Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்

பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி என்று ஏற்கெனவே ‘தள்ளுபடி’யில்தானே ஓடிக்கொண்டிருக்கிறது.

கழுகார் பதில்கள்

பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி என்று ஏற்கெனவே ‘தள்ளுபடி’யில்தானே ஓடிக்கொண்டிருக்கிறது.

Published:Updated:
கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்

@ஆர்.சுந்தரராஜன், சிதம்பரம், கடலூர் மாவட்டம்.

‘இணையவழிக் கல்விமுறை, வகுப்பறைக் கல்விக்கு மாற்று இல்லை. நிழல் நிஜமாகிவிடாது’ என்கிறாரே தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்?

‘நிழல், நிஜம்’ என்றெல்லாம் குழப்புவது ஆபத்தான போக்கு. இவர்கூடத்தான் அடிக்கடி இணையத்தில் தோன்றி அனைத்துக்கட்சிக் கூட்டம், மாவட்டச் செயலாளர்கள் கூட்டமெல்லாம் நடத்துகிறார். அவை எல்லாமும் நிழல் நடவடிக்கைகள்தானா... ‘தொழில்நுட்ப வளர்ச்சி சாதித்துக்கொண்டிருக்கிறது’ என்று சந்தோஷப்பட வேண்டிய சூழலில், சந்தேகப்பட்டுக்கொண்டிருக்கக் கூடாது. குழந்தைகளுக்குக் கல்வியுடனான தொடர்பு அறவே அற்றுப்போகாமல் பார்த்துக் கொண்டிருப்பதே இணையவழிக் கல்விதான். இன்னும் இரண்டு ஆண்டுகள்வரைகூட கொரோனா நீடிக்கலாம். அப்போது குழந்தைகளின் எதிர்காலம் என்னவாவது? மாற்றுவழிகளைச் சிந்தித்துத்தானே ஆக வேண்டும். அதேசமயம், இதைவைத்து பணம் பறிக்கும் வேலையைக் கண்டிப்பது மட்டுமல்ல, தடுக்கவும் வேண்டும். வசதியற்ற குழந்தைகளுக்கும் இதையெல்லாம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமே இல்லை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

@பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை, சேலம் மாவட்டம்.

அந்த 117 பேரில், ‘இவர் எப்படியும் சமாளித்துவிடுவார்’ என்று எடப்பாடியாரை மட்டும் எப்படி சசிகலாவால் சரியாக கணிக்க முடிந்தது?

அதை விடுங்கள். ‘நம்மையே ஏப்பம் விட்டுவிடுவார்’ என்பதை கணிக்காமல் விட்டுவிட்டாரே... அதைப் பற்றி யோசியுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

@கார்த்திக் திவ்யா, அரியலூர்.

‘கோவிட் 19’ வைரஸிடமிருந்து தப்பிக்க, எந்தக் கடவுளை நான் வணங்க வேண்டும்?

சொந்தக் கடவுளை வணங்குங்கள். அதாவது...

‘உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம்,

வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்,

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கு’ என்கிறார் திருமந்திரத்தில் திருமூலர்.

ஆக, உங்களுக்குள்ளேயே தேடிக் கண்டுபிடியுங்கள்!

இதற்காக வெளியில் தேடிச் சென்றால்... கொரோனாவைப் பரப்பவோ, வாங்கிவரவோ வாய்ப்பிருக்கிறது ஜாக்கிரதை!

@வாசுதேவன், பெங்களூரு, கர்நாடக மாநிலம்.

இந்த வருடம் ஆடித்தள்ளுபடி இருக்குமா?

பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி என்று ஏற்கெனவே ‘தள்ளுபடி’யில்தானே ஓடிக்கொண்டிருக்கிறது.

@ப.தயாநிதி, ஆதம்பாக்கம், சென்னை-88.

தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் மற்றும் அவை தொடர்பான வழக்குகள் என அனைத்தையும் கொரோனா பரபரப்பில் மக்கள் மறந்து விட்டிருப்பார்கள்தானே?

கொரோனா இருந்தாலும் ஆயிரம் பொன்.... கொரோனா இறந்தாலும் ஆயிரம் பொன்!

@நெல்லை குரலோன், பொட்டல்புதூர்.

கொரோனா காலத்தில் அரசு செய்யத் தவறியதாக கழுகார் நினைப்பது என்ன?

நிறையவே இருக்கின்றன. முக்கியமான விஷயம்... விருப்பப்படும் அனைவரையும் அவரவர் சொந்த ஊர்களுக்கு மார்ச் 24-ம் தேதியன்று முதல் ஊரடங்கு ஆரம்பித்தபோதே அனுப்பி வைத்திருக்க வேண்டும். ரயில் மற்றும் பேருந்துகளை இலவசமாக இயக்கி, பாஸ் கொடுத்து ஒரு வாரகால அவகாசத்தில் இதைச் செய்து முடித்திருக்கலாம். அதேபோல, வெளிநாடுகளிலிருந்து திரும்பி வரும் இந்தியர்களுக்கும் கெடு கொடுத்து, குறிப்பிட்ட நாள்களுக்குள் இறுதி செய்திருக்கலாம். வெளிநாட்டவர்களை பிப்ரவரி மாதமே முற்றாகத் தடை செய்திருக்கலாம். காலம் கடந்துவிட்டாலும்கூட உள்நாட்டுக்குள் தாங்கள் பாதுகாப்பாக உணரும் இடங்களுக்குச் செல்ல விரும்பும் மக்களை, தக்கப் பரிசோதனைகளுடனும், உரிய நிபந்தனைகளுடனும் அனுப்பிவைக்கலாம். இது பின்யோசனையே. ஆனால், ‘மேற்கொண்டும் நிலைமை கைமீறும்’ என்பதைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், முன்யோசனையே!

@நெல்லை குரலோன், பொட்டல்புதூர், தென்காசி மாவட்டம்.

‘அறியாமையைவிட ஆணவம் ஆபத்து என்பதை இந்த ஊரடங்கு நிரூபித்துள்ளது’ என்கிறாரே ராகுல்?

கழுகார் பதில்கள்

‘ராணுவத்தால் அழிந்தவர்களைவிட ஆணவத்தால் அழிந்தவர்கள் அதிகம்’ என்று ‘நகைச்சுவை கடல்’ (இது நாம கொடுத்த பட்டமாக்கும்) சந்தானமும் கூறியிருக்கிறாரே!

@உஷாதேவி, சென்னை-24.

பாகிஸ்தான், சீனா, கொரோனா, வெட்டுக்கிளி, நேபாளம்... நம்ம நாட்டு எதிர்ப்பு சக்திக்கு என்னதான் ஆச்சு?

அனைத்தையும் எதிர்த்து நிற்பதிலும், எதிர்கொள்வதிலும் இதுவரை எந்தப் பிரச்னையும் இல்லையே. ஆக, எதிர்ப்பு சக்தி பலமாகவேதான் இருக்கிறது, இதுவரையிலும். ‘நம்மை எதிர்க்கும் சக்திகளுக்கு என்னவாச்சு?’ என்றுதான் நாம் தீவிரமாக ஆராய்ச்சி செய்ய வேண்டிய நிலையிலிருக்கிறோம்.

@ராம்குமார்.

தீர்ப்பு சொல்ல வேண்டிய நீதிபதிகள், பெரும்பாலும் கருத்துகளாகவே சொல்கிறார்களே?

தீர்ப்புகளைத்தான் பெரும்பாலும் யாரும் மதிப்பதில்லையே!

@மைதிலி கோகுலகிருஷ்ணன், திருவாரூர்.

தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து வந்தவர்களையெல்லாம் வாழவைக்கிறது சென்னை. இன்று, சென்னையிலிருந்து செல்பவர்களையெல்லாம் பிறபகுதிகளில் தடுக்கிறார்களே?

`சென்னை’ என்பது நேற்றைய கதை. மதுரை, தேனி, கோவை, வேலூர், திருநெல்வேலி என்று தற்போது பட்டியல் நீள ஆரம்பித்துவிட்டது. இங்கெல்லாம் கொரோனா அதிகமாக இருக்கலாம். அதற்காக, இங்கிருந்து வருபவர்களுக் கெல்லாம் ‘கொரோனா’ இருக்கும் என்று தடுக்கப் பார்ப்பது தேவையற்றதே. ‘குழந்தைகள் கடத்தல்’ என்கிற செய்தி பரவ ஆரம்பித்ததுமே, ஊருக்கு அறிமுகமில்லாதவர் களையும், புதிதாக வருபவர்களையும் கிராமப்புறங்களில் சந்தேகப்படுவார்கள். அதுதான் தற்போதும் நடக்கிறது. மக்களுக்குத் தெளிவை உண்டாக்க வேண்டிய கடமையிலிருந்து அரசு தவறிக் கொண்டிருக்கிறது. இப்போதே தடுத்து நிறுத்தா விட்டால், இது தமிழகம் முழுக்க தீயாகப் பரவி, சமூகப் பிரச்னைகளைக் கொழுந்துவிடச் செய்துவிடும்.

@பி.அசோகன், கொளப்பலூர், ஈரோடு மாவட்டம்.

இவ்வளவு கொரோனா மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில் சென்னையில் இருக்க பயமாக இல்லையா?

நாங்களெல்லாம் சாக்கடைக் குள்ளேயே ஒரு மாமாங்கம் வீடுகட்டி வாழ்ந்த வித்தைக்காரர் களாக்கும்!

@வி.சந்திரசேகர், தி.நகர், சென்னை-17.

‘மாநிலங்களிலுள்ள வேலை வாய்ப்புகள் நூறு சதவிகிதமும் அந்தந்த மாநில மக்களுக்கே...’ என்று சட்டம் போட இந்த அரசுக்கு எது தடையாக உள்ளது?

சுயநலத்தோடு மத்திய அரசிடம் எல்லா காலத்திலும் மண்டியிட்டுக்கிடக்கும் அரசியல்வாதிகள்தான் எப்போதுமே தடை. ‘இந்தியர்கள் அனைவரும் இந்தியா முழுக்க எந்த மாநில அரசின் வேலையையும் பெற முடியும்’ என்கிற சமநீதிச் சூழல் இல்லவே இல்லை. அப்படியிருக்க, தமிழகத்தில் மட்டும் வெளி மாநிலத்தவரை ஏன் அனுமதிக்க வேண்டும். அப்படியே, ‘அனைத்து மாநிலங்களிலும் வேலைக்குச் செல்ல முடியும்’ என்று விதிகள் திருத்தப்பட்டாலும், அதை நம்பக்கூடிய சூழலும் இல்லை. இந்தியாவுக்கே பொதுவான மத்திய அரசின் வங்கித்துறை, ரயில்வேதுறை போன்றவற்றில் வட மாநிலத்தவர்களுக்குத் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படுவதாக வரும் குற்றச்சாட்டுகளை எளிதில் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. இதுவே இப்படியிருக்கும் போது, ஒவ்வொரு மாநில அரசும் நியாயத்தோடுதான் நடந்துகொள்ளும் என்பதை எப்படி உறுதிப்படுத்த முடியும்.

@செ.அ.ஷாதலி, கோனுழாம்பள்ளம்.

இ-பாஸ் பெறுவதற்கு பெரிதும் சிரமப்பட வேண்டியுள்ளதே?

உண்மையான காரணத்தைச் சொல்லி வாங்குவதற்குத்தானே!

@‘நன்னிலம்’ இளங்கோவன், மயிலாடுதுறை.

‘இப்போது நடப்பது கலிகாலம். இதில் கெட்டவர்களுக்குத்தான் வாழ்க்கை’ என்று கிராமங்களில் பேசிக்கொள்கிறார்களே?

இது கலிகாலமல்ல... கிலிகாலம். நல்லவர்கள், கெட்டவர்கள் என அனைவருமே கிலி பிடித்துத்தான் கிடக்கிறார்கள்.

@ந.அய்யப்பசாமி, தேவாரம், தேனி மாவட்டம்.

‘கொரோனா கட்டுக்குள் வருவது அந்தச் சாமிக்கு மட்டுமே தெரியும்’ எனக் கூறுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்படியானால் இத்தனை நாள்களாக கொரோனா பெயரைச் சொல்லி எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள்?

அதெல்லாம் இந்தச் சாமியின் ‘கட்டுக்குள் வரும்’ விஷயங்களே!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,

757, அண்ணா சாலை,

சென்னை - 600 002 kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism