Published:Updated:

கழுகார் பதில்கள்

எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி

கொரோனாதான் முடிவுசெய்ய வேண்டும்.

கழுகார் பதில்கள்

கொரோனாதான் முடிவுசெய்ய வேண்டும்.

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி

@`வடபழநி’ ஆர்.கே.எஸ்.மகேஷ், சென்னை.

சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களில் கடத்தல் தங்கம் பிடிபடாத நாள்களே இல்லையா?

கள்ளச்சாராயம் காய்ச்சுவது குற்றம். ஆனாலும் காய்ச்சுவார்கள். இதைத் தடுப்பதற்கென்றே இருக்கும் தனிப்படை போலீஸார், மாமூலில் கொழிப்பார்கள். கணக்குக்காட்டுவதற்கென அவ்வப்போது சிலர்மீது வழக்கு போடுவார்கள். கள்ளச்சாராயப் பேர்வழிகளே சுழற்சி முறையில் இதற்காக தங்கள் ஆட்களை அனுப்பிவைப்பார்கள். கள்ளச்சாராய பானைகளை அடித்து நொறுக்கிவிட்டு, ‘கள்ளச்சாராய அழிப்பு’ என பத்திரிகைகளுக்கு படத்துடன் செய்தியும் கொடுப்பார்கள். இப்போது பிடிபடும் தங்கமெல்லாம் இப்படி கள்ளச்சாராயம் போன்ற கணக்கில்தான் வரும். உண்மையிலேயே பிடிக்க ஆரம்பித்தால் மிரண்டுபோவீர்கள்!

@ராம்குமார்.

ஆண், பெண் வழியாகப் பிறக்கிறான். ஆனால், ஆணையே பெண் சார்ந்து இருக்கிறாள். இயற்கையின் இந்த விநோதம் பற்றி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது, செயற்கையின் விபரீதம். பெரியார் எழுதிய ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற நூலை வாசித்துப்பாருங்கள்... உண்மை புரியும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆர்.கே.சாமி, குரோம்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டம்.

தி.மு.க-விடம் மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை எதிர்பார்த்து ஏமாந்த காங்கிரஸ் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை?

கட்டெறும்பாகத் தேய்ந்த பிறகு வேறென்ன செய்ய... ‘தளபதியின் கரங்களை மேலும் வலுப்படுத்துவோம்’ என்று கோஷம்போடுவதைத் தவிர!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

@ந.அய்யப்பசாமி, தேவாரம், தேனி மாவட்டம்.

சேற்றில் இறங்கி நாற்று நடுவது, கட்டைவண்டி ஓட்டுவது என இறங்கி அடிக்கிறார் எடப்பாடியார். பலன் கிடைக்குமா?

கருணாநிதி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் போன்றோரின் பின்னணி வேறு. அவர்களுடைய ஒவ்வொரு செய்கையையுமே ஆச்சர்யமாகப் பார்க்கும் அளவுக்கு இங்கே மக்கள் தயார்செய்யப்பட்டனர். ‘கருணாநிதி, நடந்தே வந்தார்’, ‘எம்.ஜி.ஆர், ஏழைக்குழந்தைகளைக் கொஞ்சினார்’, ‘ஓட்டு போட வரிசையில் நின்றார் ஜெயலலிதா’ இப்படி சர்வசாதாரணமான விஷயங்களைக்கூட பெரிதாக்கினார்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமியின் பின்னணி அப்படிப்பட்டதல்ல. இதுபோன்ற ஸ்டன்ட் முயற்சிகளில் இறங்குவதைவிட, அவர் அவராகவே நடந்துகொள்வதுதான் நல்லது. கையில் இருக்கின்ற இந்த ஓராண்டை நன்றாகப் பயன்படுத்தி, ‘நிஜமாகவே நான் மக்களின் முதல்வன்’ என்பதை நேரடியான செயல்கள் மூலமாக முயற்சி செய்யலாம். அதுதான் என்றென்றும் நிரந்தரம்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

கி.முருகன், மாப்பிள்ளைக்குப்பம்.

எடப்பாடி பழனிசாமிக்கு ‘காவிரிக் காப்பாளன்’ பட்டம். கழுகார் கருத்து என்ன?

ஏற்கெனவே இப்படி பல பேருக்கு பற்பல பட்டங்களைக் கொடுத்தவர்கள்தாம் நம் விவசாயிகள். ஆனாலும் பட்டம் பார்த்து விதைக்க முடியாத நிலை இன்று வரை நீடிக்கிறது என்பதுதான் உண்மை. அவ்வப்போது பரபரப்புக்காக ஆட்சியாளர்கள் நடத்தும் இதுபோன்ற விதவிதமான நாடகங்களையெல்லாம் நம்பி ஏமாறுவதே விவசாயிகளுக்கு வாடிக்கையாகிவிட்டது. இதைவிட, ஒன்றாகக் கைகோத்து நின்று நிரந்தரமான தீர்வுகளைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதுதான் மிக முக்கியம். ஆளுங்கட்சிக்கு ஆதரவு நிலை, எதிர்க்கட்சிக்கு ஆதரவு நிலை என்கிற நிலைகளிலிருந்து, விவசாயிகள் விலகும்போதுதான் அது சாத்தியமாகும்.

பொன்னியம்மன்மேடு வண்ணை கணேசன், சென்னை-110.

குழந்தைகள் வாழத் தகுதியான நாடுகளின் பட்டியலில் நார்வே முதல் இடத்தையும், இந்தியா 131-வது இடத்தையும் பிடித்துள் ளனவே?

குழந்தைகள், எதிர்காலத்தில் பணம் காய்ச்சி மரங்களாக வளர்ந்து நிற்க வேண்டும் என நினைக்கும் நாடு; எல்.கே.ஜி-க்கு நுழைவுத்தேர்வு, 5-ம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு என்பதை யெல்லாம் நியாயப்படுத்துபவர்கள் வாழும் நாடு. நியாயமாகப் பார்த்தால் கடைசி இடம்தான் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், நமக்குக் கீழேயும் இன்னும் 50, 60 நாடுகள் இருக்கின்றன. நம் குழந்தைகளைவிட பாவம்தான் அந்த நாட்டுக் குழந்தைகள்!

@அ.குணசேகரன், புவனகிரி, கடலூர் மாவட்டம்.

கொரோனா பாதிப்பு உள்ள நிலையில், ஐ.பி.எல் தேவையா?

அதை கொரோனாதான் முடிவுசெய்ய வேண்டும்.

வி.பாலசுப்பிரமணியன், மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம்.

பொருளாதார மேம்பாடு விஷயத்தில் கவனம் செலுத்தாமல், சில்லறை நோக்கங் களுடன் மற்ற நடவடிக்கைகளில் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு கவனம் செலுத்துவது சரியா?

தலைக்கு மேலே வெள்ளம் போய்க் கொண்டிருக்கிறது. கையறுநிலையில் இருப்பவர்களால் வேறென்ன செய்ய முடியும்? இதோ... அடுத்தகட்டமாக மத்தியப்பிரதேசத்தில் பரபரப்பான ஆட்டத்தை ஆரம்பித்து, நாட்டின் கவனத்தை திசைதிருப்ப ஆரம்பித்து விட்டார்கள். அடிக்கடி இவர்களாகவே எதையாவது கிளப்புகிறார்கள். போதாகுறைக்கு, கொரோனா மாதிரி ஏதாவது வந்து ‘நமஸ்தே’ சொல்கிறது!

@பொ.பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி.

தே.மு.தி.க-வை அ.தி.மு.க ஏமாற்றிவிட்டதா அல்லது தே.மு.தி.க ஏமாந்துவிட்டதா?

ஜெயலலிதாவுக்கும் கருணா நிதிக்குமே கடுக்காய் கொடுத்த கட்சி தே.மு.தி.க. அந்தக் கட்சியை ஏமாற்ற யாராவது பிறந்துதான் வரவேண்டும். வாங்க வேண்டியதை யெல்லாம் ஏற்கெனவே வாங்கி விட்டார்கள். போனஸும் கிடைக்கும் என எதிர்பார்த்தார்கள்... கிடைக்கவில்லை, அவ்வளவுதான்!

@தாமரை நிலவன், கீழ்க்கட்டளை, சென்னை-117.

தே.மு.தி.க-வைவிடவா த.மா.கா-வுக்கு வாக்குவங்கி அதிகம்?

செல்வாக்கு அதிகம். 1996-ம் ஆண்டில் மூப்பனாருடன் சேர்ந்து ரஜினியும் குரல்கொடுத்தார். அப்போதே, தி.மு.க-வை விட்டுவிட்டு ரஜினியும் மூப்பனாரும் இணைந்தே ஜெயலலிதாவுக்கு எதிராக தேர்தல் களத்தில் நிற்பது என்கிற ஒரு பேச்சு ஓடியது. அது, தற்கொலைக்குச் சமம் என்று இருவரையும் தி.மு.க பக்கம் மடைமாற்றியவர் ‘துக்ளக்’ சோ. 25 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியோடு சேர்ந்து நிற்க ஒரு மூப்பனார் தேவை என கணக்கு போடுகிறார்கள் போல. ஆனால், காலம் என்ன கணக்கு போட்டு வைத்திருக்கிறதோ!

கழுகார் பதில்கள்

@ர.தாயுமானவன், கடலூர்.

சி.ஏ.ஏ-வுக்கு எதிராகப் போராடியவர்களின் புகைப்படங் களை பொது இடத்தில் வைத்த உ.பி அரசாங்கத்தின் செயலை என்னவென்று சொல்வது?

ஆணவத்தின் உச்சம்.

‘கடல்’ நாகராஜன், கடலூர்-1.

‘மற்றவர்கள் ஆட்சி செய்வதற்காக நாங்கள் கட்சி தொடங்கவில்லை!’ என்ற அன்புமணி ராமதாஸின் பேச்சு?

பா.ம.க தொடங்கப்படுவதற்கு முன்பே ஆட்சி செய்துகொண்டிருந்தவர்கள்தாம் அந்த மற்றவர்கள். தேர்தலுக்குத் தேர்தல் மாறி மாறி அந்த மற்றவர்களிடம் இவர்களை மண்டியிடச் சொன்னது எதுவோ!

@ப்யூனி பிரதர்ஸ்.

‘கொரோனா வைரஸால் பாதிக்காமல் இருக்க, கூட்டமாக இருக்கும் இடங்களைத் தவிர்க்க வேண்டும்’ என்று அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், ‘கொரோனா விழிப்புணர்வுப் பேரணி’ என கூட்டம் கூட்டமாக மாணவிகளை அழைத்துச் செல்பவர்களை என்னவென்று சொல்வது?

அதிபுத்திசாலிகள்!

கே.கஸாலி, அரவக்குறிச்சி, கரூர் மாவட்டம்.

`தி.மு.க-வை, முஸ்லிம் லீக்காக மாற்றிவிடலாம்’ என்று ஹெச்.ராஜா கிண்டலடிக்கிறாரே?

சும்மாவா... ‘அ.தி.மு.க’ என்கிற அவ்வளவு பெரிய கட்சியையே ‘பா.ஜ.க’ என்று மாற்றி வைத்திருப்பவர்களாயிற்றே!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

வாசகருக்கு நன்றி!

16.2.2020 தேதியிட்ட ஜூ.வி இதழில் வெளியான கழுகார் பதில்களில், `மத்தியப்பிரதேச மாநிலத்தின் மருத்துவம் மற்றும் தொழிற்கல்வி சேர்க்கையைக் கவனிக்கும் தனித்துவமான அமைப்புதான் `வியாபம்’ என்று கூறியிருந்தேன். ஆனால், அரசுப் பணிகளுக்கான பணியாளர்களைத் தேர்ந்தெடுப் பதற்கான தேர்வுகளையும் வியாபம் அமைப்பு நடத்துகிறது. தவறுக்கு வருந்துகிறேன். அதைச் சுட்டிக்காட்டிய வாசகர் லோகநாதனுக்கு நன்றி.

- கழுகார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism