Published:Updated:

கழுகார் பதில்கள்

வாக்குறுதி கொடுக்கலாம். ஆனால் அதை நிறைவேற்ற அழுத்தமான திட்டங்கள் தேவை!

பிரீமியம் ஸ்டோரி

த.சிவாஜி மூக்கையா, தர்காஸ்.

திராவிடக் கட்சிகளுக்குரிய பொதுவான பலம் எது?

சமூகநீதியை ஆழமாக விதைத்த அதன் கடந்தகால வரலாறு!

@சரவணன், சென்னை-2.

‘தமிழக அரசின் மீதிருக்கும் கடன்சுமையைக் குறைக்கப் பாடுபடுவேன்’ என்று எந்தக் கட்சியாவது வாக்குறுதி தர முடியுமா?

வாக்குறுதி கொடுக்கலாம். ஆனால் அதை நிறைவேற்ற அழுத்தமான திட்டங்கள் தேவை!

கழுகார் பதில்கள்

@எல்.ஆர்.சுந்தரராஜன், மடிப்பாக்கம்.

அ.தி.மு.க-வை உடைக்க, சில புல்லுருவிகள் சதி செய்வதாகச் சொல்லும் முதல்வர் இ.பி.எஸ், அந்தப் புல்லுருவிகளின் பெயரைக் கூறாதது ஏனோ?

கூடவே அமர்ந்திருப்பவர்களை நெளியவைக்க வேண்டாம் என்ற மேடை நாகரிகம் காரணமாக இருக்கலாம்.

@கே.மந்திரமூர்த்தி, விழுப்புரம்.

ரசிகன், தொண்டனாகும்போது என்ன நடக்கும்?

ரசிகனுக்குப் பெரிதாக எந்த எதிர்பார்ப்பும் இருக்காது. ஆனால் தொண்டனுக்கு ஏதாவது எதிர்பார்ப்பு இருந்தே தீரும்.

சொக்கலிங்கம், மதுரை.

தேர்தல் வெற்றி எதைப் பொறுத்தது?

கடந்தகாலச் செயல்பாடு, எதிர்காலத் திட்டம், தேர்தல் அறிக்கை... இவை மூன்றும்தான் நேர்மையான எதிர்பார்ப்பாக இருக்க முடியும். வெற்றியும் இதைப் பொறுத்துத்தான் சாத்தியப்பட வேண்டும். ஆனால், இவற்றைவிடுத்து ஸ்வீட் பாக்ஸ்களும், டோக்கன்களும் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பது வேதனைக்குரியது.

ராம்தாஸ் அத்வாலே
ராம்தாஸ் அத்வாலே

@வி.பாலசுப்பிரமணியன், மன்னார்குடி.

இந்த ஆண்டின் சிறந்த விஞ்ஞானி விருது பெற, செல்லூர் ராஜூவுடன் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கடும் போட்டி போடுகிறாரே..?

இல்லையில்லை... செல்லூர் ராஜூவையே மிஞ்சிவிட்டார். “கோ கொரோனா என்று கோஷமிட்டேன். கொரோனா போய்விட்டது. இப்போது வந்திருக்கும் உருமாறிய கொரோனா வைரஸுக்கு ‘நோ கொரோனா நோ கொரோனா’ என்று கோஷமிடுங்கள்” என்று சொல்லியிருக்கிறார். இப்படியெல்லாம் யோசிப்பதற்கு ஐந்து நபர்கள்கொண்ட குழுவையே வைத்திருப்பார்போல!

@ம.ரம்யா ராகவ், வெள்ளக்கோவில்.

வருகிற புத்தாண்டு எப்படிப்பட்டதாக இருக்கும்? பாசிட்டிவ்வாக புத்தாண்டுக்கு ஒரு வாழ்த்து ப்ளீஸ்!

அடுத்த நொடி ஆச்சர்யம்தான் இந்த வாழ்வின் ஆகப்பெரிய சுவாரஸ்யம்! காலம் என்பது, இயற்கை நமக்கு அனுப்பிவைக்கும் விசித்திரமான பொக்கிஷப் பெட்டி. அதுவாகத் திறந்துகொள்ளாதவரை அதை யாரும் அறிந்துகொள்ள முடியாது. 2020-ம் ஆண்டின் கசப்பு நீங்கும்படியாக, நிறைய மகிழ்ச்சியான விஷயங்களோடு, 2021-ம் ஆண்டு எனும் பரிசை இயற்கை நமக்கு வழங்கும் என்பதை உற்சாகமாக நம்பலாம்... எல்லோரும் இன்புற்றிருக்க... ஹேப்பி நியூ இயர் ரம்யா ராகவ்!

@எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.

“சாதிப்பெயர்கள்கொண்ட ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டுவது தண்டனைக்குரியது” என உத்தரப்பிரதேசப் போக்குவரத்துத்துறை எச்சரித்துள்ளதே..?

பெயர்களில் சாதியொட்டை அறவே ஒழித்த நாம், இவர்களைப் பாராட்டி வரவேற்போம்! அதேசமயம் நம் மாநிலத்திலும் சில மாவட்டங்களில் கடைகளில், வாகனங்களில் நிற அடையாளங்களாகவும் சாதி ஒட்டிக்கொண்டு திரிவதையும் ஒழிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

@பாண்டி முத்துராஜ்

அ.தி.மு.க-வில் சில நாள்களுக்கு முன்னர், எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்தார்கள். இப்போது பா.ஜ.க-தான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என்கிறாரே அமைச்சர் செல்லூர் ராஜூ?

“அத உங்க ஓனரச் சொல்லச் சொல்லுய்யா” என்ற ‘பருத்திவீரன்’ வசனம்தான் நினைவுக்கு வருகிறது.

லட்சுமி சுந்தரம், வேலூர், நாமக்கல்.

உங்கள் சமீபத்திய பாராட்டு யாருக்கு?

21 வயதில் திருவனந்தபுரத்தின் மாநகராட்சி மேயராகி, `இந்தியாவின் இளம் மேயர்’ என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருக்கும் ஆர்யா ராஜேந்திரனுக்கு. பாராட்டு எதற்காகவென்றால், “படிப்பை எக்காரணம் கொண்டும் கைவிட மாட்டேன். இந்த மேயர் பொறுப்போடு படிப்பைத் தொடர விருக்கிறேன்” என்று அவர் அறிவித்ததற்கு!

ஆர்யா ராஜேந்திரன்
ஆர்யா ராஜேந்திரன்

கு.ப.இரகுநாதன், பூவிருந்தவல்லி.

`அ.தி.மு.க-வில் தொண்டனும் முதல்வராகலாம்’ என்று பேசும் முதல்வர் பழனிச்சாமி, `இனி எனக்கு முதல்வர் பதவி தேவையில்லை’ என்று ஏன் பேசவில்லை?

ஏதோ மேடையில் உணர்ச்சிவசப்பட்டு ஒரு வார்த்தை சொன்னதற்காக, அவர் அடிமடியிலயே கைவெக்கறீங்களே பாஸ்!

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

கனிமொழி தி.மு.க தலைவராக வர வாய்ப்பிருக்கிறதா?

அதற்கான தகுதியிருப்பதைத் தாமாக உணர்ந்து அர்ப்பணிப்புடன் பணிபுரிந்தால், யார் வேண்டுமானாலும் தலைவராகலாம் என்பதற்குப் பல உதாரணங்கள் உள்ளன. கனிமொழிக்கும் அது பொருந்தும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு