Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்

அரசியல் அல்ல... அராஜகமே செய்கிறார்கள். ஊரடங்கு காலத்தில் ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் அரசியல் கூட்டம் நடத்தியவர்கள், கொரோனாவைக் காரணம் காட்டி கிராமசபைக்கூட்டம் நடத்தவில்லை.

கழுகார் பதில்கள்

அரசியல் அல்ல... அராஜகமே செய்கிறார்கள். ஊரடங்கு காலத்தில் ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் அரசியல் கூட்டம் நடத்தியவர்கள், கொரோனாவைக் காரணம் காட்டி கிராமசபைக்கூட்டம் நடத்தவில்லை.

Published:Updated:
கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்

புனிதா கஜேந்திரன், பாலவாக்கம்.

ஓட்டரசியலில் வட மாநிலங்களிலிருந்து தமிழகம் எந்த விஷயத்தில் வேறுபடுகிறது?

ஜெயலலிதாவின் நினைவிடத் திறப்புக்குப் பல்வேறு ஊர்களிலிருந்தும் பேருந்துகளில் ஆயிரக் கணக்கான அ.தி.மு.க தொண்டர்கள் வந்துகுவிந்தனர். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி படம் போட்ட டீ-ஷர்ட்டுகளுடன் அப்படியே கருணாநிதி சமாதிக்கும் சென்று அவர்கள் வணங்கிய காட்சிகளைக் பார்க்க முடிந்தது. நீண்ட வரிசையில் நின்று கருணாநிதிக்கும் அஞ்சலி செலுத்திய அவர்களிடம் “அ.தி.மு.க-வில் இருந்துகொண்டு, தி.மு.க தலைவர் நினைவிடத்துக்கு வந்திருக்கிறீர்களே?” என்று நிருபர்கள் கேட்கவும், அதில் ஒருவர் சொன்னார்: “அம்மாவைப் பாக்க வந்தோம். அப்படியே தலைவரையும் பாக்கலாம்னு போயிட்டு வந்தோம். எங்களுக்கு எல்லாரும் ஒண்ணுதாங்க. பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், கலைஞர், அம்மானு எல்லாம் திராவிடக் கட்சிதான். எல்லாரும் எங்களுக்கு நல்லது பண்ணியிருக்காங்க” என்றார்.

இவர்கள்தான் எப்போதும் தமிழகத்தின் அரசியல் போக்கை திசை மாற்றும் வாக்காளர்கள். கட்சி சார்பற்று ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றியைத் தீர்மானிப் பவர்கள். இவர்களைப் போன்றவர்களின் தெளிவுதான் வடமாநிலத்திலிருந்து தமிழகத்தை வேறுபடுத்திக் காட்டுகிறது.

எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.

‘புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தை காங்கிரஸ் கட்சியே தூண்டிவிடுகிறது’ என்று பேசுகிறாரே பிரகாஷ் ஜவடேகர்?

பரவாயில்லையே... கொஞ்சம் மாத்திச் சொல்லியிருக்காரு. வழக்கமா நேரு... இல்லைன்னா அந்நிய நாட்டு சதின்னுதானே சொல்லுவாங்க!

குமார் சண்முகம், தாராபுரம்.

‘ஆளுங்கட்சி அரசியல் செய்கிறது’ என்று குற்றம்சாட்டுகிறார்களே... ஓர் உதாரணம்?

அரசியல் அல்ல... அராஜகமே செய்கிறார்கள். ஊரடங்கு காலத்தில் ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் அரசியல் கூட்டம் நடத்தியவர்கள், கொரோனாவைக் காரணம் காட்டி கிராமசபைக்கூட்டம் நடத்தவில்லை. சமீபத்தில் குடியரசு தினவிழாவில் மக்கள் கூடவேண்டாம் என்று சொல்லி விட்டு, மறுநாளே ஜெயலலிதா நினைவிடத் திறப்புவிழாவுக்கு மக்களைத் திரளாகக் கலந்துகொள்ள அழைப்பு விடுத்ததுடன், அமைச்சர்கள் உள்ளிட்ட யாருமே சமூக இடைவெளி இல்லாமல் கலந்துகொண்டார்கள். இதற்கெல்லாம் பெயர்தான் (மோசமான) அரசியல்!

கழுகார் பதில்கள்

கிருபாகர், மணிமுத்தாறு.

கல்விதானே அறிவு... கல்விக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை என்று ஏன் கூறிக்கொண்டேயிருக் கிறார்கள்?

கல்வி, கற்றலின் மூலம் வருவது. அறிவு, அனுபவத்தின் மூலம் கிடைக்கப்பெறுவது. அறிவை மேம்படுத்திக்கொள்ள கல்வி அவசியம்தான். ஆனால், கல்வி இல்லாத ஒருவனும் அறிவுடையவனாக இருப்பதைக் காணலாம். ஆனால், அறிவில்லாத வர்களிடம் இருக்கும் கல்வியால் ஒரு பயனுமில்லை. சமீபத்தில் ஆந்திராவில் ‘மீண்டும் உயிர்த்தெழுவார்கள்’ என்று மூடநம்பிக்கையால் இரு மகள்களையும் கொன்ற பெற்றோரில் அப்பா எம்.எஸ்சி., எம்.ஃபில்., பிஹெச்.டி., கல்லூரி ஒன்றில் உதவிப் பேராசிரியர். அம்மா எம்.எஸ்சி கணிதத்தில் கோல்டு மெடல் வாங்கி, ஒரு பள்ளியின் தாளாளராக இருப்பவர். இப்போது சொல்லுங்கள்... கல்விக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்ன?

இ.நாகராஜன், சாத்தூர்.

வரக்கூடிய தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கக்கூடிய புதிய அரசு, டாஸ்மாக்கை முற்றிலும் அடைத்துவிட வாய்ப்பிருக்கிறதா?

தேர்தல் நேரத்தில் கவர்ச்சி வாக்குறுதியாக வேண்டு மானால் சொல்வார்கள். ஆனால், செயல்படுத்தத் தயாராக இருக்க மாட்டார்கள் என்பதே கடந்த காலம் சொல்லும் வரலாறு.

ச.ந.தர்மலிங்கம், ஈரோடு.

டி.டி.வி.தினகரன் சமீபகாலமாக அடக்கி வாசிக்கிறாரே?

சமீபகாலமாகவா? ஆர்.கே.நகர் தேர்தலுக்குப் பிறகு அவர் எங்கே என்று தேட வேண்டிய நிலையில் தானே இருக்கிறார்!

ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

வெளிவரவிருக்கும் தி.மு.க-வின் தேர்தல் அறிக்கைக்கும், அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கைக்கும் என்ன வித்தியாசம் இருக்கும்?

‘அ’ என்பதைத் தவிர வேறு என்ன வித்தியாசம் இருக்கப்போகிறது? அதைத் தவிர்த்து சொல்வதென்றால்... ‘வந்த வரைக்கும் லாபம்’ என்று தயாரிக்கும் அ.தி.மு.க. ‘இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை’ என்ற மனநிலையில் தயாரிக்கும் தி.மு.க!

சீனிவாசன், சிவகங்கை.

பேச்சு, தோரணை, சத்தம், சபதம், கட்அவுட், பேனர், காலில் விழும் கலாசாரம், அடிக்கு ஒரு போலீஸ், வாகனப் போக்குவரத்து நிறுத்தம்... எடப்பாடி பழனிசாமியும் ஆளுமைமிக்கத் தலைவர்தான் என்பதற்கு இவையெல்லாம் போதாதா?

இவையெல்லாம்தான் உங்கள் அகராதியில் ஆட்சி யாளர்களின் ஆளுமையா?

@திருப்பூர் அர்ஜுனன்.ஜி, அவிநாசி.

அர்ஜுனமூர்த்தியும் ஆரம்பித்துவிட்டாரே?

அப்பா - அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், கைதிகள் கட்சி... இப்படியெல்லாம்கூட கட்சிகள் பதிவுசெய்யப் பட்டிருக்கு பாஸ்!

@சீனிவாசன், கண்டனூர்.

அப்போலோ என்ற தனியார் மருத்துவமனை வாங்கிய தடையாணையைக்கூட, இவ்வளவு காலம் ஆகியும் எடப்பாடி பழனிசாமி அரசால் நீக்க முடியவில்லையே... ஏன்?

‘டெல்லி ராணி சொல்லிவிட்டால் கல்லிலிருந்து நெல் விளையும்’ என்றுகூட ஒரு சொலவடை இருக்கிறது தெரியுமா? ராணிக்கு பதிலா ராஜான்னு போட்டுக்கோங்க!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism