Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்

எந்தச் சாதி, எந்த மதத்துடையதாக இருந்தாலும் அனைத்தும் மக்களின் சொத்து என்பதை உறுதிப்படுத்துவதுதான் உண்மையான மக்களாட்சியாக இருக்க முடியும்.

கழுகார் பதில்கள்

எந்தச் சாதி, எந்த மதத்துடையதாக இருந்தாலும் அனைத்தும் மக்களின் சொத்து என்பதை உறுதிப்படுத்துவதுதான் உண்மையான மக்களாட்சியாக இருக்க முடியும்.

Published:Updated:
கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்

@கே.ஆர்.அசோகன், கிட்டம்பட்டி.

திருவனந்தபுரம் பணக்கார ஆலயம் பத்மநாபசுவாமி கோயில் விஷயத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு..?

தீர்ப்பு திருத்தப்பட வேண்டும். திருவிதாங்கூர் ராஜா என்பவர் அந்தப் பகுதியை ஆட்சி செய்ததால், அவருடைய கட்டுப்பாட்டில் இருந்தது அந்த ஆலயம். தங்களுக்கு சலாம் போட்ட இது போன்ற மன்னர்கள், நவாப்கள், நிஜாம்கள், ஜமீன்கள் போன்றோரிடமிருந்த சொத்துகளையெல்லாம் அவர்களிடமே விட்டுவிட்டு, அவர்களுடைய நிலப்பரப்பின் ஆளுகையை மட்டும் தங்கள்வசம் எடுத்துக்கொண்டனர் ஆங்கிலேயர்கள். சுதந்திரத்துக்குப் பிறகு வந்த காங்கிரஸுக்கும் சலாம் போட்டதால், அதே நிலை நீடித்தது. இப்போது அந்த சலாம் இன்னும் வேகமாக இருக்கிறது. அவர்களிடம் இருப்பது அனைத்தும் மக்கள் சொத்து. உடனடியாக ஓர் அவசரச் சட்டம் போட்டு, அவற்றை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். எந்தச் சாதி, எந்த மதத்துடையதாக இருந்தாலும் அனைத்தும் மக்களின் சொத்து என்பதை உறுதிப்படுத்துவதுதான் உண்மையான மக்களாட்சியாக இருக்க முடியும்.

ஜி.வி.மனோ, கொலுவைநல்லூர், தூத்துக்குடி-6.

முன்பு, ‘கூட்டுறவே நாட்டுயர்வு’ என்றார்கள். இனி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘தனியார் இருக்க... இனி, யார்?’

கழுகார் பதில்கள்

அ.ஈஸ்டர்ராஜ், திசையன்விளை, திருநெல்வேலி மாவட்டம்.

தமிழகத்தை ஆளும் பா.ஜ.க., சாத்தான்குளம் சம்பவத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. விடை, சிவகாசி புஸ்வாணம்தானே?

விடை இருக்கட்டும். என்னதான் பா.ஜ.க-விடம் அ.தி.மு.க தாள் பணிந்து கிடந்தாலும், `தமிழகத்தை ஆள்வது பா.ஜ.க’ என்று சொல்வது சரியாக இல்லையே ஈஸ்டர்ராஜ்... அவர்கள் மனது என்ன பாடுபடும் என்று யோசித்துப் பார்க்க வேண்டாமோ!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
சுனிதா யாதவ்
சுனிதா யாதவ்

@சரவணன் ஓ.ஏ.கே.ஆர், சென்னை-2.

குஜராத் மாநிலப் பெண் காவலர் சுனிதா யாதவின் தைரியத்தைப் பார்த்தீர்களா?

அரசாங்கத்தின் சார்பில் ராயல் சல்யூட் அடிக்கப்பட வேண்டிய அவரை, ராஜினாமா செய்யும் அளவுக்கு அரசாங்கத்திலிருப்பவர்களே துரத்தியடித்துள்ளனர். ‘பிரதமரே விதிகளை மீறினாலும் தடுத்து நிறுத்துவேன். என்னுடைய போராட்டம் காக்கிச் சீருடைக்கானது’ என்று துணிச்சலோடு நிற்கும் அவருக்கு நாம் சல்யூட் வைப்போம்.

சம்பத்குமாரி, பொன்மலை, திருச்சி.

நிறவெறியைக் கண்டிக்கும்விதமாக, ` ‘மணப்பெண்/மாப்பிள்ளை சிவப்பாக இருக்க வேண்டும்!’ என்பது போன்ற வாசகங்களை வெளியிட மாட்டோம்’ என்று திருமணத் தகவல் நிலையங்கள் பலவும் அறிவித்துள்ளன. ஆனால், சாதிக்கு ஒரு வலைதளம் என்று வைத்திருப்பது மட்டும் சரியோ?

அடிமடியிலேயே கைவைக்கப் பார்க்கிறீர்களே!

‘மேட்டுப்பாளையம்’ மனோகர், கோவை-14.

இந்தக் கொடிய கொரோனா காலத்தில், ‘இடுக்கண் வருங்கால் நகுக...’ என்பது சாத்தியமா?

இதைவிட இன்னும் கொடிய காலத்திலும்கூட ‘நகுக’ சாத்தியப்படத்தான் வேண்டும்.

அ.ச.நாராயணன், பாளையங்கோட்டை.

`சீனா நம்பிக்கைக்கு உரியதல்ல’ என்பது இப்போதும் நிரூபிக்கப்பட்டிருக்கிறதுதானே?

எப்போதுமே... யாருமே நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்லர் என்பது சீனா மூலமாகவும் மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

@செ.அ.ஷாதலி, கோனுழாம்பள்ளம்.

கழுகார் மிகவும் அப்டேட் ஆகிவிட்டார். அஞ்சல் அட்டைக் கேள்விகளுக்கு பதில் தருவதில்லையே..?

அட, நீங்களும் அப்டேட் ஆகிவிட்டீர்களே... அதற்காக அஞ்சல் அட்டை ‘அவுட் டேட்’ ஆகிவிடவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

@மு.மதிவாணன், அரூர்.

‘பப்ஜி விளையாட்டுச் செயலியைத் தடை செய்வதற்கு மத்திய அரசிடம் முறையிடப்படும்’ என்று தமிழகத் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியிருப்பது சரிதானா?

நண்டு சிண்டு முதல் இளவட்டங்கள் வரை பலரையும் அடிமையாக்கிவிட்டது `பப்ஜி.’ வீட்டு வாசற்படியைக்கூட எதற்கும் தாண்டாமல் முழுமூச்சாக இரவு-பகல் பாராமல் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும், இந்த கொரோனா காலத்தில் எல்லைமீறிப் போய்க்கொண்டிருக்கிறது இந்த அடிக்‌ஷன். நம் இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டும், அவர்களுடைய உடல் மற்றும் மனநலனைக் கருத்தில்கொண்டும் உடனடியாகத் தடை செய்வதுதான் சரியானது. இதைத்தான் டாக்டர் ராமதாஸ் தொடங்கி பல்வேறு தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். இந்த விஷயத்தில் அனைவருமே அமைச்சரின் பின் அணிவகுக்க வேண்டும்.

@வி.பாலசுப்பிரமணியன், மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம்.

ஜோதிர் ஆதித்ய சிந்தியா, சச்சின் பைலட் என இளம் காங்கிரஸ் தலைவர்கள் ஒவ்வொருவராகப் பதவி ஆசையால் அந்தக் கட்சியையும் ஆட்சியையும் அழிக்கிறார்களே?

‘கத்தியை எடுத்தவனுக்குக் கத்தியால்தான் சாவு’ என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படுகிறது. ஒரு காலத்தில் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆட்சியைக் கலைப்பதையே வேலையாக வைத்திருந்தது காங்கிரஸ். இதேபோலத்தான் அப்போது பல்வேறு கட்சிகளிலிருந்த தலைவர்கள் காங்கிரஸின் சூழ்ச்சிகளுக்கு பலியானார்கள். இப்போது, புதுவித யுக்தியாக ஆட்சியைக் கவிழ்ப்பதையே தன்னுடைய ஆட்சிக்கால சாதனையாக மாற்றிக்கொண்டிருக்கிறது பா.ஜ.க. சிந்தியா, பைலட் போன்றோர் பலியாக ஆரம்பித்துள்ளனர். ஆனால், கத்திக்கு என்றும் மரணமில்லை!

@ஆ.ஹேமலதா, வாழப்பாடி, சேலம் மாவட்டம்.

கழுகாரே, `அடுத்த மாதத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை மட்டுமன்றி சனிக்கிழமையும்கூட ஊரடங்கு இருக்கும்’ என்று சொல்லப்படுகிறதே?

‘ஷாப்பிங் மால்கள், சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத் தலங்கள், திரையரங்குகள் என அனைத்தையும் திறந்துவிடப்போகிறார்கள். `இனி, கொரோனா பாடு... மக்கள் பாடு’ என்கிற முடிவுக்கு மாநில அரசு வந்துவிட்டது’ என்றும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறதே... ஒருவேளை, ‘சேலம் ஸ்பெஷல்’ ஏதும் இருக்குமோ!

@காந்தி, திருச்சி.

‘உண்மையான அயோத்தி நேபாளத்தில் உள்ளது. ராமர் இந்தியர் அல்லர், நேபாளி’ என்று அந்த நாட்டின் பிரதமர் கூறுகிறாரே..?

புராணம், வரலாறு எல்லாமே சர்ச்சைக்குரியவையே. அவரவருக்குத் தேவைப்படும்போது வசதியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இங்கே ஆட்சியைப் பிடிக்க தேவைப்பட்ட ராமர், அங்கே ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளத் தேவைப்படுகிறார்!

@ப.திருக்காமேஷ்வரன், குயவர்பாளையம், புதுச்சேரி-13.

‘அ.தி.மு.க எளிய மக்களுக்காகப் பயன்படுகிற கீரைத் தோட்டம்; தி.மு.க எதற்கும் பயன்படாத குரோட்டன்ஸ் செடி’ என்கிறாரே வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார்?

பார்த்தால் அப்படித் தெரியவில்லையே... இரண்டு தோட்டம் முழுக்கவே களைச்செடிகள்தானே நிறைந்திருக்கின்றன.

@மாணிக்கம், சங்ககிரி, சேலம் மாவட்டம்.

ஜெயலலிதாவைப் புகழ்ந்த அளவுக்கு தற்போது எடப்பாடியாரை `மாண்புமிகு’க்கள் புகழ்கிறார்களே?

ஜெயலலிதா மட்டும்தானா... பின்னோக்கிப் போனால் கருணாநிதி, எம்.ஜி.ஆர் என்று வரிசையாகப் பெரும்பாலான முதல்வர்களுக்கும் தலைவர்களுக்குமே ‘புகழ் போதை’ உண்டு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்களுக்காகப் பணி செய்வதற்காகத்தான் அந்தப் பதவியே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இவர்கள் என்னவோ, மக்களுக்கு அவர்கள் வீட்டுப் பாட்டன் சொத்தை அள்ளிக் கொடுப்பதற்காகவே அந்தப் பதவியில் உட்கார்ந்தது போன்ற பிம்பத்தை உருவாக்குவார்கள். இதை ஒரு கூட்டம்... ‘வள்ளலே, அன்னையே, அய்யாவே’ என்று உருகி உருகி மேடையில் பேசுவதும், கவிதை படிப்பதும் கொடுமையோ கொடுமை. அதைவிடக் கொடுமை, கடைவாய்ப் புன்னகையோடு எதிரில் அமர்ந்து அந்தத் தலைவர்களெல்லாம் ரசித்துச் சிரிப்பது. இந்த ‘புகழ் போதை’ கண்ணை மறைப்பதால்தான் வந்த வழி மறந்துவிடுகிறது பலருக்கும்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள்,

ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism