Published:Updated:

கழுகார் பதில்கள்

மற்றபடி எல்லா ‘கொம்பன்’களும் கண் முன்னே நடமாடிக் கொண்டுதானே இருக்கிறார்கள்!

பிரீமியம் ஸ்டோரி

@இல.கண்ணன், நங்கவள்ளி, சேலம் மாவட்டம்.

‘அரசு மற்றும் புறம்போக்கு நிலங்களை மீட்க தனிப்பிரிவு தொடங்கலாமே’ என்று தமிழக அரசைக் கேட்டுள்ளதே உயர் நீதிமன்றம்?

‘திருடன் கையில் சாவி’ என்ற முடிவுதான். ஆனால், நல்ல திருடனா... கெட்ட திருடனா எனத் தெரியவில்லையே!

கே.பாஸ்கர், மல்லியம், நாகப்பட்டினம் மாவட்டம்.

‘கன்னிமாடம்’, ‘பாரம்’ படங்களைப் பார்த்துவிட்டீர்களா?

‘கன்னிமாடம்’, ‘பாரம்’ சுமக்க வைத்துவிட்டது! இத்தகைய கதையம்சமுள்ள படங்களை எடுப்பதற்கே தனி தைரியம் வேண்டும். அது எப்போதோ... யாராலோ வெளிவருகிறது. அதற்காகவே இந்த இரண்டு படக்குழுக்களையும் நாம் பாராட்ட வேண்டும். இதுபோன்ற படங்களை அழுத்தமாக ஆதரிக்கவும் வேண்டும்.

டி.கிருஷ்ணமூர்த்தி, விழுப்புரம்.

‘தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய முறைகேடுகளில் சம்பந்தப்பட்ட எந்தக் கொம்பனையும் விட மாட்டோம்’ என்று அமைச்சர் ஜெயக்குமார் சீறுகிறாரே?

‘கொம்பன், நீயா... நானா’ என்ற சண்டை மட்டும்தான் நடக்கிறது. மற்றபடி எல்லா ‘கொம்பன்’களும் கண் முன்னே நடமாடிக் கொண்டுதானே இருக்கிறார்கள்!

@மா.உலகநாதன், திருநீலக்குடி.

‘இனிமேல்தான் ஆக்‌ஷன்’ என்கிறாரே மோடி?

ஐயய்யோ... இத்தனை வருஷங்களா பார்த்தது வெறும் ஒத்திகைதானா!

@சி.கார்த்திகேயன், சாத்தூர், விருதுநகர் மாவட்டம்.

தி.மு.க கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் உருவாகிவிட்டார். அ.தி.மு.க கூட்டணியில்?

கூட்டணியே கருவாகவில்லையே!

ஆர்.ராமசாமி, பொள்ளாச்சி, கோயம்புத்தூர் மாவட்டம்.

‘வரிசையாக தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளால், தேர்வுகள் மீதான நம்பிக்கையே தகர்ந்துவிட்டது’ என்று உயர் நீதிமன்ற நீதிபதி வேதனையை வெளிப்படுத்தியுள்ளாரே?

இதுபோன்ற முறைகேடுகள் சார்ந்த வழக்குகளில் தரப்படும் முரண்பாடான தீர்ப்புகளால், நீதிமன்றங்கள் மீதுகூடத்தான் மக்களின் நம்பிக்கை தகர்ந்துகிடக்கிறது.

ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

@பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை, சேலம் மாவட்டம்.

தமிழகத்தில் ‘பா.ஜ.க ஆட்சி’ அமைந்தால் எப்படி இருக்கும் என்பதை, கடந்த மூன்று ஆண்டுக்கால ‘எடப்பாடி ஆட்சி’மூலம் பார்த்துவிட்டோம்தானே?

‘இது’, ‘அது’க்கும்மேலே!

@பி.அசோகன், கொளப்பலூர், ஈரோடு மாவட்டம்.

எடப்பாடி பழனிசாமியிடம் தங்களுக்குப் பிடித்தது?

பளீர் சிரிப்பு!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

@எல்‌.ஆர்.சுந்தரராஜன், மடிப்பாக்கம்.

‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்’ விஷயத்தில், ‘ஜல்லிக்கட்டு நாயகனை’ மிஞ்சிவிட்டார்தானே எடப்பாடி?

கழுகார் பதில்கள்

‘ஏமாற்றுவதில் அவரை இவர் மிஞ்சிவிட்டார்’ என்று சொல்லவேண்டிய சூழல் வரும் என்றுதான் தோன்றுகிறது. தன்னெழுச்சியாக இளைஞர்கள் திரண்டு எழுந்து போராடியதன் விளைவே, ஜல்லிக்கட்டுக்கான தடைநீக்கம். அந்த நேரத்தில் அரசியல்ரீதியிலான நெருக்கடிகளில் சிக்கித் தவித்த ஓ.பன்னீர்செல்வம் மேலிடத்து ஆசிகளோடு நடத்திய நாடகத்துக்குக் கிடைத்த பரிசுதான் ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என்று ஜால்ராக்களால் சூட்டப்பட்ட பட்டம். அன்றைக்கு அவருடைய கையில் இருந்த காவல் துறைதான் ‘ஜல்லிக்கட்டுப் புரட்சி’ நடத்திய இளைஞர்களை கண்மூடித்தனமாகத் தாக்கியது; அடைக்கலம் கொடுத்த மீனவர்களின் உடைமைகளைக் கொளுத்தியது.

அதேபோல்தான், ‘நான் அடிப்பதுபோல் அடிக்கிறேன்... நீ அழுவதுபோல் அழு’ என்கிறரீதியில் ‘பாதுகாப்பு மண்டலம்’ என்பதையும் மேலிடத்தின் ஆசிகளோடு எடுத்துவிட்டுள்ளார் எடப்பாடி. அதற்குள் இருக்கும் பூதங்கள் இனிதான் புறப்பட்டு வெளிவர வேண்டும். அதற்குள்ளாக வெற்றி விழாவே கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள்.

@கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்-6.

ஊரெங்கும் மதுக்கடைகளைத் திறந்துவைத்து பெண்களும் சிறார்களும்கூட மதுவுக்கு அடிமை ஆகும் சூழலை ஏற்படுத்திவிட்டு, ‘பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள்’ எனக் கொண்டாடும் இந்த அரசு பற்றி?

ஆலையின் மோசமான கழிவுநீரை அப்படியே ஆற்றில் திறந்துவிடுவார்கள்; அந்த ஊருக்கு பிள்ளையார் கோயில் கட்டிக் கொடுத்து மக்களை அப்படியே மெய்யுருகவைப்பார்கள். இதையெல்லாம் கேள்விப்பட்டதில்லையோ!

லட்சுமி செங்குட்டுவன், வேலூர், நாமக்கல் மாவட்டம்.

சிறப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டிய அளவுக்கு தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுப்போய்விட்டதா என்ன?

அங்கிருந்து ஆட்டுகின்றவன்...

தினம் ஆடுகின்ற நாடகம் இது.

@ப்யூனி பிரதர்ஸ்.

அமெரிக்கவாழ் இந்தியரான ஶ்ரீ ஶ்ரீநிவாசன், அந்த நாட்டின் உச்ச நீதிமன்றத்துக்கு அடுத்தபடியான ‘கொலம்பியா சர்க்யூட் அப்பீல் கோர்ட்’ தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருப்பது தமிழருக்குக் கிடைத்த பெருமைதானே!

தமிழர், இந்தியர் என்ற பெருமைகளைவிட, அவருடைய செயல்பாடுகள் நீதிக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்பதுதான் முக்கியம். அதையும் சாதிக்க வாழ்த்துவோம்!

எஸ்.கே.வாலி, த.முருங்கப்பட்டி, திருச்சி மாவட்டம்.

டெல்லி வாக்காளர்கள் காங்கிரஸை முற்றாக வெறுத்து, பா.ஜ.க-வைப் புறக்கணித்து, ஆம் ஆத்மியை ஆதரிப்பது மாயாஜாலமாகத் தெரிகிறதே?

மாயாஜாலமென்று ஏதுமில்லை. கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருபவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். டெல்லி சட்டமன்றத் தேர்தல் என்பது, கிட்டத் தட்ட ஒரு மாநகராட்சித் தேர்தல் போலத்தான். காங்கிரஸும் பா.ஜ.க-வும் ஆட்சிக்கட்டிலில் ஏறியதுமே ‘டெல்லி ராஜா’க்களாக மாறிவிடுவதுதான் பிரச்னை. ஆனால், தேர்தலுக்குப் பிறகும் மக்களோடு மக்களாக வீதியில் நிற்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். மக்களின் அடிப்படைத் தேவை களைத் தேடித் தேடி அறிந்து நிறைவேற்றுகிறார். அவ்வளவுதான். பத்து மாதங்களுக்கு முன்பு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது மொத்தமாக டெல்லியையே பா.ஜ.க-விடம் அள்ளிக் கொடுத்த இதே மக்கள், சட்டமன்றம் என்றதும் துடைப்பத்தை கையில் எடுத்துவிட்டனர்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

சாந்தி மணாளன், கருவூர்.

டெல்லியில் எட்டு பெண் எம்.எல்.ஏ-க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டபோதும் ஒருவருக்குக்கூட அமைச்சர் பதவி கொடுக்கவில்லையே அரவிந்த் கெஜ்ரிவால்?

50 சதவிகிதம் அவமானம்!

பொன்விழி, அன்னூர்.

முக்கியப் பிரச்னைகளின்போது ரஜினி, சீமான், நித்யானந்தா போன்றோர் இடையில் புகுந்து திசைதிருப்புவதுபோல் எனக்குத் தோன்றுகிறது... கழுகாருக்கு?

எல்லோருக்கும் ‘இஸ்க்.. இஸ்க்’ என்றா கேட்கிறது... எனக்கும் ‘இஸ்க்... இஸ்க்’ என்றுதான் கேட்கிறது!

@சரவணக்குமார் சின்னசாமி, தாராபுரம்.

ஆதிச்சநல்லூர்மீது காட்டப்படும் மத்திய அரசின் கரிசனப் பார்வையால், கீழடி இன்னும் ஆழமாகப் புதைக்கப்பட்டுவிடுமோ?

‘வேற்றுமையில் ஒற்றுமை... இதுதான் இந்தியாவின் பெருமை’ என்று பேசிய கதர்களின் காலத்திலும் சரி... ‘ஒரே நாடு ஒரே கார்டு’ என்றெல்லாம் கலர்கலராகக் கவரப்பார்க்கும் காவிகளின் காலத்திலும் சரி... தென்னக வரலாறு, குறிப்பாக தமிழகத்தின் வரலாறு மேலும் மேலும் புதைக்கப்படத்தான் செய்கிறது.

வடக்கே, மதுரா தொடங்கி பல்வேறு அகழாய்வுகளுக்கும் பல ஆண்டுகளாகப் பணத்தைக் கொட்டுகிறார்கள். ஆனால், பூம்புகார், ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட தமிழக வரலாறு அனைத்தையுமே பல்லாண்டுகளாகப் புதைத்தேவைத்துள்ளனர். இப்போதுகூட கீழடியின் பெருமைகளை நாம் பேசிக் கொண்டிருக்கும்போதே, மொத்தமாகப் புதைத்துவிட்டு வெளியேறிவிட்டது மத்திய தொல்பொருள் துறை. ‘ஆதிச்சநல்லூரில் அகழ்வைப்பகம்’ என்ற மத்திய அரசின் அறிவிப்புகூட, ‘வருகிற தேர்தலில் கீழடிக்கு பதிலடி பலமாகக் கிடைத்துவிடுமே’ என்ற அச்சத்தால் விளைந்ததுதான்.

உலக அளவிலான புதைபொருள் ஆராய்ச்சிகள் எல்லாம் ‘மானுடவியல்’ என்பதை நோக்கித்தான் நகர்கின்றன. இங்கே மட்டும்தான்... எல்லாவற்றிலும் ‘வடக்கு, தெற்கு’ வம்படி!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு