
‘இமாலயக் கேவலம்.’ மக்களாட்சியின் மாண்புகளைக் குழிதோண்டிப் புதைக்கும் வேலை.
@கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு-77.
நீதிபதியை நோக்கி, ‘உன்னால் ஒண்ணும் புடுங்க முடியாதுடா’ என்று ஒரு காவலரே பேசுகிறாரென்றால்... தமிழகத்தில் காவல்துறை ‘அதிக பவர்’ கொண்டதோ?
‘அதிகாரத் திமிர்’ கொண்டது.
@சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம், திருநெல்வேலி மாவட்டம்.
‘ஃபிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளதே..?
அது, ‘ஃபிராட் ஆஃப் போலீஸ்’ என்பதால்தான்!
@ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம், தென்காசி மாவட்டம்.
கழுகார் கூறிய சில பதில்களுக்கு ‘முரசொலி’யில், ‘நன்றி’ தெரிவிக்கப்படுவது பற்றி..?
அவர்களுக்கு வசதியான செய்தியாக இருந்தால், ‘ஜூனியர் விகடன் இதழ் படப்பிடிப்பு’ என்று தங்கள் நாளிதழில் அப்படியே பிரசுரித்து, ‘நன்றி’ சொல்வார்கள். இடைஞ்சலான செய்தியாக இருந்தால், ‘அவாள் பத்திரிகையின் குசும்புச் செய்தி’ என்று ‘குத்து’விடுவார்கள். இதெல்லாம் எங்களுக்குப் புளிச்சமாவு!
இப்போதுகூட, பெரியார் பற்றிய பதிலுக்காகப் பதறி உளற ஆரம்பித்துள்ளது முரசொலியின் ‘சிலந்தி’. பதவிக்காக கொள்கைகளைப் பறிகொடுப்பவர்களுக்கு பதற்றம் இல்லாவிட்டால்தானே தவறு! ‘பாட்டும் நானே பரதமும் நானே’ என்கிற வகையில் கேள்வி-பதில் தயாரிக்கப்பட்டிருப்பதாக நக்கலடித்திருக்கிறது, அந்தச் சிலந்தி. இப்படியெல்லாம் தானே கேள்வியைக் கேட்டு, தானே பதிலையும் சொல்லும் கலையில் வல்லவர் கருணாநிதிதான். பாவம், ‘அறிவாலய ஆசிரம’த்தில் புதிதாக அடியெடுத்து வைத்தவர்கள் போலும். அங்கேயிருக்கும் கலைஞர் கருவூலத்தில், ஒருவேளை பழைய முரசொலிகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தால் தேடிப் பார்க்கச் சொல்லுங்கள்... கொஞ்சமாவது புரியும்!
@அ.செல்வராஜ், கரூர்.
ரஷ்ய அதிபராக 2036-ம் ஆண்டு வரை நீடிப்பதற்கு வாய்ப்பு பெற்ற விளாடிமிர் புதினின் சாதனை, இமாலயச் சாதனைதானே?

‘இமாலயக் கேவலம்.’ மக்களாட்சியின் மாண்புகளைக் குழிதோண்டிப் புதைக்கும் வேலை. என்னதான் கம்யூனிசம் என்றாலும், ஆரம்பகாலம் தொட்டே பெரும்பாலும் சர்வாதிகாரப் பாதையில்தான் கம்யூனிச ஆட்சிகள் நடைபோடுகின்றன. அதை உருவாக்கிய ஒற்றை நபர் நல்லவராக இருந்திருக்கலாம். ஆனால், அடுத்து வருபவரும் அப்படியே இருக்க முடியாது என்பதை ஏற்கெனவே பலரும் நிரூபித்துவிட்டனர். நிகழ்கால உதாரணமாகத் தெறிக்கவிட்டுக்கொண்டிருக்கிறார் சீன அதிபர் ஷி ஜின்பிங். அண்டை நாட்டைப் பார்த்து ஆசைப்பட்டுவிட்டார் புதின். ஆகமொத்தம், இவர்கள் விமர்சிக்கும் ‘முதலாளித்துவ’த்துக்கும், நடைமுறையில் இவர்கள் காட்டிக்கொண்டிருக்கும் ‘தொழிலாளித்துவ’த்துக்கும் பெரிய வித்தியாசமில்லை. ‘மாஸ்க்’ மட்டுமே மாறியிருக்கிறது.
@எம்.கல்யாணசுந்தரம், கணபதிபுதூர், கோயம்புத்தூர்-6.
எல்லா நாடுகளிலும் கொரானோ பாதிப்பு உள்ளபோது, ‘கட்டுப்படுத்தவில்லை’ என்று ஆட்சியில் உள்ளவர்களைக் குறை கூறுவது சரியா?
‘எங்களால்தான் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது’ என்று ஆட்சியாளர்கள் சொல்வது சரியென்றால், இதுவும் சரியே!
@சரவணக்குமார் சின்னசாமி, தாராபுரம்.
காவல்துறையை நிர்வகிக்கும் முழு அதிகாரத்தையும் நீதித்துறைக்கு வழங்கலாம்தானே... அது ஆரோக்கியமான முன்னுதாரணமாக இருக்குமல்லவா?
சாத்தான்குளம் தந்தையையும் மகனையும் ரத்தச் சகதியோடு சிறைச்சாலைக்கு அனுப்பியதும் நீதித்துறைதான் என்பதை மறந்துவிட்டீர்களே... துறை ஒரு பொருட்டே அல்ல. அதில் அமர்ந்திருப் பவர்கள் ‘துரை’ மனோபாவத்தில் இருக்கக் கூடாது என்பதுதான் முக்கியம்.
@ஹெச்.மோஹன், மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம்.
தாங்கள் பார்க்கும் இந்தத் தொழிலில் சலிப்பும் அலுப்பும் வராமல் எப்படிச் சமாளிக்கிறீர்கள்?
இதை, ‘தொழில்’ என்கிற வட்டத்துக்குள் அடைக்காமல், ‘சேவை’ என்றுதான் கூற வேண்டும். சேவை செய்வதிலிருக்கும் திருப்திக்கு ஈடு, இணை இல்லைதானே... கூடவே ஊதியமும் கிடைக்கும் போது சலிப்பும் அலுப்பும் எட்டிப் பார்க்க வாய்ப்பே இல்லை. அப்படியே வந்தாலும், அவற்றையெல்லாம் விரட்டியடித்து உற்சாகப் படுத்தத்தான் வாசகர்கள் இருக்கிறார்களே! இது பத்திரிகையாளர் ‘தொழிலு’க்கு மட்டுமல்ல, எந்தப் ‘பணி’க்கும் பொருந்தும்!
@ஆர்.அஜிதா, கம்பம், தேனி மாவட்டம்.
‘கொரோனாவை ஜெயிக்க முதலில் மன தைரியம்தான் அவசியம்’ என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளாரே?
உண்மைதான். இவர் போன்ற அமைச்சர்களின் ‘அன்லிமிடெட் அட்ராசிட்டிகள்’ அனைத்தையும் கூட பொறுத்துக்கொள்ளும் அளவுக்கு நம்மிடம் இருந்த மன தைரியம், இந்த கொரோனாவை எதிர்கொள்ளும் விஷயத்தில் இல்லாமல் போய்க் கொண்டிருப்பது ஏன் என்றே புரியவில்லை.
@இல.கண்ணன், நங்கவள்ளி, சேலம் மாவட்டம்.
‘சாத்தான்குளச் சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி போலீஸின் நடவடிக்கைகள் திருப்தியளிக்கின்றன’ என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளை பாராட்டியுள்ளதே?
ஆரம்பிப்பதற்குள்ளாகவே ‘திருப்தி’ என்று சொல்வதுதான் அச்சத்தை அதிகரிக்கிறது. பல்வேறு வழக்குகளிலும் ஆரம்பத்தில் நீதிமன்றங்கள் காட்டும் வேகம், கடைசியில் ‘ஆன்ட்டி க்ளைமாக்ஸ்’ என்கிற வகையிலான தீர்ப்புகளில்தான் வந்து நின்றுள்ளன. அதேபோல ‘சாத்தான்’குளமும் ஆகிவிடக் கூடாது என்று (நீதி)`தேவன்’ களிடம் வேண்டிக்கொள்வோம். தற்போது இந்த வழக்கு விசாரணையைத் தன் கையில் எடுத்துக்கொண்டிருக்கும் சி.பி.ஐ, ‘வழக்கம்போல’ சொதப்பாமல் உண்மையை வெளிக்கொண்டு வரும் என்றும் நம்புவோம்.
@கொ.மூர்த்தி, குட்டலாடம்பட்டி.
பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளர்மீது தங்கக் கடத்தல் புகார் எழுந்துள்ளதே..?

உம்மன் சாண்டிக்கு ஒரு சரிதா நாயர்போல, பினராயி விஜயனுக்கு ஒரு ஸ்வப்னா. ‘சொக்கத் தங்கம்’ என்பதை நிரூபிக்க வேண்டிய நெருக்கடியில் சிக்கி யிருக்கிறார் பினராயி.
@தே.ஞானக்கலை மோகன்குமார், புதுக்கோட்டை.
கொரோனா என்பது ஒரு ‘கெட்ட கனவாக’ இருந்திருந்தால் நன்றாக இருக்கும்தானே?
இயற்கையின் சுழற்சியில், கொரோனா... காலத்தின் கட்டாயம். இப்படியெல்லாம் கேட்பீர்கள் என்றுதான்,
‘ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்’
- இப்படி ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஈரடியில் சொல்லிவைத்திருக்கிறார் திருவள்ளுவர்.
இயற்கையின் விதியைவிட மிக்க வலிமையுள்ள வேறு விதிகள் எதுவுமே இல்லை. அந்த விதிகளை விலக்க நினைத்தால், அது மற்றொரு வழியில் நம் முன்னே வந்து நிற்கும்.
@பி.எஸ்.ஏ.ஜெய்லானி, கடையநல்லூர்.
என்னதான் சுழற்சி அடிப்படையிலான மாற்றம் என்றாலும், சாத்தான்குளம் வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதியை அங்கேயே பணியைத் தொடர விட்டிருக்கலாம்தானே?
அது நல்லதொரு முன்னுதாரணமாகவும் இருந்திருக்கும். குறைந்தபட்சம் இந்த வழக்கு விசாரணையின் போக்கு எப்படி இருக்கிறது என்பது தெரியும் வரையிலாவது நீதிபதி பி.என்.பிரகாஷை மதுரையிலேயே நீடிக்க விட்டிருக்கலாம்தான்.
@ஜெ.ஜானி, போரூர், சென்னை-116.
‘இனி ஊரடங்கு நீட்டிக்கப்படாது’ என்று திட்டவட்டமாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளாரே?
ஒருவேளை, ‘கொரோனா’ விடம் ஏதாவது பேச்சுவார்த்தை நடத்தியிருப்பாரோ!
@திருச்சிற்றம்பலம் சுரேஷ்.
‘ஊரடங்கில் ஓர் உள்ளடங்காகத் திகழும்’ ஞாயிற்றுக்கிழமை எப்படிக் காணப்படுகிறது?
பார்க், பீச், சினிமா, பிக்னிக் இப்படி எதுவுமே இல்லை. அது ஞாயிற்றுக்கிழமையாக இருந்தால் என்ன... புதன் கிழமையாகத்தான் இருந்தால் என்ன!
@மூர்த்தி பாலகிருஷ்ணன், அனுப்பானடி, மதுரை-9.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர் களெல்லாம் அரசு மருத்துவமனை யைத் தவிர்த்துவிட்டு தனியார் மருத்துவமனைக்குச் செல்வது ஏன் என்று என்றேனும் மக்கள் யோசித்ததுண்டா?
‘நல்ல நாளிலேயே நாயகம்’ என்பதுபோல, எப்போதுமே அவர்களுக்கு அரசு மருத்துவமனை களின் மீது நம்பிக்கை இருப்பதில்லை. இப்போது சொல்லவே தேவையில்லை. உண்மையில், பல்வேறு குறைகள் இருந்தாலும், தமிழகம் முழுக்கவே பெரும்பாலான அரசு மருத்துவமனை கள்தான் தற்போதைக்கு கண்கண்ட தெய்வங்களாக நிற்கின்றன.
@மாணிக்கம், திருப்பூர்.
மன்னராட்சி தொடர்ந்திருந்தால் இப்போதிருக்கும் ஜனநாயக ஆட்சியைவிடச் சிறந்ததாக இருந்திருக்குமா?
இப்போது... கேள்வியாவது எழுப்ப முடிகிறது!
கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள்,
ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!