Published:Updated:

கழுகார் பதில்கள்

ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
ரஜினி

இதே குஷ்பு, பி.ஜே.பி-யில் சேருவதற்கு ஐந்து நாள்கள் முன்புவரை இதே விவசாயச் சட்டங்களைக் கிழித்துத் தொங்கவிட்டுக் கொண்டிருந்தாரே..

கழுகார் பதில்கள்

இதே குஷ்பு, பி.ஜே.பி-யில் சேருவதற்கு ஐந்து நாள்கள் முன்புவரை இதே விவசாயச் சட்டங்களைக் கிழித்துத் தொங்கவிட்டுக் கொண்டிருந்தாரே..

Published:Updated:
ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
ரஜினி

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர், விருதுநகர்.

``விவசாயச் சட்டங்களைக் கொண்டுவரும் முன்பு, ஒன்றரை லட்சம் விவசாயச் சங்கங்களுடன் கலந்துரையாடித்தான் சட்டத்தைக் கொண்டுவந்தார்கள்” என்கிறாரே குஷ்பு!?

எல்லாம் அரசியல் மிக்கேல்ராஜ்! இதே குஷ்பு, பி.ஜே.பி-யில் சேருவதற்கு ஐந்து நாள்கள் முன்புவரை இதே விவசாயச் சட்டங்களைக் கிழித்துத் தொங்கவிட்டுக் கொண்டிருந்தாரே... உதாரணத்துக்கு அவரின் ட்வீட் ஒன்றைப் பாருங்கள்!

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்

@வண்ணை கணேசன், சென்னை-110.

இப்போதெல்லாம் `ஸ்லீப்பர் செல்’ என்ற வார்த்தையை அதிகம் கேட்கவே முடியவில்லையே?

`ஸ்லீப்பர் செல்’ என்கிற வார்த்தையை அடிக்கடி உச்சரித்த தினகரனே ஸ்லீப்பிங் மோடுக்குப் போய்விட்டார். மீண்டும் அவர் வலம்வந்தால் அந்த வார்த்தை உயிர்பெறலாம்!

த.சிவாஜி மூக்கையா, தர்காஸ்.

கூட்டணி விஷயத்தில் பா.ஜ.க குழம்புகிறதா... குழப்புகிறதா?

மிகத் தெளிவாகக் குழப்பி, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கக் காத்திருக்கிறது.

கழுகார் பதில்கள்

ராமகிருஷ்ணன், கோவைப்புதூர்.

சினிமாவை விடுங்கள். பிற துறைப் பிரபலங்களை அரசியலுக்கு இழுப்பது மேலை நாடுகளிலும் உண்டா?

ஏன் இல்லை? பிரபல அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு இஸ்ரேல் நாட்டின் ஜனாதிபதி பதவி தேடிவந்தது. ‘நான் அரசியலுக்கு லாயக்கில்லாதவன்’ என்று மறுத்துவிட்டார் ஐன்ஸ்டீன். ஐசக் நியூட்டனை கௌரவப்படுத்த, இங்கிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அவருக்கு அளித்தார்கள். எம்.பி-யாக அவர் இருந்தபோது, நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு முறைதான் பேசினார்... அது: “காற்று வரவில்லை. ஜன்னலைத் திறக்கச் சொல்லுங்கள்” என்பதுதான்.

கழுகார் பதில்கள்

சந்திரன், பழங்கனாங்குடி.

``தேர்தல் அரசியலுக்கு வரவில்லை’’ என்று ரஜினி பகிரங்கமாக அறிவித்த பிறகும், ``வரும் தேர்தலில் அவர் குரல் கொடுப்பார்” என்று குருமூர்த்தி கூறுவது எதைக் காட்டுகிறது?

மத்தியில் குருமூர்த்தியின் குரல் ஓங்குவதற்காகக்கூட இருக்கலாம்!

ஆர்.ஜெயச்சந்திரன், திருச்சி.

‘தொட்டில் முதல் சுடுகாடு வரை’ சான்றிதழ்களுக்கும் சேவைகளுக்கும், தமிழகம் முழுக்க நடைமுறையிலிருக்கும் லஞ்சப் பட்டியலை வெளியிட்டிருக்கிறாரே கமல்..?

வெளியிட்ட பட்டியல் சரிதான். ஆனால், கோடிகளிலும் லட்சங்களிலும் நடக்கும் ஊழல்கள் பக்கம் இனி பார்வையைத் திருப்பினால் சரியாக இருக்கும். இல்லாவிட்டால் புலிகளைப் பிடிக்கக் கிளம்பிய வேடன், எலிவேட்டை ஆடிய கதைதான்!

பிரேம்குமார், திருவையாறு.

அரசு நினைத்தால் எதையும் செய்யும் என்பதற்குச் சமீபத்திய உதாரணம்?

மக்கள் பிரச்னைகளைப் பேச வேண்டிய நாடாளுமன்ற அவையையே, கொரோனா காரணம் காட்டி ஒதுக்கிவைத்த இவர்கள், பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடும் பிரசாரக் கூட்டங்களை ஜோராக நடத்திக் கொண்டிருக்கிறார்களே!

லட்சுமி செங்குட்டுவன், வேலூர்.

ரஜினி விலகிவிட்டார். ஆக, ஸ்டாலின் முதல்வராக பிரகாசமான வாய்ப்பு இருக்கிறதுதானே..?

ஏதேது... நீங்க சொல்றதைப் பார்த்தா, தமிழ்நாட்டுக்கு யார் முதல்வரா ஆனாலும் ரஜினி விலகினதுதான் காரணம்னு சொல்வீங்க போலயே!

தாமஸ் மனோகரன், உழவர்கரை, பாண்டி.

`அ.தி.மு.க-வில் சாதாரண தொண்டரும் முதல்வராகலாம்’ என்று எல்லா மேடைகளிலும் முழங்குகிறாரே எடப்பாடி பழனிசாமி?

முதல்வராவதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்... எத்தனை அடிமட்டத் தொண்டர்களுக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை எடப்பாடி பழனிசாமி கொடுக்கப்போகிறார் என்பதையும் பார்க்கத்தானே போகிறோம்!

கழுகார் பதில்கள்

கணேசன், பொன்னியம்மன்மேடு.

எடப்பாடியார் கூட்டணி பற்றியெல்லாம் கவலைப்படுவதாகவே தெரியவில்லையே?

அதெல்லாம் ஓனர் பிரச்னை!

கழுகார் பதில்கள்

அ.யாழினி பர்வதம், சென்னை-78.

ரஜினியின் பின்வாங்கல் அவரது இமேஜை பாதிக்கவில்லையா?

‘இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை’ என்ற ரஜினி, சரியான நேரத்தில் எடுத்த சரியான முடிவு இது என்று அவரின் நலம் விரும்பிகள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் பாஸ்!

ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி.

‘நடிப்பில் வேண்டுமானால் கமல் ஹீரோவாக இருக்கலாம். ஆனால், அரசியலில் ஜீரோ’ என்று கூறியிருக்கிறாரே முதல்வர்?

பரவாயில்லையே... எடப்பாடியும் ரைமிங்காகப் பேசத் தொடங்கிவிட்டாரே.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!