Published:Updated:

கழுகார் பதில்கள்

சிருஷ்டி கோஸ்வாமி
பிரீமியம் ஸ்டோரி
News
சிருஷ்டி கோஸ்வாமி

அப்படியே அப்போலோ உண்மைகளையும், கூவத்தூர் உண்மைகளையும் கருப்பண்ணனே கேட்டுச் சொன்னால் நன்றாக இருக்கும்!

ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்.

மு.கருணாநிதி - மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின் - உதயநிதி ஸ்டாலின்
மு.கருணாநிதி - கனிமொழி
குமரி அனந்தன் - தமிழிசை சௌந்தர்ராஜன்
ஈ.வி.கே.சம்பத் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
ஜி.கே.மூப்பனார் - ஜி.கே.வாசன்
ப.சிதம்பரம் - கார்த்தி சிதம்பரம்
ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ்
இவர்களில் அப்பாவுக்குத் தப்பாமல் அரசியல் செய்வது யார்?

அப்பாக்களை விட்டுவிடுவோம். பிள்ளைகளின் கதை ‘ஆலமரம் தெரியுமான்னு கேட்டா வேப்பமரம் மாதிரி வேலியில படர்ந்திருக்குமே... அதானே?’ என்று கேட்பவர்களாகத்தான் இருக்கிறார்கள்!

@சீ.பாஸ்கர், நந்திவரம்-கூடுவாஞ்சேரி.

``என்னை யாரும் விலை கொடுத்து வாங்கவும் முடியாது, அடிமையாக்கவும் முடியாது’’ என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறாரே?

இந்த ஸ்டேட்மென்ட்டையே பர்மிஷன் வாங்கிட்டுத்தான் பேசினாராமே!

லட்சுமி செங்குட்டுவன், வேலூர்.

`சசிகலாவுக்கு இடமில்லை’ என்று அ.தி.மு.க அமைச்சர்கள் சிலர் கூறிக்கொண்டே இருக்கிறார்களே... அப்படி அவர்கள் சொல்ல என்னதான் காரணம்?

வண்டி இப்பதான் கொஞ்சம் ஓட ஆரம்பிச்சிருக்கு... புதுசா வண்டி ஓட்டப் பழகினவங்க, கொஞ்ச நாளைக்கு யாரையும் டபுள்ஸ் ஏத்திக்க மாட்டாங்கல்ல... அப்படி ஒரு பயம்தான்!

கார்த்திக், பள்ளிபாளையம்.

சமீபத்திய பாராட்டு யாருக்கு?

உத்தரகாண்ட் அரசுக்கு. உத்தரகாண்ட் மாநிலத்தில், கல்லூரி மூன்றாமாண்டு படிக்கும் 19 வயது மாணவி சிருஷ்டி கோஸ்வாமி, அம்மாநிலத்தின் ஒரு நாள் முதல்வராக ஜனவரி 24 அன்று செயல்பட்டார். சர்வதேசப் பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, அம்மாநில அரசு இந்த வாய்ப்பை அளித்திருக்கிறது. அம்மாநிலக் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நடத்திவரும் குழந்தைகள் சட்டசபையில், 2018-ம் ஆண்டிலிருந்து முதல்வராக இருப்பவர் இந்த சிருஷ்டி என்பது குறிப்பிடத்தக்கது.

கழுகார் பதில்கள்

@தாமஸ் மனோகரன், உழவர்கரை, புதுச்சேரி.

ரஜினி ரசிகர்கள், கமலை ஆதரித்து ஓட்டுப் போடுவார்களா?

45 வருடங்களுக்கும் மேலாக, ரஜினி ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சி ரஜினி படம் பார்த்தால், அடுத்த காட்சியே கமல் படம் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறார்கள்!

குருபிரசாத், தஞ்சாவூர்.

மேடையில் உளறிக்கொட்டும் அமைச்சர்கள், நேரில் எப்படிப் பேசிக்கொள்வார்கள்?

“கல்யாண வீட்லயே காலை நீட்டி அழறவங்க எழவு வீட்ல சும்மாவா இருப்பாங்க?’ங்கற கதையா, மக்கள் முன்னிலையிலேயே உளறுகிறவர்கள், யாரும் பார்க்காத பொழுதுகளில் இரட்டிப்பாகத்தானே உளறிக் கொண்டிருப்பார்கள்!

க.சு.ஸ.மழாஹிரி, காயல்பட்டினம்.

“அடுத்து வரும் தேர்தலில், நம் கட்சி வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்காவிட்டால், நான் இந்த மேடையிலேயே தற்கொலை செய்துகொள்வேன்” என்று தி.மு.க-வின் ஜெகத்ரட்சகன் பேசியது குறித்து..?

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவும் `தி.மு.க ஆட்சிக்கு வந்து, நீட் தேர்வை ரத்து செய்தால் நான் தற்கொலை செய்துகொள்கிறேன்” என்று பேசியிருக்கிறார். `தோல்விக்குத் தற்கொலை தீர்வல்ல’ என்று உலகின் பல அமைப்புகளும் சொல்லி, இளம் வயதினரை நெறிப்படுத்திக் கொண்டிருக்கும் போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பாகப் பேச வேண்டியவர்களே இப்படிப் பேசுவது வன்மையான கண்டனத்துக்குரியது. உருப்படியாக எதுவும் பேசத் தெரியாதவர்கள்தான், தொண்டர்களை உற்சாகப்படுத்த இப்படி முதிர்ச்சியற்ற பேச்சுகளில் ஈடுபடுகிறார்கள்.

ராஜா ரகுராம், பெங்களூர்.

தேர்தலுக்காக மதுக்கடைகளை மூடுவதெல்லாம் சமீபத்தில் வந்த விதிமுறைகள்தானே?

1951-ல் நடந்த முதல் தேர்தலிலேயே, மதுவால் நிறைய விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறவே, அடுத்து 1957-ல் நடந்த தேர்தலில் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என்று தேர்தல் நடத்தை விதிமுறையைக் கொண்டுவந்தார் அப்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் சுகுமார் சென்.

கழுகார் பதில்கள்

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

உதயநிதி, பேசுவதற்குத் தன் தந்தை ஸ்டாலினிடம் பயிற்சி பெற்றிருக்கலாமே?

ஆக... இதைத்தான் வஞ்சப் புகழ்ச்சி அணினு சொல்வாங்க மிக்கேல்ராஜ்!

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

``தே.மு.தி.க இடம்பெறும் கூட்டணிதான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்’’ என்கிறாரே, பிரேமலதா விஜயகாந்த்?

இதுநாள் வரை ஆட்சி அமைக்கும் கூட்டணியில்தான், தங்கள் கட்சி இடம் பெற்றிருந்தது என்பதைச் சொல்கிறார்போல!

ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.

வேலைக் கையில் பிடித்துவிட்டாரே மு.க.ஸ்டாலின்?

தேர்தல் காலமாச்சே நடராஜன்... நாளுக்கொரு நாடகத்தில் ஆளுக்கொரு வேடம். அதில் நேரத்துக்கொரு ப்ராப்பர்ட்டி இருக்குமல்லவா!

எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.

“உண்மையைப் பேசுவதால்தான் முதல்வர் பழனிசாமியை அனைவரும் விரும்புகிறார்கள்...” என்று பேசியிருக்கிறாரே அமைச்சர் கருப்பண்ணன்?

அப்படியே அப்போலோ உண்மைகளையும், கூவத்தூர் உண்மைகளையும் கருப்பண்ணனே கேட்டுச் சொன்னால் நன்றாக இருக்கும்!

பி.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர்.

‘ஓ.பி.எஸ்’ ஜல்லிக்கட்டு நாயகரா... இல்லை இ.பி.எஸ்ஸுடன் மல்லுக்கட்டும் நாயகரா?

என்னது... ஓ.பி.எஸ் ஜல்லிக்கட்டு நாயகர் என்றால், லட்சக்கணக்கில் இரவு பகல் பாராமல் போராடிய இளைஞர்களை என்ன சொல்வீர்கள்?

கழுகார் பதில்கள்

@பாலசுப்ரமணியன், குன்னூர்.

மேற்கு வங்கத்தில் மோடி கலந்துகொண்ட கூட்டத்தில், மம்தா பானர்ஜியின் கோபத்தைப் பார்த்ததும் என்ன நினைத்தீர்கள்?

சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாள் விழாவையொட்டி, கொல்கத்தா விக்டோரியா மெமோரியலில் நடந்த நிகழ்வில், மோடியுடன் கலந்துகொண்டார் மம்தா. அங்கிருந்த மோடியின் ஆதரவாளர்கள், மம்தாவை எரிச்சலடையச் செய்யும்வண்ணம் கூச்சல் எழுப்பியதால் கோபமடைந்த மம்தா, “என்னை அழைத்து அவமானப்படுத்தாதீர்கள்” என்று மட்டும் பேசிவிட்டு மேடையிலிருந்து இறங்கினார். பிரதமரின் கூட்டமாக இருந்தாலும், தன்மானம் கேள்விக்குள்ளாகும்போது சீற்றம்கொண்டதன் மூலம், மற்ற மாநில முதல்வர்களுக்கும் பாடம் கற்பித்திருக்கிறார்!

இல.கண்ணன், நங்கவள்ளி.

தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் என்னென்ன காட்சிகள் காணலாம் கழுகாரே?

உங்களை மாதிரியே ‘இன்னும் என்னென்ன கொடுமையையெல்லாம் பார்க்கணுமோ’ங்கற அதே பயம்தான் நமக்கும் ஹெவியா இருக்கு கண்ணன்!

ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

“தேர்தலுக்கு முன் தி.மு.க கூட்டணி உடையும்” என பா.ஜ.க மாநிலத் தலைவர் முருகன் கூறுகிறாரே... ஏதாவது மாஸ்டர் பிளான் அவர்களிடம் இருக்கிறதா?

அவர்களின் மாஸ்டரிடம் ஏதாவது பிளான் இருக்கலாம்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!