Published:Updated:

கழுகார் பதில்கள்

 நாராயணசாமி - கிரண் பேடி
பிரீமியம் ஸ்டோரி
நாராயணசாமி - கிரண் பேடி

தேர்தல் பிரசாரம்லாம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி வண்டிக்குப் பெட்ரோல் போட வேண்டாமா!

கழுகார் பதில்கள்

தேர்தல் பிரசாரம்லாம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி வண்டிக்குப் பெட்ரோல் போட வேண்டாமா!

Published:Updated:
 நாராயணசாமி - கிரண் பேடி
பிரீமியம் ஸ்டோரி
நாராயணசாமி - கிரண் பேடி

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

பொங்கல் பண்டிகையை போலீஸாருடன் முதல்வர் வித்தியாசமாகக் கொண்டாடியிருக்கிறாரே?

தன்னை விவசாயி என்று சொல்லிக்கொள்பவர், தேர்தல் நேரத்தில் போலீஸுடன் பொங்கலைக் கொண்டாடியதன் மூலம், நாட்டுக்கு எப்படி விவசாயி முக்கியமோ அதேபோல, தேர்தலுக்கு போலீஸ் முக்கியம் என்று உணர்த்துகிறார்போல!

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

எந்தக் கட்சி அதிக பயத்தில் இருப்பதாக நினைக்கிறீர்கள்?

தேர்தல் வந்தால், எந்தக் கட்சிக்குத்தான் பயம் இருக்காது!?

எம்.ஃபாரூக், காயல்பட்டினம்.

பிரதமர் நரேந்திர மோடியின் தாடியும் மீசையும் நாளுக்கு நாள் பெரிதாகிக்கொண்டே வருகிறதே?


இந்தியாவில் அதுவாவது வளரட்டுமே ஃபாரூக்... விடுங்களேன்!

@ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கும் கவர்னர் கிரண் பேடிக்கும் நடக்கும் பனிப்போர் எப்போது முற்றுப்பெறும்?

கிரண் பேடி பா.ஜ.க-வாகவும், நாராயணசாமி காங்கிரஸாகவும் இருப்பதைத் தவிர்த்துவிட்டு கிரண் பேடி ஆளுநராகவும், நாராயணசாமி முதல்வராகவும் பொறுப்புணர்ந்து செயல்படத் தொடங்கினால் இந்தப் பனிப்போர் முற்றுப்பெறும். அதிலும் ஆளுநர், மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடாமல் இருந்தால் மக்கள் வாழ்வு மேலும் வளம்பெறும்.

கழுகார் பதில்கள்

எம்.சண்முகம், கொங்கணாபுரம்.

`கிராமசபை என்ற பெயரில், தி.மு.க கூட்டம் சேர்க்கிறது’ என்கிறாரே எடப்பாடி பழனிசாமி?

இந்த... ரத்தம் - தக்காளிச் சட்னி காமெடி உங்களுக்கும் தெரியும்தானே!

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14.

இன்னமும் பா.ம.க-வும் தே.மு.தி.க-வும் சட்டமன்றத் தேர்தல் பரப்புரைகளை ஆரம்பிக்காததன் காரணம் என்ன?

அவசரப்படறீங்களே மனோகர்... தேர்தல் பிரசாரம்லாம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி வண்டிக்குப் பெட்ரோல் போட வேண்டாமா!

இரா.ரெங்கசாமி, வடுகப்பட்டி.

இன்றுள்ள கட்சிகளில் சுவாரஸ்யமான அரசியல் கட்சி எது?

மீம் கிரியேட்டர்களுக்கு கன்டென்ட் கொடுப்பதில், இன்றைக்கு இருக்கும் எந்தக் கட்சியும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை!

கணேசன், பொன்னியம்மன்மேடு, சென்னை.

‘தமிழகத்தில் தாமரை மலரும். மற்ற மாநிலங்களைப்போல தமிழ் மண்ணையும் மாற்றுவோம்’ என்ற ஜெ.பி.நட்டாவின் நம்பிக்கை?

நம்பிக்கைதானே பாஸ் வாழ்க்கை!

@ஆர்.சுந்தரராஜன், சிதம்பரம்.

“அ.தி.மு.க-வின் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்கும்விதமாக, ஜோ பைடன் இரண்டு விரல்களைக் காட்டுகிறார்” என்கிறாரே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?

மக்கள் பணிகளைவிட்டுவிட்டு இப்படி எதற்கும் உதவாத கோமாளித்தனமான பேச்சுகளால், மக்களின் வெறுப்புணர்வையே இவர்கள் சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்கள்!

சீர்காழி சாமா, ஸ்ரீரங்கம்.

நடிகர் வடிவேலு அரசியலுக்கு வருவாரா?

அவரது முகபாவனைகளைக் கொண்டு உருவாக்கப்படும் மீம்ஸ்களால், நம் அரசியல்வாதிகள் புரட்டியெடுக்கப்படுவதைத்தான் அன்றாடம் பார்க்கிறோமே... தனியாக வேறு அரசியலுக்கு வர வேண்டுமா என்ன?

கழுகார் பதில்கள்

@டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

சசிகலாவை திடீரென முதல்வர் பழனிச்சாமி சந்திக்க நேர்ந்தால், இருவரும் என்ன பேசிக்கொள்வார்கள்?

மல... நல்லாருக்கியா மல!

கிடையூர் மாணிக்கம், சங்ககிரி, சேலம்.

`அ.தி.மு.க-விலுள்ள அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பிரச்னைகளை, பேசித் தீர்த்துக்கொள்வோம்’ என்று ஓ.பி.எஸ் கூறியிருக்கிறாரே?


அண்ணன் தம்பி பிரச்னைகள் அவர்களை மட்டும் பாதித்தால் பரவாயில்லை... மக்களையும் பாதிக்கும்போதுதான் விமர்சனங்களுக்கு உள்ளாகின்றன!

@மணிகண்டன், கூடுவாஞ்சேரி.

சொந்தப் பணத்தில் சூனியம் வைத்துக்கொள்ளும் அரசியல்வாதிகள் யாரும் உண்டா?

சொந்தப் பணம்லாம் எங்க பாஸ்? எல்லாம் மக்கள் பணம்தான்!

மூர்த்தி பாலகிருஷ்ணன், அனுப்பானடி, மதுரை.

அதிகாரத்தில் இருந்த சசிகலா... அதிகாரத்தில் இல்லாத சசிகலா... என்ன வித்தியாசம்?

அவர் எப்போது அதிகாரத்தில் இருந்தார்? ‘அதிகாரத்துடன்’தானே இருந்தார்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!