பிரீமியம் ஸ்டோரி

@ப.சுவாமிநாதன், பட்டுக்கோட்டை.

தெற்கு ஆஸ்திரேலியாவில் தண்ணீர்ப் பஞ்சம் காரணமாக குடியிருப்புகளில் ஒட்டகங்கள் நுழைந்து இடையூறு செய்வதால், 10,000 ஒட்டகங்களைக் கொல்லப்போகிறார்களாமே?

வல்லான் வகுத்ததே நீதி!

@மஹாராஜ், தென்சென்னை.

மத்திய அரசின் உருப்படியான திட்டங்களில் ஒன்று, குடியுரிமைச் சட்டம். அதை முழுவதும் படித்துத் தொலைக்காத நுனிப்புல் மேய்தல்தனம்தானே எதிர்க்கட்சிகளிடம் தென்படுகிறது?

முழுவதும் படித்துத்தொலைக்க வேண்டும் என்ற தேவையை இல்லாமல் செய்ததே மத்திய அரசுதானே. டிரெய்லரிலேயே எல்லாம் வெளிப்பட்டுவிட்டனவே!

@திருச்சிற்றம்பலம் சுரேஷ்.

குடியுரிமைச் சட்டம் தேவையா?

நூற்றுக்கு நூறு தேவையே!

@மாணிக்கம், திருப்பூர்.

சபாநாயகரின் நடுநிலைமையை உறுதிப்படுத்த ஏதேனும் சட்டங்கள் இருக்கின்றனவா?

சட்டங்கள் உருவாக்கும் அவைக்கே அவர்தான் தலைவர் எனும்போது, அவருக்கு மட்டும் சட்டங்கள் இல்லாமலா! அவர்மட்டுமல்ல, குடியரசுத் தலைவர், பிரதமர், அமைச்சர்கள் போன்ற அரசுப் பதவிகளில் இருப்போர் அனைவருமே ஏதாவது ஒரு கட்சியின் சார்பில்தான் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ‘நடுநிலைமை தவறக் கூடாது’ என்பதுதான் இந்திய அரசியல் சட்டத்தின் அடிநாதம். ஆனால், இவர்களில் பெரும்பாலானோர் அதையெல்லாம் காலில் போட்டு மிதித்தபடிதான் ஆட்சி நடத்தினர்/நடத்துகின்றனர். அதிலும் சபாநாயகர்கள் நடத்திய/நடத்தும் கோமாளிக் கூத்துகள், எல்லாக் கட்சி ஆட்சிகளிலுமே ஏகப்பிரபலம்!

காட்டுத்தீ
காட்டுத்தீ

@வாசுதேவன், காடுகுடி, பெங்களூரு.

ஆஸ்திரேலியாவைப் புரட்டிப்போட்டுக் கொண்டிருக்கும் காட்டுத்தீ?

‘முன்னை இட்ட தீ முப்பு ரத்திலே

பின்னை இட்ட தீ தென் இலங்கையில்

அன்னை இட்ட தீ அடிவ யிற்றிலே

யானும் இட்ட தீ மூள்க மூள்கவே!’

- இறந்துபோன தன் அன்னையின் உடலுக்குத் தீ மூட்டிவிட்டு இப்படிக் கதறினார் பட்டினத்தார். ஆனால், நாம் உயிரோடு இருக்கும் இயற்கை அன்னைக்குத் தீ மூட்டிவிட்டு வாட்ஸப் போட்டுக்கொண்டு இருக்கிறோம்.

@பிரதீபா ஈஸ்வரன், தேவூர்மேட்டுக்கடை, சேலம் மாவட்டம்.

கருப்பசாமி பாண்டியன், ராதாரவி, பழ.கருப்பையா போன்றோருக்குச் சொல்ல விரும்புவது?

இன்றுபோல் என்றும் வாழ்க!

@கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்-6.

‘படித்த இளைஞர்கள் அரசு வேலைக்கு ஆசைப்படாமல் தொழில்முனைவோர் ஆகுங்கள்’ என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறுகிறாரே?

படித்து முடிக்கும் அனைவருக்குமே அரசு வேலை என்பது தற்போதைய அமைப்பில் சாத்தியமே இல்லாதது. அதனால்தான் அப்படிக் கூறியிருக்கிறார். ஒருவேளை, அனைத்துத் தொழில்களையுமே அரசாங்கம் மட்டுமே செய்யும் என்ற சூழல் ஏற்பட்டால், அனைவருக்கும் அரசு வேலை சாத்தியமே. ஒருகாலத்தில் கிட்டத் தட்ட அப்படித்தான் இருந்தது. தனியாரிடமிருந்து தான் போக்குவரத்து, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பலவும் அரசாங்கத்தின் கைகளுக்கு வந்தன. ஆனால், ‘அரசாங்க வேலை... யாரும் நம்மை அசைக்க முடியாது’ என்ற மனோபாவம் பெருக ஆரம்பித்ததுதான் அழிவின் முதல் படியாகிவிட்டது. தனியார்மயமாக்குவதன் மூலம் சுயலாபம் பார்க்க நினைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு இது வசதியாகிவிட்டது. அரசுத் துறைகள் பலவற்றையும் திட்டமிட்டே முடக்கி மூடுவிழாவை நோக்கி நகர்த்துகின்றனர். அனைத்தும் நம் கையைவிட்டுப் போய்க்கொண்டிருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

@கே.சங்கர், சிட்லபாக்கம், சென்னை.

ரஜினியின் ‘தர்பார்’ எப்படி? (நான் அரசியல் பேசவில்லை!)

கிழிகிழி! (நானும் அரசியலைச் சொல்லவில்லை.)

கழுகார் பதில்கள்

@ப.த.தங்கவேலு, பண்ருட்டி, கடலூர் மாவட்டம்.

ஜூ.வி நடத்திய கருத்துக் கேட்பின் மூலமாக இலங்கை அகதிகளில் பெரும்பாலானோர் இந்தியக் குடியுரிமையையே விரும்புகிறார்கள் என்பது தெளிவாகிறது. அதன் பிறகும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரட்டை குடியுரிமை பற்றியே பேசிக்கொண்டிருக்கிறாரே?

இரண்டு என்றாலே அவருக்கு அலாதி பிரியமாயிற்றே!

டி.கே.மோகன், ஆதம்பாக்கம், சென்னை- 88.

கருணாநிதி 94 வயது வரை பதவியில் நீடித்தார். ஸ்டாலின் 66 வயதிலும், கனிமொழி 52 வயதிலும் நீடிக்கிறார்கள். உதயநிதி ஸ்டாலின் 41 வயதில் மாநில தி.மு.க இளைஞரணித் தலைவர். ஆக, தி.மு.க என்பதே கருணாநிதியின் குடும்பக் கட்சிதானே?

அதைத்தான் கருணாநிதியும் ஸ்டாலினும் எப்போதோ வழிமொழிந்துவிட்டார்களே! அதேசமயம், அ.தி.மு.க, பா.ம.க, காங்கிரஸ், தே.மு.தி.க என பெரும்பாலான கட்சிகளும் இப்படித்தானே இருக்கின்றன. ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ், டாக்டர் ராமதாஸ், ப.சிதம்பரம், விஜயகாந்த் என்று பலருடைய வாரிசுகளும் கோலோச்சத்தானே செய்கின்றனர்.

ஸ்டாலின், கருணாநிதி, கனிமொழி
ஸ்டாலின், கருணாநிதி, கனிமொழி

@ம.தமிழரசி, வெள்ளகோவில், திருப்பூர்.

‘உடுக்கை இழந்தவன் கைபோல’ என்பதற்கு உதாரணமாக ஓர் அரசியல் தலைவரைக் கூற முடியுமா?

உத்தவ் தாக்கரே. ஆனால், சரத் பவார் ‘இடுக்கண் களையும்’ நண்பனா என்று சொல்லத் தெரியவில்லை.

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14

தமிழக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி?

உள்ள ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்கான அபாய அறிவிப்பு.

@எஸ்.பஷீர் அலி, பேராவூரணி.

நாட்டையும் மக்களையும் எப்போதும் ஒருவிதமான கொதிநிலையிலேயே வைத்திருப்பது என்ன வகையான அரசியல்?

சுயநல அரசியல். இதோ, எல்லாவற்றையும் மறந்துவிட்டு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் தாக்குதல் பற்றி நாடே பேச ஆரம்பித்துவிட்டதே!

டி.கிருஷ்ணமூர்த்தி, விழுப்புரம்.

‘அரசு மருத்துவமனைகளை தனியார்களிடம் ஒப்படைப்பது ஆபத்தானது’ என்கிறாரே டாக்டர் அன்புமணி ராமதாஸ்?

நோயையும் பரப்பிவிட்டு, மாத்திரையும் கொடுக்கும் வேலையை அழகாகவே செய்கிறார் இந்த டாக்டர். ஆட்சிகளே தனியார்களிடம்தான் இருக்கின்றன. அதற்கெல்லாம் உதவி செய்பவர்கள் இவரைப் போன்ற கூட்டணித் தோழர்கள்தானே!

@கி.முருகன், மாப்பிள்ளைக்குப்பம்.

ஊதியம் ‌இல்லாத ஊராட்சித் தலைவர் பதவிக்கு ஏன் இவ்வளவு கடும் போட்டி?

ஊதியமில்லைதான். ஆனால், படி உண்டு. ‘வரும்படி’ அதிகமாகவே உண்டு!

@கொ.மூர்த்தி, குட்டலாடம்பட்டி.

‘அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலையைக் கொண்டு வருபவருக்கு 80 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.576 கோடி) பரிசு’ என ஈரான் அறிவித்துள்ளதே?

‘தலைக்கு தலையேதான் தீர்வு’ என ஆரம்பித்தால், உலகில் யாருமே தலையெடுக்க முடியாமல்போய்விடும். அமெரிக்காவின் ‘பெரியண்ணன்தனத்தை’ உலக அரங்கில் அம்பலப்படுத்தும் முயற்சியை கையிலெடுத்து, அதில் வெற்றி காண்பதுதான் சரியாக இருக்கும். ட்ரம்ப்பின் ‘போர்முரசு’க்கு அமெரிக்காவிலேயே ஏக எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. இவற்றை சரியாக ஈரான் பயன்படுத்திக்கொள்வதுதான் புத்திசாலித்தனமாகவும் இருக்கும்.

@வாசு, குறிஞ்சிப்பாடி.

‘வானளாவிய’ அதிகாரம்?

‘வானளாவிய’ என்பதெல்லாம் மக்களின் அதிகாரத்துக்கு முன் தூசு. இதையெல்லாம் எல்லோரும், எப்போதுமே உணர்வதுதான் வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது. ஆறடி நிலத்துக்குக்கூட அதிகாரம் நம்மிடம் இல்லை. யாரோ ஒருவர்தான் அதைத் தீர்மானிக்கிறார் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை- 600002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு