Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்

எடப்பாடியும் ஸ்டாலினும் இப்போது மக்களுடன் நெருக்கமாக இருப்பதுபோலவே, தேர்தலுக்குப் பிறகு இருந்தால் சரிதான்!

@மு.மதனகோபால், ஓசூர்.

ச.ம.க அமைதியாக இருக்கிறதே?

ஓ... சட்டமன்றக் கட்டடத்தைக் கேட்கறீங்களா மதனகோபால்? கொரோனாவுக்காகச் சில மாதங்கள் மூடிவைத்திருந்தார்கள்... அதனால், அமைதியாகத் தெரியலாம்!

பெ.பச்சையப்பன், கம்பம்.

‘சசிகலா சிறையிலிருந்து வருவதால் ஆட்சியிலும் கட்சியிலும் எந்த அதிர்வலைகளும் ஏற்படப்போவதில்லை’ என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறாரே?

அப்படித்தான் சொல்லச் சொன்னாங்களாம் பாஸ்!

கழுகார் பதில்கள்

@மூர்த்தி பாலகிருஷ்ணன், அனுப்பானடி.

கலைஞர், ஜெயலலிதாபோல் அல்லாமல் எடப்பாடி, ஸ்டாலின் இருவரும் மக்களுடன் நெருங்கிப் பேசி வாக்கு சேகரிப்பதை தொண்டர்கள், வாக்காளர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?

கலைஞரும் ஜெயலலிதாவுமே மக்களுடன் நெருங்கிச் சென்று பிரசாரம் செய்தவர்கள் தான். எடப்பாடியும் ஸ்டாலினும் இப்போது மக்களுடன் நெருக்கமாக இருப்பதுபோலவே, தேர்தலுக்குப் பிறகு இருந்தால் சரிதான்!

கழுகார் பதில்கள்

ந.சண்முகம், திருவண்ணாமலை.

‘தமிழகத்தின் ஆபிரஹாம் லிங்கனாகத் திகழ்கிறார் முதல்வர்’ என்கிறாரே பொள்ளாச்சி ஜெயராமன்?

ஃபிடல் காஸ்ட்ரோ, சே குவேரா என்று ஏகப்பட்ட ஃபர்னிச்சரை உடைச்சாச்சு... பாவம், ஆபிரஹாம் லிங்கன். அவரையும் விட்டுவைக்கலையா!

சீ.பாஸ்கர், நந்திவரம்-கூடுவாஞ்சேரி.

இன்றைய காலகட்டத்தில், தான் மட்டுமே அ.தி.மு.க-வின் தலைமை என்பதை எடப்பாடி நிரூபித்துவிட்டார்தானே?

அ.தி.மு.க-வின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்னமோ ஓ.பன்னீர்செல்வம்தான். ஆனால், தான்தான் தலைவர் என்று காட்டிக்கொள்ள எடப்பாடி மூச்சுமுட்ட ஓடிக்கொண்டுதான் இருக்கிறார்!

சாமிநாதன், திருப்பூர்.

சமூக ஊடகங்களை மாணவர்கள் பயன்படுத்துவதால் கெட்டுப்போகமாட்டார்களா?

ஒடிசாவில் சாய் அன்வேஷ் அம்ருதம் பிரதான் என்ற பள்ளி மாணவன், பேருந்தின் நேரம் மாற்றியமைக்கப்பட்டதால், தான் பள்ளிக்குச் செல்வதில் தாமதமாகிறது என்று ட்விட்டரில், ஒடிசாவின் நகரப் போக்குவரத்து துறைக்கு ட்வீட் செய்திருக்கிறார். அந்த மாணவனின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக புவனேஸ்வர் - லிங்கிப்பூர் வழித்தடத்தில் செல்லும் அந்தக் குறிப்பிட்ட பேருந்தின் நேரம் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதே சமூக ஊடகங்களில்தான் வக்கிரமான, ஆபாசமான வசைச் சொற்களும் பயன்படுத்தப்படுகின்றன. எந்த டெக்னாலஜியையும் நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே தீதும் நன்றும்!

கழுகார் பதில்கள்
Krishnakumar KB

மூர்த்தி, மதுரை.

`ஆண்மையற்றவர்கள்’, `சாக்கடை’ போன்ற குருமூர்த்தியின் வார்த்தைகளை அ.தி.மு.க-வின் தலைமையே கண்டுகொள்ளாமல் இருப்பதை மக்கள் எப்படிப் பார்ப்பார்கள்?

ஓனருக்கு பயந்து அ.தி.மு.க வாயைத் திறக்காமல் இருப்பதைப் புரிந்துகொள்கிற தொண்டர்கள்... ‘சசிகலா மீதான விமர்சனத்துக்கு, மயிலிறகால் வருடுவதைப்போல தினகரன் அறிக்கைவிடுகிறாரே’ என்று மனவருத்தத்துடன் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்!

த.சிவாஜி மூக்கையா, தர்காஸ்.

`வன்னியர் இட ஒதுக்கீடு பிரச்னை முடிந்தால்தான் அரசியல் கூட்டணி பற்றிப் பேச முடியும்’ என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருக்கிறாரே?

தேர்தல் நேரத்துல வாக்குவங்கியை காப்பாத்தணுமே பாஸ்!

எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.

‘என்ன பிரசாரம் செய்தாலும், குட்டிக்கரணம் அடித்தாலும் அ.தி.மு.க எதிர்க்கட்சியாகக்கூட வர முடியாது’ என்று பேசியிருக்கிறாரே மு.க.ஸ்டாலின்?

இப்படியெல்லாம் பேசினால்தானே தொண்டர்கள் உற்சாகம் அடைவாங்க!

@அ.ராஜப்பன், கருமத்தம்பட்டி.

சசிகலா விடுதலை நாள் நெருங்க நெருங்க ஒருவகை ‘த்ரில்’ உண்டாகிறது... உண்மைதானே?

யாருக்கு?

@பி.ஜெயப்பிரகாஷ், தேனி.

ராகுல் காந்தி தமிழ்நாட்டுக்கு அடுத்தடுத்து படையெடுப்பது, தி.மு.க-விடம் கெளரவமான தொகுதிகளைப் பெறுவதற்காகவா?!

கேள்வியுடன் சேர்த்து, பதிலையும் சொல்லிவிட்டீர்களே ஜெயப்பிரகாஷ்!

சற்குணம் மாரியப்பன், விழுப்புரம்.

நேர்மை யாரிடம் இருக்க வேண்டும்... அரசியல்வாதிகளிடமா, மக்களிடமா?

நேர்மையாக இருப்பதில் அரசியல்வாதி என்ன... மக்கள் என்ன... எல்லோரிடமும் இருப்பது அவசியம்!

கழுகார் பதில்கள்

ராமகிருஷ்ணன், டாடாபாத், கோவை.

அம்மா ஆட்சி, கலைஞர் ஆட்சி என்றெல்லாம் பேச்சுகள் வருகின்றன. உண்மையிலேயே தலைவர்களின் மறைவுக்குப் பிறகு அவர்களின் கனவை நிறைவேற்றியவர்கள் யாரும் உண்டா?

பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதியாக இருந்த கொராஸோன் அகினோவைச் சொல்லலாம். பிலிப்பைன்ஸில் சர்வாதிகார ஆட்சி நடத்திக்கொண்டிருந்த மார்கோஸுக்கு எதிராக, செல்வாக்கு பெற்ற தலைவரான பெனிக்னோ அகினோ என்பவர் ஜனநாயக ஆட்சியைக் கொண்டுவர விரும்பினார். மார்கோஸின் கைக்கூலிகள் அவரைச் சுட்டுக்கொன்றனர். 1985-ல் சர்வாதிகாரமாக அதிபர் தேர்தலில் ஜெயித்ததாக மார்கோஸ் அறிவித்துக்கொண்டபோது, மக்கள் கிளர்ந்தெழுந்து அவரை நாட்டைவிட்டே விரட்டினார்கள். பிறகு மக்களே பெனிக்னோ அகினோவின் மனைவியான, கொரோஸான் அகினோவை ஜனாதிபதிப் பதவியில் அமரவைத்தார்கள். ஜனநாயகத்துக்கு உயிர்கொடுத்து, அரசியல் கைதிகளை விடுவித்து, தீவிரவாதத்தைக் குறைத்து... கணவர் செய்ய நினைத்ததையெல்லாம் செய்துவிட்டு 1992-ம் ஆண்டு அரசியலிலிருந்தே ஒதுங்கிவிட்டார் கொரோஸான்!

சம்பத்குமாரி, பொன்மலை.

தமிழகத்தில் கைதிகள் கட்சி, அண்ணா எம்.ஜி.ஆர் ஜெயலலிதா திராவிட முன்னேற்றக் கழகம், அப்பா - அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்றெல்லாம் கட்சிகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளதே?

தேர்தல் நேரத்துலதானே வியாபாரம் சூடுபிடிக்கும்... அதனாலதான் கிடைச்ச பேர்ல எல்லாம் கட்சி ஆரம்பிக்கறாங்கபோல!

குமரேச பாண்டியன், கோபி.

‘அரசியலில் இருந்து விலகிவிடுகிறேன்’ என்று இன்று பலரும் சொல்கிறார்கள். அப்படி விலகியவர்கள் யாரும் இருக்கிறார்களா?

குற்ற உணர்ச்சியில் விலகியவர்கள் யாரும் இல்லை. கொள்வாரில்லாமல் கடையை மூடியவர்கள்தான் அதிகம்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!