Published:Updated:

கழுகார் பதில்கள்

`ஆட்சியாளர்களைச் சொறிந்துவிடுபவர்கள் மட்டுமே வாழ முடியும்’ என்பதுதான் சாக்ரடீஸ் காலத்துக்கும் முன்பிருந்தே ஆட்சியாளர்களின் லட்சணம்.

பிரீமியம் ஸ்டோரி

@திருப்பூர் சாரதி.

வள்ளுவர், வடக்கே கலக்குகிறாரே?

இப்போது அல்ல... ஏற்கெனவே பல காலமாக வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என உலகையே கலக்கிக்கொண்டிருப்பவர் வள்ளுவர். தற்போது வடக்கே இருக்கும் சிலர் ‘கலக்க’த்தில் இருக்கின்றனர். அதனால் ‘கலக்கி’விட்டுக் கொண்டிருக்கின்றனர். எப்படியிருந்தாலும், ‘தமிழனா இருந்து ஷேர் பண்ணி’க் கொள்வதில் பெருமைதானே!

@ஆர்.ஜெயச்சந்திரன், திருச்சி-25.

‘ஊரறிந்த ரகசியம்’ - இப்போதைய சூழ்நிலைக்கேற்ப உதாரணம் கூற முடியுமா?

ராஜஸ்தான்!

@‘வடபழனி’ ஆர்.கே.எஸ்.மகேஷ், சென்னை.

32-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் பா.ம.க-வுக்கு கழுகாரின் அட்வைஸ்?

அவர்கள், ஊருக்கே அட்வைஸ் செய்பவர்களாயிற்றே! எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் மிகவும் ஆழமாக அலசி, ஆராய்ந்து அழுத்தமான அறிக்கைகளை வெளியிடுவதில் டாக்டர் ராமதாஸுக்கு ஈடில்லை. ஆரம்பம் சாதிச் சங்கம் என்றாலும், கட்சியாக உருவெடுத்த காலகட்டத்தில் நடுநிலையான ஒரு பிம்பத்தை ஏற்படுத்தினார். ஆனால், மகனை மந்திரியாக்கி அழகு பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நொடியிலிருந்தே பழையபடி சிக்கிக்கொண்டு விட்டார். அவர் பேசிய சமதர்மமெல்லாம் புதைகுழிக்குள் போய்விட்டது. அவருடைய அறிக்கைகளிலிருந்த அழுத்தமும் காணாமல் போய்விட்டது. அதிலும் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தமிழகத்தின் நலன்களை யெல்லாம் அடகுவைத்து ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் அ.தி.மு.க-வுக்கு எதிராகத் துரும்பைக்கூட அசைக்க மறுக்கிறார். இந்த நேரத்தில் பங்காளியிடம்... ஸாரி பாட்டாளியிடம் யாருடைய அட்வைஸும் எடுபடாது.

@ப.திருக்காமேஷ்வரன், குயவர்பாளையம், புதுச்சேரி-13.

துப்பாக்கிச்சூடு நடத்திய தி.மு.கழக எம்.எல்.ஏமீது அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவில்லை. குறைந்தபட்சம் கண்டனம்கூடத் தெரிவிக்கவில்லையே..?

இன்றைக்கு அனைத்து அரசியல் கட்சிகளிலும் ரியல் எஸ்டேட் தாதாக்கள், மணல் மாஃபியாக்கள், கான்ட்ராக்ட் கொள்ளையர்கள், அரசியல் புரோக்கர்கள் உள்ளிட்டோர்தான் நீக்கமற நிறைந்துள்ளனர். தொழில் போட்டி காரணமாக இப்படி மோதிக்கொள்வது அவர்களுக்கெல்லாம் ஒரு பொழுதுபோக்கு மாதிரி. இதெல்லாம் அனைத்துக் கட்சித் தலைவர்களுமே அறிந்தவைதான்.

‘நாங்கள் வேற மாதிரி’ என்று சொல்லிக்கொள்ளும் மு.க.ஸ்டாலின், இந்த மோதல் பின்னணி தெரிந்ததுமே எம்.எல்.ஏ-வைக் கட்சியிலிருந்தே நீக்கியிருக்க வேண்டும். `நாங்கள் ஒரே மாதிரி’ என்பதைத்தான் தற்போது அவர் காட்டிக்கொண்டிருக்கிறார். அரசியலில் தூய்மை, நேர்மை என்பதையெல்லாம் நம்பி உங்களைப்போல இன்னும் எத்தனை பேர் ஏமாந்துகொண்டிருக்கப் போகிறார்களோ!

ஸ்டாலின்
ஸ்டாலின்

@காந்தி, திருச்சி.

‘பழைய இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாமலே போகலாம்’ என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கிறதே?

உண்மையில் இயல்பு வாழ்க்கை என்பது இயற்கை சார்ந்த வாழ்க்கையே. இடையில் வாழ்ந்தது/வாழ்ந்துகொண்டிருப்பது இயல்புக்கு மாறான வாழ்க்கையே. இதைப் புரிந்து கொண்டாலே... இதெல்லாம் ஒரு பிரச்னையாகவே இருக்காது.

@ஸ்ரீபூவராகவன், படியூர், திருப்பூர் மாவட்டம்.

‘கொரோனாவைக் கட்டுப்படுத்த, அரசுக்கு எதிர்க்கட்சிகள் எந்த ஒத்துழைப்பும் அளிக்க வில்லை’ என்று முதல்வர் குற்றம்சாட்டி யிருக்கிறாரே?

‘அவர்கள் என்ன டாக்டர்களா?’ என்று கேட்டவர், இப்போது எதற்காக ஒத்துழைப்பைக் கேட்கிறார். ஒருவேளை, ‘கொரோனா’விடம் பேச்சுவார்த்தை நடத்தக் கூப்பிடுகிறாரோ!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

@ந.சண்முகம், திருவண்ணாமலை.

பீகாரில் 263 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதுப்பாலம், திறந்த ஒரு மாதத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டதே?

‘ஊழல் வழக்கில் சிக்கிச் சிறையிலிருக்கும் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ், நேர்மையாக ஆட்சி நடத்தும் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க கூட்டணிமீது பழி வர வேண்டும் என்பதற்காகவே வெள்ளத்தை ஏவி விட்டுள்ளார்’ என்று இந்நேரம் அறிக்கை விட்டிருப்பார்களே!

கழுகார் பதில்கள்

@பெ.பச்சையப்பன், கம்பம், தேனி மாவட்டம்.

லேசாக இருமினாலும் வீட்டில் இருப்பவர்களே ஒருமாதிரியாகப் பார்க்கிறார்களே... என்ன கொடுமை இது?

‘கொரோனா’ கொடுமை!

@நேக்கு, சென்னை-116.

கழுகாருக்கு ‘பிரம்ம’ப் பார்வையும் உண்டுதானே?

சமப்பார்வை மட்டுமே உண்டு.

@மா.உலகநாதன், திருநீலக்குடி.

கந்தசஷ்டி அவதூறு பிரச்னையில் சூரசம்ஹாரம் ஆகப்போவது யார்?

மக்களின் நிம்மதி!

@மு.கல்யாணசுந்தரம், நடூர், கோவை மாவட்டம்.

திருப்பதி கோயிலில் இருக்கும் 50 கோடி ரூபாய் மதிப்பிழந்த நோட்டுகளை மாற்றிக் கொடுக்க வேண்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரியுள்ளனரே. அப்படி மாற்றிக்கொடுத்தால் வில்லங்கம் வராதா?

பழைய நோட்டுகளை வைத்திருப்பது சட்டப்படிக் குற்றம். அதை மாற்றித்தர வேண்டும் என்று கோரிக்கை வைப்பது பெரும் குற்றம். இது தெரிந்திருந்தும் நடவடிக்கை ஏதும் எடுக்காமலிருப்பது மாபெரும் குற்றம். ஆனால், இதற்கென அவசரச் சட்டம் போட்டு மாற்றிக் கொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஏனென்றால், ‘பெரியவர்கள் செய்தால், பெருமாள் செய்த மாதிரி’ ஆயிற்றே!

ரஜினி
ரஜினி

@நேக்கு, சென்னை-116.

‘நவம்பரில் கட்சிப் பெயரை ரஜினி அறிவிப்பார்’ என்கிறாரே ‘கராத்தே’ தியாகராஜன்?

ஓ... ‘ஏப்ரல் ரிலீஸ்’, ‘ஆகஸ்ட் ரிலீஸ்’, ‘அக்டோபர் ரிலீஸ்’ எல்லாம் மாறி, `நவம்பர் ரிலீஸ்’ என்றாகிவிட்டதோ! பாவம்தான் ரசிகர்கள்!

‘முனைவர்’ ஜேம்ஸ் ராஜசேகரன், மதுரை.

அரசின் உயர் பதவியிலுள்ள ஓர் அதிகாரியே தங்கக் கடத்தலில் ஈடுபடுகிறார். அப்படியென்றால் வருமானம் போதவில்லை என்றுதானே அர்த்தம்?

என்ன... மாதம் ஒரு லட்சமோ, இரண்டு லட்சமோ சம்பளமாகக் கொடுப்பார்கள்; காரும் டிரைவரும் கொடுப்பார்கள்; இரண்டு, மூன்று உதவியாளர்கள் கொடுப்பார்கள்; சில பல லட்சங்களில் வீடு கொடுப்பார்கள்; குடும்பத்துக்கே சல்யூட் அடிப்பார்கள்; அடிக்கடி வெளிநாடு சென்றுவருவதற்கு டிக்கெட் போட்டுக் கொடுப்பார்கள்; சில பல கோடிகள் கிம்பளமாகக் கிடைக்கும். ‘உயர்’ பதவியிலிருக்கும் ‘உயர்ந்த’வர் களுக்கு இதெல்லாம் கட்டுப்படியாகுமா!

@கா.கு.இலக்கியன், செங்குன்றம், சென்னை-52.

தெலுங்கின் மிகச்சிறந்த இலக்கியவாதியும், புரட்சியாளருமான வரவர ராவ், இரண்டு ஆண்டுகளாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டுக் கொடுமைப்படுத்தப் படுகிறாரே?

`ஆட்சியாளர்களைச் சொறிந்துவிடுபவர்கள் மட்டுமே வாழ முடியும்’ என்பதுதான் சாக்ரடீஸ் காலத்துக்கும் முன்பிருந்தே ஆட்சியாளர்களின் லட்சணம். அதனால்தான் மக்களுக்காக எழுதுபவர்களின் எண்ணிக்கை எப்போதும் மிகமிகக் குறைவாகவே இருக்கிறது. இப்படி குரல்வளையை நெரிப்பதன் மூலமாக அந்த எண்ணிக்கையையும் குறைத்துவிடப் பார்க்கிறார்கள்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள்,

ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு