Published:Updated:

கழுகார் பதில்கள்

லிசிபிரியா
பிரீமியம் ஸ்டோரி
News
லிசிபிரியா

இதையும்கூட விமர்சித்தால், ‘எதிரிக்கட்சி’ என்கிற விமர்சனம் உண்மையாகிவிடும்.

டி.வளவன், தென்காசி.

‘குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை நிறுத்தவும், டெல்லி வன்முறை பற்றிய செய்திகளை திசைதிருப்பவும்தான் கொரோனா பீதியை பி.ஜே.பி கிளப்பியிருக்கிறது’ என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகிறாரே?

மிகவும் முக்கியமான பதவியில் அமர்ந்து கொண்டு இப்படியெல்லாம் பேசுவது ஆபத்தானது. உலகமே பீதியில் உறைந்து கிடக்கிறது. அமெரிக்காவில்கூட மரணங்கள் தொடர்கதையாகிக்கொண்டிருக்கின்றன. இத்தகைய சூழலில், நாட்டு மக்களை எச்சரிக்கை செய்ய வேண்டியது மத்திய அரசின் கடமை. இதையும்கூட விமர்சித்தால், ‘எதிரிக்கட்சி’ என்கிற விமர்சனம் உண்மையாகிவிடும். இவர்களுடைய அரசியலுக்கு, மக்களின் உயிரை பணயம் வைக்கக் கூடாது.

@‘கடல்’ நாகராஜன், கடலூர்-1.

டெல்லி முதலமைச்சர், எந்தத் துறைக்கும் பொறுப்பில்லாத அமைச்சராமே... இந்திய அரசியல் சட்டப்படி இது சரிதானா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

முதலமைச்சர் என்பவர், அமைச்சரவையின் தலைவர். அமைச்சரவையின் செயல்பாடுகளைக் கண்காணித்து, மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்வதுதான் அவருடைய முதல் பணி; முக்கியப் பணி. ஆக, ஒட்டுமொத்த துறைகளுக்கும் அவரே பொறுப்பு எனும்போது, ஏதாவது ஒரு துறைக்கு பொறுப்பேற்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை. ஆனால், பெரும்பாலான மாநிலங்களில் முதலமைச்சர்கள், முக்கியமான பல துறைகளை தம் பொறுப்பில் வைத்துக்கொள்வதுதான் நடைமுறையில் இருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஜெ.ஜானி, போரூர், சென்னை-116.

டெல்லி கலவரத்துக்குக் காரணமான பா.ஜ.க-வினரை பிரதமர் கண்டிக்கக்கூட இல்லையே?

நாளைய கலவரத் திருவிழாவுக்கு ஆட்கள் கிடைக்க வேண்டாமோ!

@நீலன், கோவை.

`வங்கிக்கடனுக்காக லஞ்சம் கொடுத்த வழக்கில், முன்னாள் எம்.பி-யான ராமச்சந்திரன் (அ.தி.மு.க), அவருடைய மகன் மற்றும் வங்கி அதிகாரி ஆகியோருக்கு சிறை’ என்ற தீர்ப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?

‘இந்தியாவில் எப்போதாவது இதுபோன்ற அதிசயமும் நடக்கிறது!’ என்று ஆச்சர்யம் பொங்கியது. குற்றமிழைக்கும்போதே ஒப்புதல் வாக்குமூலத்தை முத்திரைத்தாளில் எழுதி, பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்ததுபோல் அனைத்து முறைகேடுகளையும் ஆதாரபூர்வ மாகவே செய்துள்ளனர். ஆனால், இவர்களுடையது வெறும் 20 கோடி ரூபாய் விவகாரம்தான். 100 கோடி, 1,000 கோடி, 10,000 கோடி ரூபாய் என்றெல்லாம் கடன் வாங்கி ஏமாற்றிக் கொண்டிருக்கும் பலர், அமைச்சர் பதவிகளிலும், பெரும்தொழிலதிபர்கள் போர்வையிலும் இங்கே உலாவந்துகொண்டுதான் இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும்மேலாக இது இறுதித் தீர்ப்பல்ல. ‘குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. பிள்ளையார் கோயிலில் நூறு தேங்காய் உடைக்க வேண்டும். இந்தத் தண்டனையை ஏழு ஆண்டுகளுக்குள் நிறைவேற்ற வேண்டும்’ என்றுகூட இறுதித் தீர்ப்பில் தண்டனை வரலாம்.

கே.ஆர்.ஜி. ராமன், பெங்களூரு-77.

ரஜினியை இயக்குவது யார்?

இப்போதைக்கு ‘சிறுத்தை’ சிவா. அடுத்தது யார் என்று இன்னும் தகவல் வெளியாகவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

@சரவணக்குமார் சின்னசாமி, தாராபுரம்.

மகாகவியின் பாடலை ‘சாதிகள் உள்ளதடி பாப்பா’ என மாற்றிப் பயன்படுத்திய ‘திரௌபதி’ படக்குழு, ‘குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் நியாயம்’ என்றுதானே போட்டிருக்கவேண்டும்?

அப்படிச் சொன்னால், ‘அநியாயம்’ இன்னும் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டுவிடுமே!

டி.கிருஷ்ணமூர்த்தி, விழுப்புரம்.

சாதிகள் இருக்கின்றன. அப்படியிருக்கும்போது, ‘சாதிகள் உள்ளதடி பாப்பா’ என்று சொல்வதில் என்ன தவறு?

சாதிகள் இருக்கின்றனதான். மத்திய, மாநில அரசுகளின் பட்டியலில் ஆயிரமாயிரமாக அவை இருக்கின்றனதான். ஆனால், உண்மையில் இருப்பது ஆதிக்க சாதி, அடிமை சாதி ஆகிய இரண்டு மட்டுமே. மற்றவையெல்லாம் கற்பிதங்களே! இதில் யார், எந்தச் சாதி என்கிற தெளிவில்தான் இருக்கிறது, எந்தச் சாதியைச் சார்ந்தவரின் வெற்றியும். உயர்சாதி, அதற்குப் பக்கத்தில் பிற்படுத்தப்பட்ட சாதி, அதற்கு அடுத்தாற்போல் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதி என, துண்டை தோளில் போட்டுக்கொண்டு கூடவே நடப்பதால் மட்டும் ‘ஆதிக்க சாதி’ என்கிற பெருமைக்குள் அனைவரும் சேர்த்துக் கொள்ளப்பட்டுவிட மாட்டார்கள். உயர் சாதி, தாழ்ந்த சாதி என்பதையெல்லாம் பணம், பதவி, அந்தஸ்து போன்றவைதான் தீர்மானிக்கின்றன. ஆதிக்க சாதி, அடிமை சாதிகளில் இருக்கும் பணக்காரர்கள், பரஸ்பரம் தாங்கள் சார்ந்த சாதிகளிலிருக்கும் ஏழை வீடுகளிலிருந்து மருமகள்/மருமகனைத் தேர்ந்தெடுப்பதில்லையே!

லிசிபிரியா
லிசிபிரியா

@அந்திவேளை

உலக மகளிர் தினத்தையொட்டி, தன்னுடைய ட்விட்டர் கணக்கைப் பயன்படுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை, மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பருவநிலை மாற்ற ஆர்வலர் லிசிபிரியா நிராகரித்துவிட்டாரே?

‘பருவநிலை மாற்றத்தின் ஆபத்தை, அரசியல்வாதிகள் அவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. அதனால், இந்தக் கௌரவத்தை நிராகரித்துவிட்டேன்’ என்று கூறியிருக்கிறாள் அந்த எட்டு வயது சிறுமி. அவள் மொழிந்திருப்பது, நூற்றுக்கு நூறு உண்மையே. பிரச்னைகளைத் தீர்த்துவைப்பதை விட்டுவிட்டு, அவற்றை வெளிக்கொண்டு வந்தவர்களைக் கொண்டாடுவதாலும், அவர்களுக்கு விருதுகள் கொடுப்பதாலும் எந்தப் பலனும் விளையவேபோவதில்லை.

@ஜி.ஆர்.மாதேஸ்வரன், புளியம்பட்டி, ஓமலூர்.

எந்தவித ஆதாரமும் இல்லாமல் ‘கோமியம் கேன்சரை ஒழிக்கும்... கொரோனாவை ஒழிக்கும்’ என்றெல்லாம் பா.ஜ.க எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் எப்படிச் சொல்கிறார்கள்?

மாட்டின் சிறுநீரான கோமியம் கிருமிநாசினி யாகவும், இன்னபல பலன்களைத் தரக்கூடிய ஒன்றாகவும் இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. அதற்காக, எல்லாவற்றுக்கும் அதுதான் சமயசஞ்சீவினி என்பதுபோல் பேசுவது ஆபத்தானது. இப்படிப் பேசுபவர்கள், தங்கள் வீட்டினரோ தங்களுக்கு நெருக்கமானவர்களோ இதுபோன்ற நோய்களால் பாதிக்கப்பட்டால் ஓடுவது, பசுமாட்டிடம் அல்ல... பகட்டான மருத்துவமனைகளுக்குத்தான்.

@காட்டாவூர் தேனரசு, பொன்னேரி, திருவள்ளூர் மாவட்டம்.

நான் இந்தியனாக இருப்பது முக்கியமா... இந்துவாக இருப்பது முக்கியமா?

மனிதனாக இருப்பது மிகமிக முக்கியம்!

@சீதா. ரவி, சிதம்பரம், கடலூர் மாவட்டம்.

‘ரஜினி-கமல் கூட்டணியால் தி.மு.க-தான் கவலைப்பட வேண்டும். அ.தி.மு.க ஓட்டுவங்கியில் யாரும் கை வைக்க முடியாது’ என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் பேசிவருவது எந்தத் தைரியத்தில்?

‘பிளான் பி’ என்ன என்பதைத் தெளிவாகத் தெரிந்துவைத்திருக்கும் தைரியத்தில்தான்.

மு.மதிவாணன், காஞ்சிபுரம்.

தமிழகக் கோயில்களின் கலாசாரத்தையும் தொன்மையையும் காப்பாற்றுவதற்காகத்தான் பல கோயில்களை மத்திய தொல்லியல் துறை கையகப்படுத்தப் போவதாக பா.ஜ.க-வினர் கூறுகிறார்களே?

சமீபத்தில் குடமுழுக்கு நடைபெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில், அதற்கு ஓராண்டுக்கு முன்பு குடமுழுக்கு நடைபெற்ற கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய கோயில்கள் எல்லாம் மத்திய தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில்தான் சுமார் நூறு ஆண்டுகளாக இருக்கின்றன. ‘தஞ்சாவூரில் ராஜராஜன் காலத்தில் வரையப்பட்ட ஓவியங்கள், பராமரிப்பு என்ற பெயரில் அழிக்கப் பட்டிருக்கின்றன. கங்கைகொண்ட சோழபுரத்தில் இயந்திரங்களைக்கொண்டு பழைய கட்டுமானங்கள் பாலீஷ் செய்யப்பட்டதால், அதன் பழைமை போய்விட்டது’ என்று ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ம்... இவர்கள்தான் ‘கலாசாரக் காவலர்’கள்!

@பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை, சேலம் மாவட்டம்.

எடப்பாடி பழனிசாமியையும் ‘நிரந்தர முதல்வர்’ என்கிறார்களே?

ஏற்கெனவே இப்படி அழைக்கப்பட்ட எவரும் நிரந்தரமாக இருந்ததில்லையே!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!