Published:Updated:

கழுகார் பதில்கள்

ஜெயலலிதா
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயலலிதா

ஹீரோவாகப் பார்க்கப்பட்டு, வில்லனாக மாறி, நகைச்சுவையாளனாக அரங்கைவிட்டு வெளியேறியிருக்கிறார்!

@ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.

“தே.மு.தி.க இல்லையென்றால், அரசியலும் இல்லை; ஆட்சியும் இல்லை!” என்று பிரேமலதா கூறியிருப்பது பற்றி?

தே.மு.தி.க கட்சி பிறந்தது... பிரேமலதா தன் தம்பி சுதீஷையெல்லாம் கூட்டிகிட்டு அரசியலுக்கு வந்தது... இதெல்லாம் 2005-லதானே?! அதுக்கு முன்னால இங்கே என்ன மன்னர் ஆட்சியா நடந்துக்கிட்டிருந்தது? இதைத்தான் `கோவம் வர்ற மாதிரி காமெடி பண்றது’னு சொல்வாங்க!

@டி.ஜே.தனபாலன் நஞ்சுண்டாபுரம்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட அ.தி.மு.க நிர்வாகியைக் கட்சியைவிட்டு நீக்கிவிட்டால், அ.தி.மு.க மீது பழி ஏற்படாதா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பூனை கண்ணை மூடிக்கிட்டா பூலோகமே இருண்டுவிட்டது என்று நினைத்துக்கொள்ளுமாம். அதுபோலத்தான் இருக்கிறது!

@மூர்த்தி பாலகிருஷ்ணன், அனுப்பானடி, மதுரை.

ஒருமுறை வாக்களித்தவர், மறுமுறை வாக்களிக்கவும், மறுமுறை வாக்களித்தவர்கள் தலைமுறைக்கும் வாக்களிப்பதற்குக் கட்சிகள் செய்ய வேண்டியது என்ன?

அறம் சார்ந்த நல்லாட்சி!

கழுகார் பதில்கள்

@அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

டிரம்ப் ஹீரோவா, வில்லனா?

ஹீரோவாகப் பார்க்கப்பட்டு, வில்லனாக மாறி, நகைச்சுவையாளனாக அரங்கைவிட்டு வெளியேறியிருக்கிறார்!

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

தி.மு.க-வில், முதல்வர் வேட்பாளர் யார் என்கிற போட்டியெல்லாம் இல்லைதானே?

இப்போதைக்கு இல்லை. 2026 தேர்தலில், நீங்கள் எதிர்பார்க்காத பல அதிரடிக் காட்சிகள் அரங்கேறும்!

ராஜா, ஜெ.கிருஷ்ணாபுரம்.

`கொரோனா தடுப்பு மருந்துமீது நம்பிக்கை வருவதற்கு, பிரதமர் மோடி மற்றும் மூத்த பா.ஜ.க தலைவர்கள் கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று பீகார் காங்கிரஸ் தலைவர் அஜித் ஷர்மா கூறியிருக்கிறாரே?

தடுப்பு மருந்து விஷயத்தில் அரசியல் செய்வதை ஆளுங்கட்சி அடியோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி விஷயத்தில் மக்களுக்கு இருக்கும் அவநம்பிக்கையைப் போக்க எதிர்க்கட்சி, ஆளுங்கட்சியுடன் இணைந்து பொறுப்போடு செயல்பட வேண்டும். இதுதான் இந்தப் பேரிடர் காலத்தில் இவர்கள் மக்களுக்குச் செய்ய வேண்டிய முக்கியக் கடமை!

வெங்கடேசன், செங்கல்பட்டு.

கௌரவம், வறட்டு கௌரவம்... என்ன வித்தியாசம்?

`இத்தனை சீட் வேணும்’னு கேட்கறது கௌரவம். `இத்தனை சீட் இருந்தாத்தான் கூட்டணி’னு சொல்றது வறட்டு கௌரவம்!

விஜயராகவன், ஸ்ரீரங்கம்.

சரி... ஒருவேளை ஸ்டாலினும் எடப்பாடியும் ஒரே மேடையில் விவாதம் நடத்தினால் எப்படியிருக்கும்?

ஆக, இருவருக்கும் குறிப்பெடுத்துக் கொடுப்பவர்களின் பாடுதான் திண்டாட்டமாகி விடும்!

@எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.

ஆளுநர் பதவி வாங்கித் தருவதாக, ஓய்வுபெற்ற பெண் நீதிபதியிடம் ரூ.8.80 கோடி மோசடி செய்த சம்பவம் கர்நாடகத்தில் நிகழ்ந்திருக்கிறதே..?

ஓய்வுபெற்ற நீதிபதி இந்திரகலாவிடம் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றிய யுவராஜ் என்பவரை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்துவருகின்றனர். மாநிலங்களின் அரசியலமைப்புத் தலைவரான ஆளுநர் பதவியையே லஞ்சம் கொடுத்துப் பெற முயன்றது வேதனை. அதுவும் பெற முயன்றவர், ஓய்வுபெற்ற நீதிபதி என்பது வேதனையிலும் வேதனை. ‘சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடல்’ நீதி பயின்றவர்க்கு அழகல்ல!

குணா யோகி, திருப்பத்தூர்.

அனுமதித்த அளவுக்கு மேல் ரசிகர்கள் இருந்ததால், சென்னை ‘காசி’ தியேட்டருக்கு சென்னை மாநகராட்சி ரூ.5,000 அபராதம் விதித்திருக்கிறதே?

ஐயோ... இவ்வளவு பெரிய தொகையைக் கட்ட தியேட்டர் அதிபர் எவ்வளவு கஷ்டப்படப்போகிறார் என்பதை நினைத்தால், நெஞ்சம் விம்முகிறது... கண்களில் கண்ணீர் தாரை தாரையாகக் கொட்டுகிறது!

கழுகார் பதில்கள்

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை, சேலம் (மா).

‘மாஸ்டர்’ என்ன சொல்கிறார்?

`பன்ச் டயலாக்கெல்லாம் படத்தோட முடிச்சுக்கலாம். வெளியில சில வேலை நடக்கணும்னா ‘உம்’முனும் ‘கம்’முனும் இருந்தாத்தான் ‘ஜம்’முனு இருக்க முடியும்’னு சொல்றார்!

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

தேர்தல் வரும் நேரத்தில், சில அரசியல்வாதிகள் கட்சி தாவுகிறார்களே... இது சீட் கிடைக்கும் என்பதால்தான் என்பது சீட் கொடுக்கும் கட்சியின் தலைவர்களுக்குத் தெரியாதா?

தலைவர்களுக்குத் தெரியுமா, தெரியாதா என்பது இருக்கட்டும் கணேசன்... வாக்காளர்களுக்கு இது தெரிந்திருந்தால் போதும்... இப்படிக் கட்சி மாறுவது குறைந்துவிடும்!

@அர்ஷத், வேலூர் மாவட்டம்.

“பொங்கல் பரிசு ரூ.2,500 என்பது ஓர் ஆரம்பம்தான்” என்று பேசியிருக்கிறாரே முதல்வர் பழனிசாமி?

ஜனநாயகத்தையும் மக்களின் வாக்கையும் விலைபேசத் துணிந்துவிட்டார்போல!

ஜெயலலிதா
ஜெயலலிதா

சீனிவாசன், கண்டனூர், சிவகங்கை (மா).

ஜெயலலிதா இருந்திருந்தால், “இந்த ஐந்து வருடத்துக்குள் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவேன்” என்ற அவரது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியிருப்பார் தானே?

2011 தேர்தலில்கூடத்தான் ஜெயலலிதா வாக்குறுதி என்ற பெயரில் நீண்ட பட்டியலை வாசித்தார். அவையெல்லாம் நிறைவேற்றப் பட்டனவா என்ன! எந்தக் காலத்துல பாஸ் இருக்கீங்க... தேர்தல் வாக்குறுதிகள் ‘எல்லாமே’ நிறைவேற்றப்படும் என்று நம்புவது மூடநம்பிக்கைகளிலேயே மிகப்பெரிய மூடநம்பிக்கை!

ச.ந.தர்மலிங்கம், ஈரோடு.

ஊழலுக்கும் கொரோனாவுக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமை என்ன?

இரண்டுமே ஆபத்தான நோய்கள்; தொற்றக்கூடியவை; கை சுத்தமாக இருந்தால் நம்மை பாதிக்காது!

வேற்றுமை... கொரோனா சமீபத்தில் வந்தது. ஊழலோ காலங்காலமாக இருப்பது!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!