பிரீமியம் ஸ்டோரி

ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.

கொரோனா, இந்தியாவுக்குள்ளும் ஊடுருவி விட்டதே?

உயிர் போகாமல் பார்த்துக்கொள்வது ‘நம் கை’களில்தான் இருக்கிறது.

எம்.ராஜமாணிக்கம், மேட்டுப்பாளையம்.

ஒரு சந்தேகம், முஸ்லிம்களின் வாக்கு தி.மு.க-வுக்குச் சென்றுவிடும் என்ற அச்சத்தில் நடக்கும் நாடகமோ... அந்த மாற்றம்?

நீங்கள் ‘மாற்ற’த்திலேயே நிற்கிறீர்கள். அது, ‘ஏமாற்றம்’, ‘தடுமாற்றம்’ என எங்கெங்கோ போய்க்கொண்டிருக்கிறதே!

@தர்மா.

பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ‘தமிழ்ச் சமூகம் என் பின்னால் வர மறுப்பது ஏன்?’ என்று கேட்டுக்கொண்டே இருக்கிறாரே?

அவருடைய முகம், ஒரு சமூகமாகத்தானே தென்படுகிறது!

ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம், ரஜினி, எடப்பாடி பழனிசாமி
ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம், ரஜினி, எடப்பாடி பழனிசாமி
மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்... யார் தந்திரக்காரர்?

@பொ.பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி, கடலூர் மாவட்டம்.

கழுகாரே, உங்கள் பார்வையில் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்... யார் தந்திரக்காரர்?

தீட்டிய மரத்திலேயே கூர்பார்த்தவர்தான்!

@வெங்கை. சுபா.மாணிக்கவாசகம், தெக்கலூர்.

இப்போது ஆட்சியில் இருப்பவர்களும் சரி, இருந்தவர்களும் சரி, தங்களை யோக்கியவான்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால், இவர்களுடைய கட்சியின் நிதி ஆதாரங்களுக்குக் கணக்குக்காட்டியதுண்டா?

அதெல்லாம் பக்காவாகக் காட்டிக் கொண்டு தானே இருக்கிறார்கள். ஆனால், எங்கிருந்து வந்தது என்கிற ஆதாரத்தைத்தான் காட்டுவதில்லை. அதற்குத் தோதாக, பல்வேறு சட்டங்களையும் போட்டுவைத்திருக்கிறார்கள். இதில் இருக்கும் ஓட்டைகள் பற்றி மட்டும் ஆளுங்கட்சியும் சரி, எதிர்க் கட்சிகளும் சரி ஒருபோதும் கேள்வி எழுப்புவதேயில்லை.

எம்.டி.சகுந்தலா, பூந்தமல்லி.

‘என்னிடமே பிறப்புச் சான்றிதழ் இல்லை. பிறகு எப்படி என்னுடைய தந்தை எங்கே பிறந்தார் என்பதை நிரூபிப்பேன்?’ என்கிறாரே தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ்?

ஒரு முதல்வருக்கே இந்த நிலை என்பது பயமாகத் தான் இருக்கிறது. ஆனால், நாளைக்கே ‘நமோ’ என்று சொல்லி கூட்டணி கோஷம் போட்டு சான்றிதழ்கள் இல்லாமலேயே அவர் தப்பிவிடுவார். நம்மைப் போன்ற சாமானியர் களின் நிலைதான் என்றைக்குமே பரிதாபம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

@சரவணன். ஓ.ஏ.கே.ஆர், சென்னை-2.

தமிழக சட்டமன்றத்தில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த 11 உறுப்பினர்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருப்பது, வெறும் கண் துடைப்புதானே?

‘சட்டம்’ தன் கடமையைச் செய்கிறது; அதுவும் உச்ச நீதிமன்றத்தின் அனுமதியோடு செய்கிறது. அதையெல்லாம் விமர்சனம் செய்யும் அளவுக்கு உங்களுக்கு எங்கிருந்து வந்தது இந்தத் துணிச்சல்?

கோ.குப்புசுவாமி, சங்கராபுரம்.

சென்னையில் ஒரு கல்லூரியின் மாணவர்களில் சிலர், ஒரு மாணவரை ஓட ஓட விரட்டி வெட்டிய கொடூரம்..?

சென்னையில் இதுபோல் இன்னும் இரண்டு மூன்று கல்லூரிகள் இருக்கின்றன. இங்கெல்லாம், ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ பாணியில் ரௌடிகளின் ஆதிக்கம் அதிகமே. அந்தப் படத்தில் வரும் ரௌடி நல்லது செய்வார். ஆனால், நிஜத்தில் நடுநடுங்கவைக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம். நடவடிக்கை எடுக்கத் துணியும் கல்வித் துறை மற்றும் காவல் துறைகளின் கைகளைக் கட்டிப் போட்டு விடுகிறார்கள் அரசியல் வாதிகள் சிலர். அவர்களைப் பொறுத்தவரை, தங்களுடைய எதிர்காலத் தேவைக்காக ரௌடிகளை வளர்த்தெடுக்கும் இடங்கள்தான் இத்தகைய கல்லூரிகள்!

ஜி.வி.மனோ, கொலுவை நல்லூர், தூத்துக்குடி மாவட்டம்.

ரசாயன உரங்களை டன் கணக்கில் உற்பத்தி செய்யவும் இறக்குமதி செய்யவும் அனுமதித்துவிட்டு, ‘இயற்கை வேளாண்மை’ குறித்தும் பேசுகிறார்களே இந்த அமைச்சர்கள்?

சிகரெட், மது, பாலித்தீன் இப்படி பல விஷயங்களையும் தயாரிப் பதற்கு அனுமதி கொடுத்துவிட்டு, ‘நாட்டுக்கு வீட்டுக்குக் கேடு’ என்று கூடவே ஸ்டிக்கர் ஒட்டி அனுப்புவ தில்லையா... அதுபோல்தான்!

Benjamin Netanyahu
Benjamin Netanyahu
இந்தியர்களின் பாணியில் கைகூப்பி வணக்கம் சொன்னால் போதும்

‘வண்ணை’கணேசன், சென்னை-110.

`மக்கள், சந்திக்கும்போது கைகுலுக்காமல்... இந்தியர்களின் பாணியில் கைகூப்பி வணக்கம் சொன்னால் போதும்’ என்று இஸ்ரேல் பிரதமர் கூறியிருக்கிறாரே?

இனியாவது நம் முன்னோர்களின் மூளையை வணங்குவோம்!

க.சு.ஸ.மழாஹரி, காயல் பட்டினம், தூத்துக்குடி மாவட்டம்.

ஜனநாயகரீதியிலான போராட்டங்களை முன்னெடுக்கும் மக்களை கைதுசெய்யச் சொல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிடுவது எந்த அளவுக்குச் சரி?

‘ஜனநாயக வழிகளில் போராடுவதைத் தடுக்க முடியாது’ என்று உச்ச நீதிமன்றமே பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியிருக்கிறது. நம்முடைய அரசியல மைப்பு மக்களுக்குத் தந்திருக்கும் மிகப்பெரிய நிவாரணமே, ஜனநாயக வழியில் போராடும் உரிமைதான். போராடுபவர்களின் கோரிக்கையி லிருக்கும் நியாயங்களை உணர்ந்து, அதை நிறைவேற்ற அரசுகளுக்கு உத்தர விடுவதுதான் நீதிமன்றங்களின் தலையாய பணியாக இருக்க வேண்டும். அதைவிடுத்து, போராடும் உரிமையையும் பறிக்கப்பார்த்தால், அது நாட்டையே ஆபத்தான பாதைக்குத்தான் திசைதிருப்பும்.

அ.ராஜாரஹ்மான், கம்பம், தேனி மாவட்டம்.

‘உள்ளாட்சித் தேர்தல், ராஜ்யசபா தேர்தல் அவசரத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே மனக்கசப்பு என்பது சர்வசாதாரணமே’ என்கிறாரே காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி?

அவர்களைப் பொறுத்தவரை, ‘பணக்கசப்பு’ மட்டும்தான் பெரிய பிரச்னையே! அது, பொதுத் தேர்தல்களின்போது மட்டும்தான் அதிகமாக வரும்.

ரஜினி
ரஜினி
ரஜினியின் முதலமைச்சர் தேர்வு யாராக இருக்கும்?

@வெ.லக்ஷ்மிநரசிம்மன், ராஜகீழ்ப்பாக்கம், சென்னை.

‘பாபா’ பட ஸ்டைலில் ரஜினியின் முதலமைச்சர் தேர்வு யாராக இருக்கும்?

அசுரன்.

வி.ஹரிகிருஷ்ணன், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு மாவட்டம்.

‘தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (என்.பி.ஆர்) தொடர்பாக எங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களுக்கு மத்திய அரசு சரியான விளக்கம் அளித்த பிறகுதான் தமிழ்நாட்டில் அது செயல்படுத்தப்படும்’ என்று எந்தத் தைரியத்தில் அமைச்சர் உதயகுமார் சொல்கிறார்?

இப்படிச் சொல்வதற்கு ‘உரிய வகையில் அனுமதி’ வாங்கியிருக்கும் தைரியத்தில் இருக்கலாம்.

@த.நிதின் சுதாகர், ஆரல்வாய்மொழி, கன்னியாகுமரி.

கொரோனா பரவுவதைத் தடுக்க பயோமெட்ரிக் வருகைப் பதிவுக்கு தடைபோட்டுள்ள அரசு, பேருந்தில் நடத்துநர்கள் எச்சில் தொட்டுப் பயணச்சீட்டு வழங்கும் பழக்கத்துக்கு முடிவுகட்டுமா?

டிஜிட்டல் முறையில் பேருந்துகளில் டிக்கெட் கொடுப்பது நடைமுறைப்படுத்தப்பட்டு ஆண்டுகள் பலவாகின்றன. ஏனோ இன்னமும் ‘பழசை’ கட்டிக்கொண்டும் அழுகிறார்கள். அதன்மூலமாக ஏதாவது ‘வரும்படி’ இருக்கிறதோ என்னவோ! இந்தக் கொரோனா புண்ணியத்திலாவது அந்த எச்சில் கலாசாரத்துக்கு விடைகொடுக்கலாம்தான்.

@மல்லிகா குரு, மேற்கு மாம்பலம், சென்னை-33.

எம்.எல்.ஏ-க்களை விலை பேசுவதையே கட்சி வளர்க்கும் உத்தியாக வைத்திருப்பவர்கள், ஊழலுக்கு எதிராகவும் பேசுகிறார்களே?

யோக்கியன் வர்றான், சொம்பை எடுத்து உள்ள வை!

@எஸ்.சேகர், ஆலப்பாக்கம், சென்னை-116.

அறநிலையத் துறை அதிகாரிகள், ‘நான் இந்து’ என்று சுவாமி சிலைகள் முன்பாக உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதே?

இந்துக்கள் மட்டும்தான் இந்து சமய அறநிலையத் துறை பணிகளில் சேர முடியும். அப்படியிருக்க, இப்படியெல்லாம் உறுதிமொழி எடுக்க வேண்டும் என வலியுறுத்துவது, பிரச்னைகளை திசைதிருப்பும் வேலையே! கோயிலில் அன்றாடம் சிலைகளைத் தொட்டுத் தொட்டு பூஜை புனஸ்காரங்கள் செய்யும் குருக்கள் தொடங்கி அறநிலையத் துறையின் உயர் அதிகாரிகள் வரை சிலைகளைக் கொள்ளையடித்த வழக்கில் சிக்கியுள்ளனர். இதுபோன்ற வழக்குகளை நீர்த்துப்போகச்செய்யும் வேலைகள்தான் நடந்துகொண்டிருக்கின்றன. ‘இந்த வழக்குகளை கண்கொத்திப் பாம்பாகக் கவனிப்போம். தவறிழைத்த ஒருவர்கூட தப்பிக்க முடியாத அளவுக்கு தண்டனை கொடுப்போம்’ என்று நீதிமன்றங்கள் செயலில்காட்டினாலே போதும், உறுதிமொழிக்கெல்லாம் தேவையே இருக்காது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு