Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்

பெரும் பெரும் போராட்டங்களுக்குப் பிறகு பாட்டாளிகளுக்கும் ஏழை, எளியோருக்கும் கிடைத்த உரிமைகளையெல்லாம் திட்டமிட்டே ஒவ்வொன்றாகத் தட்டிப் பறித்துக்கொண்டிருக் கிறது மோடி அரசு.

கழுகார் பதில்கள்

பெரும் பெரும் போராட்டங்களுக்குப் பிறகு பாட்டாளிகளுக்கும் ஏழை, எளியோருக்கும் கிடைத்த உரிமைகளையெல்லாம் திட்டமிட்டே ஒவ்வொன்றாகத் தட்டிப் பறித்துக்கொண்டிருக் கிறது மோடி அரசு.

Published:Updated:
கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்

@காந்தி, திருச்சி.

அயோத்தியில் ராமருக்குக் கோயில் கட்டத் தோண்டும்போது புத்தர் சிலைகள் கிடைப்பது பற்றி..?

வழக்கமான வாட்ஸ்அப் வாந்தி!

@பாலு, வேர்க்கிளம்பி, கன்னியாகுமரி மாவட்டம்.

‘ஜெயலலிதா வாழ்ந்த வீட்டைக் கோயில் ஆக்க வேண்டும்’ என்கிறாரே அமைச்சர் செல்லூர் ராஜூ?

‘வாழ்வதற்கு வீடே இல்லாமல் பல லட்சம் பேர் வீதிகளில் குடியிருக்கிறார்கள்’ என்பதை இந்த ‘மாண்புமிகு’வுக்கு யாராவது எடுத்துச் சொன்னால்கூடப் புரியுமா என்று தெரியவில்லையே!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

@‘காட்டாவூர்’ தேனரசு, பொன்னேரி, திருவள்ளூர் மாவட்டம்.

மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டைப் பறித்துவிட்டதே மோடி அரசு?

பெரும் பெரும் போராட்டங்களுக்குப் பிறகு பாட்டாளிகளுக்கும் ஏழை, எளியோருக்கும் கிடைத்த உரிமைகளையெல்லாம் திட்டமிட்டே ஒவ்வொன்றாகத் தட்டிப் பறித்துக்கொண்டிருக் கிறது மோடி அரசு. கண்டிக்க வேண்டியவர்களில் பலரும் ‘கமிஷன்’களுக்காகவும், பதவிகளுக்காகவும் ஆளும் பா.ஜ.க-வின் காலடியில் கட்டுண்டு கிடப்பதால், எதிர்காலத் தலைமுறையின் கனவுகள் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைக்கப் படுகின்றன. இதுபோன்ற ‘கோடரிக் காம்புகளை’யெல்லாம் ‘ரட்சகர்’களாக நம்பி நம்பியேதான் பல தலைமுறைகளாக ஏமாந்துகொண்டேயிருக்கிறார்கள் பலரும்.

@எஸ்.சிவகுமார், திருச்சி.

‘கிருமிநாசினி தெளிப்பதால் எந்தப் பலனும் இல்லை’ என்று உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது. ஆனாலும் இங்கே தெளித்துக்கொண்டிருக்கிறார்களே?

‘கைமேல் பலன்’ கிடைப்பதால்தானே தெளித்துக்கொண்டிருக்கிறார்கள்.

@ஆர்.ராமசாமி, பொள்ளாச்சி, கோயம்புத்தூர் மாவட்டம்.

‘பிஎம் கேர் அறக்கட்டளையின் வரவு-செலவு குறித்த விவரங்களை வெளியிட முடியாது’ என்று ஆர்.டி.ஐ மூலமான கேள்விக்கு பிரதமர் அலுவலகம் பதில் தந்திருக்கிறதே?

விஷயமே அதில்தான் இருக்கிறது. `கதரும் காவியும் வெவ்வேறல்ல’ என்பது இதன் மூலமாகவும் மீண்டும் ஒரு தடவை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. 1948-ல் நேரு பிரதமராக இருந்தபோது பிரதமர் நிவாரண நிதி வசூலிப்பதற்காக ஓர் அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. பிரதமர், காங்கிரஸ் கட்சியின் தலைவர் உட்பட கதர்கள் பலவும் அதில் உறுப்பினர்கள். கதர்களும் உறுப்பினர்கள் என்பது உறுத்தவே, ‘பிஎம் கேர்’ என்று புதிதாக ஓர் அறக்கட்டளையை இந்தக் காவி(ய)த் தலைவர் உருவாக்கியுள்ளார். இதில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் இன்றைய அமைச்சர்கள் என்றாலும், அவர்களும் காவியே. ஏகத்துக்கும் பணம் கொழிக்கும் இந்த இரண்டு அறக்கட்டளைகளின் கணக்குவழக்குகளை பொதுவெளியில் வைக்க இயலாத அளவுக்கே விதிமுறைகளை உருவாக்கியுள்ளனர். குறிப்பாக, கணக்குகளை ஆடிட் செய்வதற்கான ஆடிட்டரை அவர்களே நியமித்துக்கொள்வார்களாம்.

ஆக, ‘யோக்கியன் வர்றான், சொம்பைத் தூக்கி உள்ளே வை’ என்பதுதான் எப்போதுமே நிரந்தரம்!

@‌‌‌வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டம்.

விவசாயிகளிடமிருந்து தரமான நெல்லைக் கொள்முதல் செய்கிறார்கள். ஆனால், தரமற்ற அரிசியாக ரேஷன் கடைகளில் விற்பனை செய்கிறார்கள். இது எப்படி?

தரமற்றவர்களையே தொடர்ந்து நாம் தேர்ந்தெடுப்பதால்தான்!

@ஜி.ஆர்.மாதேஸ்வரன், புளியம்பட்டி, ஓமலூர்.

வெட்டுக்கிளி பிரியாணி நல்லாயிருக்கா?

ஓ... உங்கள் ஊரில் அதையும் ஆரம்பித்து விட்டீர்களோ!

கழுகார் பதில்கள்

@ப.பாலசுப்பிரமணியம், தத்தமஞ்சி.

‘நலமுடன் இருப்பவர்கள் மாஸ்க் அணிய வேண்டியதில்லை’, ‘மாஸ்க் அணியாமல் வெளியில் செல்ல வேண்டாம்’ என்று ஆரம்பித்து கொரோனா விஷயத்தில் அரசாங்கத்தின் அறிவிப்பில் தெளிவில்லையே?

டாஸ்மாக் சரக்கைக் குடிப்பவர்களிடமே தெளிவை எதிர்பார்க்க முடியாது. அப்படியிருக்கும்போது டாஸ்மாக் மொத்த சரக்கு விற்பனையாளர்களிடம் போய் அதை எதிர்பார்க்கிறீர்களே... நீங்கள்தான் எலுமிச்சைப்பழத்தைத் தேய்த்துக்கொள்ள வேண்டும்.

@ஸ்ரீமல்லிகா குரு, மேற்கு மாம்பலம், சென்னை-33.

‘நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சிதான் நம் நாட்டில் கொரோனா பரவ மூலகாரணமாக இருந்தது’ என சிவசேனாவின் சஞ்சய் ராவத் சொல்வது ஏற்புடையதா?

டெல்லிக்கு - தப்லீக் மாநாடு, சென்னைக்கு - கோயம்பேடு வரிசையில் குஜராத்துக்கு - நமஸ்தே ட்ரம்ப். அப்படியென்றால், இவர்கள் ஆளும் மகாராஷ்டிர மாநிலம்தானே கொரோனா பாதிப்பில் நாட்டிலேயே முதலிடத்தில் இருக்கிறது. அதற்கான காரணத்தையும் சொல்ல வேண்டியது தானே. மொத்தத்தில் ஆள்வோர்களின் கையாலாகாத்தனம்தான் அனைத்துக்குமே காரணம். இன்றளவிலும் பரவலைக் கட்டுப்படுத்த திராணியற்றுத் திணறும் ஆளும் அரசியல்வாதிகள், ஊருக்கு ஊர் ஏதாவது ஒரு காரணத்தைக் கிளப்பிவிட்டுத் தப்பித்துக்கொண்டிருக்கிறார்கள். இதுநாள் வரை பாதிக்கப்பட்டிருப்பது பெரும்பாலும் ஏழைகளே. அரசியல்வாதிகளும் வி.ஐ.பி-க்களும் பாதிக்கப்படும்போதுதான் உண்மையை உணர்வார்களோ என்னவோ!

@ஆர்.அஜிதா, கம்பம்.

‘குஜராத் அரசு மருத்துவமனை மிக மோசமாக உள்ளது’ என்று விமர்சித்த நீதிபதிகள், வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளனரே?

அச்சு அசல் குஜராத் மாடல்!

@வி.ராஜேந்திரன், நூத்தஞ்சேரி.

இந்திய அரசின் சுகாதார அமைச்சர், உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் நியமிக்கப்பட்டிருப்பது கொரோனா ஒழிப்பு நடவடிக்கையைத் துரிதப்படுத்தத்தானே..?

நம்பிக்கைதானே வாழ்க்கை. ஆனால், இது வழக்கமான நடைமுறை அடிப்படையிலான ஒரு விஷயம்தான். இதன் மூலமாக இந்தியாவுக்குப் பெருமை வருகிறதோ இல்லையோ... உலக மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு வளமை கூடும் என்பதில் சந்தேகமில்லை. சுற்றுச்சூழலுக்கு அதிக கேடுகளை விளைவிக்கும் மருந்துத் தயாரிக்கும் தொழிற்சாலைகளை இந்தியாவில் தொடங்குவதிலிருக்கும் சட்டபூர்வமான தடைகள் சட் சட்டென்று விலக ஆரம்பித்துவிடும். ‘தொழில் வளர்ச்சி’ என்கிற கோஷத்துக்குள் அவை அனைத்தும் மறைந்துவிடவும் கூடும்.

@செ.அ.ஷாதலி, தென்காசி.

எங்கள் ஊர் காற்றை அனுபவித்த அனுபவம் கழுகாருக்கு உண்டா?

தென்காசியிலிருக்கும் காசி விஸ்வநாதர் கோயில் கோபுரத்துக்கு முன்பாக நின்றாலே சும்மா தூக்கி அடிக்குமே! அதுசரி, அதென்ன ‘எங்க ஊர்’ என்று சுயநலத்துடன் கூறுகிறீர்கள். ‘நம்ம ஊர்’ என்று சொல்லுங்கள். ‘யாதும் ஊரே... யாவரும் கேளிர்’ என்று சொன்ன கணியன் பூங்குன்றன் பரம்பரையல்லவோ நாம்!

@கார்த்திக் பிரார்த்தனா, அரியலூர்.

மக்களுக்கு நல்லது செய்வதற்காகக் கோடிகளை அள்ளிக்கொடுத்து அறிவுரைகள் பெற வேண்டுமா (ஒன்றிணைவோம் வா)?

முன்பெல்லாம் கேடிகள், இப்போது கோடிகளும்! இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா!

@மூர்த்தி பாலகிருஷ்ணன், அனுப்பானடி, மதுரை-9.

இந்தியாவில் மக்கள் புரட்சி என்பதெல்லாம் சாத்தியம்தானா?

நிச்சயமாக! ஆட்சியாளர்களின் அராஜகமும் அடக்குமுறையும் தாங்க முடியாத அளவுக்குப் போனால், எந்த நாட்டிலும் சாத்தியமே!

@சி.கார்த்திகேயன், சாத்தூர், விருதுநகர் மாவட்டம்.

‘தமிழகத்தில் ஆண், பெண் என்று அனைவரும் தங்களின் பெயருக்குப் பின்னர் சாதியையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்’ என்று அவசரச் சட்டம் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்தானே?

ஏன்... ஏன்... இப்படிச் சாதி வெறியேற்ற நினைக்கிறீர்கள். ஏற்கெனவே, பெயர், ஊர், ஆள், நிறம், பேச்சு உள்ளிட்ட பலவற்றையும் வைத்தே சாதி பார்த்து தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இது வேறா? விட்டால் இதற்கென்று ஒரு ஆப்கூட தயாரித்துவிடுவீர்கள் போலிருக்கிறதே!

@கே. இந்துகுமரப்பன், விழுப்புரம்.

தனியார் வேலை, அரசாங்க வேலை, சுயவேலை - இவற்றில் அதிக பணம் எதில் சம்பாதிக்கலாம்?

செய்யும் தொழிலே தெய்வம். அதில் ‘திறமை’தான் உங்கள் ‘செல்வம்!’

@ஜெ.ஜானி, போரூர், சென்னை-116.

‘கொரோனா பரவலுக்கு சென்னை மக்கள் ஒத்துழைக்காததே காரணம்’ என்கிறாரே முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதன் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார்?

‘வழி நடத்த முடியவில்லை’ என்கிறார். பேசாமல் ‘வழி’யை விட்டுவிட வேண்டியதுதான்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,

757, அண்ணா சாலை,

சென்னை- 600002 kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!