 1957 தேர்தலில், பிரபல நடிகர்களும் பேச்சாளர்களும் கலந்துகொண்டதால், மக்கள் கூட்டம் அதிகரித்தது. காங்கிரஸ் சோர்ந்து போனபோது காமராஜர் சொன்ன வார்த்தைகள்: “கூட்டம் தி.மு.க-வுக்கு... வாக்கு காங்கிரஸுக்கு!” அதேபோலவே காங்கிரஸ் 205 இடங்களில் போட்டியிட்டு 151 இடங்களில் வென்றது.

கூட்டம் கூடுவது வேறு... தேர்தல் முடிவுகள் வேறு என்பதுதான் வரலாறு சொல்லும் செய்தி!

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

ஓ.பன்னீர்செல்வம் இன்னும் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கவில்லையே ஏன்?

TN 60 AL 2345 என்ற எண்ணுடன் வேன் ரெடி. மஞ்சள் நிறத்தில் வேல் வரைந்து, இளைய மகன் அதை எடுத்துக்கொண்டு திருப்பதி சென்று பூஜையெல்லாம் போட்டு, வண்டி தயாராக இருக்கிறது. எல்லாம் ரெடி... ‘ஓனர்’ சிக்னலுக்காக வெயிட்டிங்!

ராஜகணபதி, வேலூர்.

அ.தி.மு.க-வைக் காப்பாற்ற விளக்கேற்றச் சொல்லியிருக்கிறார்களே முதல்வரும் துணை முதல்வரும்?

அவங்கதானே பாஸ் அ.தி.மு.க... யார்கிட்டருந்து காப்பாத்தச் சொல்றாங்களாம்?

சோமசுந்தரம், சத்தியமங்கலம்.

அதென்ன ஆளாளுக்கு ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிடுவேன், ராகுலை எதிர்த்துப் போட்டியிடுவேன் என்று கூறுகிறார்களே... தோற்போம் என்று தெரிந்தும் பிரபலங்களுடன், தலைவர்களுடன் இவர்கள் போட்டிபோடுவது எதற்காக?

`கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.’


அதாவது, `காட்டில் அஞ்சி ஓடும் முயலைக் கொன்ற அம்பைப் பிடித்திருப்பதைவிட, எதிர்த்து வரும் யானையின்மீது பட்டும், அதை வீழ்த்தாத வேலைப் பிடித்திருப்பது நல்லது’ என்கிறார் வள்ளுவர். எல்லாம் ஒரு பெருமைக்காகத்தான்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism