Published:Updated:

கழுகார் பதில்கள்

பொதுவாகவே எதிரில் ஒன்றும், பின்னால் ஒன்றுமாகப் பேசும் அநாகரிகமான செயலை இங்கே பலருமே செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

பிரீமியம் ஸ்டோரி

@திருக்காமேஷ்வரன், குயவர்பாளையம், புதுச்சேரி-13.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்களுக்கு எழுதிய கடிதம் படித்தீரா?

ஊருக்கு உபதேசம்!

@வாசுதேவன், பெங்களூரு.

பிறருக்கு அறிவுரைகளை அள்ளிவீசும் பலரும் அவற்றைப் பின்பற்றுவது இல்லையே?

அறிவுரை சொல்வதையும் ‘தொழில்’ என்றே நினைத்துக்கொண்டிருப்பவர்களால் சொல்ல மட்டும்தான் முடியும்.

@மூர்த்தி பாலகிருஷ்ணன், அனுப்பானடி, மதுரை-9.

ஆப்பிரிக்க அமெரிக்கர் ஜார்ஜ் ஃபிளாய்டு கொல்லப்பட்டது தொடர்பாகக் கருத்து கூறும் இந்திய திரை நட்சத்திரங்கள், இலங்கைத் தமிழர் பிரச்னையில் மட்டும் மௌனம் காப்பது ஏனோ?

எப்போதுமே அப்படித்தான். தமிழர்கள், தமிழகம் என்றாலே அவர்களுக்கெல்லாம் அலர்ஜியே!

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

@அழ.இரஜினிகாந்தன், குன்றத்தூர், சென்னை-69.

எதிர்பார்த்ததுபோலவே பத்தாம் வகுப்புத் தேர்வு ரத்து செய்யப்பட்டுவிட்டதே?

உண்மைதான். அவர்களுடைய ‘எதிர்பார்ப்புகளும்’ * கூடப் பூர்த்தியாகிவிட்டது.

*இதற்கு மேல் இங்கே விளக்கத்தை எதிர்பார்க்கக் கூடாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

@ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி-1.

‘கொரோனா அடி... சாதாரண அடி அல்ல. வல்லரசு நாடுகளையும் கதிகலங்கவைத்த பிசாசுத்தனமான அசுர அடி’ என்கிறாரே ரஜினிகாந்த்?

‘பிசாசுத்தனமான அசுர அடி’ இந்த பஞ்ச் நன்றாக இருக்கிறதுதானே! அநேகமாக, ‘அண்ணாத்தே’ படத்தில் இதையும் எதிர்பார்க்கலாம்!

@சரவணன் ஓ.எ.கே.ஆர், சென்னை-2.

10-ம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்துசெய்திருப்பதால், அந்த மாணவர்களுக்கு எதிர்காலத்தில் பிரச்னைகள் ஏதும் வராதா?

சட்டபூர்வமாக வரவே வராது.

@பொ.பொன்ராஜ்குமார், ராஜபாளையம், விருதுநகர் மாவட்டம்.

ராகுல் காந்தி வரவர ரொம்பவும் கிண்டல் பேர்வழியாகிக்கொண்டிருப்பதை கவனித்தீரா?

‘காமெடி பீஸ்’ என்றாகாமல் இருந்தால் சரி!

@ராம்குமார்.

‘நாடக நடிகர்’, ‘செய்தி வாசிப்பாளர்’ வரதராஜனின் இருவகையான வீடியோக்கள் குறித்து..?

பாவம், என்னதான் நடிகராக இருந்தாலும் அவரும் சராசரி மனிதர்தானே. முதல் வீடியோவில் நெஞ்சைத்தொட்டு உண்மையைப் பேசினார். உடனே, வழக்கு பதிவு செய்துவிட்டனர். இன்றிருக்கும் கொரோனா சூழலில், சிறைக்குள்ளும் தூக்கிப்போட்டால், இந்த வயதான காலத்தில் என்னாவது?! அதனால்தான், ‘இவர்களிடமெல்லாம் பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை’ என்று இரண்டாவது வீடியோ முடிவுக்கு வந்திருப்பார்.

படம்: நன்றி ‘நமது அம்மா’
படம்: நன்றி ‘நமது அம்மா’

@ப்யூனி பிரதர்ஸ்

‘சென்னை மாநகர் மக்களை சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வைப்பதென்பது மிகப்பெரிய சவாலாக இருக் கிறது’ என்கிறாரே அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்?

உண்மைதான். அவராலேயே கடைப் பிடிக்க முடியவில்லை யென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இந்தப் படத்தைப் பார்த்தாலே, அவருடைய கஷ்டம் உங்களுக்குப் புரியும்.

@சரவணக்குமார் சின்னசாமி, தாராபுரம்.

நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்... அமெரிக்காவின் ஜார்ஜ் ஃப்ளாய்டு மரணம், நம்நாட்டில் நடந்திருந்தால் கொலைவழக்காகப் பதிவு செய்யப்பட்டிருக்குமா... இத்தனை போராட்டங்கள் நடத்தத்தான் நமது காவல்துறை விட்டிருக்குமா?

நான் நெஞ்சைத் தொட்டுச் சொல்வதைவிட, அப்படிச் சொல்ல வேண்டியவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும். ப்ளீஸ், கேள்வியை அவர்களுக்கு அனுப்புங்களேன்!

பின்குறிப்பு: எதற்கும் ஜாக்கிரதையாகக் கையாளுங்கள். இப்படியெல்லாம் கேள்வி எழுப்புவதற்கேகூட ‘உபா’ சட்டம் பாயக்கூடும்.

@காந்தி, திருச்சி.

‘தமிழகத்தில் இரண்டு லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள்’ என விஞ்ஞானிகள் கூறுகிறார்களே?

‘சென்னையில் மட்டுமே 3.47 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள்’ என்று தமிழக அரசாங்கத்தின் கணக்கே கூறுகிறது. ‘பெருநகர சென்னை என்கிற வகையில் பார்த்தால், சென்னை மாவட்டம் மற்றும் அதையொட்டிய செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பரிசோதனை மேற்கொண்டால், இப்போதே சுமார் 25 லட்சம் பேருக்கு இதன் பாதிப்பு இருக்கக்கூடும்’ என்று டாக்டர்கள் சிலர் கணிக்கிறார்கள்.

ம்... ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே...’ என்று பாடுவதைத் தவிர வேறு வழியில்லை.

@ராமசேது சுவாமிநாதன்.

இப்போது சென்னை இருக்கும் நிலையில், தலைநகரத்தைத் தற்காலிகமாக திருச்சிக்கு மாற்றலாமே?

ஏற்கெனவே ‘துக்ளக் தர்பார்’தான் நடந்துகொண்டிருக்கிறது. நீங்கள் வேறு எதையாவது கிளப்பிவிடாதீர்கள். உடனே, அதற்கும் ‘பட்ஜெட்’ போட்டுவிடப் போகிறார்கள்.

@சரோஜா பாலசுப்ரமணியன்.

‘காரணத்தோடுதான் புலம்பெயர் தொழிலாளர்களைக் காக்க வைத்தோம். ஆனால், அவர்களுக்குப் பொறுமை இல்லை’ என்று அமித் ஷா கூறியிருப்பது குறித்து?

அவர்கள் பொறுமையாகக் காத்திருக்க, இவர்களைப்போல பங்களாக்களில் குடியிருக்கவில்லையே!

@கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்-6.

மாநிலங்களவையில் தனிப்பெரும் மெஜாரிட்டி கிடைக்க எப்பேர்ப்பட்ட ‘தகிடுதத்த’ வேலையையும் செய்ய பா.ஜ.க தயங்காது போலிருக்கிறதே?

ஆட்சியைப் பிடிப்பதற்காக அயோத்தியில் பாபர் மசூதியையே இடித்துத் தள்ளியவர்களாயிற்றே!

@இரா. வளையாபதி, தோட்டக்குறிச்சி.

கொரோனா வைரஸ் பீதியால் ஹாலிவுட் பட படுக்கையறைக் காட்சிகள் இனி கிராபிக்ஸில்தானாமே?

ம்... உங்கள் கவலை, உங்களுக்கு!

@மாணிக்கம், சங்ககிரி, சேலம் மாவட்டம்.

உண்மையைப் பேசினால் வழக்கு போடுகிறார்களே... (திருப்பதி குறித்த சிவகுமாரின் பேச்சு)?

அவர் பேசியது எந்த அளவுக்கு உண்மை என்பதை ஆதாரங்கள்தான் சொல்ல முடியும். அவை இல்லாவிட்டால், ‘தண்டிக்கப்பட்ட நியாயங்கள்’ என்று தன்னளவில் ‘மௌனமாகப் பேசி’க்கொண்டிருக்க வேண்டியதுதான்.

@‘சோழா’ புகழேந்தி, கரியமாணிக்கம், விழுப்புரம் மாவட்டம்.

‘பத்தாம் வகுப்பு ஆல் பாஸ்’ என்று தெலங்கானா மாநிலத்தில் முடிவு எடுத்திராவிட்டால், தமிழகத்தில் என்ன நடந்திருக்கும்?

மாணவர்களுக்கு ஏற்கெனவே இரண்டு மாஸ்க்குகள் கொடுத்துள்ளோம். மேற்கொண்டு ஒவ்வொரு தேர்வுக்கும் ஒரு மாஸ்க் வழங்கப்படும்; ஒவ்வொரு மாணவரின் வீட்டுக்கும் கார் அனுப்பப்படும்; தேர்வு எழுதும்போது மாணவர்களின் பயத்தைப் போக்குவதற்காக அவர்களுடைய அம்மா-அப்பாவையும் கூடவே அனுமதிப்போம்; காலையில் இட்லி, வடை, ஊத்தப்பம் மற்றும் காபி, மதியம் உயர்தர உணவகத்திலிருந்து சாப்பாடு கொடுப்போம்... இப்படி உச்ச நீதிமன்றம் வரை போயிருப்பார்கள். கிடைத்த கேப்பில் ‘கிடா’வும் வெட்டிக்கொண்டே இருந்திருப்பார்கள்.

@ம.ரம்யாமணி, வெள்ளக்கோவில், திருப்பூர் மாவட்டம்.

ஐந்தறிவு உள்ள விலங்குகளிடம், ஆறறிவு கொண்ட மனிதர்கள் சிலர் செய்யும் பாவச்செயல் குறித்து?

‘ஆறறிவு’ என்கிற திமிர்தான் அனைத்துக்கும் காரணம். உண்மையில், ‘ஓரறிவுகூட இல்லாதவர்கள் நாங்கள்’ என்பதைத்தான் இது போன்ற செயல்கள் மூலம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

@‘வடபழனி’ ஆர்.கே.எஸ்.மகேஷ், சென்னை.

கொரோனா அரக்கனிடம் தி.மு.க-வின் எம்.எல்.ஏ-வான ஜெ.அன்பழகன் பலியாகிவிட்டாரே?

‘அவன் ஆபத்தான அரக்கன்’ என்று தெரிந்திருந்தும் அன்பழகன் உட்பட அரசியல்வாதிகள் பலரும்கூட அலட்சியம் காட்டித்தான் வந்தனர்/வருகிறார்கள். ‘நலத்திட்ட உதவிகள்’ என்று ஊருக்கு ஊர் போய்க் கூட்டம் கூட்டமாக மொய்க்கிறார்கள். ‘இனியாவது ஜாக்கிரதையாக இருங்கள்’ என்று தன் உயிரைக் கொடுத்து எச்சரிக்கை செய்திருக்கிறார் அன்பழகன்!

@இல.கண்ணன், நங்கவள்ளி, சேலம் மாவட்டம்.

நடிகை குஷ்பு பத்திரிகையாளர்களை விமர்சித்திருப்பது குறித்து?

அது, மேடைப்பேச்சு அல்ல. தனியாகச் சிலரிடம் பேசிக் கொண்டிருந்தது. பொதுவாகவே எதிரில் ஒன்றும், பின்னால் ஒன்றுமாகப் பேசும் அநாகரிகமான செயலை இங்கே பலருமே செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். அது வாயளவோடு இருந்தால் பிரச்னை இல்லை... வாடஸ்அப் அளவில் வந்தால் ஆபத்தே!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,

757, அண்ணா சாலை,

சென்னை- 600 002 kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு