Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்

‘டிக்டாக் செய்யும் வேலை கொடுமை’ என்கிறார்கள். ஆனால், அதே வேலையை சீவி ‘சிங்காரி’த்து ஓர் இந்திய நிறுவனம் செய்தால் தவறில்லையாம்.

கழுகார் பதில்கள்

‘டிக்டாக் செய்யும் வேலை கொடுமை’ என்கிறார்கள். ஆனால், அதே வேலையை சீவி ‘சிங்காரி’த்து ஓர் இந்திய நிறுவனம் செய்தால் தவறில்லையாம்.

Published:Updated:
கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்

@சரவணக்குமார் சின்னசாமி, தாராபுரம்.

பெரியாரை நேசிப்பவர்கள், இறைநம்பிக்கை உடையவர்களாய் இருப்பதை மிகப்பெரிய முரண்பாடாய் விமர்சனத்துக்கு உள்ளாக்குகிறார்களே... அது ஏன்?

பெரியார்
பெரியார்

பெண்ணுரிமை, சாதி ஒழிப்பு இப்படிப் பலவற்றுக்கும் பெரியார் அடிப்படையாக முன்வைத்த முழுமுதற்கொள்கை... ‘கடவுள் மறுப்பு’தான். அதுவே தகரும்போது விமர்சனங்கள் வரத்தானே செய்யும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

@ஆர்.ஜி.

சாத்தான்குளம் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காக, காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பப்பட்ட கூடுதல் எஸ்.பி குமார் மற்றும் டி.எஸ்.பி பிரதாபன் இருவருக்கும் சில மணி நேரங்களிலேயே அவசரம் அவசரமாகப் பதவி அளித்துள்ளாரே எடப்பாடி?

அவருடைய அவசரம் அவருக்குத்தானே தெரியும்... நீலகிரி மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவிலும், புதுக்கோட்டை மாவட்ட நில அபகரிப்புத் தடுப்புப் பிரிவிலும் அந்த இருவருக்கும் வேறு என்னென்ன வேலைகள் காத்திருக்கின்றனவோ!

@கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்-6.

‘ஃபிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ அமைப்பின் செயல்பாடுகள் சட்டத்துக்கு உட்பட்டவையா?

எழுதாத சட்டத்துக்கு உட்பட்டவை. சட்டத்துக்கு உட்பட்ட சக்திகளும், சட்டவிரோத சக்திகளும் கூட்டுப் போட்டுக்கொண்டு இங்கே எழுதாத சட்டங்கள் பலவற்றையும் தங்களுடைய சட்ட விரோதமான செயல்பாடுகளுக்காக அமல்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன. இதுவும் அதில் ஒன்றே!

@மாணிக்கம், சங்ககிரி, சேலம் மாவட்டம்.

‘போலீஸ்காரர்களை அடிக்கக் கூடாது’ என்று ஸ்டெர்லைட் சம்பவத்தின்போது கூறிய ரஜினிகாந்த், ‘சத்தியமா விடவே கூடாது’ என்கிறாரே இப்போது?

அது ‘மூன்று முகம்’ டயலாக்... இது ‘பாட்ஷா’ டயலாக்!

@ ஸ்ரீ.பூவராகவன், படியூர், திருப்பூர் மாவட்டம்.

பேரூராட்சி அலுவலகத்திலேயே நடிகர் விஜய்யின் பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறாரே ஓர் அதிகாரி?

சாதி, மதம், அரசியல், சினிமா என அனைத்துக்கும் அப்பாற்பட்டு பொதுவாக பணியாற்றுவார்கள் என்கிற உறுதிமொழியுடன் தான் அரசுப் பணிகளில் அமர்த்தப்படுகிறார்கள். ஆனால் நாடி நரம்பெல்லாம் சாதி, மதம், அரசியல், சினிமா என வெறிபிடித்தவர்களாக வளர்க்கப்படுபவர்கள்தானே இங்கே அதிகம். அப்படி இருக்கும்போது, அந்த நாற்காலியில் அமர்ந்ததும் அதுதானே ஆட்சி செய்யும். இவ்வளவு ஏன்... ‘மக்கள் பிரதிநிதிகள்’ என்ற பெயரால் தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர் தொடங்கி, பிரதமர் வரை அவரவர் கட்சி சார்ந்துதானே இயங்குகிறார்கள் - வெளிப்படையாகவே.

@கே.கே.வெங்கடேசன், செங்கல்பட்டு.

கர்நாடக மாநிலம், தும்கூரில் ஆடு மேய்ப்பவருக்கு கொரோனா என்பதால் 47 ஆடுகள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனவாமே?

‘விலங்குகளுக்கும் கொரோனா பரவ ஆரம்பித்துவிட்டது’ என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்க ஆரம்பித்துள்ளனர். ஆபத்தின் அடுத்தகட்டத்தை நோக்கி நாம் பயணப்பட ஆரம்பித்துள்ளோம் என்பதற்கான அறிகுறிதான் இது. ஆடு, மாடு, நாய், பூனைகளுக்குக்கூட முகக்கவச விற்பனை சூடுபிடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!

@திருக்காமேஷ்வரன், குயவர்பாளையம், புதுச்சேரி-13.

‘முதல்வரின் ஊரடங்கு வியூகம் வெற்றி பெற்றுள்ளது’ என்று வியந்து போற்றியிருக்கிறாரே அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன்?

மாஃபா. பாண்டியராஜன்
மாஃபா. பாண்டியராஜன்

‘இவர்களுடைய வியூகமெல்லாம் நமக்குத் தான் வெற்றியைத் தந்துகொண்டிருக்கிறது. ஆனாலும் கூசாமல் இப்படிப் பொய் சொல்கிறார்களே...’ என்று கொரோனாவே அதிர்ச்சியில் சற்று உறைந்துபோனதாகக் கேள்வி!

@வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டம்.

சீன நிறுவனங்களின் 59 அலைபேசி ஆப்களுக்கு தடை விதித்திருப்பதன் மூலம் நாம் சாதிப்பது?

‘சீப்பை ஒளித்துவைத்துவிட்டால் கல்யாணம் நிற்குமா...’ என்கிற பரிசோதனை நடக்கிறது. ‘டிக்டாக் செய்யும் வேலை கொடுமை’ என்கிறார்கள். ஆனால், அதே வேலையை சீவி ‘சிங்காரி’த்து ஓர் இந்திய நிறுவனம் செய்தால் தவறில்லையாம். பாரத் மாதாகி ஜே!

@இரா. வளையாபதி, தோட்டக்குறிச்சி, கரூர் மாவட்டம்.

சாத்தான்குளம் சம்பவம், எடப்பாடி பழனிசாமி இதுநாள் வரை ஈட்டியிருந்த பெரும்புகழை குழிதோண்டிப் புதைத்துவிட்டதுதானே?

ஓஹோ... அப்படியா!

@‘கிணத்துக்கடவு’ தமிழ்ப்பித்தன்.

சாத்தான்குளம் பிரச்னையில், தந்தை மற்றும் மகன் இருவரையும் ரத்தச் சகதியுடன் பார்த்த பிறகும், சிறைக்கு அனுப்பிய மாஜிஸ்ட்ரேட் சரவணன் பற்றி யாரும் பேசுவதில்லையே?

பார்த்திருந்தால் அனுப்பியிருக்க மாட்டார்.

@‘திருப்பூர்’ அர்ஜுனன்.ஜி, அவினாசி.

உ.பி-யில் டி.எஸ்.பி உட்பட எட்டு காவலர்கள், ரெளடிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்களே?

‘வளர்த்த கடா’ துப்பாக்கியைத் தூக்குகிறது!

@ராம்குமார்.

கல்லூரிகள் திறப்பு எப்போது கழுகாரே... (என் மகன் உட்பட மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள மனஅழுத்தம்)?

அவர்களைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. பெற்றோர்கள்தான் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள்மீது நம்முடைய அழுத்தத்தைக் கடத்தத் தொடங்கியிருக்கிறோம். இதுதான் மிகவும் ஆபத்தானது. காலம் வரும் வரை காத்திருப்பதைத் தவிர இப்போதைக்கு வேறு வழியில்லை என்பதுதான் நிதர்சனம். கவலைகளைத் தூக்கி வீசுங்கள். கண்முன்னே இருப்பவற்றின்மீது மட்டும் கவனத்தைத் திருப்புங்கள்.

@சையது முஹம்மது தமீம், திருமங்கலக்குடி.

நாச்சியார்கோவில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கோபாலன் அய்யர் வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில், உள்ளூர் பா.ஜ.க நிர்வாகி சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க உறவு வலுவானதாயிற்றே?

அ.தி.மு.க, தி.மு.க, பா.ம.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், கிறிஸ்தவ அமைப்புகள், இஸ்லாமிய இயக்கங்கள், சாதி அமைப்புகள் எல்லாம்கூட தத்தமது அமைப்புகளுக்குள் இருக்கும் துணை, இணை அமைப்புகளுடன் வலுவான உறவுகொண்டவைதான். அங்கெல்லாம் இப்படி ஆயிரமாயிரம் கொலைகள் நடக்கத்தானே செய்கின்றன. ஆக, இது போன்ற கொலைகளை ‘கொள்கை’யோடு உரசிப் பார்க்காதீர்கள்... ‘கொள்ளை’யோடு அலசிப் பாருங்கள். அதிகாரம், அந்தஸ்து, பணவெறி போன்ற சுயநலக் காரணிகள்தான், ‘யார் இருக்க வேண்டும்... யார் இருக்கக் கூடாது’ என்பதைத் தீர்மானிக்கின்றன - கொள்கைகள் அல்ல!

@மதிராஜாதிலகர், சின்னபுங்கனேரி.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதுபோல், கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்படுமா?

அதைப் பற்றித்தான் பேச்சே இல்லையே... பிறகு ஏன் தேவையில்லாமல் கிளப்பிவிடுகிறீர்கள். பிறகு, அதற்கான ஏற்பாடுகளில் கல்வி அமைச்சர் பரபரப்பாக இறங்க ஆரம்பித்துவிடுவார். எதிர்க்கட்சிகள் போர்க்கொடி பிடிக்கும். ‘மாணவர்கள் அனைவருக்கும் ஒரு செட் என்-95 மாஸ்க் வழங்கப்படும்’ என்று சொல்லி ஏதோ ஒன்றைக் கொள்முதல் செய்வார்கள். கடைசி நிமிடத்தில் நீதிமன்றம் தடைபோடும். மொத்தத்தில் ஆள்வோருக்கு ‘அறுவடை’ நடந்துவிடும். கஜானாவில் கொஞ்சமாவது மிச்சம் மீதி இருக்கட்டும் திலகரே!

@கொ.மூர்த்தி, குட்டலாடம்பட்டி.

‘தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை சமூகப் பரவலாக மாறவில்லை’ என்கிறாரே அமைச்சர் விஜயபாஸ்கர்?

 விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

‘தமிழகத்தில் கொரோனாவே பரவவில்லை’ என்று சொல்லாமல் விட்டதற்காகச் சந்தோஷப்படுங்கள்.

@மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி, திருவண்ணாமலை மாவட்டம்.

கொரோனா அதிக அளவில் பரவக் காரணம் மக்களின் அலட்சியமா அல்லது அரசின் முட்டாள்தனமான செயல்பாடுகளா?

அரசின் முட்டாள்தனமான முடிவுகளின் காரணமாக, அலட்சியம் காட்டும் மக்களால்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,

757, அண்ணா சாலை,

சென்னை - 600 002 kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!