Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்

ஊற்றிக் கொடுப்பவர்களே இதைச் சொல்லக் கூடாதுதான்!

கழுகார் பதில்கள்

ஊற்றிக் கொடுப்பவர்களே இதைச் சொல்லக் கூடாதுதான்!

Published:Updated:
கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்

@அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை, நாகப்பட்டினம் மாவட்டம்.

இனி, தமிழ் சினிமாவின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

தமிழ் சினிமாவின் எதிர்காலம் மட்டுமல்ல... தமிழர்களின் எதிர்காலமும் சவால்கள் நிறைந்ததாகவே இருக்கும். ஆனாலும், ‘சாதிப்போம்’ என்கிற நம்பிக்கையுடன் நாள்களை நகர்த்துவோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

@தாமரை நிலவன், கீழ்க்கட்டளை, சென்னை-117.

சசிகலா விடுதலை பற்றி வரும் செய்திகள் தொடர்பாக முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ் இருவரும் கருத்து கூறாமல் இருப்பது ஏன்?

சசிகலா - எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம்
சசிகலா - எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம்

என்ன இருந்தாலும், ஒரு காலத்தில் இருவருக்குமே ‘சின்ன முதலாளியம்மா’வாயிற்றே! அந்தச் சந்தோஷத்தில் (?!) தொண்டை அடைத்துக்கொண்டிருக்கக்கூடும்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

@ஜெ.ஜானி, போரூர், சென்னை-116.

‘‘கொரோனா என்றாலே மரணம்தான் என்று பயப்படத் தேவையில்லை’’ என்கிறாரே தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்னன்?

உண்மைதான். புள்ளிவிவரங்களும்கூட அதைத்தானே காட்டுகின்றன.

ஜூன் 28 ஞாயிற்றுக்கிழமை நிலவரம் இது...

* தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை: 82,275. குணமடைந்தவர்கள்: 45,537. இறந்தவர்கள்: 1,079.

* இந்திய அளவில் பாதிக்கப்பட்டவர்கள்: 5,41,040. குணமடைந்தவர்கள்: 3,20,887. இறந்தவர்கள்: 16,478.

* உலக அளவில் பாதிக்கப்பட்டவர்கள்: 1,00,15,904 குணமடைந்தவர்கள்: 50,77,700. இறந்தவர்கள்: 4,99,488.

கூட்டிக்கழித்துப் பாருங்கள்... குணமடைபவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். தமிழகத்தைப் பொறுத்தவரை 1,000 பேர் பாதிக்கப்பட்டால், 14 பேர் இறக்கிறார்கள். இறப்பு என்பது மிக மிகக் குறைவு. எனவே, சாதாரணச் சளி, காய்ச்சல் போலவே பெரும்பாலானவர்களைக் கடந்துகொண்டிருக்கிறது கொரோனா.

நம்பிக்கையே நல்லது. பயம், கொரோனாவைவிடக் கொடூரமானது.

@நாரயணசாமி.

பிப்ரவரி மாதத்தில் சிங்காரச் சென்னையிலிருக்கும் மகள் வீட்டுக்கு வந்த நான், ஊரடங்கு காரணமாக சொந்த ஊரான தஞ்சாவூருக்கு இன்றுவரை திரும்ப முடியவில்லை. என்னதான் வழி?

நீங்கள் மட்டுமல்ல... தமிழகமெங்கும் பல லட்சம் பேர் இப்படிப் பற்பல காரணங்களுடன் தவித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அமெரிக்கா, அரேபியாவில் இருந்தெல்லாம் கூடச் சொந்த ஊருக்குத் திரும்பிவிட முடிகிறது. ஆனால், பக்கத்திலிருக்கும் திண்டிவனத்தையோ புதுச்சேரியையோ நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை - சட்டபூர்வமாக. ஒருவேளை, ‘மோசடி இ-பாஸ் விற்பனை’யைக் களைகட்டச் செய்து, ‘கல்லா கட்டும்’ ஏற்பாடாக இருக்குமோ என்ற சந்தேகம்கூட எட்டிப்பார்க்கிறது. மிகச் சாதாரணமாக தீர்வைத் தரக்கூடிய இந்த விஷயத்திலேயே இவர்களுக்குத் தெளிவில்லை எனும்போது, வேதனைதான் எட்டிப்பார்க்கிறது!

@கே.இந்து குமரப்பன், விழுப்புரம்.

‘‘கணவர்கள் குடித்துவிட்டு வந்தால், மனைவிகள் கட்டையால் அடியுங்கள்’’ என்று அமைச்சர் பதவியிலிருக்கும் ராஜேந்திர பாலாஜியே கூறலாமா?

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

ஊற்றிக் கொடுப்பவர்களே இதைச் சொல்லக் கூடாதுதான்!

@பி.மணி, குப்பம், ஆந்திரா.

சாத்தான்குளம் லாக்-அப் மரணத்துக்கு பணியிடை நீக்கம், பணி இடமாறுதல் மட்டும்தான் தண்டனைகளா?

‘போலீஸ்’ என்பதே பெரும்பாலும் அரசாங்கத்தின் ‘கூலிப்படை’ என்றாகிவிட்டது. அப்படியிருக்க, அவர்களைப் பொறுத்தவரை இதுவே மிகப்பெரிய தண்டனைதான். சீக்கிரமே விசாரணை என்ற ஒன்றை நடத்தி முடித்து, பழையபடி பணியிலும் சேர்த்துக் கொண்டுவிடுவார்கள். அப்போதுதானே மற்ற ‘கூலிப்படை’கள் நம்பிக்கையோடு பணியாற்றும்!

@ப்யூனி பிரதர்ஸ்.

‘‘கொரோனோவைக் கண்டு நாங்கள் அஞ்சுவதில்லை’’ என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகிறாரே?

உண்மைதான். ‘‘ப்பா... எமகாதகர்களாக இருக்கிறார்களே... நம் பெயரைக் கேட்டால் உலகமே நடுங்குகிறது. இவர்களோ... நம் பெயரைப் பயன்படுத்தி ஊரையே நடுங்கவைக்கிறார்களே...’’ என்று இவர்களைப் பார்த்து கொரோனாவே அஞ்சி நடுங்குவதாகக் கேள்வி.

@பா.சக்திவேல், கோயம்புத்தூர்.

‘பாரத் நெட்’ டெண்டர் விவகாரத்தில் முதலமைச்சர் வாய் திறப்பாரா?

திறக்கலம்தான். ஆனால், சகாக்களும் திறந்துவிடுவார்களே!

@அ.செல்வராஜ், கரூர்.

கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் வந்தால் இன்னும் சிறப்பாக செயல்படுமா?

இன்னும் சிரிப்பாய்ச் சிரிக்கும். நல்லதோ... கெட்டதோ அத்தனையும் உள்ளூருக்குள்ளேயே முடிந்துகொண்டிருந்தன. ‘ஏழைக்கேத்த எள்ளுருண்டை’ என்பதுபோல, உள்ளூரிலும் ‘மல்லைய்யாக்கள்’ இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களையெல்லாம் ஒழித்துக்கட்டி, இந்த வங்கிகளைக் காப்பாற்று வார்கள் என்று பார்த்தால், தேசிய வங்கிகளைப் போல, கூட்டுறவு வங்கிகளின் பணத்தையும் உலக மல்லைய்யாக்களுக்கு பந்தி வைக்கத் தயாராகி விட்டார்கள்.

@பி.எஸ்.ஏ.ஜெய்லானி, கடையநல்லூர்.

காவல்துறையில் உடல் தகுதி உட்பட பலவற்றையும் பார்ப்பவர்கள், மனிதத்தன்மை இருக்கிறதா என்று பார்ப்பதில்லையா?

அப்படி எதுவும் இருக்கவே கூடாது என்பதுதான் போலீஸ் வேலைக்கான முக்கியத் தகுதியே. அப்படிப்பட்டவர்கள் தப்பித் தவறி உள்ளே நுழைந்துவிட்டாலும், பயிற்சிப் பள்ளியிலேயே அனைத்தையும் கரைத்துவிட்டுத் தான் வெளியில் அனுப்புவார்கள். சொன்னபடி கேட்டால், பதவி உயர்வு. திருப்பூரில் மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடிய பெண்ணின் கன்னத்தில் அறைந்த ‘கண்ணியமற்ற’ ஏ.டி.எஸ்.பி-யான பாண்டியராஜன், இன்று எஸ்.பி! முல்லை-பெரியாறு விஷயத்துக்காகப் போராடிய விவசாயிகளை ஓட ஓட விரட்டியடித்த ‘கருணையற்ற’ ஜ.ஜி-யான ராஜேஸ்தாஸ், இப்போது ஏ.டி.ஜி.பி!

@வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல்.

‘‘மருந்துகள் எதுவும் இல்லாமல் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பல்லாயிரம் பேரைக் குணப்படுத்தியிருக்கிறோம்’’ என்கிறாரே சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்?

ஆர்.டி.ஐ மூலமாகத் தகவல் கேட்கும்போது, ‘இதுவரை குணமடைந்தவர்கள் 44 ஆயிரம் பேர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் மருந்துக் காகச் செலவிடப்பட்ட தொகை 15 ஆயிரம் ரூபாய்’ என்று பதில் தர மாட்டார்கள் என்று நம்புவோம்.

@காந்தி, திருச்சி.

ஒசாமா பின்லேடனை ‘தியாகி’ என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழ்கிறாரே?

உங்களுடைய வில்லன்... அவருடைய ஹீரோ. அவருடைய வில்லன்... உங்களுடைய ஹீரோ. இப்படி நமக்கும் நம் நண்பருக்கும் இடையேகூட ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கும்போது, இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை. கோட்சே இங்கே ஒரு சிலருக்கு ஹீரோ... பலருக்கும் கொலைகாரன். அப்படித்தான் எல்லாமே! பெரும்பாலும் அவரவர் தேவையைப் பொறுத்தும், இருக்கும் இடத்தைப் பொறுத்தும்தான் நியாய, தர்மங்கள் இங்கே தீர்மானிக்கப்படுகின்றன.

@ஆர்.அஜிதா, கம்பம்.

‘‘இந்தியாவில் நோயைவைத்து அரசியல் செய்பவர் மு.க.ஸ்டாலின் ஒருவராகத்தான் இருக்க முடியும்’’ என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளாரே?

‘‘உலகிலேயே நோயைவைத்து ஊழல் செய்பவர் எடப்பாடி பழனிசாமியாகத்தான் இருக்க முடியும்’’ என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாரே!

@சையது முஹம்மது தமீம், திருமங்கலக்குடி.

`முகக்கவசம், சமூக இடைவெளியெல்லாம் தேவையே இல்லை’ என்று சொல்லிக்கொண்டிருந்த பிரேசில் நாட்டு அதிபரிடம், `அதெல்லாம் கட்டாயம் வேண்டும்’ என்று அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே..?

ம்... எல்லா நாடுகளிலும் நீதிமன்றங்கள் தலையிட்டுத்தான் பலவற்றையும் செய்ய வேண்டியிருக்கிறது. ‘தல’ என்றாலே இப்படித்தான் போல!

@.அருச்சுனன், செங்கல்பட்டு.

இங்கே ப.சிதம்பரம் கேள்வி கேட்பதுபோல, சீனாவில் யாராவது கேட்க முடியுமா?

கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்... இங்கேயும் கேள்வி கேட்க முடியாத சூழல் சீக்கிரமே வந்துவிடும்.

@மு.மதிவாணன், காஞ்சிபுரம்.

முழு ஊரடங்கு என்பதால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட பகுதிகளின் பெரும்பாலான ஊர்களில் அனைத்து அத்தியாவசியக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளனவே?

காவல்துறை, மருத்துவத்துறை, உள்ளாட்சிதுறை போல ‘சரக்கு’ துறையும் அத்தியாவசியப் பட்டி யலில் சேர்க்கப்பட்டு ஓர் அரசாணை வந்ததைப் பார்க்கவில்லையோ!

@‘திருச்சிற்றம்பலம்’ சுரேஷ்.

கொரோனா பாதித்தவர்கள் தற்கொலையை நாடுவது சரியா?

எதனால் பாதித்தவர்களும் தற்கொலையை நாடுவது சரியானதில்லையே.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,

757, அண்ணா சாலை,

சென்னை - 600 002 kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism