Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்

ஏற்கெனவே ஏகப்பட்ட இடைவெளிகளுடனேயேதானே இருக்கிறது நம் இந்தியச் சமூகம்.

@சரோஜா பாலசுப்ரமணியன்.

வரும் சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க-வும் பா.ஜ.க-வும் கூட்டணி சேருமா?

இரண்டு கட்சிகளுமே கொள்கைக்காகப் பதவிகளைத் தியாகம் செய்வதைவிட, பதவிக்காகக் கொள்கைகளையே குப்பைத் தொட்டியில் தூக்கி வீசக்கூடியவையே!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

@வாசுதேவன், பெங்களூரு-67.

பொய் பேசாமல் வாழ முடியுமா?

முடியுமே (நான் பொய் சொல்லவில்லை)!

@கிணற்றுத்தவளை, புதுக்கோட்டை.

அனைவருக்கும் கொரோனா ஆப்பு வைத்துக் கொண்டிருக்கும் நிலையிலும், ‘வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பைக் குறைக்கிறோம்’ என்று சுற்றுச்சூழலுக்கு எதிராகக் கோடரியைத் தூக்குகிறார்களே..?

‘அதெல்லாம் இல்லை’ என்று தற்போது அறிக்கைவிட்டுள்ளனர். ஆனால், இவர்களுடைய அகராதியில் ‘இல்லை’ என்றாலே ‘இருக்கிறது’ என்றுதான் எப்போதுமே அருஞ்சொற்பொருள். சுனாமி, வெள்ளம், புயல் என எது வந்தாலும் ஊரை அடித்து உலையில் போட்டே பழக்கப்பட்டுவிட்ட இவர்களுக்கு, கொரோனாவும்கூடப் பணம்காய்ச்சி மரமே!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

@‘நன்னிலம்’ இளங்கோவன், மயிலாடுதுறை.

பேருந்துப் பயணத்தின்போது சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதில் மக்கள் கவனம் செலுத்துவதில்லையே?

‘ஏற்கெனவே ஏகப்பட்ட இடைவெளிகளுடனேயேதானே இருக்கிறது நம் இந்தியச் சமூகம். தனியாக வேறு இடைவெளி விட வேண்டுமா’ என நினைக்கிறார்களோ, என்னவோ!

கழுகார் பதில்கள்

@ஹெச்.மோஹன், மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம்.

நீங்கள் கேள்விப்பட்ட பொய்களில், ‘ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்’ என்று எதைக் கூறுவீர்கள்?

‘வறுமையை ஒழிப்போம்’ என்று 72 ஆண்டு களுக்கும் மேலாக நம்முடைய நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற பட்ஜெட்களில் தவறாமல் எழுதி வாசிக்கப்படுவதைத்தான்!

@ராமலிங்கம்.ஆர்.

இரண்டு மாதங்களுக்கும் மேலாகப் பள்ளிக்கூடம் மூடப்பட்டுள்ளது. விடுமுறையும் தொடர்கிறது. ஆனால், எந்தவிதமான பிடித்தமும் இல்லாமல் ஆசிரியர்களுக்குச் சம்பளம் தரப்படுவது சரியா?

அந்த ஆபீஸ் ஊழியர்கள் மூன்று மாதங்களாக வீட்டிலிருக்கிறார்கள், அது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லை; இந்த ஆபீஸ் ஊழியர்கள் ‘அக்கடா’ என்று எப்போதுமே தங்கள் வீட்டு முன்பாக நடந்தபடியிருக்கிறார்கள், அது உங்கள் ஞானக் கண்களுக்குத் தெரியவில்லை. ஆனால், பக்கத்து வீட்டில் குடியிருக்கும் ஆசிரியர் ஒருவர் பள்ளிக்கூடத்துக்குப் போகவில்லை என்பது மட்டும் உறுத்துகிறது. இதெல்லாம் நியாயமே இல்லை ராமலிங்கம் சார்!

@பி.அசோகன், கோபிச்செட்டிபாளையம் தாலுகா, ஈரோடு மாவட்டம்.

‘புதியதோர் உலகம் செய்வோம்’ என்று நம்புகிறீர்களா?

அந்த வேலையைத்தான் கொரோனா எடுத்துக்கொண்டுவிட்டதே!

@ப.திருக்காமேஷ்வரன், குயவர்பாளையம், புதுச்சேரி-13.

நடிகை ரம்யா கிருஷ்ணன் வந்த காரில் 103 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஓட்டுநரை மட்டும் போலீஸ் கைது செய்திருக்கிறது. அதெல்லாம் ‘அவருக்கு’த் தெரியாமலா இருந்திருக்கும்?

அதெல்லாம் ‘அவர்களுக்கு’த் தெரியாமலா இருந்திருக்கும்!

ரம்யா கிருஷ்ணன்
ரம்யா கிருஷ்ணன்

@விஜயகுமார்.ஜி, காட்டூர், திருச்சி மாவட்டம்.

அரசியல்வாதிகள், ‘நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா?’னு அடிக்கடி சவால் விடுறாங்க. அப்படி யாராவது விவாதிச்சிருக்காங்களா... ஜெயிச்சிருக்காங்களா?

‘நேருக்கு நேர் விவாதத்தில் கடும் மோதல்; ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் கட்டி உருண்டனர்; கலவரம் வெடித்தது; போலீஸ் தடியடி...’ இப்படியெல்லாம் இதுவரையில் வழக்கு எதுவும் பதிவானதுபோலத் தெரியவில்லையே!

@எம்.கல்யாணசுந்தரம், கணபதி புதூர், கோயம்புத்தூர் - 6.

மத்திய பிரதேச மாநிலத்தில் கொரானோவை முத்தத்தால் குணப்படுத்துவதாகக் கூறிய சாமியார் ஒருவர், 19 பேருக்கு அதைப் பரப்பிவிட்டு பலியாகியிருக்கிறாரே?

‘இதைக் கையில் கட்டினால், காட்டேரியை விரட்டலாம்’ என மந்திரவாதி தரும் தாயத்து; ‘காலே இல்லாதவர்களைக்கூட எழுந்து ஓடவைப்பேன்’ என்று சிலுவை போட்டுச் செய்யப்படும் பிரசங்கம்; ‘இந்த சாம்பிராணிப் புகையைப்போட்டு மயில் தோகையால் அடித்தால் பேய் ஓடிவிடும்’ என்று மசூதி வாசலில் சுற்றப்படும் ரீல்... இப்படி பலவற்றையும் இன்றும்கூட நம்பிக்கொண்டே இருக்கிறார்கள் மக்கள். அவர்களையெல்லாம் மீட்க வேண்டிய ‘மீட்பர்’களோ, ஓட்டு அரசியலுக்காக மறுபடி மறுபடி அந்தப் புதைகுழிகளின் பக்கமே மக்களைத் துரத்திக்கொண்டுள்ளனர். ஒருநாளும் ஓயப் போவதில்லை இந்தப் பரிதாபங்கள்!

@ஆ.மாடக்கண்ணு, பொட்டல்புதூர், தென்காசி மாவட்டம்.

கேட்காமலேயே கொடுப்பது அரசா... ‘கேளுங்கள் தரப்படும்’ என்று கேட்கும்வரை காத்திருப்பது அரசா?

கேட்டோ, கேட்காமலோ கொடுப்பதைவிட, தேவையை அறிந்து மட்டுமே கொடுப்பதுதான் நல்லரசு!

@பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை, சேலம் மாவட்டம்.

‘போர்க்குணம்’மிக்க டாக்டர் ராமதாஸை சமீபகாலமாகக் காண முடியவில்லை. அது ஏன்?

‘போர்வாள்’ வைகோ, ‘எழுச்சித் தமிழர்’ திருமாவளவன், ‘தேசியப் பாதுகாவலர்’ டாக்டர் கிருஷ்ணசாமி இப்படி பலரையும்கூடத்தான் காண முடிய வில்லை.

@வி.ரவிச்சந்திரன், புதுக்கோட்டை.

கொரோனா ஓய்ந்தாலும், மாதம் ஒரு நாள் கட்டாய ஊரடங்கு அமல்படுத்தலாம்தானே?

அது, ஞாயிற்றுக்கிழமை என்றாலும் அனைவருக்கும் ஓகேதானா என்று கேட்டுச் சொல்லுங்கள்!

@கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூர்-77.

தமிழ் மாநிலக் கட்சி, பா.ஜ.க-வுடன் இணைந்துவிட்டதாமே... அப்படி ஒரு கட்சி தமிழகத்தில் இருந்ததா?

விசாரித்துச் சொல்லட்டுமா!

@கே.இந்து குமரப்பன், விழுப்புரம்.

ஆந்திர மாநிலத்தில், ‘நிர்ணயிக்கப்பட்ட தேதியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளதே?

எடப்பாடிகாருக்கு தம்புடுகாரு, அக்கடயும் உன்னாரு!

@ஆர்.மாணிக்கவேலன்.

தனியார் கல்வி நிறுவனங்களின் இணையவழிக் கல்விச் (வியாபார) சேவை குறித்து..?

சேவை செய்வதற்கு அவர்கள் ஒன்றும் மகாத்மாக்கள் இல்லை... ‘வசூல் ராஜா’க்கள். சில நிறுவனங்கள் இதை உண்மையிலேயே நல்லெண்ணத்துடன் செய்தாலும், அதைப் பாராட்ட முடியாத நிலையை உருவாக்கி வைத்துவிட்டனர் இந்த ‘வசூல் ராஜாக்கள்.’

@க.அருச்சுனன், செங்கல்பட்டு.

கொரோனா தடுப்பில் தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்தியாக உள்ளனவா, மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

முதலில் அவர்களுக்கே திருப்தி இல்லையே... ‘சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றம்’, ‘மீண்டும் முழு ஊரடங்கு’ என்று தினம் தினம் அவர்களே திருப்தியின்மையை வெளிச்சம் போட்டுக் கொண்டிருக்கிறார்களே!

@பி.எஸ்.ஏ ஜெய்லானி, கடையநல்லூர்.

‘கொரோனாவால் உயிரிழந்த தி.மு.கழக எம்.எல்.ஏ-வான அன்பழகனுடைய மருத்துவச் செலவை தமிழக முதல்வர் ஏற்றுக்கொண்டார்’ என்று பரவும் செய்தி உண்மையா?

வழக்கமான வாடஸ்அப் வதந்தியே. ஜெ.அன்பழகன் அந்த அளவுக்கு ஏழையல்ல. அத்துடன், அவர் அனுமதிக்கப்பட்டிருந்த ரேலா மருத்துவமனை, தி.மு.க பிரமுகர்களுக்கு மிக மிக நெருக்கமானதும்கூட!

@ஆ.பிரகாஷ், செம்ஸ்ஃபோர்டு, இங்கிலாந்து.

தமிழ்நாட்டில் கொரோனா தீவிரமடைவதால் மன அழுத்தம் அதிகரிக்கப்போவது மக்களுக்கா... ஆட்சியாளர்களுக்கா?

மன அழுத்தமெல்லாம் மக்களுக்குத்தான். ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை பண அழுத்தம் மட்டுமே!

@ஜெ.நெடுமாறன், ராமாபுரம், சென்னை-89.

இப்போது நடைமுறையில் இருப்பது லாக் டெளனா... லூஸ் டெளனா?

மக்களையெல்லாம் லூசு ஆக்கும் டெளன்!