Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்

நிரந்தர நண்பனும் இல்லை... நிரந்தர எதிரியும் இல்லை!

கழுகார் பதில்கள்

நிரந்தர நண்பனும் இல்லை... நிரந்தர எதிரியும் இல்லை!

Published:Updated:
கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்

@க.அருச்சுனன், செங்கல்பட்டு.

சாத்தான்குளம் சம்பவத்தில் காவல்துறையின் அட்டூழியத்துக்குத் துணைபோன மாஜிஸ்ட்ரேட், மருத்துவர் மற்றும் ஜெயிலர் ஆகியோருக்கெல்லாம் தண்டனை உண்டா?

கட்டாயம் பதவி உயர்வு உண்டு!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

@பி.எஸ்.ஏ.ஜெய்லானி, கடையநல்லூர்.

ஒரு வழக்கை, ‘சி.பி.ஐ-க்கு மாற்றுங்கள்’ என்று கோரிக்கை வைக்கிறார்கள். உடனே, ‘சி.பி.ஐ சரியாக விசாரிக்குமா?’ என்று பலரும் சந்தேகம் கிளப்புகிறார்களே?

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவே சட்டமன்றத்தில் இப்படிப்பட்ட சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறார். ‘சி.பி.ஐ விசாரணை வேண்டும்’ என்று தி.மு.க கேட்க, ‘சி.பி.ஐ என்ன வானத்திலிருந்து வந்தா குதித்தது?’ என்று கேட்டார் ஜெயலலிதா. போலீஸ் என்பது மாநில அரசுகளின் அடியாள் படை. சி.பி.ஐ என்பது மத்திய அரசின் அடியாள் படை என்பதாகவே அவற்றின் செயல்பாடுகள் காலங்காலமாக உள்ளன. தா.கிருட்டிணன் கொலை வழக்கு, மயிலாப்பூர் எம்.எல்.ஏ பாலன் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு, மதுரை தினகரன் நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கு, போஃபர்ஸ் வழக்கு, அமித் ஷா வழக்கை விசாரித்த நீதிபதி லோயா மர்ம மரண வழக்கு, ரஃபேல் ஊழல் வழக்கு என்று ஏகப்பட்ட உதாரணங்கள் இருக்கின்றன.

சொந்தக் காரணங்களுக்காகச் சொன்னாலும், அன்றைக்கு மிக மிகச் சரியாகவேதான் சொன்னார் ஜெயலலிதா!

@ ‘சோழா’ புகழேந்தி, கரியமாணிக்கம், விழுப்புரம் மாவட்டம்.

நட்பு நாடு நேபாளம்?

நிரந்தர நண்பனும் இல்லை... நிரந்தர எதிரியும் இல்லை!

@சையது முஹம்மது தமீம், திருமங்கலக்குடி.

சாத்தான்குளம் செல்ல உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் பயன்படுத்தினாரா... இல்லையா?

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

இது போன்ற காரணங்களுக்காக இ-பாஸ் வழங்கப்படுவதில்லை. ஒருவேளை மோசடியாக இ-பாஸ் வாங்கியிருக்கலாம். இந்த விஷயத்தை சி.பி.ஐ விசாரிக்கப் பரிந்துரைக்கிறேன்.

@சரோஜா பாலசுப்ரமணியன், கோலார் தங்கவயல், கர்நாடக மாநிலம்.

பணம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி கற்கிறார்கள். அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழைகள்?

‘இந்தியாவில் ஏழைகளே இருக்கக் கூடாது’ என்பதுதான் சுதந்திரம் பெற்ற காலம் தொடங்கி நம் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதி களின் முக்கியமான ‘கொல்’கை. அதை, கொரோனா எளிதாக்கிக்கொண்டிருக்கிறது.

@வி.பாலசுப்பிரமணியன், மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம்.

ஆட்சியில் அமர ஆசைப்படும் தினகரன், ரஜினி, கமல் போன்றோர் ‘கொரோனா ஃபீல்டு வொர்க்’ செய்யாமல் தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார்களே..?

‘தலைகள்’ விழுந்துகொண்டிருப்பது தெரிந்தும் விளையாடுகிறீர்களே!

@ஜெ.நெடுமாறன், ராமாபுரம், சென்னை-89.

இந்த ஊரடங்கு காலத்தில் அதிக மன அழுத்தத்துக்கு ஆளாகி இருப்பவர்கள்... போலீஸார், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், சட்டவிரோத சக்திகள், பொதுமக்கள்... வரிசைப்படுத்துங்களேன்?

இன்னும் பலர் இந்தப் பட்டியலில் விடுபட்டுள்ளனர். முக்கியமாக ‘அரசியல்வாதிகள்’ இடம்பெறவில்லை. இது யதேச்சையாக நடந்ததா... அல்லது அதில் ஏதாவது உள்நோக்கம் இருக்கிறதா நெடுமாறன்.

@பெ.பச்சையப்பன், கம்பம், தேனி மாவட்டம்.

அரசுப் பேருந்துகளில் மக்களுக்கு சானிடைஸர் தருவதுபோல் விளம்பரத்தில் காண்பிக்கிறார்கள். ஆனால், நிஜத்தில் அப்படித் தருவதில்லையே?

ம்... இதில் எத்தனை கோடிகளோ... சவுக்கு எடுக்கும் அளவுக்கு நாமெல்லாம் வளர்க்கப் படுவதில்லையே... ‘விளம்பரத்திலாவது காண்பிக்கிறார்களே’ என்று சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்!

@ஆர்.சாந்தகுமார், ஆதனூர், செங்கல்பட்டு மாவட்டம்.

சாத்தான்குளம் தந்தை-மகன் மர்ம மரணத்துக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை சம்பந்தப்பட்ட போலீஸாரிடமிருந்து வசூலிக்கப்படுமா?

வசூலா..! நிவாரணமே 20 லட்சம் ரூபாய் என்றால், ‘கூலிப்படை’க்கு எத்தனை லட்சங்கள் என்றல்லவா நான் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறேன்.

கழுகார் பதில்கள்

@சுவாமிநாதன், வேளச்சேரி, சென்னை.

‘தி.மு.க-விலிருந்த நடிகர் சிவாஜி கணேசன், திருப்பதி சென்று வந்ததற்காக அந்தக் கட்சியின ராலேயே கேவலப்படுத்தப்பட்டார்’ என்பார்கள். இன்று... சேகர்பாபு எம்.எல்.ஏ போன்றவர்களுக்கெல்லாம் தாராள அனுமதி கிடைக்கிறதே?

சென்னை, வெங்கட் நாராயணா சாலையிலிருக்கும் திருப்பதி தேவஸ்தான கோயிலுக்கு இடம் போதவில்லை என்று எங்கெங்கோ இடம் தேடிக்கொண்டிருக் கிறார்கள். ஒருவேளை அவர்கள் தி.மு.க-விடம் கேட்டால், அறிவாலயத்திலேயே இடம் கொடுத்துவிடுவார்கள் போலிருக்கிறது. அந்த அளவுக்கு அந்தக் கட்சியில் ஆன்மிக வெள்ளம் ஆழ்வார்பேட்டை இல்லம் தொடங்கி, கடைக்கோடி தொண்டன் இல்லம் வரை பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனாலும், ‘நாங்கள் பெரியாரின் பேரன்கள்’ என்று இன்னமும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

@எம்.கல்யாணசுந்தரம், கணபதிபுதூர், கோவை-6.

தமிழக அமைச்சர்களில் ‘விகடகவி’ பட்டம் பெறத் தகுதியானவர் யார்?

ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, ஜெயக்குமார் என ஆளாளுக்கு செமையாகப் போட்டி போடுகிறார்கள். ஆனால், ‘அதிலும்கூட எனக்குத்தான் முதலிடம் வேண்டும்’ என்று அவ்வப்போது இடையில் புகுந்து ‘டஃப் ஃபைட்’ கொடுக்கிறார் எடப்பாடி. போட்டி பலமாகவே இருக்கிறது. நடக்கட்டும்... டும்!

@சாந்தி மணாளன், கருவூர்.

மன்மோகன் சிங் ஒரு கருத்துச் சொன்னால், எப்போதோ நடந்த ஒரு விவகாரத்தை எடுக்கொண்டு ஏட்டிக்குப் போட்டியாகப் பேசும் பா.ஜ.க-வினர் பற்றி?

எப்போது... எப்போதோ நடந்த விஷயங்களையெல்லாம் கிளறிவிட்டுத்தானே ஆட்சியையே பிடித்தார்கள். ஆனால், அது இருபக்கமும் கூர்மையான கத்தி. இதைப் போகப் போகத்தான் அவர்கள் உணர்வார்கள்.

@ஆர்.ராமசாமி, பொள்ளாச்சி, கோயம்புத்தூர் மாவட்டம்.

சாத்தான்குளம் சம்பவம் பற்றிப் பேசும்போது, ‘காவல்துறையைப் பெருமைப்படுத்தி ஐந்து படங்கள் எடுத்ததற்காக வெட்கப்படுகிறேன்’ என்று கூறியுள்ளாரே இயக்குநர் ஹரி?

இவர்கள் வெட்கப்பட ஆரம்பித்தால், பெரிய பட்டியலே போட வேண்டியிருக்கும். எங்கோ ஒரு போலீஸ்காரர் நல்லவராக இருந்தார் என்பதை வைத்துக் கொண்டு, காக்கிகளின்மீது கறையற்ற பிம்பத்தை இவர்கள் காலங்காலமாக உருவாக்கிக்கொண்டே இருக்கி றார்கள். ஆனால், ஒரு நாளும் மக்களுக்கு அவற்றின்மீது நம்பிக்கை இருந்ததில்லை என்பதே உண்மை. ‘ம்... காக்கிகள் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும்தானே...’ என்கிற ஆதங்கத்தில்தான் ‘இதுதாண்டா போலீஸ்’களையும் ‘பொறுக்கி சாமி’ களையும் வெற்றிபெற வைக்கிறார்கள்.

@சி.கார்த்திகேயன், சாத்தூர், விருதுநகர் மாவட்டம்.

சாத்தான்குளம் சம்பவத்தில் போலீஸாரால் கொல்லப்பட்டவர்கள்மீதும் சிலர் குறை கூறுகிறார்களே..?

`அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிடக் கூடுதல் நேரத்துக்குக் கடையைத் திறந்துவைத்தார்கள்’ என்பதுதான் போலீஸ் சொல்லும் குற்றச்சாட்டு. அதற்கு மரண தண்டனை விதிக்கச் சட்டத்தில்கூட இடமில்லை. அதுவும், ‘காவல் நிலையம் தொடங்கி, சிறைச்சாலை கொண்டு செல்லும்வரை அடித்தே கொல்ல வேண்டும்’ என்று எந்தச் சட்டத்திலும் சொல்லப்படவும் இல்லை.

@ ‘மன்னை’ சித்து, மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம்.

தமிழக முதல்வர் எடப்பாடி அறிவித்த ஜூலை 31 வரையிலான ஊரடங்கின் அம்சங்களைப் படித்தவுடன், தனது அழகு அலகு உடையும்படி விழுந்து விழுந்து சிரித்தாராமே கழுகார்?

ஓ... மந்திரவாதி மூசாவின் மாயக்கண்ணாடி உங்களிடம் இருக்கின்றதோ! அதுதான் 59 ஆப்களையும் தடை செய்து விட்டார்கள். பிறகெப்படி உங்களால் நேரலையாகக் காண முடிந்தது!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,

757, அண்ணா சாலை,

சென்னை - 600 002 kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!